கல்லூரி சென்றபின் படிப்பார்வம் குறைந்துவிட்டது என்பது கசப்பான உண்மை.இளங்கலை முடித்தபின் வேலைக்குப் போராட்டம்.வேலை கிடைத்தபின் நல்ல வேலைக்குப் போராட்டம். இத்தகைய காலங்களில் எனக்கு ஆறுதலாயிருந்தது விகடன் மட்டுமே.அதன்மூலம்தான் என்னால் ஓரளவிற்கு பிற எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென மனப்பட்டியல் போட முடிந்தது. பின்பு முதுநிலை படிப்பின் போது ஓரளவிற்கு புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின் வேலை கிடைத்து வட இந்தியா வந்தபின் மறுபடியும் வாய்ப்புக் குறைந்துவிட்டது. இருந்தும் தமிழ் இணையத்தின் மூலம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். படிக்க வேண்டிய, வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. இத்தோடு முன்னுரையை நிறுத்தி விடுகிறேன். இதுவரை படித்த புத்தகங்களின் நினைவு அலையில் சற்றுக் கால் இல்லையில்லை விரல்நுனியாவது நனைப்போம்.
துளசிதளம்,மீண்டும் துளசி: பள்ளி இறுதி நாட்களில் படித்தது. எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதி, சுசீலா கனகதுர்காவினால் மொழிபெயர்க்கப் பட்டது. நான் எப்போது படித்தாலும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்போடிருக்கும்.
ஜெயகாந்தன் சிறுகதைகள்: கல்லூரியில் படிக்கையில் நண்பனொருவன் படிக்கக் கொடுத்தது. இதில் படித்த சிறுகதைகளின் வரிகள் பல, என் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் செயலாற்ற, செயலற்றுப் போக உதவி இருக்கின்றது. இதில் மனதில் நின்ற சிறுகதைகள்:
1.சிலுவை: கன்னியாஸ்திரீயாக விரும்பிய இளம்பெண்ணில் வேர் விட்ட பருவக்காதல் நினைப்பும், அதன் விளைவும். முடிவு 'நச்'.
2.அக்னிப்பிரவேசம்: ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை எழுத்துக்களில் ஏற்படுத்தியது. இக்கதை பற்றி அளவுக்கதிகமாக அலசி ஆராயப் பட்டதால் விட்டுவிடுவோம். 3.இருளைத் தேடி: 'நிர்வாணம் தான் அழகு. காட்டிலுள்ள் மான், மயில்களுக்கு உடை அணிவித்தால் நன்றாக இருக்குமா...?ஏன் மனிதன் மட்டும்.?' விபச்சாரத் தொழிலை விடுத்து வேறு வேலை தேடுபவள், தோழியின் ஆலோசனைப் படி அவளின் தொழிலான, ஓவியர்களுக்கு நிர்வாண மாடலாக இருக்க அரைகுறையாகச் சம்மதித்துப் பின் ஓவியக் களத்தில் அனைவரின் முன் வெளிச்சத்தில் நிர்வாணமாய் இருப்பதை விட இருளில் விபச்சாரியாய் இருப்பது மேல் என மறுபடியும் செல்கிறாள் இருளைத்தேடி. 4.குருபீடம்: சோம்பேறியைத் திருத்த குருவே, சிஷ்யனாய் மாறி இறுதியில் யார் குருவென உணரவைத்த கதை.
'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது', 'புதுச் செருப்பு கடிக்கும்' இன்னும் பல பெயர் மறந்த, கதை மறக்காத கதைகள். அடித்தரப்பு மக்களின் வாழ்க்கையை 'கேன்டிட் கேமரா' போல் எடுத்துச் சொன்னவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.
சித்திரப்பாவை: அகிலனின் படைப்பு. கதைநாயகன் ஓவியனாய் இருந்ததால் அதிக ஆர்வமெடுத்துப் படித்தேன். கொஞ்சம் பழையபடம் பார்த்த உணர்வு,.
பஞ்சும், பசியும்: தொ.மு.சி. ரகுநாதன் படைப்பு. இதுவும் பழைய தமிழ்ப்படம் பார்த்த அலுப்பூட்டும் உணர்வைத்தான் கொடுத்தது. கம்யூனிஸ்ட் போராட்டம் கலந்திருந்தது. மனதில் ஒட்டவில்லை.
மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள்: எம்.ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்த போது பிரேக் பற்றிப் பாடமெடுத்த எனது ஆசிரியர் சொல்லிக் கேள்விப்பட்டுதான் 'இரும்புக் குதிரைகள்' படித்தேன்.(அவர் மலையாளி.ஆனால் அவர் தமிழ்,ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமிக்கவர். நன்கு படமும் வரைவார். துறை சார் அறிவிலும் அவர் மாஸ்டர்.) எனக்கு முடிவைத் தவிர, நாவல் நன்கு பிடித்திருந்தது.இதைப் பற்றி நண்பர் வசந்தகுமாரின் இப்பதிவிலும், பின்னூட்டத்திலும் படித்துக் கொள்ளுங்கள்.
துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணின் எழுத்து இதயத்திற்கு அருகாமையில் கண்காட்சி நடத்தும் வல்லமை பெற்றவை. பல மனிதர்கள், பல கதைகள். எதைப் படித்தாலும், நாம் நினைத்து ,நம்மால் எழுத்தில் கொண்டுவரமுடியாமல் விடப் பட்ட கணங்களை அழகாக வெளிப்படுத்துவார். எனது இப்போதைய ஃபேவரைட் இவர்தான். 'கதாவிலாசம்' படித்திருக்கிறேன்.
செம்பருத்தி: தி.ஜானகிராமனைப் பற்றிக் கேள்விப் படாத காலத்திலேயே மூன்று, நான்கு முறைகள் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கதையும், சம்பவங்களும் நினைவிருக்கும் அளவுக்கு, கதாபாத்திரப் பெயர்கள் நினைவிலில்லை. என்னை மிகவும் கவர்ந்த நாவல். மறுபடியும் படிக்க ஆசை. 'மோகமுள்' இன்னும் படிக்கவில்லை. இதுவரை நான் படித்த எல்லாமே ஒருவித ஒழுங்கில்லாமல் கிடைத்ததை எல்லாம் படித்து வந்திருக்கிறேன்.
இப்பதிவில் நிறைய விடுபட்டுள்ளது எனினும் இதற்கு மேல் பதிவைத் தொடர எனக்கு விருப்பமில்லை.
இத்தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது
1.ரவி ஷங்கர்
2. தர்ஷினி
ஆள விடுங்கப்பா... பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள ஷ் அப்பா... ஓவரா கண்ணக் கட்டுதே...

