Monday, August 31, 2009

எங்கு தொடங்கி…எங்கு முடிக்க….பாகம்-1

       சுதந்திர தினம் சனிக்கிழமை வந்ததில் ஆனந்தமே.தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை என்பது, வாரத்திற்கு ஆறு நாளும் ஆணி பிடுங்குபவர்களுக்கு அல்வா கிண்டி வாயிலூட்டாத குறையாகும்.எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை குண்டுச்சட்டிக்குள் பிரியாணி பண்ணி,உண்டுறங்கிக் கழிப்பதை விட்டு, இம்முறை வெளியே செல்லலாமென இந்தோர் தமிழ்ச்சங்கம் முடிவெடுத்தது. தலைவர் என்னைக் கேட்காமலேயே தவேராவுக்கு முன்பணமும்,பச்மரி செல்ல பக்கா ப்ளானுமாக இருந்தனர் நண்பர்கள். எனது பங்கு என்பது வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிக்கு அறைச்சுதந்திரத்துக்கு முழுக்குப் போட்டு, இரு நாள்கள் வெளியுலகச்சிறைவாசம் செய்யக் கிளம்பவேண்டியது மட்டுமேயாகும்.

     பச்மரி என்பது ஊட்டி,கொடைக்கானல் போலொரு கோடை வாசஸ்தலம்.அது இந்தோரிலிருந்து 400 கி.மீ தொலைவில் போபாலைத் தாண்டி இருக்கிறது. வெளியில் அவ்வளவாகச் சுற்றுவதை விரும்பாத நான் இம்முறை ஏனோ முடிவெடுத்தேன். பின்புலச்சிக்கல்களிடமிருந்து ஒரு தற்காலிகத் தப்புதல்தான்.  ஏழு பேர் வருவதாகச் சொன்ன பிளான், புதனிரவே ஐவராகிப் பின் வியாழனிரவு நால்வராக வலுவிழந்து இருந்தது. ஆட்கள் குறைந்தால், செலவுப் பணம் அதிகமாகிவிடும் என்ற ஏழாம் வகுப்பில் படித்த நேர்மாறு, எதிர்மாறு விகிதக் கணக்கு பயமுறுத்தினாலும், தாராளமான இடவசதியோடு பயணிக்கலாமெனத் தேற்றிக் கொண்டோம் மனதை. ஆனால் கடைசி நேரத்தில், மற்ற மூவர் திடீர்ப் பிரசன்னமாகி இடைஞ்சலையும், இதர செலவினங்களையும் பங்கிட்டுக் கொண்டனர்.

    ரு வழியாகப் பயணம் திட்டமிட்டபடி, வெள்ளி இரவு (14.08.09) ஒன்றரை மணிக்குத் தொடங்கியது. முன்னிருக்கையில் ஓட்டுநருடன் நான் நவீனக் கிளீனராக அவதாரமெடுத்தேன். இதர நண்பர்கள் கும்மாளத்துடன், ஸ்பீக்கரில் அலறிய ‘ஓ ஈசாவுடன்’ சேர்ந்திசை செய்து கொண்டிருந்தனர்.பத்துப் பதினைந்து நிமிடங்களில் இந்தோரைக் கடந்து, புறவழிச்சாலையில் புழுதியுடன் கலக்க ஆரம்பித்திருந்தது வாகனம்.ஆங்காங்கே ரோட்டாரத் தாபாக்கள், போலீஸ் சௌக்கிகள்,பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் சுதந்திர நாளை வண்ணச் சீரியல் பல்புகளின் கண்சிமிட்டலில் வரவேற்றுக் கொண்டிருந்தன.ரோட்டோரம் மட்டும் பார்த்துக் கொண்டிராமல், ஓட்டுநர் தூங்கிவிடாமலிருக்க அவ்வப்போது என் பார்வையை வலப்பக்கமும் செலுத்திக் கொண்டிருந்தேன்.   

    ஒரு மணி நேரத்திற்கொரு முறை, ஓட்டுநரின் கைகள் ஸ்டியரிங்கிலிந்து முழுதும் விலகி பான் பராக் பாக்கெட்டின் தலையைத் திருகி, போதைத் தூள்களை வாய்க்குள் செலுத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது கறுத்த தார்ச்சாலையில் தனது எச்சிலால் சிவப்புப் பெயிண்ட் அடிக்கத் தவறவில்லை ஓட்டுநர். அதிகாலை நெருங்க நெருங்க பின்னாடியிருந்த கொண்டாட்ட ஒலியின் சுதி குறைந்து, போகப்போக குறட்டையொலியின் சுதி கூடிக் கொண்டிருந்தது.போபால் செல்லும் வழி நெடுக ‘ஸாவ்தான்’ எனத் தொடங்கும் ‘டேக் டைவர்ஸன்’ களின் ஆதிக்கம்தான். ஒரு கட்டத்தில் மறுபடியும் இந்தோர் வந்துவிடுமோ எனப் பயப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டேன்.இரவின் கறுமையின் மேல் வெள்ளை பூசியபின் வரும் ஒருவித சாம்பல் நிறத்தில் தெரிந்தது வானம். செல்பேசியின் முகத்தினோரம் 05:30 என மின்னிக் கொண்டிருந்தது.போபாலை நெருங்கி விட்டிருந்தோம். டெல்லியிலிருந்து, சென்னை செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸின் வேகத்தைத் தடுக்க வேண்டாமென முடிவு செய்து வாகனத்தை நிறுத்தியிருந்தோம்.அதற்குமுன் ரெயில்வே கிராஸ்ஸிங்க் கேட்டும் அடைக்கப் பட்டிருந்தது.ரெயில் கடந்து செல்கையில் உள்ளே எழும்பிய தமிழ்க் குரல்கள் என் காதுகளை வந்தடையவில்லை.ஊருக்குச் செல்லும் வாகனத்தைக் கண்டதும், அதற்கு முன் என் நினைவுகள் ஊருக்குச் சென்றிருந்தன. பிடித்திழுத்து வைப்பதற்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.

Image0356(டீக்கடையின் பாய்லர் ‘டர்போ சார்ஜர்’ தத்துவமோ..?)

     ’ச்சாய்’ கடையில் ஆளுக்கொரு ச்சாய் வாங்கிக் கொண்டு, கண்ணாடி தம்ளரின் சூட்டில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்.எங்கு தேனீர் குடித்தாலும், தமிழகக் கிராமத்துத் தேனீரின் சுவையைக் காணமுடிவதில்லை.எல்லாமே பாக்கெட் பாலில் போட்ட ஒருவிதச் செயற்கைச் சுவையை மட்டுமே கொண்டிருக்கின்றன. என்ன செய்ய, சில சமயங்களில் வாய்க்கும் ஏதாவது தண்ணி காட்ட வேண்டியிருக்கிறதே…?!எங்கிருந்தோ வந்த ஒரு (ஆன்மீகச்)சுற்றுலாப் பேருந்திலிருந்து இறங்கிய ஒரு சிறுமி வாந்தியெடுக்க, சற்றுக் கூச்சத்தோடு அவளின் 25 வயது அம்மா அவளின் தலையைக் குனியவைத்து உதவிக் கொண்டிருந்தாள்.அப்பாவோ இதற்குமெனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பொட்டலத்திலிருந்து துகள்களைக் கைகளில் கொட்டி, பக்குவமாக ஊதிவிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தான்.இதற்குள் ரெயில்வே கேட் திறந்து கொள்ள, புகைவண்டிப்பாதையைத் ‘தடதட’வெனக் கடந்தது எங்கள் வாகனம்.

      போபாலைக் கடக்கையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது.சாலை ஓரங்களில் நல்ல பசுமையைக் காணமுடிந்தது. ஆட்களையும், வண்ணங்களையும் தவிர்த்துப் பார்க்கையில்.எல்லாக் கிராமங்களுமே ஒரே விதமாகத்தான் இருக்கின்றன. தென்கோயில்களுக்கும், இங்கும் வித்தியாசம் என்பது முழுக்க அடிக்கப் பட்ட காவி வண்ணமும், உச்சியில் பறக்கும் காவிக் கொடியும்தான்.காலைகள் அழுக்கு ஜிப்பா ஆசாமிகளாலும், விதவிதமான கைவேலைப் பாடுகள் கொண்ட சேலைகள் அணிந்த எப்போதும் ஒருவித சோகத்தைத் தேக்கி வைத்த முகங்களுடைய பெண்களாலும் நிரம்பத் தொடங்கிக்கொண்டிருந்தன. சாலையோரச் செம்மண் முந்திய நாளின் மழையளவைத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருந்தது. யூனிஃபார்ம் அணிந்த சிறுசிறு மலர்கள், தேசியக் கொடியுடன் சுதந்திரம் வாங்கியதற்கு அடையாளமாகப் பள்ளிகளில் மிட்டாய் வாங்கச் சென்று கொண்டிருந்தனர்.

DSC01804 DSC01805

  வழியில் செம்மண் நிறத்தில் ஓடிய நதி நர்மதாவின் தங்கையாக இருக்கலாமென்பது எங்கள் எண்ணம். ஓட்டுநரின் கருத்தறிய எண்ணினால், என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை.பருவ காலங்களில் செழிப்பாக இருக்க வேண்டியவள், இன்னும் மெலிந்துதான் காணப் படுகிறாள் அகல,ஆழங்களில்.மழையில் கழுவப் பட்ட நிலங்கள் மற்றும் மலைகள் அடர் நிறங்களில் கண்ணைப் பறித்தன.

-தொடரும்…

குறைகள் கூறுங்கள். திருத்திக் கொள்ள முயல்கிறேன்…

Sunday, August 23, 2009

நினைத்தாலே இனிக்கும்….-என் பார்வையில்…

        னது விருப்ப இசை அமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். ’சுக்ரன்’,’டிஷ்யூம்’,’காதலில் விழுந்தேன்’ பாடல்களில் பெரும்பான்மை எனக்குப் பிடித்திருந்தது.இவரால் நல்ல மென்மெட்டுக்களைத் தரமுடியும்.’இருவர் மட்டும்’ என ஒரு (பப்)படம் வந்தது. அதில் கூட  இரண்டு அழகான மென்பாடல்கள்(‘ரோஜா மலரின்’,’அழகா அழகா’ ) தந்திருப்பார். ஆனாலும் இவர் ‘நாக்க மூக்கி’யோ, ஆத்திச்சூடியோதான் பிரபலமாகிறார்.

      மலையாளத்தில் ஓரளவுக்கு வல்லிய ஹிட்டடித்த ‘க்ளாஸ்மேட்ஸ்’ இன் தமிழ் வடிவமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் மென் மற்றும் குத்துப்பாடல்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார். மூலப்படத்தின் ஹிட் பாடலான ‘எண்ட கல்பிலே’ யின் தமிழ் வடிவம் எது எனப் பிடிபடவில்லை எனக்கு. இருப்பினும் தனித்தன்மையோடு பாடல்களில், வரிகள் சுதந்திரமாகச் சுவாசிக்கும் வகையில் இசையின் கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்கிறார்.

Ninaithale Inikkum

       ழைநேரத் தேனீராய் ருசிக்கிறது ’அழகாய்ப் பூக்குதே’ பாடல்.பியானோவில் மிதமாக ஆரம்பிக்கும்போதே புரிந்து விடுகிறது பாடலின் போக்கு. இதமான காதலிசை.ஜானகி ஐயர்,பிரசன்னா குரல்களின் குழைவும்,இடையிசைகளில் ததும்பாமல் அளவாய் நிரம்பிச்செல்லும் வாத்தியங்களும் சேர்ந்து அழகாய்ப் பூத்த பாடல்.முதல் கேட்பிலேயே பிடித்துப் போய்,எனது விருப்பப்பட்டியலில்(பிளே லிஸ்ட்டில்) எளிதாக இடம் பிடித்து விட்டது.பாடல் வரிகளும் இளமையை இதமாகச் சொல்லிப்போகின்றது. கலைக்குமாருக்கு வாழ்த்துக்கள்.ஆண்குரல் அள்ளிச்செல்கிறது.

”அழகாய் பூக்குதே…சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே”

  ‘நண்பனைப் பார்த்த தேதி மட்டும்’ நட்பைப்பற்றி (அண்ணாமலை-பாடல்) மேற்கத்திய சத்தங்களுக்கு இடையில் சொல்லும் பாடல்.(ஆரம்ப ஹம்மிங்கைக் கேட்டுவிட்டு எங்கே ‘கண்ணுக்கு மையழகு’ என வார்த்தைகள் வந்து விடுமோ எனப் பயந்துவிட்டேன். .)கேட்கப் பிடிக்கிறது. கச்சித இசைக்கோர்வை.பென்னி தயாளின் குரலும் இதம்.

’மழை தூங்கும் வெயில் நேரம் அதுபோலே மனது…

மனம் போலே தடுமாறும் வயது…’ பளிச் வரிகள்.

   ’அல்லா’,’பியா பியா’ இரண்டு பாடல்களும் அக்மார்க் விஜய் ஆண்டனி ரகக் குத்துக்கள். முன்னதில் பதமாகக்குத்தியவர், பின்னதில் காதைப் பதமாக்கக் குத்தியிருக்கிறார்.’ஆத்திச்சூடியை’ நினைவிற்குக் கொண்டு வரும் பாடலிது.இம்மாதிரிப் பாடல்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும் வரிகள்.ஆராயாமல் அனுபவிக்கலாம்.பாடலை எழுதிய அண்ணாமலை இன்னொரு பேரரசாக உருவாகக்கூடிய அபாய அறிகுறிகள் தெரிகின்றன.குத்தியவர் மட்டுமல்ல கத்தியவரும் விஜய் ஆண்டனிதான்.

’செக்ஸி லேடி’ கேட்டவுடன் பிடிக்க வைக்கும் அடிப்பாடல்.(பீட் ஸாங்..?).’கைய்ஸ் வேக் அப்’ என்ற குரலோடு தொடங்கும் பாடல் உருமி ஓசைகளோடு சொக்க வைக்கிறது.பிரியனின் வரிகளில் போதையேறுகிறது.ரம்யா குழுவினரின் குரல்கள் மேலும் உடுக்கடிக்கின்றன.மெதுவாகவும் நகராமல், வேகமாகவும் ஓடாமல் நின்று அடித்து ஆடியிருக்கிறார் பாடல் முழுவதும்.ரசித்துக்கேட்கலாம்.

kavya2(மூலப்படமான ‘க்ளாஸ்மேட்ஸ்’ நாயகி. இவங்களுக்கும், இந்தப் பதிவு(வரு)க்கும் இதைத் தவிர வேறு எதுவும் சம்பந்தமில்லை)

     வை தவிர பட ஓட்டத்திற்குதவும் வகையில் இரு சிறு பாடல்கள் உள்ளன.

‘கல்லூரி’ பாடல் பார்க்கையில் பிடித்துப் போகலாம்.

’நாட்கள் நகர்ந்து’-   ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பமாகும் இசைக்கோர்வையினூடே வந்தது தெரியாமல், இதமாக இசையோடு கலந்துவிடுகிறது கௌஷிக்கின் குரல்.நான்குவரிப்பாடல்தான். நீட்டியிருந்தால் பிடிக்காமல் போயிருக்குமோ என்னவோ…நகரா நகரப் பேருந்தில் வேர்வையால் நசநசத்துப்போயிருக்கையில், ஓட்டுநர் தயவால் ஓரிரு அடிகள் பேருந்து நகர்கையில் கொஞ்சிவிட்டுப் போகும் காற்றின் சுகம் தருகிற பாடலிது.

’நினைத்தாலே இனிக்கும்’-கேட்டு ரசிக்கலாம்.