Thursday, September 17, 2009

பொக்கிஷமான பொழுதுகள்…சேரனுக்கு நன்றி

   ரசனைகள் மாறுபடும். இதில் பதிவிடப்போவது என் ரசனையை மட்டுமே பிரதிபலிக்கும்.

     ந்தப் படத்தை ஏன் இத்தனை நாள் பார்க்கவில்லை என்ற கேள்வியை என்னுள் ஊட்டிய படம் ‘பொக்கிஷம்’.இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா என துணைத்தலைப்பைப் பார்த்ததும், இதர பதிவர்களின் தாறுமாறான விமர்சனங்களும், முன்பே கதை தெரிந்துவிட்டதும் நான் பொக்கிஷத்தைத் தேடுவதற்கான நாட்களைச் சற்று தள்ளிப்போட்டுவிட்டன.

   அதையும் மீறி தனிமையும்,நானும் மட்டும் ஓரிரு மதியப்பொழுதுகளிலும்,ஒரு இரவுப்பொழுதிலும் இதனை ரசித்தோம்.பார்த்து ரசிப்போர்களுக்கு மத்தியில் நான் ரசித்துப் பார்ப்பவன்.அதனால்தான் தெரிந்த கதை,கதை நாயகனாக சேரன்,கடிதக்காதல் இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு ஒரு கலைப்பொக்கிஷமாகவே என் மனதில் நிற்கிறது படம்.

    காதலர்கள் பல்விளக்குவதற்குக்கூட கைப்பேசியின் அலைகளை அனுப்பும் இக்காலகட்டத்தில் ஆரம்பிக்கும் படம், தொடக்கத்திலேயே நவீனக்காதலர்களின் அவசரநிலையைச் சொல்லிவிடுகிறது.மகேஷாக வரும் ஆர்யன் ராஜேஸ் தற்செயலாக தனது அப்பா லெனினின்(சேரன்) பழைய பெட்டியைத் திறப்பதில் இன்னும் வாசம் மாறாமலிருக்கும் அவரது காதல் கடிதப்பூக்களைக் காண்கிறான்.தனது காதலி நதீராவுக்கும்(பத்மப்ரியா),அவருக்கும் இடையிலிருந்த காதலின் சாட்சிகளாய் இருந்த கடிதங்களையும்,நாட்குறிப்பேடுகளையும் பிரித்துப்படிக்கையில் விரிகிறது 1971 காலகட்டம்.

     கல்கத்தாவில் கப்பல்துறையில் பொறியாளர் லெனின், தன் தந்தையின் மருத்துவசிகிச்சைக்காக சென்னை வருகிறார். அதே மருத்துவமனையில் தாயின் நலம் நோக்கி நாகூரிலிருந்து வருபவர் நதீரா. தமிழ் இலக்கியம் பயிலும் நதீராவின் தமிழில் கவரப்பட்ட லெனின் நட்புக்குடை விரிக்க,அதில் பட்டும் படாமல் மனம் நுழைக்கிறார் நதீரா.பின் இருவரும் அவரவர் இடங்கள் செல்ல,நட்பை மட்டும் கடிதத்தில் வளர்க்க மறக்கவில்லை.நட்பு மெலிந்ததால், காதல் வலுத்ததா இல்லை நட்பு வலுத்ததால் காதல் பிறந்ததா எனப் பார்க்கவியலாமலேயே காதல் பூத்து விடுகிறது.ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு சென்றடையும் தகவல் வந்து சேரும் அரை நிமிடங்களுக்கே ஆளாய்ப் பறக்கிறோம். அப்படியிருக்கையில் ஒருவார காலம் கழித்தே பதில் கடிதம் வருமென்ற நிலையில் காதல் படும்பாடுதான் என்னவாயிருக்கும்…

     ழகுத்தமிழில் கடிதமனுப்புவதும், அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு அதற்குக் குடை விரிப்பதும், தபால் காரர் சரியாக வேலை செய்கிறாரா என வேவு பார்ப்பதும் என காதலுக்கான எல்லாப் பைத்தியக்காரத் தனங்களையும் பதிவிட்டிருப்பது அழகு.பின்புலமாகக் கடிதவரிகள் வாசிக்கப்படும்போது, அக்கடிதத்தில் அஞ்சல் துறை முத்திரையிடுகையில் குரலில் தோன்றும் வலி ரசிக்க வைத்தது.அவ்வப்பொழுது அணைமீறாத அலையாய் வந்து செல்லும் குறும்பாடல்களும்,கதையைச் சொல்லும் பாடல்வரிகளும் சிறந்த தேர்வு.கல்கத்தாவின் அக்காலத்திய டிராம் வண்டிகள்,இறுக்கம் நுழையாத தெருக்கள், அதே போல 70களின் சென்னை,பேருந்துகள் என அழகாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் வைரபாலன்.

Copy of vlcsnap-25692

   ளிப்பதிவு நல்லா இருக்குன்னு சொன்னா, எப்படி உனக்குத் தெரியும்..அதன் நுணுக்கமா,இல்லை வெளிச்ச அளவா எனத் தொழில்நுட்பத்தில் நுழைந்து கேட்ட என் மனசாட்சிக்குச் சொன்னேன்,பார்க்கும் காட்சிகளில் நடிகர்கள் இருப்பதை விட நான் இருந்தால் நல்ல ஒளிப்பதிவு என்று.நதீராவைப் பார்க்க வந்து,அவர் எங்கு போனார் எனத் தெரியாமல், தேவதையின் தடங்கள் ஒட்டிய மணல் துகளாவது சாட்சியாகாதா எனத் தேடித் திரியும் காட்சிகளில் அலைபாய்வது லெனின் மட்டுமல்ல,நாமும்தான்.அக்காட்சிகளில் வெறுமையை,காதலி தந்தையின் துரோகத்தைக் கண்களுக்குள் பாய்ச்சி விடுகிறது ஒளிப்பதிவு(ராஜேஷ் யாதவ்).

     நதீராவுடன் கடிதத்தில் காதலிக்க ஆரம்பித்த பிறகு, முதன் முறை தொலைபேசியில் தவிப்புடன் பேச,உடனேயே அணை திறந்த மடையென ‘உன்னைப் பார்க்கவேண்டும்’ என நதிரா கொட்டிவிடும் காட்சியும்,அவரைப் பார்க்கப் பேருந்தில் வருகிற போது,உடன் தொடரும்,”வரும் வழியெங்குமே உன் முகம் தோன்றுமே” பாடலும் நெகிழ்வின் கதவுகளை உடைத்துவிட்டது.

      தீராவைத் தேடிக் கிடைக்காத நாட்கள் லெனினின் நாட்குறிப்பேட்டில் விதவையாக இருக்கின்றன. அவளுக்கு அனுப்ப நினைத்த கடிதங்கள் முகவரியற்று முடங்கிக் கிடக்கின்றன.அதற்க்குள்ளிருக்கும் வரிகள் லெனினுக்கு மட்டுமே தெரியும்.நதீராவின் பார்வை படாததால் கல்லாய்ச் சமைந்த அகலிகையான எழுத்துக்களை அவர்வசம் சேர்க்க லெனினின் ம்கன் மகேஷ் முடிவெடுப்பது,லெனினின் மரணத்தோடு காதல் முடிந்துவிடவில்லை எனச் சொல்ல வைக்கிறது.

    தேடியலைந்து மலேஷியாவில் முதுமை தழுவிய, அப்பாவின் காதலியைக் கண்டு அறிமுகம் செய்து கொள்கையில், நதீராவின் அழுகையில் தெறித்த காதல் என்னையும் நனைத்துவிட்டது.தனக்கான கடிதங்களைக் காலம் தாமதமாகக் கொடுக்கிறது என்பதை அறிந்த நதீரா,அதே சமயம் தன் காத்திருப்பின் அவசியம் பூரணமானதையும் உணர்கிறாள்.

    அக்கால முஸ்லீம்களின் கடுமையான சட்டங்களுக்கிடையிலும் காதல் வைராக்கியத்தில் தனித்திருக்கும் நதீராவின் பெருமூச்சோடு படம் முடிந்தாலும், மூச்சின் வெப்பம் இன்னும் என்னைச் சுடுகிறது.இதில்தான் சேரனின் வெற்றி அடங்கியிருக்கிறது.சத்யம்,மாயாஜாலில் 50 நாள் ஓடுவது வெற்றியல்ல என்பது என் எண்ணம்.சேரன் வடித்த கவிதை எனக்குப் புரிந்தது. பிடிபட்டது.ரசிக்கவைத்தது.அழ வைத்தது.சினிமா விமர்சனம் பண்ணக்கூடாதென்ற என் நிலையை மாற்றி இப்படிப் பதிவிடவும் தூண்டியது.

       நிறைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. குறைகளும் குறைவாய் இருக்கின்றன …என் மனதுக்குள் பதிவிட்டு மகிழ்ந்து கொள்கிறேன்…

பானைச் சோறு இதோ….

இது பற்றிய இன்னுமொரு பதிவு இங்கே…

Thursday, September 10, 2009

பச்மரி-பயணத்தின் பிம்பங்கள்…(எ.தொ.எ.மு-2)

  யணத்தின் முதல் பகுதி இங்கே…(அப்படியொன்றும் விசேஷமாய் இருக்காது. நேரடியாக இங்கிருந்தே கூட வரலாம்.)

       15.08.09 காலையின் இளவெயில், எறும்பு போல் எங்கள் மேல் ஏறும் நேரத்தில் போபாலை முற்றிலுமாகக் கடந்துவிட்டிருந்தோம்.வாகனத்தின் கண்ணாடியை, வைப்பர்கள் அரைமணி நேரத்திற்கொருமுறை ஓரிரு நிமிடங்கள் மட்டும் துடைக்கும் வகையில் விட்டுவிட்டுத் தூறிக்கொண்டிருந்தது.சாலையோரம் சிறுசிறு ஓடைகள் திடீர்ப் பிரசன்னமாகியிருந்தன.கடந்த சிறிய ஊர்களின் வழியெங்கும் பள்ளிகளில் கொடியேற்றம் முடிந்து, சுதந்திர தினத்தைச் சின்னத்திரைகளில் பூரணமாகக் கொண்டாடக் கிளம்பியிருந்தனர் மாணவக்கண்மணிகள்.என் பள்ளிநாட்களில் சுதந்திர தின இனிப்பென்பது பிறைவடிவிலிருக்கும் ஆரஞ்சு மிட்டாயாகும். இப்போது காட்பரீஸூம்,எக்லேர்ஸூம் இடம்பிடித்திருக்கலாம்.இரவில் விழித்த களைப்பில் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன்.விழிக்கையில் ஹொஷங்காபாத்தைக் கடந்து விரைந்து கொண்டிருந்தது வாகனம்.

       கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் பச்மரியை. இன்னும் முப்பத்திச் சொச்சம் கிமீட்டர்களில் எட்டிவிடலாம்.மலைப்பாதை ஆரம்பித்திருந்தது.நம்மூர் மலைப்பாதை போல் அவ்வளவாக ஏற்றமில்லை.இங்கு ஊர்களே ஏறக்குறைய சமதளமான(மாக்கப்பட்ட) மலைகளில்தான் அமைந்திருக்கின்றன என்பதால் மலையேற்றம் என்பதைச் சற்றே சாய்வுபாதை எனக்கொள்ளலாம். இங்கும் கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. கொடைக்கானல்,கொல்லி மலைகளில் இருப்பது போல் அப்படியொன்றும் அபாயகரமானவை அல்ல.வழியெங்கும் ஒருவித ஈரத்தன்மையை உணரமுடிந்தது.குளித்து முடித்துக் காற்றில் தலையுலர்த்தும் மங்கையின் கூந்தல் போல் மரங்கள்,இலைகள் அனைத்தும் ஈரம் பூசியிருந்தன.மலையேற்றத்திற்கே உரிய மனநிலை மேலும் மயங்கிப்போனது.

        ஒருவழியாக பதினோரு மணிக்கெல்லாம் பச்மரியை வந்தடைந்துவிட்டோம்.உள்நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டு ஒன்றும் 25 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டோம்.இப்போது அனைவரின் ஒரே தேவை, தங்குவதற்கும்,புத்துணர்வு கொள்வதற்கும் ஒரு அறையாகும்.பயணத்திட்டம் போட்ட நண்பர்கள் முன்பே இணையத்தில் பார்த்து, ஹோட்டல் அறைகளை தொலைபேசியில் முன்பதிவு செய்ய நினைத்தது பணாலாகியிருந்தது.தொலைபேசி வழி முன்பதிவு கிடையாதாம். கூட்டம்,கூட்டமாய் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.இரண்டு நாள் விடுப்பினைக் கழிக்க இது சிறந்த இடமென அவர்களின் வருகையே சொல்லியது.மேலும் முன்னேறிச் சென்றதில் சிறிய சாலைகளின் இருபுறமும் நெரிசலாய்க் கடைகள்,ஹோட்டல்கள் தட்டுப்பட்டன.விதவிதமான கைவேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் பெரும்பான்மையாக இருந்தன. அதில் வாங்கவந்த மங்கைகளின் கூட்டமே மலர்க்கண்காட்சியாயிருந்தன.இருந்தும் அறை தேடுவதே முதல் குறி என்பதால் என்னளவு கூட ரசிக்கமுடியாமல் இருந்தனர் நண்பர்கள். ஒருமணி நேரம் தேடியும் அறை கிடைக்கவில்லை.சீசன் டைம் போலும். மேலும் இங்கு வரவிரும்புபவர்கள் காலை எட்டு மணிக்குள் வந்தால் தங்க இடம் எளிதில் கிடைக்குமெனப் புரிந்தது.ஒரு அறையின் ஒரு நாள் வாடகை 1500க்கு மேல்.ஒருநாள் மட்டும் தங்கலாமென நினைத்துக் கேட்டால் இடம் தரமாட்டார்களாம்.இருநாள் தங்க வேண்டுமாம்.சுற்றுலா இடங்களில் இது ஒரு பெரிய தொல்லை.அவர்கள் வைத்ததுதான் சட்டம்.சரி அப்படியாவது செலவு செய்து தங்கலாமெனில்,அவர்கள் காட்டிய இடங்கள் நமது ஊரின் ஒதுக்குப்புறங்களில் இருக்கும் லாட்ஜூகளைவிட மோசம்.

      இயற்கை கொஞ்சும் இடங்கள்தானே.இங்கு ஏதாவது அருவி அல்லது ஓடைப்பக்கம் போய் காலைக்கடன்களை மட்டுமாவது முடித்துக்கொண்டால் போதுமென அனைவரின் முகங்களும் சொல்லியது.எங்களைக் கவனித்துக் கொண்டே கடந்த ஒரு சிறுவன் தேவதூதன் போல் திரும்பிவந்து ‘தங்க அறை சீப்பாக வேண்டுமா?’ எனக் கேட்டான்.போய்த்தான் பார்ப்போமே என அவனையும் வாகனத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு நகர்ந்தோம்.சிறுசிறு சந்துகளுக்கிடையே வியாபாரம் சூடேற ஆரம்பித்த கடைகளைக் கடந்து சென்றோம்.வீடுகள் சூழ்ந்த ஒரு பகுதிக்குக் கூட்டிச்சென்றான்.ஒரு வீட்டின் முன் இறங்கச் செய்தான். அவன் அழைத்ததில் சொர்ணாக்கா போல் ஒரு பெண்மணி வந்து நாங்கள் தங்க வேண்டிய அறையைக் காட்டினாள். அது அறையல்ல. இன்னும் கட்டிமுடிக்கப்படாத சிறுவீடு.90 சத வேலைகள் முடிந்திருந்தது. கதவு,பூட்டு,சாவி கூட உண்டு. ஆனால் ஜன்னல் இருக்க வேண்டிய இடத்தில் ஜன்னலின் சதுரச் சட்டம் மட்டும் இருந்தது. கம்பிகள் இல்லை,கதவுகள் இல்லை.அந்த ஏரியாவில் எல்லோரும் நல்லவர்கள் போல என நினைத்துக்கொண்டே வீட்டைச் சுற்றி(?)ப் பார்த்தோம். முன்னால் ஒரு பெரிய அறை,உள்ளே ஒரு சிறிய அறை,சமையலறை,குளியலறை. சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இது போதும் என்ற எண்ணம் தோன்றியது.தரையில் மெத்தைகள் போடப்பட்டன.ஒருநாள் வாடகை 1000 ரூபாய். சிக்கனமாய்க் கிடைத்த சின்னவீடு எங்களுக்கு அப்போது மாளிகை போல் தோன்றியது.

       டைம்டேபிள் போட்டுக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளிவருவதற்குள் ஒரு மணிநேரம் ஓடியிருந்தது. முதலில் எங்கு செல்வது என முடிவெடுக்கவியலாமல் ஓட்டுநரைக் கேட்டோம்.அவர் அருகிலிருந்த டீக்கடையில் விசாரித்து ‘honeybee falls’ செல்லலாமென்றார்.சிறுநகரச் சந்தடிகளைக் கடந்த வாகனம், ஓரிரு மலையேற்றப் பாதைகளைக் கடந்து அருவி செல்லும் இடத்தை வந்தடைந்தது.

    பச்மரியில் இதுபோல மலையேற்றப் பாதைகளைக் கடப்பதற்காகவே ‘ஜிப்சி’ வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. ஒரு நாளுக்கு 2000 ரூபாய் வாங்கிவிடுகிறார்கள். இவைகளின் சிறப்பு ‘four wheel drive’ ஆகும். அதனால் இவை எளிதாக மலையேறிவிடும். ஆனால் பட்ஜெட்டில் போர்வை விழுந்துவிடும் என்பதால் தவேராவிலேயே கிளம்பினோம்.

மதியம் இரண்டரை மணிக்கு மேல் கிளம்பிய பயணம் சிறிது சீரான மலையேற்றப் பாதைக்குப் பின் அருவியின் அருகில் செல்லச் செல்ல சேறு நிரம்பிய பாதைக்கு மாற ஆரம்பித்திருந்தது.முன்னும்,பின்னும் ஜிப்சிக்களின் ஹாரன், கைச்சைகைகளை சில நேரம் கவனித்தும் ,சில சமயம் உதாசீனம் செய்தும் முன்னேறினோம். இதர வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் போகமுடியாது என்பதால், அதன்பின் சற்றுக் கீழிறங்கிச் செல்லும் பாதைக்கு ,தலைக்கு 20 ரூபாய் வாங்கும் ஜிப்சியில் பத்து நிமிடம் பயணித்தோம். அதற்கப்புறம் நடைவண்டி சர்வீஸ்தான். இன்னும் இரண்டு, மூன்று கி.மீட்டர் இறங்கிச் சென்றால்தான் அருவியின் அடிப்பகுதியை அடையமுடியும். இறக்கப் பாதையின் பெரும்பாலான இடங்களில் சிதிலமான கற்படிக்கட்டுகள் இருந்தன. மழை வேறு எங்களை நனைத்துக் கொண்டிருந்தது, சூழலின் ரம்மியத்தை மேலும் கூட்டியது.  Image0367(அருவிக்கு இறங்கும் வழியில் நாங்கள் பார்த்த இறங்கிய மக்கள்)
     அருவியை வந்தடைவதற்குள்ளேயே மழையின் தயவால் செல்லக் குளியல் முடிந்திருந்தது.அருவி 100-150 அடி உயரத்திலிருந்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த உடனேயே சில நண்பர்களுக்கு குளியோஃபோபியா வந்துவிட்டது. நானும் இன்னும் மூன்று பேர்களும் களத்தில் இறங்கிவிட்டோம்.நீர் சொட்டிய இடத்தில் ஆரம்பித்த எங்கள் குளியல் ,உற்சாகம் கூடக்கூட நீர் கொட்டிய இடத்திற்கு நகர்ந்துவிட்டது. அருவி ஒரு பெரிய குழந்தை.அதனுடன் சேரும் அனைவரும் சிறிய குழந்தைகள்தான். கூச்சமாவது ஒன்றாவது...ஆரவாரக்கூச்சல்கள் எவ்வளவு எழும்பியும் அருவியின் ஓசையில் அவை சாதித்தது மௌனமே.உடல்வலிக்கக் குளித்தாலும் மனம் சலிக்கவில்லை.எனது அருகில் குளித்த ஐந்து வயது சிறுவனின்(அப்பா உதவியோடு) ஆட்டம் ஆனந்தத்தாலா இல்லை பயத்தாலா எனக் கணிக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் தேநீர்,குளிர்பானங்கள் விற்பனையும் ஜோராக இருந்தது.

Image0375 

DSC01917

    ருவிக்குளியல் முடித்து விட்டு அப்சரா விஹார் என்னும் இடத்திற்குச் சென்றோம்.இதுவும் நான்கைந்து கி.மீட்டர்கள் நடைப் பயிற்சிதான்.சென்ற இடத்தில் ஒரு அழுக்கு ஓடைதான் இருந்தது. இங்கென்ன விசேஷம் எனக் கேட்டதற்கு,’அஷோகா’ படத்தில் கரீனாகபூர் ஆட்டம் போட்ட ஓடை எனப் பதில் வந்தது. ரொம்ப விசேஷமான இடம்போல என நினைத்துக் கொண்டே திரும்ப நடையைக் கட்டினோம்.திரும்புவதற்குள் ஒரு நண்பன் ஓடைக்குள் சற்றுக் கால்நனைத்து ஜென்மசாபல்யம் அடைந்திருந்தான்.வழியில் பருகிய உப்பிட்ட எலுமிச்சைச் சாறு சற்று தெம்பைக் கொடுத்தது.

    அதற்குள் இருட்டத் தொடங்கியிருந்தது. அடுத்த கட்டமாக ‘பாண்டவா கேவ்ஸ்’ சென்றது பாதிக்குழு.என்னையும் சேர்த்த மீதிக்குழு வாகனத்தில் கால்நீட்டி ஓய்வெடுத்தது.வனவாசம் சென்றிருந்த பாண்டவர்கள், யார் கண்ணிலும் படாமல் ஒரு வருடம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இங்கு வந்து ஓய்வெடுத்தனராம்.அந்தக் காலத்து கொடநாடு எஸ்டேட் போலும்.  அலைந்த அசதியில் கனவுகளில்லாமல் உறங்கினோம்.

     டுத்த நாள் பயணத் திட்டம் ‘தூப்கார்’ செல்வது மட்டுமேயாகும்.இதற்கும் நாங்கள் ஜிப்ஸியை நாடாமல் தவேராவிலேயே கிளம்பினோம்.வழியில் தென்பட்ட ஒரு வழிகாட்டியையும் உள்ளிழுத்துக் கொண்டு முன்னேறியது வாகனம்.தூப்கார் செல்லும் வழி நெடுகக் கொண்டை ஊசி வளைவுகள் தாராளமாக இருந்தன. ஒருபுறம் உயர் மரங்களும், மறுபுறம் பள்ளத்தாக்குகளுமான பாதை முழுவதும் ‘சாத்பூரா தேசியப் பூங்காவின்’ கட்டுப்பாட்டில் இருக்கிறது.உயரே செல்லச்செல்ல உற்சாகமடைந்த நண்பர்கள் சத்தமிட எத்தனிக்கையில், ’புலி பயம்’ காட்டி எச்சரித்து விட்டார் வழிகாட்டி.மரங்களின் பசுமையனைத்தும் வெண்மை தடவி இருந்தன.பனியா,மேகமா எனப் பிரித்தறியவியலாத அளவில் ஒரே புகை மண்டலம்தான்.பதினோரு மணி ஆகிறது என்றே தெரியாத ஒரு நிலை. முகப்பு விளக்குகளின் வழிகாட்டலில் வாகனம் கூட சற்றுக் கிறக்கமாகவே மலையேறியது. வண்டியின் சிறிய ஸ்பீக்கர் வாய்களில் வெளிப்பட்ட ‘இதழை வருடும் பனியின் காற்று’ வரிகளும் மேலும் மயக்கத்தைக் கூட்டின.வழியில் இறங்கி புகைப்படம் எடுக்கும் வைபவமும் நடந்தேறியது.வலியத் திணித்த புன்னகைகளில் இயற்கையோடு எங்களையும் பதிவிட்டுக் கொண்டோம் கேமராக்களில்.

Copy (2) of Image0398

Copy of Image0415

DSC02015

DSC02108

    ஒருமணி நேரத்திற்குள்ளான பயணத்தில் ‘தூப்கார்’ வந்தடைந்துவிட்டோம். பயணம் அதற்குள் முடிந்தது சிறிது வருத்தமே.இலக்கை விட முக்கியமானவை பயணங்கள்தானே.இருந்தும் எங்களை ஏமாற்றவில்லை தூப்கார். உச்சியை அடைந்துவிட்டோம். ஐந்தடி தூரத்திற்குள் இருந்தும் ஆள் தேடுமளவுக்கு கண்களை மறைத்துக் கொண்டிருந்தது வெண்மேகத் துகள்கள்.நடக்கிறோமா இல்லை மிதக்கிறோமா எனக்கூட ஒரு பிரமை ஏற்பட்டது எனக்கு.கொஞ்சம் கையை விரித்தால் ஏதேனும் தேவ மங்கைகள் தட்டுப்படுவார்கள் எனக்கூட முயற்சித்தேன்.கை கூடவில்லை.பிரிட்டிஷ் கால சர்ச் போல ஒரு கட்டிடம் தென்பட்டது.அது சாத்பூரா தேசியப் பூங்காவிற்குச் சொந்தமான அருங்காட்சியகம் என அருகில் சென்று கண்கள் விரித்துப் பார்த்தபோது தெரிந்தது. அன்று ஞாயிறு என்பதால் பூட்டியிருந்ததா எனத் தெரியவில்லை.ஒரு மணி நேரம் காலாற நடை பயின்றோம்.புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அனைத்திலும் மௌனசாட்சியாய் புகை படர்ந்திருந்தது.எனக்கு மட்டும் தேநீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. கிடைக்கவில்லை.மனதிற்குப் பிடித்த பாடலை சற்றுச் சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.இயற்கையின் எழில் அனைவரையும் சாந்தப்படுத்தி விடும் போல. என்னைக் கடந்த ஒரு பதின்மப் பெண் ‘வெரி நைஸ்’ எனப் பாராட்டிவிட்டுப் போனாள்.தமிழ்ப்பாடல் வரிகளின் தரம் தெரிந்திருந்தால் இதே பெண் எதிர்மறையாகச் செய்திருப்பாள் என நினைத்துக் கொண்டு என் ஸ்பீக்கரை ம்யூட் செய்தேன்.

Image0421

DSC02067

(எழுவர் குழு ‘தூப்கார்’-இல் இயற்கையோடு இயையும் காட்சி)

Image0424

 

    சனையின் வீட்டுக்கான பாதைகள் சற்றுக் குழப்பமானவை. போகும் வழி சிலருக்கு எளிதிலும், சிலருக்கு அரிதாகவும் புலப்படும்.ஆனால் வெளியேறும் வழி காண்பதுதான் அனைவருக்குமே கடினம்.அப்படியானதொரு கடின சூழ்நிலை கொண்டு தூப்கார்-ஐ விட்டுக் கிளம்பினோம்.மலையேறுகையில் ததும்பிய உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தது.நேரமின்மையால் இன்னும் நிறைய இடங்களுக்குப் போக முடியாமற்போனது.

       மதியம் பச்மரியை விட்டு வெளியேறினோம்.எங்களோடு சேர்ந்து வந்த மழையானது பச்மரியின் எல்லையோடே தங்கிவிட்டது.இனிய நினைவுகளோடும், ஒட்டியிருந்த மழைத்துளிகளோடும் இந்தோரை நோக்கி வர ஆரம்பித்தோம்.

 

Saturday, September 5, 2009

லைலாவுக்கு என்னாச்சு…

Copy of scan0001

   இப்படத்திற்கு வசனம் தேவையில்லை….

பென்சில்,ரப்பர்,பேப்பர்,ஆனந்தவிகடன் அட்டைப்படம்…

Friday, September 4, 2009

சாயல்களின் சாயல்

சாயல்களின் சாயல்

மூக்கு என்னை மாதிரி

கண்ணும், முடியும் அவள் வீட்டு ஜாடை

சுட்டித்தனம் அப்படியே அப்பாதான்

நினைத்து ரசித்ததை

துள்ளிவந்து மடியமர்ந்து

“என்னை மாதிரியே இன்னொரு

பாப்பாப்பா…” என

கண்ணாடியைக் காட்டி

கலைக்கிறாள்…

மகளின் அற்புத விளக்கு…

என் மூக்குக்கண்ணாடியை

முகம்மறைக்கும் அளவில்

மாட்டியபடி

“நீங்க பூதம் மாதிரி

இருக்கீங்க அப்பா”

என்று வி(ப)யந்தவளின்

விழிகளில் தெரிந்தது

அற்புத விளக்கு…

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்

எழுதி முடிக்கும்முன்பே

நகர்ந்துவிட்டிருந்தது

நதியும் பெயரும்

விரல்களில் உன்

பெயரெச்சம்…

Thursday, September 3, 2009

ரசித்த கவிதை+எனது ஓவியம்

    Copy of scan0002

           ஆனந்தவிகடன் பவளவிழாக் கொண்டாட்ட நேரத்தில் வெளியாகிப் பரிசு பெற்ற கவிதை இது.கவிஞர் வித்யாஷங்கர் எழுதியது. அவர் வலைப்பூவும் வைத்திருக்கிறார். அதன் சுட்டி இங்கே.படித்ததும் பிடித்துப் போனது.கவிதையின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது, அதற்கு வரைந்திருந்த ஓவியமாகும்(யார் வரைந்தது தெரியவில்லை). ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் ரத்தச்சிவப்பு குங்குமமும்,சற்றுக் கீழே பார்த்தால் முன்னதன் கோபத்தைக் குளிர்பனியாக்கும் கண்களுமாக பார்த்ததும் கைகளைப் பரபரக்க வைத்தது.கையில் இருந்தது கறுப்புப் பேனா மட்டும்தான். வரைந்து தள்ளிவிட்டேன்.மூலப் படத்தின் அம்சமான அழகான கண்கள், எனது ஓவியத்தில் சரியாக வரவில்லை. ஆனால் வந்தவரையில் எனக்குப் பிடித்திருந்தது. பதிவிடுவதற்காக ஸ்கேன் செய்த பின் கம்ப்யூட்டர் பெயிண்ட் ப்ரஷில் குங்குமத்திற்கு மட்டும் சிவப்பு வண்ணம் தீட்டினேன்.