Saturday, August 30, 2008

ஆனந்த விகடனும்,அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்...












ஆனந்த விகடன் படிக்கும் பழக்கம் பள்ளி இறுதியாண்டு படிக்கும் காலத்தில் தொடங்கியது.அப்பொழுது திரைப்பட இயக்குனர் அதியமான் எழுதிய 'சொர்ணமுகி' தொடர்கதை வெளிவந்துகொண்டிருந்தது.(இணையாக திரைப்படமாகவும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்). அதைப் படிக்கத்தொடங்கிய நான் பின் ஆனந்தவிகடனுக்கே அடிமையாக மாறுமளவு ஆகிவிட்டேன்.(தமிழ்மணம் படிக்க ஆரம்பித்தபின் அந்த ஈர்ப்பு பெருமளவு குறைந்து விட்டது).
ஆனந்தவிகடனில் எனக்குப் பிடித்தது ஜோக்ஸ். பிறகு திரைவிமர்சனங்கள், வெளியாகும் கதைகளின் ஓவியங்கள் (ம.செ, மாருதி, அரஸ்) மற்றும் அழகிகளின் ஓரளவு நாகரிகமான ,தெளிவான புகைப்படங்கள்.(தற்போது குமுதத்திற்கும்,விகடனுக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு படங்கள் வெளியாகின்றன.) அப்படி வந்த ஒரு அட்டைப்பட அழகி(எனக்கு அழகியாகத் தெரிந்தாள்)தான் இவள். பெயர் தெரியவில்லை.ஆனால் பார்த்தவுடன் கண்ணைப் பறித்தாள். கைகளைப்பரபரக்கச் செய்தாள் படமாகத் தீட்டுவதற்கு.

அதுநாள் வரை பேனா அல்லது பென்சிலில் மட்டுமே படம் வரைவது வழக்கம். வண்ணங்கள் தொடுவது வெகு அரிதுதான். அப்படியான‌ ஒரு அரிதான ஓவியம்தான்(எனக்கு மட்டும்) இது. போஸ்டர் கலரில் வரைந்தேன்.முடித்தபின் எனக்கு 90 சதவீதம் திருப்தி தந்த படங்களில் இதுவும் ஒன்று. வழக்கம் போல் குறை,நிறைகளைத் தெரிவிக்கவும்...


Monday, August 11, 2008

சோதனைப் பதிவுதான். திறக்க வேண்டாம்



த.மு.எ.ச. இன்னும் தமிழகத்தின் கிராம,சிறு நகர்ப்புறங்களில் 'கலை இரவு' நடத்தி வருகிறார்கள்.(தற்பொழுது நிலவரம் தெரியவில்லை). 'த.மு.எ.ச(தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) கலை இரவு' என்பது தற்போது துபாயிலும்,சிங்கையிலும்,சில சமயங்களில் தமிழக முதல்வர் முன்னிலையிலும் நடக்கும் அரைகுறை ஆடை அணிவகுப்பு அல்ல.இந்தக் கலைவிழாவை நடத்துபவர்கள் செங்கொடி தோழர்கள்.கம்யூனிஸ்ட்டுகளுக்கிடையே பல கொள்கை,பல குழப்பங்கள் நிலவி வந்தாலும் அவர்களின் கலை ஆர்வம் அலாதியானது.திராவிடக்கட்சிகள் தமிழுக்கு உயிர் ஊட்டினேன் என்று சொல்வது போன்ற போலி பாசாங்கெல்லாம் இங்கில்லை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து,விடியற்காலை நான்கு,ஐந்து மணி வரை நடக்கும் இவ்விழாவில் புகழ்பெற்ற பேச்சாளர் மட்டுமின்றி,சிறு,சிறு வளரும் கலைஞர்களும் பங்கெடுத்து பட்டையைக் கிளப்புவர். இதைவிட முக்கியமானது அங்கு அரங்கேறுவது முழுக்க,முழுக்க கிராமிய,தமிழ் மண் மணம் கமழும் கலைநிகழ்ச்சிகள்தான். மருந்துக்குக்கூட சினிமாப்பாடல் கிடையாது. ஆனாலும் விடிய,விடிய கூட்டம் கலையாமல் இருக்கும்.அவ்வப்போது அரசியல் நையாண்டிகளுக்கும் குறைவிருக்காது.

இதையெல்லாம் விட என்னைக் கவர்ந்தது அவர்களின் விளம்பரப் பதாகைகள்தான்.(தற்போது போல் ஓவியர்களின் வயிற்றிலடித்த டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அப்போது கிடையாது).சிறு,சிறு எளிய அருமையான கிராமியக் காட்சிகளை,கிராம மக்களை கண்முன் நிறுத்துவது போல் விளம்பர ஓவியங்கள் ஊரெங்கும் ஆக்கிரமித்திருக்கும்.சாலையில் செல்லும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் (ஷகீலா படங்கள் கூட அப்படித்தான் என நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல). அப்படிப் பார்த்த என் மனதில் பதிந்த ஒரு படம் உள்ளூர் நாளிதழில் வந்தது.பார்த்தவுடன் பரிதாபம் தூண்டும் ஒரு முதியவரின் தோற்றம்தான் அது.அப்பருவத்தில் கண்ணில் பட்டவையெல்லாம் கிறுக்குவது வழக்கம்.ஆனால் இது கருத்தையே கவர்ந்த படம்.விடுவேனா..?

முழுக்க,முழுக்க கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் வரைந்ததால் ஆங்காங்கே சில சில தீற்றல்கள் இருக்கும். வழக்கம் போல் குறைகள் அல்லது ஏதேனும் நிறைகள் தென்பட்டால் தெரியப்படுத்தவும்.


. நாளைமுதல் விடுமுறையில் தமிழகம் செல்லவிருப்பதால் இன்னும் பத்து,பதினைந்து நாள்களுக்கு பதிவோ, யாருக்கும் பின்னூட்டமோ போட்டு தொல்லை தரமாட்டேன் என்பதை மகிழ்வுடன், மனதிற்குள் சங்கடத்துடனும் அறிவித்துக்கொள்கிறேன்:-) :-) :-((((

டிஸ்கி: தலைப்பு ச்சும்மா லுலலாயி....

Tuesday, August 5, 2008

இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம்




அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு. அந்த உறவின் இழையூட்டம்தான் இளையராஜா என்கிற இசை.அ(தை)வரைப் பற்றிப் பேசத் தெரியாட்டியும் உணரத் தெரியும்.
ஆனா கடந்த இரு வாரங்கள்ல நம்ம தமிழ்மணத்துல அவரை விமர்சிக்கும் முறையில் இரு பதிவுகள் வந்தது.அதைப் படிக்க ஆரம்பிச்ச உடனே கோபம் வந்தது.ஆனா பின்னூட்டங்களைப் படிச்சவுடனே மனசு லேசாயிடுச்சு.உதாரணம்... நம்ம பரிசல்காரரோட பின்னூட்டம்.(புகழனோட பதிவுல)
பரிசல்காரன் said... அன்பு நண்பரே...
அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?
குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?
கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!
ராஜா ராஜாதான்!

அப்புறம் சர்வேசனோட பதிவு ஒண்ணு. அதைப் படிச்சவுடனே பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா தாறுமாறா சில பின்னூட்டம் வரவும், சரி இங்க வேணாம்ன்னு விட்டுட்டேன். அதில ராஜநடராஜன் சொல்லிருக்காரு..
"1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்."

எந்தப் பாட்டில ராஜா ,வைரமுத்து வரியை அமுக்கி இருக்காரு?ராஜா,எம்.எஸ்.வி யைத் தவிர எல்லா இசைஅமைப்பாளர்களும்க‌விஞ‌ர்க‌ளின் வ‌ரிக‌ளை மூச்சுத் திண‌ற‌ச் செய்வ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள்.(ரகுமான்,யுவ‌ன்,இமான்...)வித்யாசாக‌ர் ச‌ற்று விதிவில‌க்கு. ராஜாவின் பாட‌ல்க‌ள் ஹிட் ஆன‌த‌ற்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ர் தேர்ந்தெடுக்கும் பாட‌ல் வ‌ரிக‌ள்,அத‌னை அனைவ‌ரின் வாயிலும் எளிதாக‌ நுழையும்ப‌டி போட்ட‌ மெட்டு.(நினைவெல்லாம் நித்யா,காத‌ல் ஓவிய‌ம்,முத‌ல் ம‌ரியாதை இன்னும் ப‌ல‌ப்ப‌ல‌).அவ‌ரே ஒரு ந‌ல்ல‌ பாட‌ல் ஆசிரிய‌ர் என்ப‌து வேறு விஷ‌யம்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
"அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்."
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.

"வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை."
கானா பிரபா கூறிய வரவேற்கத்தக்க கருத்து. இப்போ 'தனம்' படத்துல கூட ஒரு பாட்டு வரும் 'தனம்,தனம்'ன்னு. வாலி சும்மா ஏனோதானோன்னு கிறுக்கி இருப்பார்.ஆனால் ராஜாவின் தனிப்பட்ட உரிமைகளில் நாம் தலையிட முடியாது.
"படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?"_சர்வேசன் கூற்று. மிக முக்கியமான கருத்து இதுதான். நல்ல படம் அமையலை.(நான் கடவுள் அப்படி இருக்காது என நம்பலாம்.) ஆனா சமீப காலங்களில் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படங்களில் நல்ல,நல்ல மெலோடிகள் புதிதாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில்தான் ராஜாவின் மலையாளப் பாடல்கள் கேட்டேன். தெலுங்கில் கூட கடந்த வாரம் 'மல்லிப்புவு' படப்பாடல்கள் வெளியிடப்பட்டது.(இன்னும் கேட்கவில்லை).
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...



அப்புறம் ரொம்ப சமீபத்தில வெளியான 'தனம்' படத்துல இருந்து ஒரு பாடல் பவதாரிணி பாடுனது.'ஒரு நாள் ஒரு கனவு' படத்துல வரும் 'காற்றினிலே வரும் கீதமே' பாடல் வரிசையில் இன்னுமொரு எளிய, இனிய,மனதை அள்ளும் பாடல்.(வரிகள்‍ விஷாலி கண்ணதாசன்)

இதே படத்துல வர்ற இன்னொரு பாடல் ராஜா பாடுனது.

இங்க நான் பாடல்களை விமர்சிக்க வரவில்லை. இன்னும் இளையராஜா அருமையான பாடல்கள் கொடுப்பார் என நம்புவோம். ஆனால் ஒன்று, அவை நம்மை(ராஜா ரசிகர்கள்) மகிழ்விப்பது போல் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராஜாவின் வரிகளில் சொன்னால் "நான் பாப்கார்ன் தர முடியாது. சாப்பாடுதான் தருவேன். ஆனா பாப்கார்ன் ஏன் அதிகம் விக்குதுன்னு கேட்காதீங்க. அது வேற விஷயம்." நமக்கு தேவை இல்லாதது.
இறுதியாக...
இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...