Friday, November 19, 2010

பாடல் தேடிய கதை(கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும்)

*ஜீவா ஹோவாகிதே*
             பெங்களூரு வால்வோக்களில் பயணிக்கையில், உள்ளூர்ப் பண்பலைகளில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்க நேர்ந்ததுண்டு. முக்கால்வாசி ஹிந்திப் பாடல்களும், கால்வாசி கன்னடப்பாடல்களும் வரும். கன்னடப்பாடல்கள் அனைத்தும், தென்னிந்திய மொழிகளுக்குண்டான ஃப்ளேவருடனும், கரோக்கியாக மாற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றே போலவும் தோன்றும்.(விஜயாண்டஹாரிஸ்தேவவித்யாயுவரகுமான்கள் இசை) போல் ஒரே டெம்ப்ளேட்டில் இருக்கும்.அதனால் கண்களை அகல விரித்துக் கொண்டும், காதுகளை இறுக்க மூடிக்கொண்டும் இருந்துவிடுவேன். ஓரிரு நாட்களுக்கு முன் ஏறிய ஒரு பேருந்தில் கேட்ட பாடல்தான் இப்பாடல்.சரணத்திற்கு அடுத்துவரும் பல்லவியைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது இது ராஜாவின் பாடல் என்றும், பாடிக்கொண்டிருப்பவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் என்றும். ராஜ்குமாரின் குரலைக் கேட்கையில் இளகிய P.B.ஸ்ரீநிவாஸின் குரல் போலவே எனக்குப் படும்.

            மொழி தெரியாததால், வரிகளைக் கவனிக்க முடியவில்லை, ‘ஜீவ’ என்ற முதல் வார்த்தை மட்டுமே தெரிந்தது. கன்னட நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். பாடிக் காட்டச் சொன்னார்கள்.காட்டினேன். ஏனோ அதன் பிறகு பேச்சையே குறைத்துக் கொண்டார்கள்.காதுல ஏதோ பிரச்சினை போலும் அவர்களுக்கு. வீட்டிற்கு வந்து யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன். “ஜீவ+ராஜ்குமார்+கன்னடா” இவையே எனது தேடலுக்கான வார்த்தைகள். கிடைத்துவிட்டது. பாடல் அந்ந்ந்ந்ந்ந்ந்ந்தக் காலத்து மரம்சுற்றும் டூயட்தான். இடையிடையே ‘ஜானி’ படத்தில் ரஜினி+ஸ்ரீதேவி ஓடிவது போல் ஸ்ல்ல்ல்ல்லோமோஷனில் ஓடுகிறார்கள்.ஹீரோயினை விட வயது அதிகம் எனினும் ராஜ்குமார் இளமையாகத் தோன்றுகிறார். இந்தப் பொல்லாப்பெல்லாம் வேண்டாம் என்பவர்கள், பாடலை ஓடவிட்டு, பிரவுசரின் பக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். செவிகள் மட்டும் கேட்டுக் கொள்ளட்டும். 80களில் வந்த ராஜ இசைதான். தமிழ்ப் பாடல் கேட்பது போல்தான் இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமாரின் குரலில் இன்னும் கொஞ்சம் மெருகேறி ஒலிக்கிறது பாடல். எனக்கென்னமோ இந்தப் பாடலும் என் ப்ளேலிஸ்ட்டில் சீக்கிரம் ஒட்டிக் கொள்ளுமெனத் தெரிகிறது.

   பி.கு: ரவிசார் அறியாத ஒரு பாடலைப் போட்டுவிட்டேன் என்ற திருப்தி :)

Tuesday, November 16, 2010

இரவு-தொலைந்ததும், கிடைத்ததும்

    இத்தனை நாட்களாய் ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ்ஸில் எழுதிய டிவீட்டுகள். என்னைப் பொறுத்தவரை கசப்பான ஸ்வீட்டுகள். இரவில் எழுதிய இரவைப் பற்றி எழுதிய அனைத்தையும் தொகுத்திருக்கிறேன்.மற்றபடி உங்கள் விருப்பம். 

இரவின் கால்களில் இருக்கும் எண்ணற்ற நகங்களின் உராய்தல் முதலில் சுகத்தையும் முடிவில் ஆறா ரணத்தையும் தருகிறது #இரவின் பிடியில்

**************************************************************************

இரவின் எல்லை தெரிந்தாலும் கை நீட்ட நீட்ட இன்னும் தூரமாவர்தேன்? #இரவும் நானும்

***************************************************************************

ஊர் உறங்கும் வேளையில் விடியலைச் செய்து கொண்டிருந்தது இருள். #இருளின் ரகசியம்

***************************************************************************

எவ்வளவுதான் விழிப்பாய் இருந்தாலும் நித்திரை தொலையும் இரவுகளை மட்டும் முன்பே கண்டுகொள்ள முடிவதில்லை#இரவின் பிடியில்

***************************************************************************

என்னை விழுங்கும் இரவா, கண்ணை விழுங்கும் உறக்கமா?இப்போதைக்குப் பறிகொடுக்கிறேன் எதையாவது#இரவின் பிடியில்

***************************************************************************

மாலைகளின் ரம்மியத்தைக் கவர்ந்து கொள்வதற்கே கருப்பு அங்கியுடன் பதுங்கி நிற்கிறது இரவு # மாலை மயக்கம்

****************************************************************************

ஒவ்வொரு நாளின் முடிவிலும் சேகரமாகும் வெறுமைகளின் நிறம் இருளை விடவும் கருமையானது#இரவின் பிடியில்

****************************************************************************

இரவிடம் ஏதோ சொல்வதற்காக, வெளியே நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.உள்ளே நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.#இரவும், நானும்

****************************************************************************

நிலவு தின்ற இரவின் பசி மலைப்பாம்புடையதைப் போலடங்கினால் நான் தப்பித்துக் கொள்வேன்# இரவின் பிடியில்

****************************************************************************

ஊடலில் முகம் திருப்பிக் கூந்தல் காட்டும் இன்றைய நிலவும் அழகுதான்#இரவும், நிலவும் #அமாவாசை

****************************************************************************

சாமியாடுபவரைக் கண்டு அம்மாபின் ஒளியும் குழந்தையாய்ப் போர்த்திக் கொள்கிறேன்.ஆடட்டும் இரவு #இரவின் பிடியில்

****************************************************************************

இரவுகளை வித்தியாசப் படுத்துவது அளவில் கூடும் கவலைகள் மட்டுமே #இரவின் பிடியில்

****************************************************************************

சிதறிக் கிடக்கும் கரு வண்ணத்தில் என் தூக்கத்தையும் சேர்த்துக் குழைக்கிறேன்.இன்னும் இருளட்டும் இரவு #இனிய இரவு

****************************************************************************

இரவின் ரகசியக் கண்ணிகளுக்குள் என் தூக்கமும் சிக்கிக் கொள்ளட்டும். #இனிய இரவு

****************************************************************************

இரவுகள் ஆடும் பரமபதத்தில் இன்றாவது பாம்புகள் கொத்தாமலிருக்கட்டும் என்னை...#புலம்பல்கள்

*****************************************************************************