Tuesday, December 15, 2009

வன்முறை

             வன்முறை 
















குசல விசாரிப்புகளின் முடிவில்
ஆரம்பிக்கும் கேள்வி
லச்சுவைப் பற்றியே...
எப்படி மாமா இருக்கா?
ஃபோனைக் குடுங்க
சிறு மௌனம், சிறு சத்தம்,
சின்ன வீறிடல்களில் கை மாறி இருக்கும் செல்ஃபோன்
அலோ... நா சினேகா பேச்றேன்
அவளின் அம்மா வகையறாக்கள்
வைத்த பெயர்...எனக்கு லச்சுதான்...
எப்படி இருக்க.. சாப்டியா?
நல்லா ஈக்கேன் மாமா
பதில் சொன்னவளைப் பாடச்
சொல்கையில் அவளும் ஏதேனும்
குத்துப்பாடலை அவசர அவசரமாகப்
பாடி முடிப்பாள் வீசியெறியப் பட்ட
பொம்மையைத் தேடியவாறு...

புகைப்பட உதவி: மகேஷ்

Tuesday, December 8, 2009

பிடிக்குது...பிடிக்கலை...


       தமிழ் வலையுலகில் பெரும்பாலும் அனைவராலும் எழுதப்பட்ட பிடித்த,பிடிக்காத 10 தொடர்விளையாட்டுக்கு ஷக்திப்ரபா அழைத்திருந்தார்கள்.அவர்கள் அழைப்பினை ஏற்று இப்பதிவு....


1.எழுத்தாளர்
பிடித்தவர் :எஸ்.இராமகிருஷ்ணன்
பிடிக்காதவர் :ராஜேஷ்குமார்

2.கவிஞர்
பிடித்தவர் :முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் :புரியாமல் எழுதுபவர்கள் எல்லாரும்


3.இயக்குனர்
பிடித்தவர் : பாலா
பிடிக்காதவர் :ஷங்கர்

4.குணம்
பிடித்தது :அன்பை வழங்குதல்

பிடிக்காதது :அதிகாரம் செய்தல்,பொய்மை பாராட்டுவது


5.நடிகை
பிடித்தவர் : பாவனா, 
பிடிக்காதவர் : ஸ்ரேயா

6.இசையமைப்பாளர்
பிடித்தவர் :இளையராஜா
பிடிக்காதவர் :ஏ.ஆர்.ரகுமான்


7. ஓவியர்
பிடித்தவர் :மாருதி
பிடிக்காதவர் :அரஸ்

8. பதிவர்
பிடித்தவர் :எனது வலைப்பூவின் வலது கீழ் மூலையில் இருக்கும் பட்டியலில் இருப்பவர்கள்,இன்னும் பலரைச் சேர்க்கவில்லை...அவர்களும்

பிடிக்காதவர் :.......................................................................(மூன்று பெயர்கள் எழுதியிருந்தேன்... எடுத்துவிட்டேன்)

9.பயணம்
பிடித்தது: அலுவலகம் டூ வீடு (பேருந்தில்)
பிடிக்காதது: வீடு டூ அலுவலகம்(பேருந்தில்)


10.வலையுலகில்
பிடித்தது: பின்னூட்டமிடுவது
பிடிக்காதது: பதிவிடுவது

 நன்றி: பதிவுக்கு டெம்ப்ளேட் கொடுத்து உதவிய அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன்





Sunday, December 6, 2009

பா...இந்திப்படம்...இளையராஜா...சிறுபார்வை

‘my paa is good'


'I dont know God, but i know my paa only'


'Paa is like an umbrella, protects us from rain and heat'


             தெல்லாம் ‘பா’ படம் ஓடுற ஆட்லேப்ஸ் வளாகத்தின் ஒற்றை போர்டில் ஒட்டப்பட்ட சின்னச்சின்ன ஸ்லிப்புகளில் வாண்டுகள் கிறுக்கியது.அவர்களின் உயரமே உள்ள போர்டில் எழுதியிருந்தவைகளில் 90 சதம் உண்மையாகவும் இருக்கலாம்.அல்லது கூடவே அப்பா இருப்பதால் பயந்து கொண்டு நல்ல விதமாக எழுதியிருக்கலாம் அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில்கூட எழுதி இருக்கலாம்.’பா’ படத்துக்குக் குழந்தைகளின் ஆதரவைக் கூட்ட இதுவும் ஒரு விளம்பர உத்தி.


   என்கிட்ட கேட்டிருந்தா என்ன எழுதியிருப்பேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.சின்ன வயசுல ‘அப்பா நல்லவர்’ன்னு தமிழ்ல எழுதி இருப்பேன்.இப்போ என்ன தோணுதுன்னு தெரியலை... யோசிச்சுப் பார்த்தேன். சிறுவயது அப்பா பிரம்மாண்டம் இப்போது மேலும் விஸ்வரூபமாகி நெஞ்சினை முட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அதையெல்லாம் எழுத முடியுமான்னு தோணலை. உங்களை எழுதச் சொன்னா என்ன எழுதுவீங்கன்னு தெரியாது.அதே ஒன்றை ‘ப்ரோஜேரியா’ எனும் அரிய நோய் வந்து, தந்தை யார் எனத் தெரியாமல்,13 வயதிலேயே வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ’ஆரோ’விடம் கேட்டால்...அதுதான் ‘பா’. இரண்டரை மணி நேர உணர்ச்சிகள்...


   ‘ஆரோ’ன்னா...??


இதே கேள்வியை அவனை முதல் முதலாப் பார்க்கிற அவன் தாத்தா கேட்பாரு.


‘ஆரோன்னா ?’


‘A U R O'- இது ஆரோ.


‘ஓ. அப்ப ‘ஆரோ’ன்னா ஆரோபிந்தோ(அரவிந்தரா)...?’


‘இல்ல... ‘ஆரோ’ன்னா ‘ஆரோ’. அவ்வளவுதான்’- ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருந்தவாறே ஆரோவின் பதில்.


இதுதான் ஆரோ. 



   ‘ப்ரொஜேரியா’-முதலிலேயே மருத்துவர் விளக்கிவிடுகிறார். குழந்தைகளுக்கு வரும் வியாதி.தன்னைவிட  ஐந்து மடங்கு வயதாய்த் தோன்றும் உடல்,மூளையோ இயல்பு நிலை.13,14 வயதுகளைத் தாண்டுவதே கடினம்.உலகத்தில் இது நாற்பது,ஐம்பது பேர்களுக்குத்தான் இருக்கிறது. அதில் ஒருவன் தான் நமது ‘ஆரோ’. ஆரோவாக அமிதாப்.அடையாளம் தெரியாத அளவு மேக்கப்.துருத்திக் கொண்டு தெரியவில்லை.அபாரம். மேக்கப்ல உருவம் மாறலாம்.உயரம் எப்படிக் குறைவாகும்...?அந்த வேலையை பி.சி.ஸ்ரீராமோட விசேஷ லென்ஸ் பாத்துக்கிடுச்சு.


        நல்ல அரசியல்வாதியாக (முரண்...??!!) நினைக்கும் பணக்காரர் அமோல்(அபிஷேக்) , கேம்பிரிட்ஜில் படிக்கையில்,வித்யா(வித்யா பாலன்)வுடன் காதல்,கொஞ்சம் முற்றிப் போய் குழந்தை உருவாகிவிடுகிறது.இப்போதைய குழந்தை தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என அபிஷேக் அதைக் கலைக்கச் சொல்ல, வித்யா(கைனகாலஜிஸ்ட்) மறுத்து, உன் வழியில் தென்படாது எங்கள் சுவடுகள் என விலகிவிடுகிறார். இவையனைத்தும் இரண்டு நிமிட ‘முடி முடி ‘ பாடலிலேயே முடிந்துவிடுகிறது.இளையராஜாவும்,பி.சி.யும் கலந்த ஒரு இளமைக் காக்டெயில் இந்தப் பாடல்.


            புரொஜேரியா குழந்தையாக ஆரோ.அவனைப் பார்த்த ஒரு பெண், வித்யாவிடம் கேட்க, ‘மில்லியன் குரோம்சோம்ல ஒரு சின்ன இடமாற்றத்துல இப்படி ஆயிடும். ரொம்ப லக்கி இல்ல...’ எனச் சிரித்தவாறு கூறுகையில்,பேஸ்தடித்துப் போய்விடுகிறார் கேட்டவர்.


           இவ்வளவு பில்டப் இருக்கே... இதுக்கப்புறம் கர்ச்சீப்பைக் கையில் வச்சுக்கிட்டுதான் படம் பார்க்கணுமான்னு கேட்கறீங்களா...?அந்தக் கேள்வியை அடிச்சு தூள் பண்ணிடுறான் ஆரோ.கிரியேட்டிவிட்டி,குறும்புத்தனம்,பாசம்,எடக்குமடக்குக் கேள்விகள் இவைதான் அவன் சொத்து.


       ரு பள்ளிவிழாவில் அவனை அமோல் எம்.பி. பார்க்க, பின் மீடியா வெளிச்சம் ஆரோ மேல் பாய்கிறது. அதை விரும்பாத ஆரோ,அமோலுக்கு மெயிலனுப்ப, துளிர்விட ஆரம்பிக்கிறது புதிய உறவு.அதன்பின் ஆரோவுக்கு அமோல்தான் தன் அப்பா எனத் தெரியவந்து, தன் பெற்றோரை ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை.


        இதுதான் கதை என்றாலும் சொன்னவிதம் மழையில் கழுவிவிட்ட தார்ச்சாலை போல பளிச்.பள்ளியில் ஆரோவின் குறும்புத்தனம்,தன்னை நோக்கி வரும் சிறுமியைக் கண்டதும் ‘எஸ்’ஸாகிவிடும் உஷார்,பாட்டியை ‘பம்’ என்று செல்லப் பேர் வைத்துக் கிண்டல் செய்வது,எம். பியுடன் ராஷ்டிரபதி பவன் பார்க்கச் சென்றதாக நண்பர்களிடம் பீலா விடுவதும், குட்டு உடைந்தவுடன் வழிவதும் எனக் கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிக்ஸர்தான். கேட்கும் கேள்விகள், சொல்லும் பதில்கள் எல்லாமே ‘நச்’...


   அமோல்: உன் பெற்றோர் என்ன பண்றாங்க...
  
   ஆரோ    : they are preparing kids. but i dont want promotion.


   இதைவிட ஆஸ்பத்திரியில் ஆரோவிடம் அனுதாபம் காட்டுவதாகப் பேசும் அவன் தாத்தாவிடம்(பரேஷ் ராவல்), இவன் அளிக்கும் பதில் சரியான நெத்தியடி.


ஆரோ மட்டுமல்ல. படத்தில் அனைவரின் வசனமுமே கலக்கல்தான்.திருமணம் வேண்டாமென மறுக்கும் அமோலிடம் அவன் அப்பா சந்தேகத்துடன் கேட்கும் கேள்வி ‘ஆர் யு  கே (gay) ?'.


  ஆரோ விலகிச்சென்றாலும், நெருங்கி நெருங்கி வரும் சிறுமி அழகான தேர்வு... பின் அவள் ‘ஸாரி’ கேட்பதும் மிக அழகு. அதற்கான காரணமும் சரியான திருப்பம்.


    ரோவின் அம்மாவாக வித்யா பாலன். அமிதாப்புக்கு அடுத்து ஸ்கோர் செய்வது இவர்தான்.கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார்.காதல்,கோபம், பாசம் அனைத்திலும் இவரின் முகம் காற்றிலாடும் தீபம் போல அழகாகப் பிரதிபலித்திருக்கிறது.(special credits to p.c.sriram)



   அபிசேக்தான் ‘பா’.நேர்மையான அரசியல் வாதி,பாசமிகு அப்பா.’நீட்டலும், மழித்தலும் வேண்டாம்’ என்பது போல் அளவான நடிப்பு.


  ண்மையான ஹீரோ டைரக்டர் பால்கிதான். அசத்தியிருக்கிறார்.இது இரண்டாவது படம்தான்(’சீனிகம்’ முதல் படம். பார்த்துவிடுங்கள்).சீரியல் போன்ற ஒரு கதையை, இரண்டரை மணி நேரத்தில் கொடுப்பதற்கு இவரது முந்தைய விளம்பர உலகம் கை கொடுத்திருக்கிறது.


   இளையராஜா...படம் எது, இசை எது என நம்மைப் பிரித்துப் பார்க்க முடியாதவாறு கட்டிப் போடுகிறார். அவருக்குப் பாடல்கள் கூட கதையின் தன்மையைச் சொல்லும் பின்னணி இசைதான்.க்ளைமேக்ஸ் இல் வசனங்கள் இல்லை. இசைதான் பேசியது.பாடல்களில் ஒரு இளமைத்துள்ளல். ‘முடிமுடி’ மற்றும் அதன் வெர்ஷன்களான ‘கலி உதி’,’உதி உதி’அட்டகாசம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ இங்கு ‘கும்சும்கும்’ ஆக நீட்டாக ரீபெர்த் ஆகி இருக்கிறது. படத்தில் ஒரு நிமிடம் வருவதுதான் குறை. ‘ஹிச்கி ஹிச்கி’ -சரியான இடத்தில் வருகிறது.தீம் மியூசிக் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்டது.(தமிழில் வந்த ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் வரும் ‘காட்டுவழி’ பாடல்).வயலின், கீ போர்டு இரண்டில் இருந்தும் அனாயசமாக வழியவிட்டிருக்கிறார் இசையருவியை.


   பி.சி.ஸ்ரீராம்-க்ளீன்...படம் முழுவதும் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது.கேமரா லென்ஸை இவர் விபூதி போட்டுக் கழுவிட்டு படமெடுப்பாரோ...?
   எடிட்டிங்- கனகச்சிதம்.
படம் முடிகையில் தொண்டை அடைத்துவிடுகிறது. இது ஒரு புது அனுபவம்.

           

Thursday, December 3, 2009

அகர முதல...

   வெகு நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு அழைப்பு.ஊருக்குச் சென்று வந்ததுக்கப்புறம் பதிவுகள் போடவில்லையாதலால், தாமதமாக அரங்கேறியிருக்கிறது. அழைத்த ஹேமா,சரவணகுமரன்,கயல்விழிநடனம் அனைவரும் தாமதத்தைப் பொறுத்தருள்வார்கள் என நம்புகிறேன்...

1. A - available/single? - Single...
2.B-.Best friend -music
3.C- Cake or Pie - Coffee
4.D - Drink of Choice - Refer answer for 3rd qn
5.E- Essential item you Use every day - love
6.F-favorate color - Blue
7.G-gummy bears or worms - Sorry... Next question pls..
8.Home Town - Cumbum.
9.I-Indulgence - choice இல்லையா....?
10.J- january/february - january
11.K-Kids and their Names - Out of syllabus
12.L-Life is incomplete with out - I
13.Marriage Date - வெறுப்பேத்தாதீங்கப்பா...
14.N - Number of sibilings - ஒரு தம்பி...
15.O-Orange or Apples - ஆப்பிள்...(easy for eating)
16.P- Phobias/fears - Dogs
17.Q-Quote for today - நன்றே செய்..இன்றே செய்...(எனக்குச் சொன்னேன்...)
18.R-Reason to Smile - children
19.S-Season - மழை/பனி/க்காலம்...
20.T-Tag4 People - MAGESH
21.U-Unknown fact about me - If i donno, how can i say that is fact ???
22.V-Vegetable you won't Like - கருணைக்கிழங்கு
23.W-worst Habit - sleeping
24.X- Xrays you had - ya. 4th standard arm fracture
25.Y-Your favorate Food -  தோசை...தோசை..தோசை....
26.Z-Zodiac sign - மேஷம்


அன்புக்குரியவர்கள் - அப்பா, அம்மா, தம்பி மற்றும் நண்பர்கள்..
ஆசைக்குரியவர் - கிடைத்ததும் சொல்கிறேன்...
இலவசமாய் கிடைப்பது - அறிவுரை and Ideas
ஈதலில் சிறந்தது - கல்வி...
உலகத்தில் பயப்படுவது - எனக்கு தான்...
ஊமை கண்ட கனவு - கஷ்டம்தான்
எப்போதும் உடன் இருப்பது - அன்பு
ஏன் இந்த பதிவு - ஹேமா,சரவண குமரன்,கயல்விழிநடனம் அழைத்ததால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி...
ஒரு ரகசியம் - சொல்ல முடியாது.
ஓசையில் பிடித்தது - தாளிக்கும் ஓசை
ஔவை மொழி ஒன்று -அறம் செய விரும்பு.

Tuesday, December 1, 2009

என் முதல் காதலி...

      வளைப் பற்றிச் சொல்லணும்னா செமை கட்டைன்னு சொல்லலாம்.கொஞ்சம் பருமன்னு கூட நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு அப்படித் தோணலை.நல்லாப் பாடுவா. நல்ல குரல் வளம். ஆம்பிளைக் குரல்ல கூட பாடுவான்னா கேட்டுக்குங்களேன்.நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே அவளுக்காக உருக ஆரம்பிச்சிட்டேன். ஆனா தொட்டா மட்டும் ‘ஷாக்’ தான்.பின்ன என்னங்க... வாங்கி 25 வருஷத்துக்கு மேலாச்சுனா, ஷாக் அடிக்காம இருக்குமா ‘வால்வு டைப் ரேடியோ’??!!


          என்னதான் சிஸ்டத்துலயும், ’ஐ பாடு ’ லயும் ஆயிரத்துச் சொச்சம் பாட்டுக்களை நுணுக்கி நுணுக்கிச் சேர்த்து வச்சு, நினைக்கிற நேரத்துல பாட்டு கேட்டாலும் வானொலியின் சுகம் வருவதில்லை. இப்போ இருக்கிற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இடையில தேடியெடுத்துப் பாட்டு கேட்க முடியாத நம்ம இயலாமை கூட ஒரு காரணமா இருக்கலாம். சரி பண்பலையாச்சும் கேட்கலாம்னா, நம்ம காதுக்குள்ளயே கடை போடுற விளம்பரங்கள், தொகுப்பாளினி(ளர்) யோட முக்கல், முனகல்கள், இதையெல்லாம் தாண்டிப் போய்க் கேட்டாலும் காதுக்குள்ள ஈயத்தைக் காய்ச்சி ஊத்துற மாதிரியான பாட்டுக்கள்தான் கேட்க முடியுது.

               அதனால திடீர்ன்னு ஒரு கொசுவர்த்தியைச் சுத்திப் போட்டுடலாம்ன்னு தோணுச்சு.இத நீங்களும் கொஞ்சம் அனுபவப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். முதல்ல வானொலியில பாட்டுக்கள் கேட்குறதை விட நாடகங்கள் கேட்பேன். இரவு 7 மணிக்கு மேல் இலங்கை வானொலி கேட்காது.அதன்பின் மதுரை வானொலியில் இரவில் போடும் நாடகங்களுக்காகத் தவமிருப்பேன்.


           துரை(உட்பட எல்லாத் தமிழக வானொலிகளிலும்) வானொலியில் ஒவ்வொரு வருடமும், ஒரு வாரத்திற்கு இரவு 9.30 முதல் 10.30 வரை அகில இந்திய நாடக விழா ஒலிபரப்புவார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு வானொலி நிலையத்தின் நாடகம் ஒலிபரப்பாகும்.தூங்கி வழியும் கண்களோடு காத்திருப்பேன்.ஒவ்வொரு செவ்வாய் இரவும் 'மனோரஞ்சிதம்' எனும் தலைப்பில் பழைய பாடல்கள் போடுவார்கள்.9.30 முதல் 10.30 வரை. கண்ணதாசன், எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் பெரும்பாலும்.

     அப்புறம் நாடகக்குரல்களில் என்னால் இன்றும் மறக்க முடியாத குரல்,இப்போது கூட என் காதுகளைச் சுற்றுவது போல் ஒரு பிரமை...அப்படிஓர் கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் மறைந்த நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்கள்.பெரும்பாலும் சரித்திர நாடகங்கள்தான்.கெட்டியான எருமை மாட்டுப்பாலில் குடித்த ஸ்ட்ராங்கான காஃபி போல் சுவையான குரல் அவர் குரல்.நீங்கள் 'யார்?' படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலில் வந்து இறந்துவிடும் முனிவர் வேடத்தில் நடித்தவர் அவர்தான்.


           ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி சமீபத்தில் கேட்க ஆரம்பிக்கும் குறள்,’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ அதன் பின் தொடர்ச்சியாக ‘மண்ணும்,மணியும்’ ஒலிபரப்பாகி,பயிர், உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும். பின் செய்திகள்.திருச்சி வானொலி அவ்வப்போது 7.10க்கும் 7.15க்கும் இடையில் பாடல் கூட ஒலிபரப்பும். ஆனால் மதுரை வானொலி அப்படியே தூர்தர்சன் மாதிரிதான்.

           இலங்கை வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அத்துப்படி. அப்துல் ஹமீதுவின் ‘பாட்டுக்குப் பாட்டு’ ஃபேவரைட்.புதுப்புதுப் பாடல்கள் கேட்கலாம். பண்டிகை சமயங்களில்தான் காதை அடைக்கும் ஜவுளிக்கடை விளம்பரங்கள் வரும்.

           நான் முன்பே சொன்னதுபோல எங்கள் வீட்டு வானொலி தொட்டா அவ்வப்போது ‘எர்த்’ அடிக்கும். ரெடியா ஒரு டெஸ்டர் வச்சிருப்பேன். அதவச்சுத் தொட்டுத்தான் வானொலியின் பதம் பார்த்துக் கை வைப்பேன்.அதோட மட்டுமில்லாம சோதனை ஆராய்ச்சியெல்லாம் பண்ணிப் புதுப்புது ரேடியோ ஸ்டேசன்லாம் கண்டுபிடிப்பேன்.அதில் வெளிநாட்டு வானொலி(சிங்கப்பூர் ஒலி95.4(....?),பிபி.சி,சீனவானொலி) ஒலிபரப்புகளைக் (கரகரப்புடன்) கேட்பதில் இருந்த சுகம், இப்போது ஒரு தொடலில் துல்லிய ஒலிபரப்பு கேட்பதில் இருப்பதில்லை.இவற்றைக் கேட்பதற்காக வானொலியின் குமிழிகளை நோண்டி,நொங்கெடுத்தது(தாத்தாவிற்குப் பயந்து கொண்டே)இன்று நினைவுக்கு வருகிறது.

          னது சிறுவயது கனவு டேப் ரெக்கார்டர் வாங்குவது. கல்லூரிக்காலம் முடியும் வரை இயலவில்லை. வேலைக்கு வந்தபின்தான் நிறைவேறியது.ஆனால் அதற்காக அலைந்த பருவங்களின் தொலைந்த கன்வுகளைத்தான் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.தற்போதைக்கு நினைவுகள் மட்டுமே மிச்சமாய்...

விளம்பரம்:  சர்வேசன் ‘நச்’ கதைப் போட்டிக்கான சர்வே இங்கு நடக்கிறது.சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுச் செல்லவும். 20 கதைகளையும் படித்துப் பார்த்து பிடித்த கதைகளுக்கு வாக்களிக்கவும். எனது கதையும் அதில் ஒன்று என நான் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.