Monday, October 27, 2008

தொட்டுத் தொடரும் ஒரு குட்டி விளையாட்டு(சினிமா)

நாகார்ஜூனன் தொட்டிழுக்க ஆரம்பித்த இச்சினிமாத்தேரின் வடம் பலரது ரேகை படித்து, ஒரு ஓரத்தில் எனது விரல்நுனியையும் உரசிப்போக வந்துள்ளது.உரச உதவிய நண்பர்க‌ள் விஷ்ணு மற்றும் அத்திரிக்கு நன்றி. கேள்விகள் பார்த்தவுடன் குழப்பம்,இதற்கு ஓரிரு வரிகளில் விடைஇறுப்பதா இல்லை பத்திகளில் விடைஇறுப்பதா என. மற்ற கல்வி,சமூகம் போன்ற விஷயங்களாய் இருந்தால் சுருக்கமாக முடித்துவிடலாம்.ஆனால் தமிழனின் கல்வி,சமூகம்,அரசியல் என அனைத்து நிலைகளிலும் தெரிந்தும்,தெரியாமலும் வேர் பாய்ச்சி நிற்பது சினிமாதான். நானும் ஒரு சராசரித் தமிழன் தானே. இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்,அவற்றைத் திறந்தவுடன் எனக்கேற்பட்ட சலிப்பும் என்னை இத்தொடரை எழுதவிடாமல் ஒருவாரம் அலைக்கழித்து விட்டது.சமீபத்தில் யார் அந்த நாகார்ஜூனன், நம்மை இப்படி யோசிக்க வைத்து விட்டாரே என எண்ணி அவரின் வலைப்பூ சென்றிருந்தேன்.அங்கேயும் தமிழ்தான் இருந்தது.ஆனால் எல்லாமும் எனக்குப் புரியவில்லை.ஆனால் சினிமாத்தொடர் விளையாட்டு ஆரம்பித்ததன் நோக்கம் ஓரளவுக்குப் புரிந்தது.எனது புரிதல் அளவில் இது ஒரு சர்வே அல்லது கள ஆய்வு போன்றது. ஓரளவு என்னில் தெளிவு கிடைத்ததால் எழுத ஆரம்பித்து விட்டேன்.
1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?  
இரண்டு வயதிலேயே பார்க்க ஆரம்பித்ததாக எனது வீட்டில் சொன்னார்கள்.


ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?  
பள்ளிக்குப் போகும் முன்பே 'மை டியர் குட்டிச்சாத்தான்' படம் பார்த்ததாக நினைவு.


இ)என்ன உணர்ந்தீர்கள்? 
மதுரை மதி திரையரங்கில் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.அரங்கினுள் படம் பார்க்கையில் 'முப்பரிமாணக் கண்ணாடி' அணிந்து பார்த்தோம். எனக்கு அதில் அவ்வளவாகப் புரிபடவில்லையாதலால் வெறும் கண்ணோடு,தெளிவில்லாமல் படம் பார்த்த ஞாபகம். எப்படி அப்பா,அம்மா மட்டும் அந்தக் கண்ணாடி அணிந்து படம் பார்க்கிறார்கள் என ஆச்சரியப் பட்டேன்.அந்நாள் நினைவுகளை மீட்டெடுக்க மறுபடியும் ஒரு முப்பரிமாணப்படம் பார்க்க வேண்டுமென்பது ஆவல்.


2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? 'சுப்பிரம‌ணியபுரம்'.காதலியின் துரோகம் மிகவும் பாதித்தது.எங்கள் ஊர்ப் பக்கம்(மதுரை அருகில்) இதெல்லாம் யதார்த்தம் என்ற உண்மைநிலை எனது கையாலாகாத்தனத்தைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தது.


3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? 'அஞ்சாதே'
எனது அறையில்; கணிணியில்  
மருத்துவமனையில் ஒருவனைப் போட்டுத் தள்ள வரும் கும்பல்,வெகு சாதாரணமாக அனைவரையும் அப்புறப்படுத்துவது (காவலர் உட்பட) கண்டவுடன் அதில் தெரியும் வாழ்வின் நிகழ்நிலை கண்டு அதிர்ச்சியுற்றேன். வெகு சாதாரணமாக நடைபெறும் கடத்தல், கற்பழிப்புகள் ஒரு நேரடி ஒலிபரப்பு காண்பது போல் அதிர்ச்சியின் அதிர்வெண்ணைக் கூட்டியது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மூன்றாம்பிறை,சேது,நந்தா,பருத்திவீரன்,வண்ணவண்ணப் பூக்கள்,மகாநதி,சிப்பிக்குள் முத்து,பாசவலை,உதிரிப்பூக்கள்,ஜானி,முள்ளும் மலரும்,பாரதி,தென்றல்,அஞ்சாதே,சுப்பிரமணியபுரம்.....


5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தங்கர் பச்சான் காலில் விழுந்த விவகாரம் 


ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம் கிராஃபிக்ஸ்.இது என்னை ரொம்பத் தாக்குது. அதனால நொந்து போய் இருக்கேன்.எது எதுக்குத்தான் கிராஃபிக்ஸ் தேவைன்னு தெரியாமப் பயன்படுத்துறது எனக்குப் பிடிக்கலை. என்னைப் பொறுத்தவரை கிராஃபிக்ஸ் என்பது செய்தால், பார்வையாளனுக்குத் தெரியக் கூடாது. 'காதலர்தினம்' பாடல் ல வர்ற தங்கப் பறவைகள்.அத கிராஃபிக்ஸ் ல பறக்க விட்டதுக்கு பத்து புறாவைப் பறக்க விட்டிருந்தா இன்னும் உணர்வுப்பூர்வமா இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ஷங்கர் படங்கள் பார்க்கிறதுக்கு விட்டலாச்சார்யா படங்கள் எவ்வளவோ தேவலை.  


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கடந்த ஆண்டு வரை விகடனின் எந்தத் தமிழ்ச்சினிமா விமர்சனத்தையும் விட்டதில்லை.அவர்களின் அளவீடு தெரியுமென்பதால் ,நான் பார்க்க வேண்டிய படங்களை வரிசைப் படுத்திக் கொள்வேன். செழியனின் 'உலக சினிமா' தொடர் ஆவலுடன் படித்தேன். பாலாவின் சுயசரிதைக் கட்டுரைகளை விரும்பிப் படித்தேன். பொதுவாக சினிமா பற்றி வாசிப்பதில் அதிக ஆர்வம்.  


7.தமிழ்ச்சினிமா இசை?  
இளையராஜா மட்டுமே.  
ஏனெனில் தமிழ்ச்சினிமா இசை என்பது பாடல்கள் மட்டுமல்ல. பின்னணி இசை,படத்தின் வெற்றிக்கு அதன் பங்கு,இசையின் வடிவங்களான‌ செவ்வியல்,நாட்டுப்புற,மேலைப் பாணி ஆகியவற்றைப் பொருத்தமாகக் கலந்து ஜனரஞ்சகமாக்கல் ஆகிய காரணிகளைக் கொண்டதால் இப்படியொரு எண்ணம்.


8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மொழியின் முழு அர்த்தம் தெரியாமல் படம் பார்ப்பதில் விருப்பமில்லை. இருந்தும் தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் 'தாரே ஜமீன் பார்' கலங்க வைத்த படம். ஆங்கிலத்தில் 'காட்ஃபாதர்' பன்ச் டயலாக்குகளின் ஃபாதர் எனலாம். தெலுங்கில் 'கோதாவரி' நதி போன்ற தெளிவான,அழகான படம். 'ஆனந்த்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.


9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா இல்லை.(அப்பாடா 4 கேள்விக்கு பதில் சொல்ற‌துல இருந்து எஸ்கேப்பு)


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்சினிமாக்கள் தொழில்நுட்பங்களில் காட்டும் அக்கறையை கதையில்,திரைக்கதையில் காட்டாதவரை விளங்காது.கதையை யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோடியில பட்ஜெட் போடுறானுங்க.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?  
எனக்கு முதலில் கஷ்டமாகத்தானிருக்கும். பின் புத்தகங்கள் படிக்க அதிக நேரம் கிடைத்ததே என மகிழ்வேன்.
தமிழர்களுக்கு (அப்போ நான் தமிழன் கிடையாதா?) என்ன ஆகும்...? யப்பாஆஆஆ இதுக்கு யோசிச்சா தலையே வெடிச்சுடும் போல இருக்கு.


நான் அழைக்க இருப்பவர்கள் இத்துறையில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். எனினும் அவர்கள் கருத்துக்களும் தேவை அல்லவா... 1.இரா.வசந்தகுமார்  2.ஹேமா 

Monday, October 20, 2008

ஒரு கணக்கு நோட்டும்,சில காதல் தீர்வுகளும்...


நீ விட்டு சென்ற
வாசத்தில் வசமிழந்து 
வகுப்பறையில்
நான் மட்டும் ...

விழிகளில் இடறியது
கதறும்
குழந்தையாய் உனது
கணக்கு நோட்டு ..
தாவி எடுத்தேன்
தாள்களை புரட்டினேன்



முதல் பக்கத்திலேயே
முத்திரைக்கவிதையாய்,
தாளுக்கும் வலிக்காத எழுத்துக்களில்
உனது பெயர்...



பிள்ளையார் துணையுடன்
துவக்குகிறாய் பாடத்தை
'உ' போட்டு...
பிழையின்றிப் படிக்கிறேன்
அதையும்
உருப்போட்டு...



அல்ஜீப்ராவும்,
அபிலியன் குலமும்
அம்புலிமாமாவை
அடையாளமும் காட்ட
புரியாத தேற்றங்கள்
புதிதான தோற்றங்களில்


வாசலில் நிழலாட,
வைத்த‌ க‌ண் இட‌ம் மாற‌
குயில் உந்தன்
குரல் தான் ...

என்ன பார்வை

எனது நோட்ஸ் ஆஃப் லெஸனில்..?
ஆயிர‌ம் வழியல்
அடியேன் முகத்தில் ..
"ஸாரி.. டீச்ச‌ர்..
வெட்கத்தை மறைத்து
வெளிநடப்பு செய்தேன் ..
வேகமாக ...





கவிதைக்குறிப்பு:
கருவான கவிதைக்கு உருத் தந்த நண்பர் விஷ்ணுவுக்கு நன்றிகள்.

ஓவியக்குறிப்பு:
ஓவியர் ம.செ..இந்த மாதிரி மொக்கைக்கெல்லாம் படம் போட மாட்டேன்னுட்டதால, அவர் பாணியில் நானே போட்டுக்கொண்ட ஓவியம்...இல்லை இல்லை 'காப்பி'யம் இது.

Thursday, October 2, 2008

முத்தம் தருவது உடலுக்குக் கேடு

ஹலோ... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அழகான பொண்ணுங்களைக் கண்டாலே பிடிக்காது.அது ஏன்னு எனக்கும் தெரியலை.அதுக்கு முன்னாடி நான் எங்க இருக்கேன்னு சொல்லிடுறென்.நான் இருக்கிறது இந்தோர்ல.இந்தோரைப் பத்திக் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, இது ஒரு தொழில் வளமுள்ள ஒரு நகரம்.(இப்படியே போனா நியூஸ் ரீல் ஆயிடும்.மேட்டருக்கு வருவோம்)இங்க பொண்ணுங்கதான் இன்னொரு சிறப்பு.இங்க இருக்கிற பொண்ணுங்களை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்.முதல் வகை அழகானவங்க. ரெண்டாவது வகை ரொம்ப அழகானவங்க. முன்னயே சொன்ன மாதிரி எனக்கு அழகான பொண்ணுங்களைப் பிடிக்காததுனால, ரொம்ப அழகான பொண்ணுங்களைப் பார்க்குறதுக்காகவே 'மங்கள்சிட்டி'ன்ற புண்ணியதலத்துக்கு தினமும் ஈவினிங் விசிட் பண்ணுவேன்.இத்தலத்தை 'ஷாப்பிங் மால்'ன்னு தெளிவா, தமிழ்ல சொன்னாப் புரியும்ன்னு நினைக்கிறேன்.இங்க பொருள் வாங்குறதெல்லாம் நம்ம பழக்கமில்லை.ஏன்னா அதெல்லாம் வாங்குனா காசு குடுக்கணுமாம்.அதனால சிம்பிளா ஒரு வசதியான இடத்துல உட்கார்ந்துகிட்டோ, நின்னுகிட்டோ வேடிக்கை பார்த்துட்டிருப்போம்.(என்ன பன்மை வந்துடுச்சேன்னு பார்க்குறீங்களா..நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் கூடச் சேர்ந்துட்டாரு). நான் அக்கறையா ஒரு தூரத்துப் பச்சையைப் பார்த்துட்டிருக்கப்ப, ராஜா (அட..புது கேரக்டரெல்லாம் கிடையாது.ஃப்ரெண்டோட பேருதான்)'உனக்கு ஃபோன்'னு அவன் மொபைலக் குடுத்தான்..


'சரி'ன்னு ஃபோனை வாங்கி அவன்( (ராகவன் எ ரெமோ)கிட்ட‌ பேசினேன்.

'சித்தப்பு..எனக்கு சௌத் இந்தியன் மிஸ் இருக்க இடம் தெரியும் 'ன்னு சொன்னான்.
ஃபிகர் கடந்து விட்ட கடுப்பில்,'அடேய்.. சௌத் இந்தியன் மிஸ் எல்லாம் பிட்டர். இந்தோர் மிஸ்தான் பெட்டர்' ன்னேன். 'அட பட்டரு...நான் சொன்னது சௌத் இந்தியன் மெஸ்ஸை. சோறு அன்லிமிட்டெட் ஆஃபர். வந்தா வா...'ன்னுட்டு காலை கட் பண்ணிட்டான்."சோறு கண்ட இடம் சொர்க்கம்"ன்னு சும்மாவா சொன்னாங்க. பொண்ணப் பார்த்தா, வழக்கம் போல பன்னத் தின்னுட்டு, தண்ணியைக் குடிக்க வேண்டியதுதான்னு ஒரு எச்சரிக்கை உணர்வோட மறுபடியும் ரெமோவுக்குக் கால் பண்ணேன். 'நண்பா... பழி வாங்குறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இப்போ மெஸ் எங்க இருக்கு சொல்லு ராஜா'ன்னு தாஜா பண்ண ஆரம்பிச்சதுல, பயபுள்ள உருகி வழி சொல்ல ஆரம்பிச்சான். 'இப்போ எங்க இருக்க..? மங்கள்சிட்டியிலயா... சரி அப்படியே ரோட்டக் கிராஸ் பண்ணி,இந்தப் பக்கம் ரெண்டு எட்டு எடுத்து வச்சேன்னா, ஒரு சந்து வரும் அதுல உள்ள நுழஞ்சு அப்டியே ,இப்டி வந்தேன்னா...' சொல்லிக்கிட்டே போனவன இடைமறிச்சு,'அடேய் வென்ரு, ஃபோன்ல பேசும் போது
கைய‌,கால நீட்டிலாம் வழி சொல்லக்கூடாது. ஒழுங்கா சொல்லு'ன்னேன்.ஒருவழியா வழிசொல்லும் படலம் முடிஞ்சு,நாங்க நடக்க ஆரம்பிச்சாச்சு.ஸ்பாட்டை நெருங்குறதுக்கு முன்னாடி உறுதி செஞ்சுக்கிறதுக்காக மறுபடியும் அவனைக் கூப்பிட்டு, நாங்க இருக்க இடத்தைச் சொன்னேன். 'அப்படியே நேரா வந்தா, இங்க ஒரு எலக்ட்ரிசிட்டி கம்பம் இருக்கும். பக்கத்துல நான் நிக்கிறேன்'ன்னான். 'நீ இருக்கிற உசரத்துக்கு ,கம்பம் பக்கத்துல நிக்காத. எவனாவது தப்பா நினைச்சுக்கிட்டு உன்மேல டுட்டோரியல் சென்டரு,கம்ப்யூட்டர் சென்டரு நோட்டீஸெல்லாம் ஒட்டிறப் போறானுங்க'ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.


ஒருவழியா இடத்தைக் கண்டுபிடிச்சு, சம்பவம் நடந்த இடத்திற்குப் போனோம்.(தலைப்பை மறந்துட்டீங்களா..?) SICA (South Indian Cultural Association) அப்படீன்ற அமைப்பு நடத்துறதுதான் இந்த மெஸ். நம்ம சௌத் இந்தியன் டிஷஸெல்லாமே கிடைக்கும்,கொஞ்சம் காஸ்ட்லி. அதுவா முக்கியம்.(சோறே சொர்க்கம்).இங்க மேனேஜர் மட்டும் தமிழ் ஆளு(தூத்துக்குடி ஏரியா) அதனால தமிழ் கொஞ்சம் தேங்காயெண்ணை வாசத்தோடு இருக்கும். வேலை பார்க்குற, சமைக்கிற, பரிமாறுற எல்லாரும் வட இந்தியர்களே. இங்க சாப்பிட வர்றவங்க சரிபாதி பேருதான் (தமிழ் மற்றும் ஆந்திரம்). மீதி எல்லாரும் கிண்ணத்துல முக்கி,முக்கி சாம்பார் குடிக்க வர்ற 'ஹம் ஆப்கே கெயின்கோன் ஃபாமிலி'தான். அதனால யாரையுமே பாத்த உடனே அடையாளம் கண்டுபிடிச்சு தமிழ்ன்னா உடனே மொக்கை போட ஆரம்பிச்சுருவோம். திராவிட நிறத்தில இருந்தா தமிழ்ன்னு உடனே தெரிஞ்சுரும். கொஞ்சம் கலராவோ,ஆனால் மீசையுடனோ இருந்தா லைட்டா டவுட் வரும் தமிழா, ஆந்திராவான்னு. ஆனா அது அவ‌ர் எதை முதல்ல சாப்பிடுறார்ங்கிறதப் பார்த்தவுடனே தெரிஞ்சுடும். ஊறுகாயைத் தொட்டா ஆந்திரா. அப்பளம் கேட்டா தமிழ்நாடுன்னு. சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போது தமிழ் தெரியாத ஆள்ங்க வந்தா எங்களுக்குள்ளேயே தமிழ்ல கமெண்ட் பண்ணி சிரிச்சிப்போம். முடிஞ்சளவுக்கு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து, முழுக்க,முழுக்கத் தமிழ்லேயே பேசிப்போம்.(வட இந்திய அம்மணிகள் முள் கரண்டியால் தோசை சாப்பிடும் அழகே அழகு).


சம்பவம் நடந்த அன்னிக்கு நான்,ராஜா,ரெமோ மூணு பேரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். அப்போதான் அந்த நாலு பேரு ஒரு இரண்டரை வயசுக் குழந்தையோட உள்ள வந்தாங்க.ரெண்டு தம்பதிகள். அதுல ஒருத்தர் நல்லா உயரமா,குறுந்தாடியோட இருந்தார். இரண்டு பெண்களுமே பளீரெனத் தெரிந்தனர்.வட இந்திய உடையில் இருந்ததால், அவர்கள் அனைவருமே வட இந்தியர்கள் என ஒரு மினி பொதுக்குழு போட்டு முடிவு பண்ணிட்டோம்.அப்போதான் ராஜா சொன்னான்,'மச்சான்..எனக்கு டவுட்டாத்தான் இருக்கு. கொஞ்சம் அமுக்கி வாசிப்போம்'னு.சரினு மெதுவான குரலில் கிசுகிசுக்க ஆரம்பித்த வேளையில ,குறுந்தாடிக்காரர் தன் மகளிடம் 'அப்பளம் சாப்பிடு'ன்னு சொன்ன உடனே நாங்க உஷாராயிட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது வந்தவங்கள்ள, குழந்தையோட வந்திருந்த தம்பதிகள் தமிழ்நாடுன்னு.


அவங்க தமிழ்நாடுன்னு தெரிஞ்சப்புறம்,கமெண்ட்டை நிறுத்திட்டு எப்படி அவங்ககிட்ட பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சுட்டிருந்தோம்.வழக்கம்போல எங்களுக்குள்ளேயெ தமிழ்ல கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சோம்.எல்லோரையும் போலவே அந்தக் குறுந்தாடிக்காரரும் எங்களைப் பார்த்து 'எங்க வேலை பார்க்குறீங்க'ன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.அதைப் பிக்கப் பண்ணிட்டு, சகஜமாப் பேச ஆரம்பிச்சோம்.இடையிடையே குழந்தையுடன் விளையாடிக்கிட்டே நாங்க எங்க டின்னர முடிச்சோம்.அப்படியே அவங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பினோம்.எனக்கு முன்னாடி ராஜாவும், ரெமோவும் பில்லுக்குப் பணம் கொடுக்கப் போயிட்டாங்க.நான் குழந்தைக்கு டாட்டா காமிச்சுட்டே ,கிளம்பி கதவுக்கிட்டப் போகையில, அவங்க அப்பா குழந்தைகிட்ட,'மாமாவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடு'ன்னாரு.நானும் திரும்பி நின்னேன். பாப்பாவும் ஒரு பறக்கும் முத்தம் குடுத்துச்சு. பதிலுக்கு நானும் ஒண்ணு குடுத்துட்டு திரும்பப் புறப்படுறப்போ,'அங்கிள்...' பாப்பாவின் குரல் கேட்டு நின்னு திரும்பிப் பார்த்தேன்.பாப்பா சிரிச்சுக்கிட்டே................'அங்கிள்... மம்மிக்கு கிஸ்...?'ன்னு போட்டது ஒருபோடு.

அப்போதான் எனக்குக் கண்ணக் கட்டுச்சு.ஒரு வினாடி செயலிழந்து,அப்புறம் உடனே சுதாரிச்சுட்டேன்.இதுக்கப்புறம் அவங்க இருந்த ஏரியா பக்கமே பார்க்காம விறுவிறுன்னு நடையைக் கட்ட ஆரம்பிச்சேன்.பாப்பாவின் (அ)நியாயமான திடீர்க் கோரிக்கையில் அமைதியான இடம் ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னாடி இரு பெண்களின் 'கலீர்'ச் சிரிப்புடன் தொடர்ந்த (முத்தம் குறித்த)கேலிப்பேச்சினால் நார்மலானது.பாப்பாவுக்கு முத்தம் குடுக்கச் சொன்ன அவங்க அப்பாவோட முகத்தை என்னால கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியல.

இப்போ சொல்லுங்க... ஏதோ அறியாத்தனமா அந்தக் குழந்தை கேட்டதுக்காக முத்தம் குடுத்துருந்தா என் உடலுக்குத்தானே கேடு.....

பி.கு.1:அந்தக் குறுந்தாடிக்காரர் தற்பொழுது தமிழகத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டார்.

பி.கு.2:சௌத் இந்தியன் மெஸ் சில, பல நிர்வாகக்காரணங்களால் இரு மாதங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.

டிஸ்கி: தயவுசெய்து பி.கு.1 க் காரணம் ,இப்பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுதான் என நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.