Monday, October 27, 2008

தொட்டுத் தொடரும் ஒரு குட்டி விளையாட்டு(சினிமா)

நாகார்ஜூனன் தொட்டிழுக்க ஆரம்பித்த இச்சினிமாத்தேரின் வடம் பலரது ரேகை படித்து, ஒரு ஓரத்தில் எனது விரல்நுனியையும் உரசிப்போக வந்துள்ளது.உரச உதவிய நண்பர்க‌ள் விஷ்ணு மற்றும் அத்திரிக்கு நன்றி. கேள்விகள் பார்த்தவுடன் குழப்பம்,இதற்கு ஓரிரு வரிகளில் விடைஇறுப்பதா இல்லை பத்திகளில் விடைஇறுப்பதா என. மற்ற கல்வி,சமூகம் போன்ற விஷயங்களாய் இருந்தால் சுருக்கமாக முடித்துவிடலாம்.ஆனால் தமிழனின் கல்வி,சமூகம்,அரசியல் என அனைத்து நிலைகளிலும் தெரிந்தும்,தெரியாமலும் வேர் பாய்ச்சி நிற்பது சினிமாதான். நானும் ஒரு சராசரித் தமிழன் தானே. இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்,அவற்றைத் திறந்தவுடன் எனக்கேற்பட்ட சலிப்பும் என்னை இத்தொடரை எழுதவிடாமல் ஒருவாரம் அலைக்கழித்து விட்டது.சமீபத்தில் யார் அந்த நாகார்ஜூனன், நம்மை இப்படி யோசிக்க வைத்து விட்டாரே என எண்ணி அவரின் வலைப்பூ சென்றிருந்தேன்.அங்கேயும் தமிழ்தான் இருந்தது.ஆனால் எல்லாமும் எனக்குப் புரியவில்லை.ஆனால் சினிமாத்தொடர் விளையாட்டு ஆரம்பித்ததன் நோக்கம் ஓரளவுக்குப் புரிந்தது.எனது புரிதல் அளவில் இது ஒரு சர்வே அல்லது கள ஆய்வு போன்றது. ஓரளவு என்னில் தெளிவு கிடைத்ததால் எழுத ஆரம்பித்து விட்டேன்.
1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?  
இரண்டு வயதிலேயே பார்க்க ஆரம்பித்ததாக எனது வீட்டில் சொன்னார்கள்.


ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?  
பள்ளிக்குப் போகும் முன்பே 'மை டியர் குட்டிச்சாத்தான்' படம் பார்த்ததாக நினைவு.


இ)என்ன உணர்ந்தீர்கள்? 
மதுரை மதி திரையரங்கில் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.அரங்கினுள் படம் பார்க்கையில் 'முப்பரிமாணக் கண்ணாடி' அணிந்து பார்த்தோம். எனக்கு அதில் அவ்வளவாகப் புரிபடவில்லையாதலால் வெறும் கண்ணோடு,தெளிவில்லாமல் படம் பார்த்த ஞாபகம். எப்படி அப்பா,அம்மா மட்டும் அந்தக் கண்ணாடி அணிந்து படம் பார்க்கிறார்கள் என ஆச்சரியப் பட்டேன்.அந்நாள் நினைவுகளை மீட்டெடுக்க மறுபடியும் ஒரு முப்பரிமாணப்படம் பார்க்க வேண்டுமென்பது ஆவல்.


2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? 'சுப்பிரம‌ணியபுரம்'.காதலியின் துரோகம் மிகவும் பாதித்தது.எங்கள் ஊர்ப் பக்கம்(மதுரை அருகில்) இதெல்லாம் யதார்த்தம் என்ற உண்மைநிலை எனது கையாலாகாத்தனத்தைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தது.


3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? 'அஞ்சாதே'
எனது அறையில்; கணிணியில்  
மருத்துவமனையில் ஒருவனைப் போட்டுத் தள்ள வரும் கும்பல்,வெகு சாதாரணமாக அனைவரையும் அப்புறப்படுத்துவது (காவலர் உட்பட) கண்டவுடன் அதில் தெரியும் வாழ்வின் நிகழ்நிலை கண்டு அதிர்ச்சியுற்றேன். வெகு சாதாரணமாக நடைபெறும் கடத்தல், கற்பழிப்புகள் ஒரு நேரடி ஒலிபரப்பு காண்பது போல் அதிர்ச்சியின் அதிர்வெண்ணைக் கூட்டியது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மூன்றாம்பிறை,சேது,நந்தா,பருத்திவீரன்,வண்ணவண்ணப் பூக்கள்,மகாநதி,சிப்பிக்குள் முத்து,பாசவலை,உதிரிப்பூக்கள்,ஜானி,முள்ளும் மலரும்,பாரதி,தென்றல்,அஞ்சாதே,சுப்பிரமணியபுரம்.....


5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தங்கர் பச்சான் காலில் விழுந்த விவகாரம் 


ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம் கிராஃபிக்ஸ்.இது என்னை ரொம்பத் தாக்குது. அதனால நொந்து போய் இருக்கேன்.எது எதுக்குத்தான் கிராஃபிக்ஸ் தேவைன்னு தெரியாமப் பயன்படுத்துறது எனக்குப் பிடிக்கலை. என்னைப் பொறுத்தவரை கிராஃபிக்ஸ் என்பது செய்தால், பார்வையாளனுக்குத் தெரியக் கூடாது. 'காதலர்தினம்' பாடல் ல வர்ற தங்கப் பறவைகள்.அத கிராஃபிக்ஸ் ல பறக்க விட்டதுக்கு பத்து புறாவைப் பறக்க விட்டிருந்தா இன்னும் உணர்வுப்பூர்வமா இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ஷங்கர் படங்கள் பார்க்கிறதுக்கு விட்டலாச்சார்யா படங்கள் எவ்வளவோ தேவலை.  


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கடந்த ஆண்டு வரை விகடனின் எந்தத் தமிழ்ச்சினிமா விமர்சனத்தையும் விட்டதில்லை.அவர்களின் அளவீடு தெரியுமென்பதால் ,நான் பார்க்க வேண்டிய படங்களை வரிசைப் படுத்திக் கொள்வேன். செழியனின் 'உலக சினிமா' தொடர் ஆவலுடன் படித்தேன். பாலாவின் சுயசரிதைக் கட்டுரைகளை விரும்பிப் படித்தேன். பொதுவாக சினிமா பற்றி வாசிப்பதில் அதிக ஆர்வம்.  


7.தமிழ்ச்சினிமா இசை?  
இளையராஜா மட்டுமே.  
ஏனெனில் தமிழ்ச்சினிமா இசை என்பது பாடல்கள் மட்டுமல்ல. பின்னணி இசை,படத்தின் வெற்றிக்கு அதன் பங்கு,இசையின் வடிவங்களான‌ செவ்வியல்,நாட்டுப்புற,மேலைப் பாணி ஆகியவற்றைப் பொருத்தமாகக் கலந்து ஜனரஞ்சகமாக்கல் ஆகிய காரணிகளைக் கொண்டதால் இப்படியொரு எண்ணம்.


8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மொழியின் முழு அர்த்தம் தெரியாமல் படம் பார்ப்பதில் விருப்பமில்லை. இருந்தும் தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் 'தாரே ஜமீன் பார்' கலங்க வைத்த படம். ஆங்கிலத்தில் 'காட்ஃபாதர்' பன்ச் டயலாக்குகளின் ஃபாதர் எனலாம். தெலுங்கில் 'கோதாவரி' நதி போன்ற தெளிவான,அழகான படம். 'ஆனந்த்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.


9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா இல்லை.(அப்பாடா 4 கேள்விக்கு பதில் சொல்ற‌துல இருந்து எஸ்கேப்பு)


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்சினிமாக்கள் தொழில்நுட்பங்களில் காட்டும் அக்கறையை கதையில்,திரைக்கதையில் காட்டாதவரை விளங்காது.கதையை யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோடியில பட்ஜெட் போடுறானுங்க.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?  
எனக்கு முதலில் கஷ்டமாகத்தானிருக்கும். பின் புத்தகங்கள் படிக்க அதிக நேரம் கிடைத்ததே என மகிழ்வேன்.
தமிழர்களுக்கு (அப்போ நான் தமிழன் கிடையாதா?) என்ன ஆகும்...? யப்பாஆஆஆ இதுக்கு யோசிச்சா தலையே வெடிச்சுடும் போல இருக்கு.


நான் அழைக்க இருப்பவர்கள் இத்துறையில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். எனினும் அவர்கள் கருத்துக்களும் தேவை அல்லவா... 1.இரா.வசந்தகுமார்  2.ஹேமா 

17 comments:

  1. தமிழ்பறவை அண்ணா பார்த்தேன்.
    என்னை மாட்டவேணும் என்று காத்திருந்து சினிமாப் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கிறிங்க.முதலேயே நிர்ஷனும் கூப்பிட்டு இருந்தார்.
    பதிவை ஆயத்தமாக்கக் கஸ்டமா இருக்கு.ஏனென்றால்,சினிமா பார்ப்பது குறந்தேவிட்டது.யாராவது நல்ல கதையோடு ஒரு படம் என்றால் சிலசமயம் பார்ப்பது உண்டு.பதிவு போட முயற்சிக்கிறேன்.நன்றி சொல்லிக் கொள்கிறேன்

    ReplyDelete
  2. எனக்குத்தெரிஞ்சு கிரியேஷனுக்கு அதிக வேலை இல்லை எனினும் இவ்வளவு ஹிட்டான தொடர்பதிவு வேறெதுவும் இல்லை என்றே நினைக்கிறேன். உங்களோடதும் நன்றாக இருந்தது (எல்லோருடையதையும் போலவே). வாழ்த்துகள்.!//ரிப்பீட்டு.! (என்னடான்னு குழம்பிப்போயி பாக்குறீங்களா? ஒன்னொரு பதிவுக்கு போட்ட அதே பின்னூட்டத்தை இங்கியும் போட்டு சமாளிச்சுட்டேன்)

    ReplyDelete
  3. வாங்க ஹேமா...முடிந்தால் தொடரவும்.

    வாருங்கள் தாமிரா...என்னமோ போங்க உங்களால மட்டும்தான் பின்னூட்டத்தில் கூட கிரியேஷன் பண்ண முடிகிறது.

    ReplyDelete
  4. நன்றாக இருந்தது பறவை சார்,

    //தொழில்நுட்ப சம்பவம் கிராஃபிக்ஸ்.இது என்னை ரொம்பத் தாக்குது தேவைன்னு தெரியாமப் பயன்படுத்துறது எனக்குப் பிடிக்கலை.//

    மிகவும் உண்மையான கருத்து.தமிழ் படங்களில் அசட்டுத்தன கிராபிக்ஸ். செயற்கை. லேட்டஸ்ட் தசாவதாரம் .

    அடுத்து "சினிமா விளையாட்டு "என்க்கு வேறு விதத்தில்
    பிடித்திருக்கிறது. எப்படி? திருட்டு சிடி, வயது, மற்றும் சில பதிவர்களின் பின்னணிகள் ஊகிக்கலாம். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  5. //திருட்டு சிடி, வயது, மற்றும் சில பதிவர்களின் பின்னணிகள் ஊகிக்கலாம்//
    ஆஹா இதுல இப்படி வேற வழியெல்லாம் இருக்கா?

    ReplyDelete
  6. நன்றி தமிழ்பறவை அண்ணா.நீங்கள் மாட்டிவிட்ட சினிமாத் தொடர் என் புதிய வலைப்பூவில் தொடங்கியிருக்கிறேன்.
    பாருங்களேன்.வலைப்பூ இன்னும் பூரணமாகவில்லை.கவிதையை விட வேறு ஏதாவது பதிவுகளை இடலாம் என்று யோசிக்கிறேன்.மற்றும் சில விஷயங்களை அலசலாம்....
    வாதாடலாம் என்றும் நினைக்கின்றேன்.
    அது அரசியலோ அல்லது சமூகமோ அல்லது சாதாரண விஷயங்களாகவோ இருக்கலாம்.
    மனதிற்குள் கேள்விகளோடு இருக்கும் எந்த விஷயங்கள் ஆனாலும் யார் தலையங்கம் தந்தாலும் பதிவில் இட்டு அலசலாமா?அபிப்பிராயம் கேட்டுக் காத்திருக்கிறேன்.

    http://www.santhyil.blogspot.com/

    ReplyDelete
  7. தமிழ் பறவை, நானும் மதுரை மதியில் தான் மைடியர் குட்டிச்சாத்தான் பார்த்தேன். அப்போது என் உறவினர்கள் பெத்தானியா புரத்தில் இருந்தனர்.
    நல்ல நினைவு கூறல்கள்.

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி முரளி சார்...எனக்கு அது சந்தேகமா இருந்தது. அது மதி திரையரங்கான்னு? நல்ல வேளை சரி பண்ணிட்டீங்க...நன்றி..பெத்தானியாபுரமா...? நான் மதுரைக்குப் பக்கத்தில ஒரு சிற்றூர்...

    ReplyDelete
  9. படித்த புத்தகங்கள் குறித்தான தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  10. அழைப்புக்கு நன்றி முரளி சார்... பதிவு போட்டு விடுகிறேன் விரைவில்...

    ReplyDelete
  11. நண்பரே வணக்கம் ....
    தாமதமாகவே வர முடிந்தது .. மன்னிக்கவும் ...

    பதிவு பார்த்தேன் மிக அருமை ..
    நல்ல பல விசயங்களை பகிர்ந்துகொண்டு அருமையாக இருக்கிறது ...

    நீங்கள் சொன்ன அதிகம் தாக்கிய படங்கள் அனைத்துமே நல்ல படங்கள் நானும் மிக அதிகம் ரசித்தவை ..

    அதே போல கிராபிக்ஸ் பற்றிய கருத்து மிகஅருமை ..
    எதற்கெல்லாம் பயன் படுத்துவது என விவஸ்தை இல்லாமல் போய் விட்டது

    // தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    தமிழ்ச்சினிமாக்கள் தொழில்நுட்பங்களில் காட்டும் அக்கறையை கதையில்,திரைக்கதையில் காட்டாதவரை விளங்காது.கதையை யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோடியில பட்ஜெட் போடுறானுங்க.//

    இந்த கேள்விக்கு நெத்தி அடி உங்கள் பதில் நண்பரே ...

    மொத்தத்தில் மிக உண்மையாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்குறீர்கள் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது ....

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்
    என்ற வாழ்த்துக்களோடு

    அன்புடன்
    என்றும் இனிய தோழன்
    விஷ்ணு

    ReplyDelete
  12. மீண்டும் வருவேன் ...நண்பரே ...அடுத்த பதிவு எப்போது ?

    ReplyDelete
  13. படித்த புத்தகங்கள் குறித்தான தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  14. வருகைக்கும், தொடர்பதிவு அழைப்பிற்கும் நன்றி ஆனந்த்.. விரைவில் பதிவிட முயல்கிறேன்...

    ReplyDelete
  15. வாங்க விஷ்ணு...ரொம்ப நாளைக்கப்புறம் வந்து விலாவரியா பின்னூட்டி இருக்கீங்க. நன்றி.
    //மீண்டும் வருவேன் ...நண்பரே ...அடுத்த பதிவு எப்போது ?//
    விரைவில் புத்தகம் பற்றிய தொடர்பதிவில் சந்திக்கலாம் நண்பரே...

    ReplyDelete
  16. சுருக்கமா தெளிவா இருக்கு!

    ReplyDelete
  17. வருகைக்கு நன்றி சிவா...

    ReplyDelete