Sunday, November 23, 2008

ச்சும்மா போட்ட படம்...


 ச்சும்மா போட்ட படம்...'அண்ணாமலை' சீரியல் டைட்டில் பாடல்ல வந்த ஒரு பெரியவரின் படம்.ஒரு இன்ஸ்டன்ட் ஓவியம் அவ்வளவுதான்.

Sunday, November 16, 2008

நினைவில் நின்ற புத்தகங்கள்- இரண்டாம் பாகம்

                சென்ற பதிவின் தொடர்ச்சி இது. முதல் பதிவை ப் படிக்காவிடினும் பரவாயில்லை.அப்படியொன்றும் கெட்டுப்போய் விடாது.
கல்லூரி சென்றபின் படிப்பார்வம் குறைந்துவிட்டது என்பது கசப்பான உண்மை.இளங்கலை முடித்தபின் வேலைக்குப் போராட்டம்.வேலை கிடைத்தபின் நல்ல வேலைக்குப் போராட்டம். இத்தகைய காலங்களில் எனக்கு ஆறுதலாயிருந்தது விகடன் மட்டுமே.அதன்மூலம்தான் என்னால் ஓரளவிற்கு பிற எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென மனப்பட்டியல் போட முடிந்தது. பின்பு முதுநிலை படிப்பின் போது ஓரளவிற்கு புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின் வேலை கிடைத்து வட இந்தியா வந்தபின் மறுபடியும் வாய்ப்புக் குறைந்துவிட்டது. இருந்தும் தமிழ் இணையத்தின் மூலம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். படிக்க வேண்டிய, வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. இத்தோடு முன்னுரையை நிறுத்தி விடுகிறேன். இதுவரை படித்த புத்தகங்களின் நினைவு அலையில் சற்றுக் கால் இல்லையில்லை விரல்நுனியாவது நனைப்போம்.  
துளசிதளம்,மீண்டும் துளசி: பள்ளி இறுதி நாட்களில் படித்தது. எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதி, சுசீலா கனகதுர்காவினால் மொழிபெயர்க்கப் பட்டது. நான் எப்போது ப‌டித்தாலும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்போடிருக்கும்.  


ஜெயகாந்தன் சிறுகதைகள்: கல்லூரியில் படிக்கையில் நண்பனொருவன் படிக்கக் கொடுத்தது. இதில் படித்த சிறுகதைகளின் வரிகள் பல, என் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் செயலாற்ற, செயலற்றுப் போக உதவி இருக்கின்றது. இதில் மனதில் நின்ற சிறுகதைகள்:‍  
1.சிலுவை: கன்னியாஸ்திரீயாக விரும்பிய இளம்பெண்ணில் வேர் விட்ட‌ பருவக்காதல் நினைப்பும், அதன் விளைவும். முடிவு 'நச்'.  
2.அக்னிப்பிரவேசம்: ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை எழுத்துக்களில் ஏற்படுத்தியது. இக்கதை பற்றி அளவுக்கதிகமாக அலசி ஆராயப் பட்டதால் விட்டுவிடுவோம். 3.இருளைத் தேடி: 'நிர்வாணம் தான் அழகு. காட்டிலுள்ள் மான், மயில்களுக்கு உடை அணிவித்தால் நன்றாக இருக்குமா...?ஏன் மனிதன் மட்டும்.?' விபச்சாரத் தொழிலை விடுத்து வேறு வேலை தேடுபவள், தோழியின் ஆலோசனைப் படி அவளின் தொழிலான, ஓவியர்களுக்கு நிர்வாண மாடலாக இருக்க அரைகுறையாகச் சம்மதித்துப் பின் ஓவியக் களத்தில் அனைவரின் முன் வெளிச்சத்தில் நிர்வாணமாய் இருப்பதை விட இருளில் விபச்சாரியாய் இருப்பது மேல் என மறுபடியும் செல்கிறாள் இருளைத்தேடி. 4.குருபீடம்: சோம்பேறியைத் திருத்த குருவே, சிஷ்யனாய் மாறி இறுதியில் யார் குருவென உணரவைத்த கதை.  
'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது', 'புதுச் செருப்பு கடிக்கும்' இன்னும் பல பெயர் மறந்த, கதை மறக்காத கதைகள். அடித்தரப்பு மக்களின் வாழ்க்கையை 'கேன்டிட் கேமரா' போல் எடுத்துச் சொன்னவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.


சித்திரப்பாவை: அகிலனின் படைப்பு. கதைநாயகன் ஓவியனாய் இருந்ததால் அதிக ஆர்வமெடுத்துப் படித்தேன். கொஞ்சம் பழையபடம் பார்த்த உணர்வு,.  


பஞ்சும், பசியும்: தொ.மு.சி. ரகுநாதன் படைப்பு. இதுவும் பழைய தமிழ்ப்படம் பார்த்த அலுப்பூட்டும் உணர்வைத்தான் கொடுத்தது. கம்யூனிஸ்ட் போராட்டம் கலந்திருந்தது. மனதில் ஒட்டவில்லை.  


மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள்: எம்.ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்த போது பிரேக் பற்றிப் பாடமெடுத்த எனது ஆசிரியர் சொல்லிக் கேள்விப்பட்டுதான் 'இரும்புக் குதிரைகள்' படித்தேன்.(அவர் மலையாளி.ஆனால் அவர் தமிழ்,ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமிக்கவர். நன்கு படமும் வரைவார். துறை சார் அறிவிலும் அவர் மாஸ்டர்.) எனக்கு முடிவைத் தவிர, நாவல் நன்கு பிடித்திருந்தது.இதைப் பற்றி நண்பர் வசந்தகுமாரின் இப்பதிவிலும், பின்னூட்டத்திலும் படித்துக் கொள்ளுங்கள்.
'மெர்க்குரிப் பூக்கள்' இப்போதும் அடிக்கடி வாசிக்கிற புத்தகம். கணேசன், கோபாலன், சாவித்திரி,சியாமளி,சங்கரன், இன்ஸ்பெக்டர் பெருமாள், ஃபாக்டரி முதலாளி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்(நல்லவரோ, கெட்டவரோ) செதுக்கி இருப்பார். இன்றும் எங்காவது 'வீடு' எனும் வார்த்தை படிக்கையில், இந்நாவலில் வரும் "வீடென்று எதைச் சொல்லுவீர்" கவிதை நினைவுக்கு வரும். இதை விடுத்து பாலகுமாரனின் 'பூந்தோட்டம்' இன்னும் சில பெயர் மறந்த நாவல்கள். பாலகுமாரனின் எழுத்துநடை எனக்கு இன்னும் விருப்பம். அது ஒரு சுகானுபவம்.

சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் பயணக் குறிப்புகள்': அடிக்கடி வாசிக்கும் மற்றுமொரு புத்தகம். அவ்வளவு வேலையிலும் அவர் நாட்குறிப்பு எழுதி இருக்கிறார் அதுவும் இலக்கியவாதி போல். மனிதர்களை மதித்த அவரின் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுபற்றிப் பிறிதொரு தனிப் பதிவே போடலாம்.  


துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணின் எழுத்து இதயத்திற்கு அருகாமையில் கண்காட்சி நடத்தும் வல்லமை பெற்றவை. பல மனிதர்கள், பல கதைகள். எதைப் படித்தாலும், நாம் நினைத்து ,நம்மால் எழுத்தில் கொண்டுவரமுடியாமல் விடப் பட்ட கணங்களை அழகாக வெளிப்படுத்துவார். எனது இப்போதைய ஃபேவரைட் இவர்தான். 'கதாவிலாசம்' படித்திருக்கிறேன்.


செம்பருத்தி: தி.ஜானகிராமனைப் பற்றிக் கேள்விப் படாத காலத்திலேயே மூன்று, நான்கு முறைகள் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கதையும், சம்பவங்களும் நினைவிருக்கும் அளவுக்கு, கதாபாத்திரப் பெயர்கள் நினைவிலில்லை. என்னை மிகவும் கவர்ந்த நாவல். மறுபடியும் படிக்க ஆசை. 'மோகமுள்' இன்னும் படிக்கவில்லை. இதுவரை நான் படித்த எல்லாமே ஒருவித ஒழுங்கில்லாமல் கிடைத்ததை எல்லாம் படித்து வந்திருக்கிறேன். 
இப்பதிவில் நிறைய விடுபட்டுள்ளது எனினும் இதற்கு மேல் பதிவைத் தொடர எனக்கு விருப்பமில்லை.  
இத்தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது  
1.ரவி ஷங்கர்   
2. தர்ஷினி 
3.குடுகுடுப்பையார்  


ஆள விடுங்கப்பா... பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள ஷ் அப்பா... ஓவரா கண்ணக் கட்டுதே...

Saturday, November 15, 2008

ச்சும்மா...

ஸ்டிக்கர் பொட்டு
நகத்துண்டுகள் 
கிழிந்த டிக்கட்டுகள்
சாக்லெட்கவர்
தலைமுடி
நிரம்பியது பர்ஸ் 
உனது காதலைத் தவிர...  

ஐடி வேலை
ஐந்திலக்க சம்பளம் 
ஐந்தாறு கடனட்டைகள் 
ஐநூறுரூபாய் நோட்டுகள் 
நிரம்பியது பர்ஸ் 
வெயிட்டிங் லிஸ்ட்டில் 
உனது காதல்....

Thursday, November 13, 2008

நினைவில் நின்ற புத்தகங்கள்-முதல் பாகம்

பதிவுச்சோம்பேறியான என்னை இப்புத்தக வாசிப்புத் தொடர் விளையாட்டிற்கு அழைத்த முரளிகண்ணன் , கடையம் ஆனந்த்  இருவருக்கும் நன்றிகள். எனது முதல் பொதுப்பத்திரிக்கை வாசிப்பு தொடங்கியது 'தினத்தந்தி'யில் முதல் பக்கத்தில் வரும் 'சிரிப்பு' தான். அதனை 'சீப்பு' என வாசித்துப் பின் திருத்தியது இன்னும் நினைவில் உள்ளது. முடிவுறாமல் தொடரும் வாசிப்பின் முதற்படியாக எனக்கு வாய்த்தது, அதேபோல் தொடரும் 'சிந்துபாத்' தான். என் அப்பா வைத்திருந்தது டீக்கடை என்பதால் பத்திரிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. பொது வாடிக்கையாளர்களுக்காக 'தினத்தந்தி'யும்,எங்கள் வீட்டிற்காக 'தினகரனும்' வாங்குவோம்(அப்பா தி.மு.க அபிமானி).அதில் சினிமாச்செய்திகள் படிப்பது அப்போதே எனக்குத் தொடங்கிற்று( 3ம்,4ம் வகுப்பிலேயே). பின்பு எனது வாசிப்பு 'தினமணி'யில் சென்றது. அதில் வரும் ரகமி, ராண்டார்கை யின் கட்டுரைகளும், அறந்தை நாராயணன் எழுதிய 'குடியால் குடை சாய்ந்த கோபுரங்கள்' கட்டுரைகளும், பிரபஞ்சனின் தொடர்கதைகளுமாக எனது வாசிப்பார்வம் தொடர்ந்தது. பிரபஞ்சன் எழுதிய 'வானம் வசப்படும்' (வலைப்பூவின் தலைப்பே அதுதான்) தொடர்கதையும், அதில் வரும் 'தாவீது' (ஹீரோ என நினைக்கிறேன்) எனும் ஓவியரின் கதாபாத்திரமும், அதற்கு ஓவியம் வரைந்த மாருதியின் ஓவியங்களும் (தாவீது பாத்திரம் குறுந்தாடியுடன் இருக்கும்), ஆங்காங்கே வரும் ஃப்ரஞ்சு வார்த்தைகளும் ஓரளவு இன்னும் பசுமையாய் நினைவில் உள்ளது. ஆறாம் வகுப்பு வந்தபின் கதைகளின் மேல் இன்னும் அதிகக் காதல் வரக் காரண்ம் பாடப்புத்தகங்களில் ஒன்றாக அறிமுகமான 'சிறுகதைச் செல்வங்கள்' நூலே. அதில் வந்த கதையான 'பெயரில் என்ன இருக்கிறது' வை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.அதன்பின் ஒவ்வொரு உயர்நிலை வகுப்பு செல்லும்போதும், முதலில் படித்து முடிப்பது 'சிறுகதைச்செல்வங்கள்' தான்.
பத்தாம் வகுப்போ, அதற்கு மேல்பட்ட வகுப்பில் வந்த கதைகளான, கி.ரா.வின் 'கதவு', தி.ஜானகிராமனின் 'முள்முடி'இனும் சில கதைகள் இன்னும் என் நினைவில் படங்களாய் இருக்கிறது. அதிலும் 'முள்முடி' கதையில் வரும் ஆசிரியர் அனுகூலசாமியின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெகிழ்வைத் தந்த ஒன்று. இந்தப் பள்ளிப் படிப்புக்காலங்களில் எல்லாரையும் போல லயன் காமிக்ஸ் பைத்தியம் என்னையும் ஆட்டுவித்தது. லக்கிலுக் தான் என்னோட ஃபாவரைட் ஹீரோ. மற்றபடி செவ்விந்தியர் கதைகள்,ஜேம்ஸ்பான்ட், மாடஸ்டி, இரும்புக்கை ஆர்ச்சி, தினத்தந்தி ஞாயிறுமலரில் வரும் 'மான்டிரக்' என எல்லாமும் பிடிக்கும். எங்கள் வீட்டில் புத்தகம் எல்லாம் வாங்கித்தரமாட்டார்கள். எல்லாம் பக்கத்து வீடுகளில் வாங்கும் ஓ.சிதான். சிறுவர்மலர்,பூந்தளிர், அம்புலிமாமா,பேசும்படம், மய்யம்(கமல் ரசிகர்மன்ற வெளியீடு) என படித்தது எல்லாம் ஓ.சிதான்.பூந்தளிரில் வரும் 'வேட்டைக்கார வேம்பு', காக்கை காளியா, முட்டாள் வேலைக்காரன்(பெயர் நினைவிலில்லை.) கதாபாத்திரங்களும் அவற்றின் சித்திரங்களும் பசுமரத்தாணி இன்றும்.
இந்தக் கலவையான படிப்புச் சூழலில் ,பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டிகளில் கலந்துகொள்வேன். அதற்காக எங்கள் ஊரில் அமைந்திருக்கும் கிளை நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அங்குதான் விகடனும், குமுதமும் அறிமுகம். நூலகத்தில் படித்த புத்தகங்களுள் என்னால் மறக்க இயலாத, இன்னுமொருமுறை படிக்க ஏங்கிய புத்தகம் 'உமர்கய்யாமின் வாழ்க்கை வரலாறு' ஒரு கவிஞராக மட்டுமே அவரை அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு வானியல் வல்லுநர் என்பதும் வாழ்வின் கடைசி நேரத்தில்தான் காத்ல் தோல்வியால் கவிதை எழுதிப் பிரபலமானார் என்பதும் புதிதாக இருந்தது. இப்போது கூட எங்கள் ஊர் நூலகம் சென்றால் என்னையும் அறியாமல் நான் தேடும் புத்தகம் அதுதான். பின் நாவல்கள். எல்லாவித நாவல்கள் படித்தாலும் எனது ஃபாவரைட் சுபா மற்றும் பி.கே.பி தான். ராஜேஷ்குமார் நாவல்கள் கரு நன்றாக் இருந்தாலும், மிகவும் சைவமாகவும், முடிவு 'சப்'பென்றும் இருக்கும்.ஆனால் சுபா நாவல்கள் ஒருவித விறுவிறுப்பையும், நரேன் வைஜ் உரையாடல்கள் சுவாரஸ்யத்தையும் தந்தது. சுபாவின் இன்னொரு துப்பறியும் கேரக்டரான செல்வாவின் கதைகள் நகைச்சுவையாக இருக்கும். செல்வாவும், அஸிஸ்டெண்ட் முருகேஷனும் அவனது அத்தைகளும், ஆட்டோ டிரைவர் டெல்லியும் அவனது 'மிஸ்டர். லாரி, மிஸ்டர். டேபிள்' போன்ற மரியாதையான டயலாக்குகளும் எனது ஃபேவரைட். பி.கே.பி.யின் பரத் சுசீலா ஜோடி விளையாட்டுக்கள் , சுசீலாவின் டீஷர்ட் வாசகங்கள் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்கியது அந்தப் பதின்ம வயதுகளில்.
இரண்டாவது பாகம் ஓரிரு நாட்களில்...