Thursday, September 29, 2011

ரொமான்ஸ் டைம் ஓடிக்கோ ஒளிஞ்சிக்கோ


அன்றொருநாள் நீ வீசியெறிந்த புன்னகையில் தவங்கலைந்த கூழாங்கல்லொன்று ஆற்றைச் சீண்டத் தொடங்கியது# I witness

மல்லிகைப் பூக்களை நெருக்கமாகக் கட்டத் தெரியாததால், தலையில் தட்டிய உன் அம்மாவை நம்புகிறேன் நான். தைரியமாகச் சொல்லிவிடு

வெயில்காலங்களில் நீ ஜன்னலை மூடுவதில்லை. காற்றுக்கும் வியர்ப்பதில்லை# நீ ஏசி. நான் உன் ஃபேன்

நான் கோயில்களுக்குச் செல்வது சாமி பார்க்க அல்ல. சிலைகள் பார்க்க மட்டுமே. பின்னொருகாலத்தில் சிலை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேன்.

முன்பெல்லாம் மணிக்கணக்கிலும் இப்போது மவுனக்கணக்கிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்#முத்திப்போச்சு

உனது ஓவியமொன்று தூரிகையில் வரைந்து கொடுத்தேன்.அதைத் தடவிப் பார்க்கிறாய்.விரல்களால் மேலெழும்புகிறது இன்னொரு ஓவியம்

மூக்குத்தி அழகாயிருக்குமா கேட்டாய். உனக்கழகு என்றேன்.வளையல் அழகாயிருக்குமா கேட்டாய். உனக்கழகு என்றேன். தாலி என்றாய். நமக்கழகு.நீயே சொல்லிவிட்டாய்#முந்திரிக்கொட்டை

நீ கோலமிடுகையில் கூட புள்ளி வைப்பதை விரும்பவில்லை.அத்தனையையும் கமாவாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்#வேற வேல

நமது ஆற்றங்கரைச் சந்திப்புகளுக்கு மட்டும் நீ வெட்கத்தையும், நான் தைரியத்தையும் எடுத்துவருவதில்லை.#ச்சே மிஸ்ஸாயிடுச்சு என வருத்தப்படுது பார் குளம்

டிஸ்கி: இடம்பெறும் கவிதைகளும், ஓவியங்களும் பரீட்சார்த்த முயற்சிகளேயன்றி யார் உயிருக்கும் தீங்கு விளைவிப்பதற்கல்ல. புரிதலுக்கு நன்றி....!

Tuesday, September 27, 2011

எங்கேயும் எப்போதும்-எனது பார்வை

என் பார்வையில மட்டுமில்ல, எல்லோர் பார்வையிலயும் அஞ்சலி கொள்ளை அழகு...:)))
கற்றது தமிழ் ஆனந்தியை (நெசமாத்தான் சொல்றியா..??!!!)இன்னும் மிஞ்சமுடியவில்லை...
இவ என் பக்கத்துவீட்டுப் பொண்ணுங்க...
Reynolds black pen in A5 sketch book-one hour
ஒரே ஒரு இடைஞ்சல் , கன்னம் ,உதடு வரையுறப்போ கொஞ்சம் வெட்கப்பட்டேன்...:)))
பார்த்தமைக்கும்,ரசித்தமைக்கும் நன்றி....!

Thursday, September 22, 2011

நக்மாவும் சிக்மாவும்

         நக்மாவைப் பத்திமட்டுமே தெரிஞ்ச என்னை மாதிரி ஆளுங்களுக்காக சிக்மாவைப் பத்தியும் சொல்லிக் குடுத்தாங்க போனவாரம்.ஒன்பதரைக்கு ஆரம்பிச்ச ட்ரைனிங் ஆறு மணிக்குத்தான் முடிஞ்சது.ஒரு நா, ரெண்டு நா இல்ல அஞ்சுநாளக்கி.அதுல அண்ணன் கொஞ்சம் அஃபீசியலான பெர்சனல் வேல இருந்ததால ரெண்டுநாளக் கபளீகரம் பண்ணிட்டேன்.

         ட்ரைனர் அமெரிக்கக்காரர். நம்ம நாட்டாமைக கைல எப்பவும் சொம்பு வச்சிருக்க மாதிரி இவர் கைல ஒரு பெரிய கப்போஃபிளாஸ்க்(பெரிய கப்பு மாதிரியும், சின்ன ஃப்ளாஸ்க் மாதிரியும் இருந்ததால இந்தப் பேர் வச்சேன்) எப்பவுமே வச்சிட்டிருந்தார்.அதுக்குள்ள காபிதான் இருக்குன்னு அவர் முன்னாடியே சொல்லிட்டதால, என்னோட விபரீதக் கற்பனையெல்லாம் ஓரங்கட்டிட்டேன். பத்து நிமிஷத்துக்கொரு தடவை அந்த கப்போஃப்ளாஸ்க்குக்கு முத்தம் கொடுத்துட்டே இருந்தாரு.(அட அதுக்குள்ள எவ்வளவுதான் குடிச்சாரோ தெரியலை).


        இதுக்கு முன்னாடி எனக்கு சிக்மாவைப் பத்தித் தெரிஞ்சது எல்லாம் ஒரு பெரிய மய... இல்லை பெரிய மலை....அதாங்க BELL CURVE தான்.அதையே கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு, உள்ள பூந்து வூடுகட்டி அடிக்க ஆரம்பிச்சாரு.ஒருச்சாமி, ரெண்டுச்சாமி,மூணுச்சாமி......ஆறுச்சாமி மாதிரி... ஆறு சிக்மா (SIX SIGMA) தான் குறிக்கோள். அதை அடைஞ்சிட்டோம்னா வீடு பேறு அடைஞ்சிடு.... இல்ல நல்ல குவாலிட்டியான ப்ராடக்ட் கொடுக்கலாமாம். எனக்கு இதில் அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை.ட்ரைனிங் கலந்துக்கிட்ட பிறகு கொஞ்சம் தெளிவாயிருந்தேன்.(கொசுறு: இதுல பயிற்சியெடுத்துக்கிட்டா ஓடு, செங்கல் எதுவும் ஒடைக்காமயே ப்ளாக்பெல்ட் வாங்கிடலாமாம், அரசியல்வாதிங்க டாக்டராகுற மாதிரி)

    நாம எப்பவும் உக்காந்துருக்கது கடைசி பெஞ்சுலதான். அப்பத்தான் ஏர்டெல்காரன் ஃபோன் பண்ணி காலர்ட்யூன் செட் பண்றதுக்குக் கூப்பிட்டாக்கூட ஈஸியா எழுந்து போயி டீ, காபி, டிபன் சாப்பிட வசதியாயிருக்கும்.(சாப்பிட்டு வந்ததும் கொஞ்சம் அசதியாவுமிருக்கும்).இதுக்கு முன்னாடி GD&T ட்ரைனிங்ல எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரேக் வரும். இவரு என்னடான்னா காலையில ஆரம்பிச்சா,மதியம் ஒரு மணி ஆனாக்கூட ப்ரேக் விடமாட்டேங்குறாரு. அதனால பதினொரு மணிக்கு எவனாச்சும் ‘ப்ரேக்’னு ஆரம்பிப்பான். இவரும் நம்ம ஊர் மினிபஸ் கிளம்புறமாதிரி ‘ப்ரேக்’,’ப்ரேக்’னு  சொல்லிக்கிட்டே ஒரு அரைமணிநேரங்கழிச்சு ப்ரேக் தருவாரு. பத்துநிமிஷம்தான்.


     ஒரு தடவை பேப்பர்க்ளிப்பைக் காட்டி இத வேற எப்டில்லாம் உபயோகப்படுத்தலாம்னு வர்ற ஐடியாக்களைச் சொல்லச் சொன்னாரு. ரெண்டுநிமிஷம்தான் டைம்.எனக்கு வந்தது அரசின் கு.க திட்டம் போல ரெண்டே ரெண்டு. ஒண்ணு, அத ஹேர்கிளிப்பா(எவ்ளோ ரொமாண்டிக்கான ஆளு நானு) யூஸ் பண்ணலாம், இன்னொண்ணு, அத நேராக்கி, ஹோட்டல்ல பில் சொருகுற கம்பி மாதிரி யூஸ் பண்ணலாம்(காரியத்துல கண்ணு). அதுக்கு மேல ம்ஹூம். நம்ம கூட்டத்துல ஒருத்தர் எந்திருச்சாரு. பன்னெண்டு ஐடியா கொடுத்தாரு.(உபதகவல்:அவருக்கு போன வருஷமே ஐடியாமணி என நான் பெயர் வைத்து,என் நண்பர்களுக்குள் அவரைக் குறிக்கும்போதெல்லாம் ‘மணி’ எனத்தான் சொல்லிக்கொள்வோம்).ஒண்ணுமில்ல...நான் கொடுத்த ரெண்டாவது ஐடியாவை மட்டும் அவர் பிரிச்சு மேஞ்சிருக்காரு. பேப்பர்க்ளிப்பை கம்பி மாதிரி நீட்டி அதுக்கப்புறம், பேப்பர் குத்தலாம்,காது கொடயலாம், பல்லு குத்தலாம்,முதுகு சொறியலாம் ரேஞ்சுக்குக் கொடுத்தாரு.ஐடியாமணின்னு நான் வச்ச பேரு சரிதானே....

நாம ப்ராபளம் சால்வ் பண்றதுக்கே நாலைஞ்சு வழிகள் சொன்னாரு. ஒண்ணு நார்மல் பிரெய்ன் ஸ்டோர்ம், இன்னொண்ணு, ரிவர்ஸ்னு ஏதோ சொன்னாரு மறந்துடுச்சு, இன்னும் ரெண்டு பேரு சொன்னாருங்கோ.தமிழ்லன்னா ஈஸியா ஞாபகம் வச்சிருப்பேன். அவர் அமெரிக்கர் வேற, இடுப்புல சப் டைட்டில் இல்லாமப் பேசுறதால குத்துமதிப்பா அவதார் படம் பாக்குற எஃபக்ட்லதான் இருந்தேன். அவர் கொடுத்த ஒரு ப்ராப்ளம் ,’ஸ்பீடோ மீட்டர் இல்லாம வண்டில வேகம் எப்டிக் கண்டுபிடிக்கிறதுங்கிறது’. ஆக்சுவலா நோக்கம் என்னன்னா, சொல்யூசன் பத்திக் கவலைப்படக்கூடாது. ஐடியா ஜெனரேட் பண்றதுதான் முக்கியம். இப்ப எல்லோருமே கிட்டத்தட்ட ஐடியாமணி ரேஞ்சுக்குப் போயிட்டோம்.அரைமணி நேரங்கழிச்சு ஒவ்வொரு டீமும் ஐடியா கொடுத்தது.
      -ஹேண்டில்பார்ல ஒரு குச்சி ஆடுற மாதிரி ஃபிக்ஸ் பண்ணிக்கணும், அது எவ்வளவு நேரம் ஆடுது...அப்டின்னு கால்மணி நேரம் ஒரு ஐடியா...

    -ஸ்பீடோ மீட்டர் இருக்க இடத்தை ஆஷ்ட்ரேவா யூஸ் பண்ணலாம்னு  ஒரு ஐடியா...யோவ் முதல்ல ஸ்பீடோ மீட்டருக்கு ரீப்ளேஸ்மெண்ட் ஐடியாவைச் சொல்லுய்யான்னு சொல்லிட்டாரு ட்ரைனர்.ஆஸ்காரை அவங்ககிட்ட இருந்து பிடிங்கிட்ட ஃபீலிங்க்ல அமைதியாச்சு டீம்

   -வண்டிச் சக்கரத்துல ஒரு மேக்னடிக் வீல் பண்ணனும்(அதான் ஏற்கெனவே வச்சிருக்காங்களேய்யா....)அதுல இருந்து டேஷ்போர்டுக்கு வயர் இழுக்காம, சிக்னலை ட்ரான்ஸ்ஃபர் பண்ணி ஒரு ஈசியூ வச்சின்னு ரொம்ப எலக்ட்ரானிக்ஸா போயிட்டிருந்தது ஒரு டீமோட ஐடியா...
    இன்னும் ரெண்டு டீம் கொடுத்த ஐடியா டெக்னிக்கலாவும், சாத்தியப்படக்கூடிய வகையிலும் இருந்தது.

     ஆனா எல்லோருக்கும் பிடிச்ச ஒரு சூப்பர் ஐடியாவும் ஒரு டீம் கொடுத்துச்சு.
அவங்களோட ஐடியா,’ வண்டியை எடுத்துக்கிட்டு, ஸ்பீடோ மீட்டர் இல்லாம நேரா ஸ்பீடா மாரத்தள்ளி வரைக்கும் போகணும்.’ அப்புறம், ‘போலீஸ்காரர், வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரோட வண்டியோட ஸ்பீட்  எழுதித் தருவாரு’....
  இதுவும் நல்ல ஐடியாதானே...
 

        நல்ல ட்ரைனிங்க்தான்.இப்ப எல்லாம் மறந்துடுச்சி . மறுபடியும் மெட்டீரியல்ஸ் ரெஃப்ரஷ் பண்ணனும். அப்ளை பண்ணிப்பார்த்தாத்தான் இன்னும் பலன் கிடைக்கும்....


   

Tuesday, September 20, 2011

சே-உலர்தூரிகை முயற்சி

அக்ரிலிக்ஸ் ஆன் கேன்வாஸ் A4 size
tried dry brush...

தூரிகையில் விஸ்கஸாக வண்ணத்தைக் குழைத்து, அதீத நீர்மத்தன்மையை துணியில் துடைத்து அகற்றிவிட்டுப் பின், தூரிகையிலுள்ள வண்ணமனைத்தையும் உபயோகித்தது. போகப்போக உலர்தீற்றல்கள் வரும். அதன் விளைவுகளையும் பயன்படுத்திக்கொண்டு, பேப்பர்(கேன்வாஸின்) Textureஐயும் பயன்படுத்திக் கொண்டு வரையப்பட்ட சோதனை முயற்சி...
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

Sunday, September 18, 2011

ஞாயிறு போற்றுதும்-18செப்2011

    ஏதாச்சும் படிச்சாலோ, அதைப்பத்தி நினைச்சாலோ விஷூவலா கற்பனை பண்ணா நல்லதுன்னு சொல்வாங்க. அது என் விஷயத்துல தப்பாயிடும் போல இருக்கு. இந்த மாதிரி விஷூவல் கற்பனைலாம் எனக்கு வண்டியோட்டுறப்போ வருது :( #நல்லவேளை பின்னாடிவர்ற வண்டில ஹார்ன் வச்சிருக்கானுங்க

   ட்ராஃபிக் அதிகம் இல்லேன்னாலும், ரெட் லைட் போட்டா நிற்பது என் பழக்கம். ஆனா பின்னாடி உள்ள மகராசங்களுக்குப் பொறுக்கமாட்டேங்குது போல. ஓவர்டேக் பண்ணி, ‘கியா யார்’ நு கிண்டல் பண்ணிட்டுப் போறான்.சமநிலையைக் குலைப்பதற்கென்றே பிறவியெடுத்து வருகிறார்கள் போலும். #

  இன்னைக்கும் அல்சூர் ஏரிதான் பென்சில்ஜாம் நிகழ்வு.ஏகப்பட்ட பேர் வந்திருந்தாங்க. ஒன்றரை மணிநேரம் வரைஞ்சேன்னா, ரெண்டுமணி நேரம் அடுத்தவங்களோட படைப்புகளைப் பார்ப்பதற்கும், என் படைப்புகளைக் காண்பிப்பதற்குமே போய்விட்டது. #exhibitionism??? its important for some time ,for some work


  இன்னைக்குக் கண்ட்ரோல் இல்லாம ரொம்ப லூசாத்தான் வாட்டர்கலர் பண்ணினேன்.(என்னது நான் பண்றது எல்லாமே லூசுத்தனம்தானா?pls mute ur mind voice)..வழக்கம்போல் திருப்தி தரவில்லை. எனினும்,  i feel better with this.


  மதியம் அங்கேயே இன்னொரு நிகழ்வு. ஃபேஸ்புக் ஓவியக்குழுமம் ஒன்று சேர்ந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் இருந்திருக்கலாம். ஆனா கோடி ரூபா கொடுத்தாக்கூட ஞாயிறு மதியத் தூக்கத்தை விடமாட்டேனெனச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.’நந்தினி’ யில் ஹைதராபாதி சிக்கன் பிரியாணி. வீட்டுக்கு வந்ததும் ஒரு நெடுந்தூக்கம்.#மனுஷன் கண்டுபிடிச்சதிலேயே உருப்படியான ரெண்டுவிஷயம் பிரியாணி அதுக்கப்புறம் ஸ்வீட் பான்


    என் அப்பார்ட்மெண்ட்ல நான் இருக்கது என்னைத் தவிர யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் இப்பவரைக்கும்.இரவு உணவை லைட்டா முடிச்சிக்கிடலாம்னு கடைக்குப் போய் தயிர் வாங்கிட்டு வந்தேன். வீட்டைத் திறக்கறதுக்குள்ள, எதிர்வீட்டுல இருக்க ஹிந்தி ஆண்ட்டி கூப்பிட்டாங்க. அங்க வெளியே சீரியல் லைட்லாம் போட்டு, வீடே கோலாகலமா இருந்தது. சுவரில் ‘happy birthday to JASMINE' னு போட்டிருந்தது. அவங்க பொண்ணுக்கு பிறந்தநாளாம். ஸ்வீட் சாப்பிடக் கூப்பிட்டாங்க.கூச்சத்துடன் சென்றேன்.வரும்போது, ஒரு பெரிய ப்ளாஸ்டிக் தட்டில் சிக்கனுடன் சாப்பாடும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.எதிர்பாராத அன்பில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். எங்கள் ஊரில் நான் வீட்டில் இருக்கும்போது பக்கத்து லாட்ஜ் ஒன்றில் நிரந்தரமாகத் தங்கியிருந்த பேச்சிலர் வாத்தியார்கள் நினைவுக்கு வந்தது. நல்லநாட்களில் பக்கத்துக் கோயிலிலிருந்து பொங்கல் பிரசாதங்கள், எங்கள், அண்டை வீடுகளிலிருந்து சாப்பாடும் அவர்களுக்குப் போகும். அவர்கள் எவ்வளவு ம(நெ)கிழ்ந்திருப்பார்கள் என இன்று எனக்கு நினைவுக்கு வந்தது.(பதிவு கொஞ்சம் ஜாக்கி பதிவு மாதிரிப் போயிடுச்சோ??? ! ) விடுங்க...அன்பால் சுழலும் உலகமிது. திரைகள் மூடி நாகரிகம் காட்டுவதைவிட, வெளிக்கொட்டும் பேச்சுக்கள் எவ்வளவோ மேல்....

Saturday, September 17, 2011

நீ பாதி நான் பாதி கண்ணே...!

   கார்த்திக்கின் திருமணத்தில்(01செப்2011) கொடுக்க மிஸ் செய்துவிட்டேன். இப்போதுதான் முடித்தேன்.
ஏன் இந்தத் தலைப்புன்னா? அவங்க நிச்சயதார்த்தத்துல ஆர்கெஸ்ட்ராவே இவங்கதான். ரெண்டுபேருமே உண்மையிலேயே நல்லாப் பாடுவாங்க. அவங்க பாடின பாட்டுதான் இது ‘நீ பாதி நான் பாதி கண்ணே...!’ கரோகில மியூசிக் செட் பண்ணியிருந்தாங்க.
ஒன்ஸ்மோர் கேட்டுக்கேட்டு 4 தடவை பாடுனாங்க.
விரைவில் பஸ்ஸில் அந்த வீடியோ கிடைத்தால் போடுகிறேன்.
அன்னைக்கு நிச்சயதார்த்தத்துக்கு, காம்ப்பையரிங் ஐயாதான்... அது பட்டையக் கிளப்புனது தனிக்கதை :)

இந்தப்படம் A2 size கார்ட்ரிட்ஜ் பேப்பரில் 8 ஸ்டெட்லரில் பண்ணியது...
பொண்ணுங்களா...கொஞ்சம் நகையைக் கம்மியாப் போடுங்க...பட்டுப்புடவை, நகைலாம் எஃபக்ட் கொண்டு வரக் கஷ்டமா இருக்குதுல்ல...:(

மாப்பிளையைப்பாருங்க சிம்பிளா ஒரு ஷர்ட்....
பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...

Friday, September 16, 2011

வெள்ளையடித்தல் ஞாபகங்கள்

     வுசர் பருவத்தில் தீபாவளியை விட ஆர்வமூட்டும் நாளொன்று உண்டு. அது வீட்டுக்கு வெள்ளையடிக்கும் தினம்.நீலமும், கல்சுண்ணாம்பும் கலந்த வாடை அப்படியொன்றும் உவப்பானதாயிருந்ததில்லை எனக்கு.ஆனாலும் எங்கெங்கோ மூலையில் பதுங்கிய பொருட்கள் அன்றுதான் தரிசனத்திற்கு வரும், திருவிழாவில் மட்டும் கண்டுபிடிக்கப்படும் தாவணிகள் போல.விஐபிக்கள் இல்லாத நாட்களில் மூலையில் சிவப்போ, பச்சையோ அடிக்கப்பட்டு இருக்கும் கண்கவர் ட்ரெங்குப் பெட்டிகளும், கட்டம்போட்ட சூட்கேசுகளும்தான் எனது இலக்கு.நானும் என் தம்பியும் துழாவுவதற்கு வாட்டமாக பெரிய ‘குளுக்கை’ போன்ற ட்ரம் ஒன்று இருக்கும்.எங்கள் தாத்தா வாங்கிய பழைய பொருட்கள்,சேமித்த புத்தகங்கள், வால்வ் டைப் ரேடியோவின் விளக்க மேனுவல்,பழைய லைட்டர்கள் இன்னும் பல ஐட்டங்கள் தேடுதலில் அகப்படும்.புதிய புத்தகவாசனை எவ்வளவு இதமோ, கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவம் தருபவை கரையான் அரித்த பழைய புத்தகங்களும். தாத்தா தீவிர திமுக என்பதால், அவருக்கு வந்த வாழ்த்து அட்டை எல்லாவற்றிலும் இளைஞர் முதல் கிழவர் வரை கலைஞரே சிரித்துக் கொண்டிருப்பார்.தாத்தாவின் வெறி எங்களையும் தொற்றிவிட்டிருந்தது. கலைஞரின் புகைப்படம் பார்த்தாலே ஒரு தனி உற்சாகம் வந்துவிடும்(இப்போது தலைகீழ்). சிறுவயதில் நான் கிறுக்கிய சாக்பீஸ் உருவங்களில் அதிகம் வருபவர் கலைஞர்தான்.முரசொலியின் பொங்கல்மலர்கள் கிடைக்கும். எப்போதோ ஒருமுறை தாத்தா பெங்களூர் சென்றிருந்தபோது எடுத்த படம் கிடைத்தது.அவருக்குக் கொஞ்சம் முடிவளரும் என்றாலும், மொட்டையடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்.அதற்கு காட்டுராஜா கடைக்குத்தான் செல்வார்.அதற்கென பிரத்யேகமாக முடிபிடுங்கும் மெஷின் வைத்திருப்பார்.

   வ்வொரு வருஷமும் இந்தத் தேடல் தொடரும். நான் பதினொன்றாம் வகுப்புப் படிக்கையில், கிறிஸ்துமஸ் அன்று தாத்தா விரும்பி இறந்துவிட்டார்.முதல்நாள் இரவு ஏதோ ஒரு நினைவில் வீட்டு உத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்னடா! நாளைக்கு நான் கிழக்க போகப் போறேன்னு பார்க்கிறியா?’ என்றார். ‘இல்ல தாத்தா. சும்மாதான்’ எனக்கூறினேன்.(கிழக்கில்தான் எங்கள் ஊர்ச் சுடுகாடு இருந்தது). அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியில்லை. அவர் அடிக்கடி இப்படிக் கேட்பவர்தான்.படுத்திருப்பார்.தண்ணீர் கொண்டு வரச் சொல்வார். படுக்கையில் இருந்தவாறே, வாயில் ஊற்றச் சொல்வார். அதே போல் செய்தால், ‘ நாளைக்குப் பால் ஊத்துறதுக்கு இப்பவே ட்ரைனிங்கா?’ எனக்கேட்பார் சிரித்துக்கொண்டே. சிலசமயம் என்னையும், தம்பியையும் கூப்பிட்டு, என்னை தலைப்பக்கமும், அவனைக் கால்பக்கமும் அமரச் செய்வார்.’நாளைக்கும் இப்டித்தான் உட்காந்திருக்கணும். மலர் மாமனை பத்தி பிடிச்சிட்டு வரச் சொல்லு’. ‘போங்க தாத்தா’ என வெட்கத்துடனும், சிரிப்புடனும் ஓடிவிடுவோம்.



   60 வயதுக்கு மேலானாலும், உடல்வாகு நன்றாகவே இருந்தது. நோய் உடலில் இல்லை. மனத்தில்தான்.இரு வருடங்களுக்கு முன்பு அம்மாச்சி இறந்த சோகம் செங்கல் செங்கல்லாகக் அடுக்கப்பட்டு, இந்தக் கிறிஸ்துமஸ் காலை அவரை மூச்சடைக்கச் செய்துவிட்டது. எங்கு வாங்கி வைத்திருந்தார் அந்தக் கயிறை எனத் தெரியவில்லை.திட்டமிடுவதை என்றுமே அவர் விரும்பிவந்தார்.என் தம்பி எழுந்து பார்க்கவில்லை முதலில் பார்த்திருந்தால் கொஞ்சம் பயந்திருப்பான். முதல்நாள் இரவு ரெண்டுமணிக்கெல்லாம், ஏணியை எடுத்து அங்குமிங்குமாக வாட்டமான இடம் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அரைகுறைத் தூக்கத்தில் பார்த்ததாக தம்பி சொன்னான்.அதுபற்றி அவன் விசேடமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் இதுமாதிரி ஏதேனும் பழைய பொருட்களை அவ்வப்போது பரணில் நோண்டிக்கொண்டிருப்பார்.காலையில் கதவை உடைத்துப்பார்க்கையில்தான் அனைவருக்கும் புரிந்தது.

   வரைக் கிழக்கில் எரித்துவிட்டு, வீட்டுக்கு வெள்ளையடித்தோம்.அப்போது என் கைக்குக் கிட்டிய ஒரு சிறு கையேட்டில் அவரது கல்யாண வரவு-சிலவுக் கணக்கு இருந்தது. இன்னும் சிறு பக்கங்கள் தள்ளி, பழைய எழுத்து ஸ்டைலில்
முதலிரவு, அடுத்த இரவு அனுபவங்களைச் சுருக்கமாக, கவிதை நடையில் சொல்லியிருந்தார். முழுவதும் ஞாபகம் இல்லை.அம்மாச்சியின் அழகை வர்ணித்தும், இன்னும் சில வாசகங்களும் எழுதியிருந்தார். (இன்னொரு விஷயம் அவரின் கையெழுத்து அத்தனை அழகுவாய்ந்தது. அந்த ஸ்டைல் இன்றுவரை நான் யாரிடமும் பார்த்ததில்லை’

    ரு மூலையிலிருந்த இன்னொரு அலமாரியை ஒதுங்க வைக்கையில் ஒரு வெள்ளைவேட்டி சுற்றப்பட்டிருந்தது. அதனடியில் ஒரு சிறு பேப்பர், A4 வடிவில் பாதிதான் இருக்கும். அவரின் அழகுக் கையெழுத்து.ஏதோ எழுதிவைத்திருக்கிறார் என அவசரமாகப் பிரித்தோம்.

    ‘செலவுக்கு பீரோவில் இருக்கும் பத்தாயிரத்தை எடுத்துக் கொள். கரண்ட் பில், தண்ணிபில் ஒழுங்காகக் கட்டிவிடு.......
                  இவண்
               மா.தங்கராசு


பி.கு:... தாத்தா புகைப்படம் இப்போது கைவசம் இல்லை. நினைவிலிருந்து வரைந்தது.

Monday, September 12, 2011

யாருப்பா இந்த காபா???

   எனது புது ஃபேஸ்புக் அக்கவுண்டின் முதல் நண்பரான காபாவுக்கு, முன்னரே சொல்லியிருந்தபடி கம்பெனி வழங்கும் அழகிய பரிசு இந்த ஓவியமே...!

பாதி வரையிறப்போ, கன்னம் கொஞ்சம் அகலமாப் போயி எஸ்ரா மாதிரி ஆயிடுச்சு. அப்புறம் சரி பண்ணினேன்.(பண்ணியிருக்க வேணாம்னு சொல்றீங்களா... அதுவும் சரிதான்...)

வலசையின் முதல் வாசகர்களுள் ஒருவரான காபாவும், வலசையும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...

ரெஃபரென்ஸ் படத்தில் அவர் முகத்துக்குப் பின்னால் ஒரு சிங்கம் சிலை இருந்தது. வேண்டுமென்றே தவிர்த்துவிட்டேன். காரணம் தெரியும்தானே... ஒரே ஃப்ரேமுக்குள்ள ரெண்டு சிங்................



Saturday, September 10, 2011

அப்பார்ட்மெண்டில் ஒரு பெயர் சூட்டுவிழா(only private)

நதீம் வீடு எங்க?
கேட்டவனுக்குப் பதில்
நான் புதுசுங்க

எதிர்த்த வீட்டில்
ஒரு ஹிந்திக் குடும்பம்
ஒரு சின்னப்பொண்ணு

பக்கத்துல
ஒரு பேச்சுலர்
அடிக்கடி கறி சமைக்கிறான்

இன்னும் ரெண்டு வீடு தள்ளி
எப்பவும் ஒரு நாய் படுத்திருக்கும்
நைட் ரெண்டு மணிக்கு
கதவைப் பிறாண்டுறது
அதுவாக் கூட இருக்கும்

இன்னொரு ஃப்ளோர்
போனதே இல்ல

நதீம் வீடு எங்க?
கேட்டவனுக்குப் பதில்
நான் புதுசுங்க

பதில் எப்பவும் மாறாது

ஆறுமாசங்கழிச்சு...
கண்ணன் மனை இல்லி?
பத்தா நஹி...மே நயா ஆத்மி...

இப்பவும் எதிர்வீட்ல ஒரு
ஹிந்.....

மறதியாய் திறந்து
வைத்த சன்னல்
வழி வந்திருக்கலாம்
இவன்

சிதறிக்கிடந்த
டம்ளர்களை எடுத்து
அடுக்கிய படியே
பெயர் சூட்டித்
திட்டினேன்
தினேஷை...