Monday, July 26, 2010

பெங்களூர் வாசம்...


   மே மாத இறுதி வாரத்தின், ஒரு ஞாயிறு காலையில் லால்பாக் கார்டனுக்கு முன் இறக்கிவிடப் பட்டிருந்தேன்.ஒன்றும் புரியாமல் விழித்த நிலையிலிருந்து இப்போது ‘ஒயிட் ஃபீல்டில்’ வீடெடுத்து, ‘சல்ப்ப’ சல்ப்ப ஓரிரண்டு இடங்களுக்குச் சென்று வந்ததில் பழகிவிட்டது பெங்களூர். இன்னும் இனிப்புச் சாம்பார் இட்லிதான் ஒத்துக் கொள்ளவில்லை.



        பெங்களூரின் க்ளைமேட் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நான்கு மணி வாக்கில் மழை ஆரம்பித்து விடுகிறது. திடுமென நின்றும் போய்விடுகிறது. நீர் வண்ண ஓவியம் ரசிப்பது போன்ற ஒருவிதக் கிறக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறது.பேருந்துகளின் கன்னடப் பெயர்ப்பலகைகள்தான் பயமுறுத்துகின்றன.எனினும் கொஞ்சும் தமிழ்,கொஞ்சும் ஹிந்தி என காக்டெயிலாக விசாரித்தால் பதில் கிடைத்து விடுகிறது.



    ’கார்டன் சிட்டி’ என்பதால் சாலையோர மரங்களும், அதன் நிழலில் கையேந்தி பவன்களும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றன. கண்ணாடி போர்த்திய கட்டடங்களின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.முதல்வர் எடியூரப்பாவின் சாதனைப் பதாகைகளைப் பார்க்கையில் திராவிடக் கலாச்சாரத்துக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதும் புரிகிறது. விஷ்ணு வர்தனின் ‘ஆப்த ரக்‌ஷா’ இன்னும் ஓடிக் கொண்டிருப்பது போஸ்டர்களில் தெரிகிறது.



    பெங்களூரில் எனக்குத் தெரிந்த ப்ளாக்கர் என்ற அளவில் ‘காலடி’ ஜெகன்  இருக்கிறார். அவருக்கு ஒரு காலடித்துப் பார்த்தேன். என்ன ஆச்சர்யம், நான் வேலை பார்க்கும் பில்டிங்கில்தான் அவரும் இருக்கிறார். ஒருநாள்  மதிய உணவு இடைவேளையில்தான் அவரைச் சந்தித்தேன். மனிதர் ப்ரொஃபைல் ஃபோட்டோவில் இருப்பதை விட இன்னும் இளமையாக இருக்கிறார்.அதிராமல், ஆனால் அசராமல் பேசுகிறார். சுய விவரத்தில் ஆரம்பித்து சாரு புராணம் வரை பேசி அப்போதைக்கு முடித்தோம்.இன்னொரு விரிவான சந்திப்புக்கு வாக்கு அச்சாரம் போட்டு வைத்தேன். அவ்வப்போது ஹைக்கூ சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

         தேவதைகளின் தேசத்திலிருந்து , காலப்பயணியும் (இரா.வசந்தகுமார்) இங்கு வந்து சேர்ந்துவிட்டார் என்பது உபதகவல். இரு வாரங்களுக்கு முன்பொரு சனிக்கிழமை சந்திக்கலாமென்றார். லீலா பேலஸ்(’சிவாஜி’ படத்துல வர்ற ஹோட்டல்ன்னு கேள்விப் பட்டிருக்கேன்) சென்று அங்கிருந்து திப்பசந்திரா செல்லலாமென எண்ணியிருந்தேன். வால்வோவில் ஏறி ஒயிட் ஃபீல்டிலிருந்து லீலா பேலஸ் செல்வதற்குள் இளையராஜா பனிரெண்டு சிம்பொனிகளைக் காதுகளுக்குள் நுழைத்திருந்தார்.ஒரு மந்தமான முற்பகலில் ம்ரங்களின் இடைவெளியில் ஒய்யாரமான லீலா பேலஸின் முன்பு நின்றிருந்தார் வசந்த். குசல விசாரிப்புகளை ஒரு காஃபிக் கடையில் முடித்துவிட்டு,ஹோட்டலின் உள்ளே இருந்த புக்ஸ்டாலுக்குச் சென்றோம்.எல்லாப் புத்தகத்தின் தலைப்புமே A-Z  எழுத்துக்களை  மட்டுமே வெவ்வேறு பெர்முடேஷன் காம்பினேஷன்களில் கொண்டிருந்ததால், நான் ஸ்டேஷனரி பகுதிக்குச் சென்றேன்.இடுப்பில் கட்டும் தாயத்து போன்றிருந்த ஒரு கீ செயினின் மேல் விலை ரூ.550/-only(அது ஒண்ணுதான் குறைச்சல்) ஒட்டப்பட்டிருந்தது. சரி, தர்காவில் மந்திரித்த தாயத்து போல என எண்ணிக் கொண்டு,புத்தகம் பார்க்க வந்த பூக்களை நானும், புத்தகங்களை வசந்தும் கண்களால் புரட்டிக் கொண்டிருந்தோம்.
லீலா பேலஸின் முகப்பில் வரவேற்’பூக்கள்’

       டையில் சிறிது வயிற்றுக்கு ஈந்து விட்டு, மார்க்கெட் செல்ல முடிவெடுத்தோம். அங்கு திப்பு சுல்தானின் கோட்டை ஒன்றும், அரண்மனை ஒன்றும் இருப்பதாகச் சொல்லியிருந்தார்.பேருந்தில் கண்டக்டரிடம்,’ மார்க்கெட் ஸ்டாப் வந்தால் சொல்லுங்க’ என்றவனை இடை மறித்து, ‘தேவையில்லை உங்களுக்கே தெரிந்து விடும்’ என்று ஒரு ஞானியைப் போல் புன்னகையுடன் கூறினார் வசந்த். ஆம். சொல்லித் தெரிவதில்லை மார்க்கெட் என்பதைப்போல மக்களும்,சத்தமும் இரண்டறக் கலந்து தெறித்துக் கொண்டிருந்தது.
    
திப்பு சுல்தான் கோட்டை

           பேருந்து ஏறுவதற்கு முன்பிருந்தே எங்களைத் தொடர்ந்து வந்த கருமேகங்கள்,மார்க்கெட்டில் இறங்கியவுடன் வேலையைக் காட்ட ஆரம்பித்தன.அச்சூழலை வீணாக்கிடாமல், ஒரு திறந்த வெளி உடுப்பி ஓட்டலில் ஸ்ட்ராங் காஃபியுடன் கொண்டாடினோம் மழையை. குழந்தை ஒழுங்கின்றி அடுக்கிவைத்த விளையாட்டுப் பொருள்களைப் போல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. கம்பித் தடுப்புகளினூடே,கடைகளின்கூரைகளையே தற்காலிகக் குடைகளாகக் கொண்டும், நனைந்து கொண்டே நகர்ந்தோம்.ஐந்து நிமிட நடையில், கொஞ்சம் உன்னிப்பாகத் தேடிப்பார்த்தால் கிடைத்து விடுகிறது திப்புவின் கோட்டை.உள்ளே பிள்ளையார் கோயில். அதைச்சுற்றிலும் சாய்வான கோட்டைச் சுவர்கள்: அதில் ஆங்காங்கு பொறிக்கப்பட்ட சில சிற்பங்கள்(திப்பு புலியுடன் மோதும் காட்சி உட்பட):சுற்றிலும் புல்வெளி எனத் தனித்து விடப்பட்டிருந்தது கோட்டை.(படங்களுக்கு இங்கு செல்க). பார்த்து முடித்தவுடன் இதிலென்ன பார்க்க வந்தோம் என்ற அசுவாரஸ்யக் கேள்வி எழாமலில்லை.       

       கோட்டையிலிருந்து இன்னுமொரு ஐந்து நிமிட தூரத்தில் விஸ்தாரமாய் வரவேற்கிறது திப்புவின் அரண்மனை. முன்புறம் சீராக வெட்டிவிடப்பட்ட புல்வெளியும், அதற்கு அலங்காரம் சூட்டியது போல் வண்ண மலர்களும் வளர்ந்திருந்தன. திருமலை நாயக்கர் அரண்மனையைப் போல் பிரம்மாணடம் எதிர்பார்த்த எனக்கு இங்கும் சற்று ஏமாற்றமே. ரிசசன்(Recession) டைமில் கட்டியிருப்பார்கள் போலும், ரொம்பச் சிக்கனமாகவே இருந்தது அரண்மனை. நுழைவிலேயே வரவேற்கிறது சுல்தானின் தர்பார்.மரத்தாலான தூண்கள் ,உச்சியில் பல வளைவுகளுடன் முடிகின்றன. இதுபோலப் பல அடுக்குகளால் நிறைந்திருக்கின்றது தர்பார் அறை. முன்புறம் போலவே ,பின்புறமும் இதையொத்த அமைப்பு இருக்கிறது. தற்போதைய சட்டசபையின் கீழவை, மேலவை போன்று செயல்பட்டதா எனத் தெரியவில்லை.

திப்பு சுல்தான் அரண்மனை தர்பார்
            திப்பு சுல்தான் அமரும் இடம் நடுநாயகமாக இருக்கிறது.நானும் அங்கு நின்று ஒரு ராஜ பார்வை பார்த்துக் கொண்டேன். அதன் இருபுறமும் ஓரங்களில், மாடிக்குச்செல்லும் படிக்கட்டுகள் அடைத்தே இருக்கின்றன.ராஜ ரகசியம் போலும்.இயல்பான வண்ணம் மாறிவிடாதபடி இருக்க கண்ணாடிச் சட்டங்களில் ஓவியங்கள் சிறையிருக்கின்றன.அதற்கு முன்பே நம்மக்கள் அங்கு,தங்கள் தெய்வீகக் காதலை ,இதயத்தில் அம்புவிட்டுக் கல்வெட்டியிருக்கிறார்கள்.

   கீழே வந்தால் அருங்காட்சியகம் இருக்கிறது. திப்புவின் வாழ்க்கை வரலாறு, முக்கிய நிகழ்வுகள், அவரின் செல்ல புலிப்பொம்மை(புலிப்பொறி எனலாம்.அதன் காலடியில் ஒரு வெள்ளைவீரன் சிக்கிக்கொண்டிருப்பான்.பொழுதுபோகாத போது அதனை இயக்கி, உறுமலோடு கேட்டுக் கொண்டிருப்பாராம் திப்பு சுல்தான்),அவரின் ஆட்சிப்பகுதிகள்,எழுச்சி,வீழ்ச்சி அனைத்தும் பதிவுகளாக இருக்கிறது. அவர் தயாரித்த ஏவுகணையொன்றும் அறையின் நடுவே கண்ணாடிப் பேழைக்குள் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கிறது. புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. நைஸாகச் சிரிக்கும் பாதுகாவலரிடம் பத்து ரூபாய் கொடுத்துப் படமெடுப்பது உங்கள் திறமை.







        




          

Sunday, July 11, 2010

மதராசப் பட்டினம் - மூன்று பார்வைகள்

  1.கடந்த ஓரிரு மாதங்களாகவே சென்னை என்னைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது. காலப்பயணி வீட்டிலிருந்த நூலகத்தில் நான் எடுத்து வந்த புத்தகத்திலிருந்து தொடர ஆரம்பித்தது சென்னை. மே மாத மழை நாளில் அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் எழுதிய ’கிளிமுற்றம்’ சிறுகதைத் தொகுப்பையும், பிரபஞ்சன் எழுதிய ‘வானம் வசப்படும்’நாவலையும் எடுத்து வந்தேன். பஸ் ஜன்னலின் வழியே, பேண்ட்டை நனைத்த மழையின் அத்துமீறலையும் பொருட்படுத்தாமல் படிக்க ஆரம்பித்தேன்.கி.பி. 1740 களில், புதுச்சேரியின் கவர்னராக இருந்த ஃப்ரெஞ்சு துரை துய்ப்ளெக்ஸிடம், துபாஷ் ஆக அதிகாரத்திலிருந்த ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகள் அடங்கியதுதான் இந்த நாவல்.இது தினமணிகதிரில் தொடராக வந்த சமயம் ,அரை டவுசரோடு படித்திருக்கிறேன். அக்காலத்தை நினைவூட்டும் வகையிலும், ப்ளாக் பேரே அதுவாக அமைந்துவிட்ட படியாலும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தேன்.அந்த காலகட்டத்தில் புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிமுறையும், அவர்கள் தங்களுக்குப் போட்டியாக வந்த ஆங்கிலேயர்களை எதிர்க்கும் முகமாக சென்னையைக் கைப்பற்றப் போராடியதும், பின்னாளில் ஹீரோவாக விளங்கிய ‘ராபர்ட் க்ளைவ்’ இதில் துக்கடா பாத்திரத்தில் இண்ட்ரோ ஆவதும், போகிறபோக்கில் சென்னையைப் பற்றியும் தொட்டுவிட்டுச் சென்றது நாவல்.


  2.டுத்த தற்செயல் நிகழ்ந்தது எழுத்தாளரான எஸ்.ராமகிருஷணனின் ‘யாமம்’ நாவல் வாங்கியது.இதில் மைய இழையாக இரவும், அதனூடே பின்னப்பட்ட நான்கு கதைகளுமாக இருந்தது.கதை நிகழும் களமாக அன்றைய ‘மதராப் பட்டணமும்’ அதன் சுற்றுப் புற ஊர்களும் காட்டப் படுகின்றது.(அவையெல்லாம் இன்று ‘ஒருங்கிணைந்த சென்னை’ ஆகிவிட்டது). இரவின் புதிரையும், வாசனையையும் ஒத்த ‘யாமம்’ என்னும் அத்தர் ஒரு குறியீடாகக் காட்டப் படுகிறது. உடலெங்கும் மெல்லிய பூக்களாய்க் காமம் பூக்கச்செய்யும் வல்லமை படைத்த யாமமானது, கதைகளினூடே தெரிந்தும், தெரியாமலும் விரவி மனிதர்களையும், மனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. மீர்சாகிப் பேட்டையில் ‘யாமம்’ தயாரிக்கும் அப்துல் கரீம், அல்லிக்கேணியில்(திருவல்லிக்கேணி) வசிக்கும் நில அளவையாளர் பத்ரகிரி, லண்டனில் கணித மேற்படிப்புக்குச் செல்லும் அவன் தம்பி திருச்சிற்றம்பலம், பங்காளிச் சண்டையில் சொத்துக்களை இழக்கும் நிலையிலிருக்கும் வாழ்ந்து கெட்ட கோமான் கிருஷ்ணப்ப கரையாளர் எனக் கதா பாத்திரங்களின் வாழ்க்கையின் பின்னே அன்றைய மதராப் பட்டிணத்தையும் நிழல் ஓவியமாக்கியிருக்கிறார் எஸ்.ரா.

       ப்துல் கரீமின் கனவில் அவரது குடும்ப ஃபக்கீர் வந்து பேசுவது போல ஆரம்பித்து, லண்டனில் டச்சுக்காரர்கள் குறுமிளகின் விலையை ஏற்றியதால், தாங்களே இந்தியாவில் நேரடி வணிகம் செய்ய பிரிட்டிசார் எண்ணிச் செயல்படுதலும், வந்த பிரிட்டிஷார் ஷாஜகான் மகளுக்கு ஏற்பட்ட தீக்காயத்தைக் குணப்படுத்தி, நன்மதிப்பை வணிகமாக்கியதும், உள்நாட்டு போர்களின் போது பயன்படுவதற்காக, மதராப் பட்டிணத்தில் மேப் தயாரிக்கும் நில அளவைகளில் ஈடுபடுவதும் என நிகழ்வுகள் தனியாகச் சொல்லப் படாமல், கதைகளின் போக்கிலேயே பின்புலமாகச் சொல்லப் படுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் உதாரணங்கள் வசீகரிக்கும் வார்த்தைகளால் வாசிப்பைத் தூண்டினாலும், சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் போலவும் தோன்றுகிறது.ஒவ்வொரு கதையும், ஒரு முடிவைக் கொண்டிருந்தாலும், அங்கே சொல்லப் படாத இன்னொரு கதையும் ஆரம்பமாகிறது.மதராப் பட்டிணம் பற்றிச் சொல்லப்பட்டவைகளும், ஆங்காங்கு அதன் நிகழ்வுகளைக் கதையோடே பிணைத்திருக்கிறது. நல்ல வாசிப்பனுபவம் தந்த ஒரு நாவல் ‘யாமம்’.

    3.இதன் தொடர்ச்சியாகவோ, தொடர்ச்சியில்லாமலோ நேற்று ‘மதராசப் பட்டினம்’ படம் பார்க்க நேர்ந்தது. வயதான பிரிட்டிஷ் மூதாட்டியிடமிருந்து தொடங்கும் கதை 1940 களில் இருந்த சென்னையாக விரிகிறது. ‘மதராசப் பட்டினத்தின் தேம்ஸ்’ எனக் கூவத்தைக் காட்டுவதிலிருந்து , அன்றைய செண்ட்ரல் ஸ்டேஷன், ஸ்பென்சர் ப்ளாசா எனக் கதையின் பின்னணியாகச் சென்னையைக் காட்டித் தொடர்கிறது படம்.முதல் பாதியில் வரும் பிரிட்டிஷ் பெண் ஏமி(மெழுகுச் சிலை போல இருக்கிறார்.நடிக்கவும் செய்கிறார்), இந்திய சலவைத் தொழிலாளி பரிதியின் காதல் சுவாரஸ்யம்.மறைந்த நடிகர் வி.எம்.சி.ஹனீஃபாவின் பண்பட்ட நகைச்சுவை நடிப்பும் பெரும்பலம். பாடல்களில் தனித்துத் தெரிந்த ஜி,.வி.பிரகாஷ்குமாருக்கு, பின்னணி இசையில் A,B,C தவிர வேறெதுவும் தெரியவில்லை.(ஒரு தடவை ‘சிறைச்சாலை’ படத்தைப் போட்டுப் பார்த்திருக்கலாம்). அவரைச் சொல்லியும் ஒன்றுமில்லை. இரண்டாம்பாதியில் படம் தொங்கிவிடுகிறது. முதல் பாதியில் கொஞ்சம் பின்னாடி தூக்கிப் போட்டு, இரண்டாம்பாதியில் கத்தரிக்கு வேலை கொடுத்திருந்தால் படம் க்ளாஸிக்காக இருந்திருக்கும். ஆர்ட் டைரக்டர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவரும் ,இயக்குனர் விஜய்க்கு நல்ல வேலை செய்து இருக்கிறார்கள். மதராசப் பட்டினம்-அதிகம் எதிர்பார்க்காமல் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்.

Sunday, July 4, 2010

மீண்டும் மீண்டும் நான்...

      தூசி படிந்த இந்தோர் வாழ்க்கையில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஓடியதே தெரியவில்லை. காலைகள் கச்சோரி, சமோசாவிலும், மற்றையப் பொழுதுகள் சுட்ட ரொட்டிகளிலுமே தீர்ந்திருந்தன.சுடுவதில் சென்னையை மிஞ்சக்கூடிய வெயிலும் ,நடுக்குவதில் டெல்லியை நெருங்கும் குளிருமாய்க் கழிந்து விட்டிருந்தன பருவங்கள்.கட்டிடங்களும், கார்களும் மேட்டுத்தன்மையைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. சிறப்புப் பொருளாதார மண்டலமிருப்பதால், தலைநகரான போபாலை விடவும் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்தவள் இந்தோர்தான்.


       இங்கு அதிகம் ஊர் சுற்றிப் பார்க்காவிட்டாலும் , என்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். பான் பீடா மற்றும் பானிபூரிக் கடைகளால் இந்தோரின் தெருக்கள் கலகலப்பாகவே இருந்தன.எல்லா நகரங்களும் பெயர் நீக்கிப் பார்த்தால் ஒன்றுதான் என்பது போல இங்கும் மக்களின் வாங்கும் வசதிகளும், அதற்கு ஈடு கொடுக்கும் அம்பானி,பிர்லாக்களின் ஷாப்பிங் மால்களும் அதிகம். ஆங்காங்கே புராதனப் பறை சாற்றும் கோட்டைகளுக்கும் பஞ்சமில்லை. நம்மூர் டி.நகர் போல  ‘ராஜ்வாடா’ எனும் ஏரியா உண்டு.எல்லாம் குறைவுதான் போக்குவரத்து நெரிசலைத் தவிர. சாலைகளில் நால்வர் பயணிக்கும் பைக்குகள் போக்குவரத்து விதிகளுக்குப் போக்குக் காட்டிச் சென்று கொண்டிருக்கும்.பேருந்து வசதிகளில் வடக்கு, தெற்கை விட பத்து மடங்கு குறைவுதான்.மாருதி ஆம்னிக்கள்தான் இந்தோரின் ஷேர் ஆட்டோக்கள். அசராமல் ஆட்களைத் திணித்துக் கொண்டு உடல் பிதுங்கப் பறந்து கொண்டிருக்கும். ஆட்டோக்காரர்கள் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்கள்.பேரம் பேசிப் பழகவேண்டியதில்லை. மண்ணெண்ணை,கேஸ் உபயோகத்தால், நம் பர்ஸ் மெலியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

           தீபாவளி, பொங்கல் கூட கொண்டாடிப் பழக்கமில்லாத நான், தாண்டியாக்கள் பார்த்து நவராத்திரிகளும், வண்ணம் பூசி ஹோலிக்களும் கொண்டாட  ஆரம்பித்திருந்தேன். அலங்கார வளைவுகள், அதிகப்படியான போஸ்டர்கள் இல்லாத அமைதியான தேர்தல்கள் பார்த்தேன். ஏழே கால் மணிக்கு முகூர்த்தம் வைத்து பொங்கல்,இட்லி,கேசரி+காபியுடன் கல்யாணங்களுக்குப் போய் வந்த எனக்கு, 40,50 வகை உணவுகளுடன், டீ.ஆர் படம் போல செட்டுப் போட்ட இரவுக் கல்யாணங்கள் பழக ஆரம்பித்திருந்தது.(அப்போ ஃபர்ஸ்ட் பகல்தான் கொண்டாடுவாங்களா...???)

     இன்னும் சொல்லாமல் விட்டது யுவதிகள். எல்லோருக்கும் அப்படியொரு தேஜஸ்.ஆனால் அழகைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று பெரிய கைக்குட்டை ஒன்றால் முகத்தைச் சுற்றி மூடி விடுகிறார்கள், படைப்பின் உண்மைக் காரணம் அறியாமல். சரி மன்னித்து விடுவோம்.

        ந்தோரில் இருந்த காலங்களில் பல விஷயங்களில் மாறி இருந்தேன் கஷ்டப்பட்டு.ஆறு மணிக்கு முன் எழுந்தேன்.ஒரு மணிக்கெல்லாம் படுக்க ஆரம்பித்தேன். காஃபி மறந்தேன்( நல்ல காஃபி கிடைப்பதில்லை). H2O வை நினைவூட்டினாலும் டீ குடித்தேன்.பன்னீர் சாப்பிடப் பழகினேன்.அருவிகளில் நனைந்தேன். ட்ரெக்கிங் செய்தேன்.இப்படிப் பல தேன்கள். பல இனித்தன. சில கசந்தன.


                
     ஆட்டோமொபைல் உதிரிப் பாக தயாரிப்பு நிறுவனத்தில் வேலைக்கு இருந்தேன்.நிறையக் கற்றுக் கொண்டேன்.வேலை பார்ப்பது, வேலை பார்ப்பது போல நடிப்பது என அனைத்துமடங்கும். எக்செல் ஷீட் முதற் கொண்டு, எஞ்சின் அசெம்பிளிங் வரை செய்யும் நிர்பந்தங்களும் ஏற்பட்டன.ஆறு நாளும் வேலை.ஆறாம் நாள் வேலை வந்தால் ஏழாம் நாளும் வர வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே ஊருக்கு வரமுடியும். அதுவும் குருவி போல் சேர்த்த விடுப்புகளை ஒரே நேரத்தில் எடுத்து வருவேன். கடைசியில் அது யானை வாய்ப்பட்ட அவலாக மாறிவிட்டிருக்கும்.



இன்னும் எத்தனையோ விஷயங்கள் விழி நுழைந்தது, செவி புகுந்தது, இதயத்தில் இறங்கியது, இப்போதைக்கு இது போதும் இந்தோரைப் பற்றி...


             ஓவர் டூ பெங்களூர்....

    டந்த மே மாதத்தின் இறுதி நாட்களில், ஒரு சுபயோக சுபதினத்தில் பெங்களூர் வந்தடைந்தேன்.இங்கு வேலை கிடைத்திருக்கிறது. இனி அடிக்கடி ப்ளாக் அப்டேட் செய்யப் படும் என எச்சரிக்கை விடுத்துக் கொள்கிறேன்...