Saturday, May 30, 2009

லேசர்

நெல்லிக்காய் மூட்டை போல்
நித்தம் சிதறும்
என் பொய்களில்
ஒன்றேனும் தூண்டலாம்
அடுத்த(வர்) மூட்டையை...

Tuesday, May 26, 2009

அங்காடித் தெரு-இசை விமர்சனம்

       ‘வெயிலின்’ மூலம் நிழலுக்கு வந்த இயக்குனர் வசந்தபாலனின் அடுத்தபடம் ‘அங்காடித்தெரு.இவரின் முதல் படம் (ஆல்பம்), கவிதாலயாவின் காசைக் கரைத்தாலும், இசையில் இதயம் தொட்டது.’செல்லமாய்ச் செல்லம்’,’காதல் வானொலி’,’முட்டைக்குள்ளிருக்கும் போது’ பாடல்கள் இன்னும் என்னோட விளையாட்டுப் பட்டியல்ல (playlist) இருக்கு.கார்த்திக்ராஜாவின் ராசி இவரிடமும் ஒட்டிக்கொண்டது போலும்.படம் ஓடவில்லை.


         அடுத்த படம்‘வெயில்’. இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் ராஜா, பாடல்களில் ஒரு ரகுமான் எனப் புகழப் பட வைக்குமளவுக்கு பாடல்கள் ஹிட் ஆனது.’உருகுதே மருகுதே’வில் உள்ளம் கவர்ந்த பிரகாஷ், அடுத்தடுத்த படங்களில் காணவில்லை.’ஒரு பட வித்தகர்’ தானோ என எண்ணிய வேளையில் மீண்டும் வந்து, ‘நான் அவனில்லை’ என ஓரளவு நிரூபித்திருக்கிறார்.


       ’அங்காடித்தெரு’ படத்தில் மீண்டும் ஜி.வியுடன் ஒரு கை கோர்த்திருக்கிறார் வசந்த பாலன். அப்போ இன்னொரு கை, அதை விஜய் ஆண்டனியுடன் கோர்த்திருக்கிறார்.ஆம்.விஜய்ஆண்டனிக்கு 2 பாட்டு, ஜீ.வி.பிரகாஷூக்கு 4 பாட்டு.

        விஜய் ஆண்டனியின் ‘’அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடல் அப்படி ஒன்றும் மோசமில்லை என்று சொல்லுமளவுக்கு இல்லாமல் மிக நன்றாகவே இருக்கிறது.நா.முத்துக்குமாரின் அனுபவ வரிகளில் மிளிர்கிறது பாடல். பாடலைக் கேட்டபின், அனைவரும் உணர்வர் , அவர்களின் அனுபவமும் அதில் கலந்திருப்பதை.
     நாம் ‘காதல்’ எனும் வார்த்தைக்குப் பொருள் தேடும் முன்பே அதில் கால் வைத்து விடக்கூடிய பதின் வயதுகளாகட்டும், பொருள் தெரிந்தபின்னர் வைத்த காலை எடுக்கும் போதிலாகட்டும், அனைவருக்குமே ஐஸ்வர்யா ராயோ,கேத் வின்ஸலட்டோ கிடைத்திருப்பதில்லை. அவரவர் இடத்திற்கு, வசதிக்கு, படிப்பிற்கேற்ற ஒரு பெண்ணை(சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட) பெண்களிடம் காதல் வயப் பட்டிருப்போம்.அது பக்கத்து வீட்டு பரிமளாவாகவோ,அத்தை மகள் மல்லிகாவாகவோ,திருவிழாவின் போது மட்டும் வந்து போகும் சிவப்புச் சுடிதார்க் காரியாகவோ இருக்கலாம்.இன்னும்,இன்னும் நம்மோடு புவியியல் ரீதியாக நெருக்கமாயிருப்பவர்களிடம் அதிகக் காதலைச் சிந்தியிருக்கக்கூடும். அப்படிப்பட்ட மனநிலையை, பின்நவீனத்துவம் எதுவும் கலக்காமல் எளிய தமிழில் சொல்லியிருக்கிறார்.(அவள் அப்படி ஒன்றும் கலரில்லை) வரியைத் தவிர..கார்த்திக்கின் குரலில் காலர் ட்யூனுக்கேயுரிய தகுதியில் இருக்கிறது பாடல்.


எங்கே போவேனோ’-பென்னி தயாள்,எம்.கே.பாலாஜி---இதற்கும் இசை விஜய் ஆண்டனி.இந்த பென்னிதயாள் தான் ‘கண்கள் இரண்டால்’ பாடியவர் என நினைக்கிறேன். காதலின் வலியை சற்று அரபு இசையில் உணரத் தந்திருக்கிறார்.கேட்கலாம். உணரலாம்.

கருங்காலி நாயே’-கார்த்திக்,’நெல்லை பாய்ஸ்’,மகேஷ்----வட்டாரவழக்குப் பாடலில் ராப்போ, ராக்கொ எதையோ கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.பழைய சோற்றில் தக்காளி சாஸ் ஊற்றியது போலிருக்கிறது. படக்காட்சிகளில் பார்க்கப் பிடித்துப் போகலாம்.


கண்ணில் தெரியும் வானம்’-ஜி.வி.பிரகாஷ் குமார்----மாமாவின் ‘என்றென்றும் புன்னகையில்’ கொஞ்சம் எடுத்து விட்டிருக்கிறார். சற்று உணர்வுப் பூர்வமான கருத்துக்கள் கொண்ட பாடல்தான் எனினும் இசையின் ஆளுமையிலும்,பாடகரின் கத்தலிலும் முத்துக்குமாரின் முத்திரை வரிகள் கவனத்தில் நிற்கவில்லை.

கதைகள் பேசும் விழியருகில்’-பென்னி தயாள், ஹம்ஷிகா----பின்னணி இசை சற்று வேகமாக இருந்தாலும், மெலோடியான பாடலிது.வரிகளும் இதம்.

உன் பேரைச் சொல்லும் போதே’-சுரேஷ் அய்யர், ஷ்ரேயா கோஷல்---- ஜி.வி.பிரகாஷ் பின்னியெடுத்திருக்கும் பாடல் இது.’அவள் அப்படி ஒன்றும்’ பாடல் ஒரு உச்சமெனில், இது இன்னொரு உச்சம்.ஆரம்ப இசையிலேயே உள்ளிழுத்து விடுகிறது.பாடகர்கள் உணர்ந்து பாடியுள்ளார்கள்.பல்லவியிலிருந்து சரணத்திற்கான இசையின் பயணமும் இயல்பாக, இனிமையாக இருக்கிறது.முத்துக்குமாரின் பங்கு கனகச்சிதம்.மெட்டுக்கேற்ற வரிகள் மொட்டுக்கள் போல் மலர்கின்றன.

‘அங்காடித் தெரு’-இசையில் நனையலாம்...


நன்றி: படங்கள் கொடுத்த தளங்கள்


Thursday, May 14, 2009

பயபக்தி

ஆடு வெட்டி
இரத்தம் பிடித்து
அபிஷேகித்த அய்யனார்,
அரிவாள் தெய்வங்களை
வணங்கச் சொன்ன
என்னைப் பயத்துடன்
ஏறிட்டாள்
செல்ல மகள்...

Friday, May 8, 2009

சுயமிழந்த சொற்கள்

முன் பின்னாய் முறை மாற்றி
மேல் கீழாய் வளைத்திழுத்து
கை திருகி,காலொடித்து
முடிவிலி சதுரத்தில்
திணிக்கப்பட்ட
சுயமிழந்த சொற்களின்
மௌன அலறலில்
புரிய ஆரம்பிக்கலாம்
கவிதையொன்று...

Tuesday, May 5, 2009

சேரனின் ‘பொக்கிஷம்’- இசை

               ‘மாயக்கண்ணாடி’யில் முகம் தொலைத்த சேரனின் அடுத்த படம் ‘பொக்கிஷம்’. படத்தின் கதையைப் பற்றிக் கேள்விப்பட்ட வகையில் இது இன்னொரு ‘ஞாபகக் கையெழுத்து’ போல் தோன்றுகிறது.(ஆட்டோகிராஃப்). 70-80 காலகட்டங்களில் இருந்த காதலையும், கடிதத்தூதையும் சொல்ல வருகிறார்.
           இசையமைத்திருப்பவர்கள் சபேஷ்-முரளி. இவர்கள் ஏற்கனவே சேரனுடன் இணைந்து கொடுத்த படம் ‘தவமாய்த் தவமிருந்து’.
                 சேரனுக்கு இயக்குனர் என்ற முறையில் இசையமைப்பாளரின் வண்ணத்தை, அவர் விருப்பத்திற்கேற்றார்போல மாற்றிக்கொள்ளும் திறம் உண்டு என்பதை தனது முந்தைய படங்களில் நிரூபித்திருக்கிறார்(இளையராஜாவைத் தவிர).எந்த இசையமைப்பாளரையும் அவர்களின் இயல்பு மறக்க வைத்து, கதைக்கேற்றார்போல பாடல்கள் வாங்கிவிடுவார்.(தேவா,பரத்வாஜ்,சபேஷ்-முரளி)
                     அந்த வகையில் ‘பொக்கிஷம்’ பாடல்கள் ஒரு இசைப் பொக்கிஷமே. இது வரை வந்த சேரன் படத்துப் பாடல்களில் ‘பொக்கிஷம்’ உச்சமெனலாம். வழக்கம்போல் ஒரு நாயக அறிமுகப் பாடல்,ஒரு டூயட், ஒரு குத்துப்பாடல் என்ற பழைய பல்லவியைப் பாடாமல், கதையின் போக்கில் உரசிச் செல்லும் அல்லது கதையை நகர்த்திச் செல்லும் விதமாக பாடல்களை உபயோகிக்க எண்ணி உருவாக்கியிருக்கிறார் எனலாம்.
                 மொத்தம் பதினோரு பாடல்கள். இரண்டு பாடல்கள் மட்டும்தான் தமிழ்த் திரைஇசை இலக்கணப்படி நான்கு (அ) ஐந்து நிமிடங்களைக் கடக்கும் முழுப்பாடல்களெனலாம். அவையுங்கூட வழக்கமான ஒரு பல்லவி, இரு சரணம் என அமையாது, கவிதைக்கு இசை அமைத்ததுபோல் தெரிகிறது.
எல்லாப் பாடல்களுமே யுகபாரதியின் பேனா பிரசவித்தவைதான்.
                ’hi da' 'hi di','pujju' போன்ற SMS வார்த்தைகள் இல்லாத நாளில் காதலர்கள் எப்படி மடலை ஆரம்பித்திருப்பார்கள் என நடத்தப் பட்ட சிறு கவிதைப் பட்டிமன்றம்தான் ‘நிலா நீ வானம் காற்று’எனத் தொடங்கும் இப்பாடல். -சின்மயி,விஜய் ஏசுதாஸின் குரலில் மனதை வலம் வருகிறது.பாடலில் ‘அன்புள்ள படவா’வில் சின்மயியின் சிணுங்கல் ‘சிலீர்’.இப்பாடலுக்கான பின்னிசை இதமான தென்றல்.
          ’அழகு முகம்’,’கனவு சிலசமயம்’,’சிறு புன்னகை’,’உலகம் நினைவிலில்லை’. இப்பாடல்கள் அனைத்தும் ஒரே மெட்டிலமைந்த குறும்பாக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலுக்கேற்ப இருக்கிறது.முதல் மூன்று பாடல்களைத் தனியாகவும்,இறுதிப்பாடலை மஹதி(அழகுக்கிளி..:-p)யுடனும் பாடியிருப்பவர் பிரசன்னா(’அதிரடி சிங்கர்’ முசுடு நடுவர்). பயணம், சோகம், முதல் காதல் பார்வை,காதல் என ஒவ்வொரு உணர்வுக்கேற்ப இசையும், வரிகளும், பிரசன்னாவின் குரல் பங்களிப்புமென நான்குமே நல்லிசைப் பாடல்கள்.
                 கார்த்திக்கின் குரலில் ‘அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே’ உற்சாக ஊற்று.ரஞ்சனியின் ‘வரும் வழியெங்கும்’, மதுபாலகிருஷ்ணனின் ‘மொழி இல்லாமலே’ இரண்டும் சோ(சு)க கானங்கள்.(பின்ன எப்படிங்க சேரன் முதுகு காட்டி அழமுடியும்...?!)
                மெல்லிய சாக்ஸஃபோன் கசியலில் ஆரம்பிக்கும் ‘மூன்று நாள் ஆகுமே’ கார்த்திக்கின் குரலில் காத்திருப்பையும், காதலையும் (இரண்டும் ஒன்றுதானே..?!) கனிந்து சொல்கிறது.
‘ஓஹ்..ஓஹ்..’ விஜய்யேசுதாஸ் பாடியது.
                ‘ஆஜ்மொனே போலேச்சே’ என வேற்று மொழியில் ஆரம்பிக்கும் பாடல்(உஜ்ஜயினி, விஜய் ஏசுதாஸ்) போகப்போக மெலடியில் கரைந்து பின் மீண்டும் ஆரவாரத்தோடு நிறைவுறுகிறது.
பலம்: ஒரு பாடல் தவிர மற்றெல்லாப் பாடல்களிலும் தமிழும், காது கிழிக்காத இசையும் மட்டுமே உள்ளது.(இதையே ஒரு தமிழ்த் திரைப்பட ஆல்பத்தின் பலவீனமாகக் கருதுவோரும் உண்டு)
சமீபத்திய ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களுமே ரசிக்க வைத்தது ‘பொக்கிஷம்’ மட்டுமே.
’சேரன் - சபேஷ்-முரளி - யுகபாரதி’- நிச்சய வெற்றிக் கூட்டணி.

‘பொக்கிஷம்’- (இசைக்)காதலர்களைக் கொள்ளையடிக்கும்.
நன்றி: புகைப்பட உதவி india glitz  மற்றும் இதர தளங்கள்