Tuesday, May 26, 2009

அங்காடித் தெரு-இசை விமர்சனம்

       ‘வெயிலின்’ மூலம் நிழலுக்கு வந்த இயக்குனர் வசந்தபாலனின் அடுத்தபடம் ‘அங்காடித்தெரு.இவரின் முதல் படம் (ஆல்பம்), கவிதாலயாவின் காசைக் கரைத்தாலும், இசையில் இதயம் தொட்டது.’செல்லமாய்ச் செல்லம்’,’காதல் வானொலி’,’முட்டைக்குள்ளிருக்கும் போது’ பாடல்கள் இன்னும் என்னோட விளையாட்டுப் பட்டியல்ல (playlist) இருக்கு.கார்த்திக்ராஜாவின் ராசி இவரிடமும் ஒட்டிக்கொண்டது போலும்.படம் ஓடவில்லை.


         அடுத்த படம்‘வெயில்’. இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசையில் ராஜா, பாடல்களில் ஒரு ரகுமான் எனப் புகழப் பட வைக்குமளவுக்கு பாடல்கள் ஹிட் ஆனது.’உருகுதே மருகுதே’வில் உள்ளம் கவர்ந்த பிரகாஷ், அடுத்தடுத்த படங்களில் காணவில்லை.’ஒரு பட வித்தகர்’ தானோ என எண்ணிய வேளையில் மீண்டும் வந்து, ‘நான் அவனில்லை’ என ஓரளவு நிரூபித்திருக்கிறார்.


       ’அங்காடித்தெரு’ படத்தில் மீண்டும் ஜி.வியுடன் ஒரு கை கோர்த்திருக்கிறார் வசந்த பாலன். அப்போ இன்னொரு கை, அதை விஜய் ஆண்டனியுடன் கோர்த்திருக்கிறார்.ஆம்.விஜய்ஆண்டனிக்கு 2 பாட்டு, ஜீ.வி.பிரகாஷூக்கு 4 பாட்டு.

        விஜய் ஆண்டனியின் ‘’அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாடல் அப்படி ஒன்றும் மோசமில்லை என்று சொல்லுமளவுக்கு இல்லாமல் மிக நன்றாகவே இருக்கிறது.நா.முத்துக்குமாரின் அனுபவ வரிகளில் மிளிர்கிறது பாடல். பாடலைக் கேட்டபின், அனைவரும் உணர்வர் , அவர்களின் அனுபவமும் அதில் கலந்திருப்பதை.
     நாம் ‘காதல்’ எனும் வார்த்தைக்குப் பொருள் தேடும் முன்பே அதில் கால் வைத்து விடக்கூடிய பதின் வயதுகளாகட்டும், பொருள் தெரிந்தபின்னர் வைத்த காலை எடுக்கும் போதிலாகட்டும், அனைவருக்குமே ஐஸ்வர்யா ராயோ,கேத் வின்ஸலட்டோ கிடைத்திருப்பதில்லை. அவரவர் இடத்திற்கு, வசதிக்கு, படிப்பிற்கேற்ற ஒரு பெண்ணை(சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட) பெண்களிடம் காதல் வயப் பட்டிருப்போம்.அது பக்கத்து வீட்டு பரிமளாவாகவோ,அத்தை மகள் மல்லிகாவாகவோ,திருவிழாவின் போது மட்டும் வந்து போகும் சிவப்புச் சுடிதார்க் காரியாகவோ இருக்கலாம்.இன்னும்,இன்னும் நம்மோடு புவியியல் ரீதியாக நெருக்கமாயிருப்பவர்களிடம் அதிகக் காதலைச் சிந்தியிருக்கக்கூடும். அப்படிப்பட்ட மனநிலையை, பின்நவீனத்துவம் எதுவும் கலக்காமல் எளிய தமிழில் சொல்லியிருக்கிறார்.(அவள் அப்படி ஒன்றும் கலரில்லை) வரியைத் தவிர..கார்த்திக்கின் குரலில் காலர் ட்யூனுக்கேயுரிய தகுதியில் இருக்கிறது பாடல்.


எங்கே போவேனோ’-பென்னி தயாள்,எம்.கே.பாலாஜி---இதற்கும் இசை விஜய் ஆண்டனி.இந்த பென்னிதயாள் தான் ‘கண்கள் இரண்டால்’ பாடியவர் என நினைக்கிறேன். காதலின் வலியை சற்று அரபு இசையில் உணரத் தந்திருக்கிறார்.கேட்கலாம். உணரலாம்.

கருங்காலி நாயே’-கார்த்திக்,’நெல்லை பாய்ஸ்’,மகேஷ்----வட்டாரவழக்குப் பாடலில் ராப்போ, ராக்கொ எதையோ கலந்து கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.பழைய சோற்றில் தக்காளி சாஸ் ஊற்றியது போலிருக்கிறது. படக்காட்சிகளில் பார்க்கப் பிடித்துப் போகலாம்.


கண்ணில் தெரியும் வானம்’-ஜி.வி.பிரகாஷ் குமார்----மாமாவின் ‘என்றென்றும் புன்னகையில்’ கொஞ்சம் எடுத்து விட்டிருக்கிறார். சற்று உணர்வுப் பூர்வமான கருத்துக்கள் கொண்ட பாடல்தான் எனினும் இசையின் ஆளுமையிலும்,பாடகரின் கத்தலிலும் முத்துக்குமாரின் முத்திரை வரிகள் கவனத்தில் நிற்கவில்லை.

கதைகள் பேசும் விழியருகில்’-பென்னி தயாள், ஹம்ஷிகா----பின்னணி இசை சற்று வேகமாக இருந்தாலும், மெலோடியான பாடலிது.வரிகளும் இதம்.

உன் பேரைச் சொல்லும் போதே’-சுரேஷ் அய்யர், ஷ்ரேயா கோஷல்---- ஜி.வி.பிரகாஷ் பின்னியெடுத்திருக்கும் பாடல் இது.’அவள் அப்படி ஒன்றும்’ பாடல் ஒரு உச்சமெனில், இது இன்னொரு உச்சம்.ஆரம்ப இசையிலேயே உள்ளிழுத்து விடுகிறது.பாடகர்கள் உணர்ந்து பாடியுள்ளார்கள்.பல்லவியிலிருந்து சரணத்திற்கான இசையின் பயணமும் இயல்பாக, இனிமையாக இருக்கிறது.முத்துக்குமாரின் பங்கு கனகச்சிதம்.மெட்டுக்கேற்ற வரிகள் மொட்டுக்கள் போல் மலர்கின்றன.

‘அங்காடித் தெரு’-இசையில் நனையலாம்...


நன்றி: படங்கள் கொடுத்த தளங்கள்


19 comments:

  1. இன்னும் கேட்கல சகா.. இந்த ரூமில எதுவும் செய்ய முடியல... நல்லா எழுதி இருக்கிங்க

    ReplyDelete
  2. நான் கடைசியாக CD வாங்கி கேட்டப் பாட்டு அழ்கி.அதற்குப் பிறகு திருவாசகம்.

    அதற்கு பிறகு வந்த ராஜாவின் CDயையே வாங்கவில்லை.

    காரணம்.திகட்டல்?காலம்?இண்டெர்நெட்?ப்ழைய பாட்டு?

    ராஜாவின் அஜந்தா கூட
    நெட்டில்தான் கேட்டேன்.

    அடுத்து ராஜாவைத் தவிர்த்து யாரைக் கேட்டாலும் மனசு ஒட்டவில்லை.

    ஆனால் FMஇல் சகல பாட்டும் ஒடும்.
    இப்போது இருக்கும் ட்ரெண்டுக்காக கேட்பது. அடுத்து updationக்காக.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  3. @கார்க்கி...
    வாங்க சகா... நன்றி
    //இந்த ரூமில எதுவும் செய்ய முடியல//
    இதெல்லாம் கல்யாணமாயிட்டா சரியா..இல்ல இல்ல பழகிப் போயிடும்.


    @ரவிஷங்கர்
    //திகட்டல்?காலம்?இண்டெர்நெட்?ப்ழைய பாட்டு?
    //
    எல்லாக் காரணமும் சரியாப் பொருந்துது சார்.
    //ராஜாவின் அஜந்தா கூட
    நெட்டில்தான் கேட்டேன்.//
    எனக்கு ‘அஜந்தா’ பாடல்கள் பிடிக்க வில்லை.
    //அடுத்து ராஜாவைத் தவிர்த்து யாரைக் கேட்டாலும் மனசு ஒட்டவில்லை.//
    எனக்கும்தான் . இருந்தும் காதுக்குள்ளாவது நுழைகிறதா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்+நீங்கள் சொன்ன மாதிரி updationக்காக இருக்கலாம்.
    சமீபத்தில் ராஜாவின் ‘அழகர்மலை’,’வால்மீகி’ கேட்டுப் பாருங்கள் முடிந்தால்.
    வாழ்த்துக்கு நன்றி சார்...

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க..

    கண்டிப்பா கேக்குறேன்..,

    ReplyDelete
  5. முதல் வருகைக்கு நன்றி கடைக்குட்டி... கேட்டுட்டுச் சொல்லுங்க...

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம்.... திரைப்பாடல்களை நன்கு அழகாக விவரித்து விமர்சிக்கிறீர்கள்.. எனக்கு பாடல் கேட்குமளவுக்கு நேரமில்லைங்க!!!

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ஆதவா...
    சிஸ்டத்துல வேலை பார்க்கிறப்போ,ஒரு ஓரத்துல ப்ளேயருக்கும் இடம் ஒதுக்கிட்டாப் போச்சு...
    நான் பாடல் கேட்கிறேன்...
    நீங்க பாடல் எழுதுறீங்க...

    ReplyDelete
  8. பாடல்கள் நல்லாவே இருக்குண்ணா!

    ReplyDelete
  9. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை//

    அது அருமையான பாட்டு

    ReplyDelete
  10. வாங்க கானா பிரபா...பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  11. //அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

    பாடல் ரொம்ப நல்லா இருந்தது....
    உங்க பதிவும் தான்.. :)

    ReplyDelete
  12. நன்றி கயல்.. பாடலை ரசித்துக் கருத்துப் பகிர்ந்தமைகும், பதிவுக்கு வாழ்த்தியதற்கும்...
    (என்னங்க பேரை மாத்திட்டீங்க.. யுனிக்கா இருந்தது )

    ReplyDelete
  13. பழைய பெயருடன் வந்துவிட்டேன்..

    ReplyDelete
  14. அட அதுக்குள்ள இத்தனை பதிவா? சாரி ரொம்ப பிஸியா இருந்திட்டேன். சாரி வழக்கம் போல இந்த படத்தின் பாடல்களும் கேட்கல.... நல்ல பதிவு.

    ReplyDelete
  15. வாங்க தர்ஷினி நன்றி... கடந்த பத்து நாளா நானும் பிஸிதான்.நேரம் கிடைக்கிறப்போ வந்தாப் போதும்...
    என்ன பதிவுகளையே காணோம்..?

    ReplyDelete
  16. நிறைய இருக்கு. பதிவா போடறதுக்குதான் நேரம் இல்லை.இந்த மாதிரியெல்லாம் யாராவது எதிர் பார்க்கராங்களா என்ன?! நன்றி தமிழ்பறவை விசாரித்ததற்கு...

    ReplyDelete
  17. நல்ல பாடல்கள் இவையனைத்தும். மீண்டும் மீண்டும் கேட்கச் செய்கிறது. ஸ்ரேயா கோஷல் ஆங்கிலத்தில் எழுதிப் பாடினாலும் உச்சரிப்பு சறுக்காமல் அருமையாகப் பாடுகிறார்.

    //இந்த பென்னிதயாள் தான் ‘கண்கள் இரண்டால்’ பாடியவர் என நினைக்கிறேன்.//

    இல்லை. 'கண்கள் இரண்டால்' பாடியது பெல்லி ராஜ். இவர் வேறு பாடகர். நல்ல குரல்வளம். மென்மை கலந்து உருகுகிறது.

    ReplyDelete
  18. //பாடலைக் கேட்டபின், அனைவரும் உணர்வர் , அவர்களின் அனுபவமும் அதில் கலந்திருப்பதை// 100% உண்மை தான்.

    விஜய் ஆண்டனியின் மிகச்சிறந்த பாடலாக இதைக் கருதிகிறேன். முத்துக்குமாரின் வரிகள் - கவிதை. தற்போதுள்ள கவிஞர்களில், என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த கவிஞர் முதுக்குமார்.

    ReplyDelete