Friday, April 9, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...1

        இயந்திரத் தனமான வாழ்க்கையில் எப்போதும் சிறுசிறு இளைப்பாறுதல்கள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றது. அதனைக் கவனிப்பவர்கள் ரசிக்கிறார்கள். பயணங்களைத் தூங்கிக் கழிப்பவர்களும் உண்டு. எக்கனாமிக் டைம்ஸில் குறையும் பங்கு மதிப்பிற்காகத் தொலைப்பவர்களும் உண்டு.சில்லறையின் ஞாபகத்தில் சிதறவிடாத மனங்களும்,சிறு குழந்தையின் சிரிப்பில் சிதறிய கணங்களும் கொண்டவர்களும் உண்டு,எதிர்த் திசையில் பயணிக்கும் மர நிழல்களில் தேங்குபவர்களும் உண்டு.கம்பியில் சாய்ந்து அல்ஜீப்ராவை மனனம் செய்யும் சிறு பெண்ணின் பச்சை ரிப்பனில் பால்யத்தைக் கண்டடைந்தவர்களும் உண்டு.


   ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பாடலை இயற்கை முணுமுணுத்துக் கொண்டுதானிருக்கிறது.அம்மாவின் தாலாட்டாகவோ, தமிழய்யா விளக்கிய ‘கொங்குதேர் வாழ்க்கை’யாகவோ,அப்பா மிதிக்கும் சைக்கிளோசையாகவோ,தட்டச்சு பயிலச் செல்கையில் வீட்டைக் கடக்கும் ஜெயமீனாவின் கொலுசொலி சேர்ந்த செருப்போசையாகவோ அவரவர் அனுபவங்களுக்கேற்ப காதில் ஒலிக்கலாம்.அப்படிக் கடந்த தருணங்களின் சுவை, இப்போது எட்டாத் தேனாய் கனவில் மட்டுமே ருசிக்க முடியும்.

    அப்படியொரு தேனின் சுவை மிச்சங்களை மீட்டெடுக்கும் ஒரு பாடல்தான் இது. ராஜாவின் விரல்வழிக் கசிந்த துளிகள் இசை வெள்ளமாய் மூழ்கடிக்கின்றது.பாண்ட்ஸ் பவுடரை அப்பிய பருவ ம்ங்கையாய் பனிப்புகையினூடே முகம் காட்டும் மலைப்பாதையும், அபாயம் காட்டினும் ஆச்சரியம் கூட்டும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆளிருக்கும் சமயத்தில் கூட யாவருமறியா வண்ணம் சீண்டிப் போகும் புது மனைவியின் கொஞ்சலை மிஞ்சும் சிறு தூறல் துளிகளும், நம் காலசைவில் வேகம் கூட்டும் வாகனமும் இன்னும் மொழிக்குள்ளும், விழிக்குள்ளும் அடங்காத காட்டு வாசனையும் கூடவே இந்தப் பாடலும்....