Tuesday, December 1, 2009

என் முதல் காதலி...

      வளைப் பற்றிச் சொல்லணும்னா செமை கட்டைன்னு சொல்லலாம்.கொஞ்சம் பருமன்னு கூட நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு அப்படித் தோணலை.நல்லாப் பாடுவா. நல்ல குரல் வளம். ஆம்பிளைக் குரல்ல கூட பாடுவான்னா கேட்டுக்குங்களேன்.நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே அவளுக்காக உருக ஆரம்பிச்சிட்டேன். ஆனா தொட்டா மட்டும் ‘ஷாக்’ தான்.பின்ன என்னங்க... வாங்கி 25 வருஷத்துக்கு மேலாச்சுனா, ஷாக் அடிக்காம இருக்குமா ‘வால்வு டைப் ரேடியோ’??!!


          என்னதான் சிஸ்டத்துலயும், ’ஐ பாடு ’ லயும் ஆயிரத்துச் சொச்சம் பாட்டுக்களை நுணுக்கி நுணுக்கிச் சேர்த்து வச்சு, நினைக்கிற நேரத்துல பாட்டு கேட்டாலும் வானொலியின் சுகம் வருவதில்லை. இப்போ இருக்கிற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இடையில தேடியெடுத்துப் பாட்டு கேட்க முடியாத நம்ம இயலாமை கூட ஒரு காரணமா இருக்கலாம். சரி பண்பலையாச்சும் கேட்கலாம்னா, நம்ம காதுக்குள்ளயே கடை போடுற விளம்பரங்கள், தொகுப்பாளினி(ளர்) யோட முக்கல், முனகல்கள், இதையெல்லாம் தாண்டிப் போய்க் கேட்டாலும் காதுக்குள்ள ஈயத்தைக் காய்ச்சி ஊத்துற மாதிரியான பாட்டுக்கள்தான் கேட்க முடியுது.

               அதனால திடீர்ன்னு ஒரு கொசுவர்த்தியைச் சுத்திப் போட்டுடலாம்ன்னு தோணுச்சு.இத நீங்களும் கொஞ்சம் அனுபவப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். முதல்ல வானொலியில பாட்டுக்கள் கேட்குறதை விட நாடகங்கள் கேட்பேன். இரவு 7 மணிக்கு மேல் இலங்கை வானொலி கேட்காது.அதன்பின் மதுரை வானொலியில் இரவில் போடும் நாடகங்களுக்காகத் தவமிருப்பேன்.


           துரை(உட்பட எல்லாத் தமிழக வானொலிகளிலும்) வானொலியில் ஒவ்வொரு வருடமும், ஒரு வாரத்திற்கு இரவு 9.30 முதல் 10.30 வரை அகில இந்திய நாடக விழா ஒலிபரப்புவார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு வானொலி நிலையத்தின் நாடகம் ஒலிபரப்பாகும்.தூங்கி வழியும் கண்களோடு காத்திருப்பேன்.ஒவ்வொரு செவ்வாய் இரவும் 'மனோரஞ்சிதம்' எனும் தலைப்பில் பழைய பாடல்கள் போடுவார்கள்.9.30 முதல் 10.30 வரை. கண்ணதாசன், எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் பெரும்பாலும்.

     அப்புறம் நாடகக்குரல்களில் என்னால் இன்றும் மறக்க முடியாத குரல்,இப்போது கூட என் காதுகளைச் சுற்றுவது போல் ஒரு பிரமை...அப்படிஓர் கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் மறைந்த நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்கள்.பெரும்பாலும் சரித்திர நாடகங்கள்தான்.கெட்டியான எருமை மாட்டுப்பாலில் குடித்த ஸ்ட்ராங்கான காஃபி போல் சுவையான குரல் அவர் குரல்.நீங்கள் 'யார்?' படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலில் வந்து இறந்துவிடும் முனிவர் வேடத்தில் நடித்தவர் அவர்தான்.


           ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி சமீபத்தில் கேட்க ஆரம்பிக்கும் குறள்,’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ அதன் பின் தொடர்ச்சியாக ‘மண்ணும்,மணியும்’ ஒலிபரப்பாகி,பயிர், உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும். பின் செய்திகள்.திருச்சி வானொலி அவ்வப்போது 7.10க்கும் 7.15க்கும் இடையில் பாடல் கூட ஒலிபரப்பும். ஆனால் மதுரை வானொலி அப்படியே தூர்தர்சன் மாதிரிதான்.

           இலங்கை வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அத்துப்படி. அப்துல் ஹமீதுவின் ‘பாட்டுக்குப் பாட்டு’ ஃபேவரைட்.புதுப்புதுப் பாடல்கள் கேட்கலாம். பண்டிகை சமயங்களில்தான் காதை அடைக்கும் ஜவுளிக்கடை விளம்பரங்கள் வரும்.

           நான் முன்பே சொன்னதுபோல எங்கள் வீட்டு வானொலி தொட்டா அவ்வப்போது ‘எர்த்’ அடிக்கும். ரெடியா ஒரு டெஸ்டர் வச்சிருப்பேன். அதவச்சுத் தொட்டுத்தான் வானொலியின் பதம் பார்த்துக் கை வைப்பேன்.அதோட மட்டுமில்லாம சோதனை ஆராய்ச்சியெல்லாம் பண்ணிப் புதுப்புது ரேடியோ ஸ்டேசன்லாம் கண்டுபிடிப்பேன்.அதில் வெளிநாட்டு வானொலி(சிங்கப்பூர் ஒலி95.4(....?),பிபி.சி,சீனவானொலி) ஒலிபரப்புகளைக் (கரகரப்புடன்) கேட்பதில் இருந்த சுகம், இப்போது ஒரு தொடலில் துல்லிய ஒலிபரப்பு கேட்பதில் இருப்பதில்லை.இவற்றைக் கேட்பதற்காக வானொலியின் குமிழிகளை நோண்டி,நொங்கெடுத்தது(தாத்தாவிற்குப் பயந்து கொண்டே)இன்று நினைவுக்கு வருகிறது.

          னது சிறுவயது கனவு டேப் ரெக்கார்டர் வாங்குவது. கல்லூரிக்காலம் முடியும் வரை இயலவில்லை. வேலைக்கு வந்தபின்தான் நிறைவேறியது.ஆனால் அதற்காக அலைந்த பருவங்களின் தொலைந்த கன்வுகளைத்தான் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.தற்போதைக்கு நினைவுகள் மட்டுமே மிச்சமாய்...

விளம்பரம்:  சர்வேசன் ‘நச்’ கதைப் போட்டிக்கான சர்வே இங்கு நடக்கிறது.சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுச் செல்லவும். 20 கதைகளையும் படித்துப் பார்த்து பிடித்த கதைகளுக்கு வாக்களிக்கவும். எனது கதையும் அதில் ஒன்று என நான் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

11 comments:

  1. சகா பதிவு போட்டிருக்காரு ஆசையா வந்தேன். அதுவும் தலப்பு காதலியை பத்தி. அதுவும் முதல் காதலி.. துள்ளி வந்தா.... ஆவ்வ்வ்வ்..

    ஆனா படிச்ச முடிச்ச பிறகு ஒரே ஃபீலிங்..

    என் முதல் செட். பிலிப்ஸ் டூ இன் ஒன்.1993ன்னு நினைகிறேன். அப்புறம் 1997ல சோனி சிடி பிளேயர் மலேசியாவிலிருந்து வந்துச்சு. 2001ல பயனியர் ஹோம் தியேட்டர். 2003ல கிரியேட்டிவ் எம்பி3. 2005ல எல்.ஜி ஹோம் தியேட்டர். 2009ல போஸ் ஹோம் தியேட்டர்..

    ReplyDelete
  2. நானும் ரேடியோ டிராமா கேட்டிருக்கேன்.
    ஆனா ரொமப முன்னாடி.”துபாஷ் வீடு”
    “ஜனதா நகர் காலனி’.
    பிறகு ரேடியோ அண்ணாவின் குழந்தைக் கதைகள்.ரேடியோவில நேயர் விருப்பம் நிகழ்ச்சில விரும்பிக்
    கேட்டவர்கள் பெயர்களே மூணு அல்லது நாலு நிமிடம் ஓடும்.

    “அழகிய தமிழ் மகள் இவள்”
    (ரிக்‌ஷாக்காரன்)”பொன் மகள் வந்தாள்”(சொர்க்கம்)இந்தப்பாட்டு வருவதற்கு முன்அப்பாடி..!விரும்பிக்
    கேட்டுக்கொண்டே......... இருப்பார்கள்.

    ReplyDelete
  3. ஆவ்வ்.. நான் ரேடியோ அதிகம் கேட்ட நினைவில்லை. ஆனால் டேப் (அப்படினுதான் நாங்க சொல்லுவோம்) இருந்துச்சு. மாமாகிட்ட இருந்த கேசட்ஸ் ஆயிரத்தை தாண்டியிருக்கும். அத்தனை சோக பாடல்கள். அத்தனை இளையராஜா பாடல்கள். கதை வசனம் என்று முழு படத்தின் ஆடியோ கூட இருக்கும். அதையெல்லாம் இப்ப என்ன பண்ணினாருன்னு தெரியல. கேட்கணும். நன்றி. :)

    ReplyDelete
  4. @கார்க்கி...
    வாங்க சகா... இந்தத் தடவையும் காதலி வேணாம்னுதான் கூட்டிட்டு வரலை.இது எப்பவோ வசந்தகுமார் ப்ளாக்ல போட்ட கமெண்ட். அதைக் கொஞ்சம் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணிப் பதிவாக்கிட்டேன்...
    ரசனையா ப்ளேயர்ஸ் வச்சுக் கேட்குறீங்க போல...

    @அத்திரி...
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அத்திரி...

    @கே.ரவிஷங்கர்...
    //இந்தப்பாட்டு வருவதற்கு முன்அப்பாடி..!விரும்பிக்
    கேட்டுக்கொண்டே......... இருப்பார்கள்.//
    :-)
    நிறைய எழுத நினைச்சு, நீளம் கருதி வெட்டிட்டேன் சார்..
    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்...

    @கார்த்திக்...

    வாங்க கார்த்திக்.. நீங்க இன்னும் இளைய தலைமுறையல்லவா.. அதனால் கேட்டிருக்க மாட்டீர்கள
    .
    //கதை வசனம் என்று முழு படத்தின் ஆடியோ கூட இருக்கும். //
    சரியாச் சொன்னீங்க.. ஒரு மணி நேரத்துக்குள்ள முழுப்படத்தையும் சுவை மாறாமக் கொடுத்திருப்பாங்க. வானொலியில கூட ‘ஒலிச்சித்திரம்’ ந்ற பேர்ல வரும்.
    இந்த மாதிரி ஆடியோ கதை வசனங்கள்ல புக்ழ் பெற்றவை, ‘விதி’,’அமைதிப்படை’,சம்சாரம் அது மின்சாரம்’ நிறைய டிஆர் படங்கள்,தங்கப் பதக்கம்... இன்னும் நிறைய.. சினிமா விஷூவல் மீடியம் ஆனதுக்கப்புறம் இவைகளுக்கு வேலை இல்லை.

    வருகைக்கு, கருத்துக்கும் நன்றி கார்த்திக்...

    ReplyDelete
  5. அருமையாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்..
    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  6. // அவளைப் பற்றிச் சொல்லணும்னா செமை கட்டைன்னு சொல்லலாம். //

    அப்படியே ஷாக் ஆகிட்டேன்,

    ReplyDelete
  7. நான் விரும்பிக் கேட்டது சென்னை வானொலியின் காலைமலர், ஏதோ ஒரு நிலையத்தின் சிவகாமியின் சபதம் நாடகம்.

    அதிலும் அந்த நாகநந்தியின் பாம்புக்குரல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

    ReplyDelete
  8. // கார்க்கி கூறியது...
    சகா பதிவு போட்டிருக்காரு ஆசையா வந்தேன். அதுவும் தலப்பு காதலியை பத்தி. அதுவும் முதல் காதலி.. துள்ளி வந்தா.... ஆவ்வ்வ்வ்.. //


    நானும் தான் ஏமாந்துட்டேன் சகா!

    ReplyDelete
  9. அண்ணா நானும் சின்னப்பிள்ளையில இருந்து ரேடியோப் பைத்தியம்தான்.இலங்கை வனொலிக்கு பொய்யாகத் திகதியிட்டு என் பிறந்ததின வாழ்த்தைக் கேட்டுக்கொள்வேன்.இரவு வணக்கம் சொல்லும்வரை என் அறையில் ரேடியோ கிணுகிணுத்தபடியே இருக்கும்.இப்போகூட !

    ReplyDelete
  10. @அன்புடன் மலிக்கா...
    வாங்க மலிக்கா...முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி...

    @மகேஷ்...
    தம்பி,...திரும்ப வந்தாச்சா.. பகிர்வுக்கு நன்றி...

    @ஹேமா...
    வாங்க ஹேமா...வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி...
    //சின்னப்பிள்ளையில இருந்து ரேடியோப் பைத்தியம்தான்//
    இப்போ வேற பைத்தியம்... :-) :-)

    ReplyDelete