
த.மு.எ.ச. இன்னும் தமிழகத்தின் கிராம,சிறு நகர்ப்புறங்களில் 'கலை இரவு' நடத்தி வருகிறார்கள்.(தற்பொழுது நிலவரம் தெரியவில்லை). 'த.மு.எ.ச(தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) கலை இரவு' என்பது தற்போது துபாயிலும்,சிங்கையிலும்,சில சமயங்களில் தமிழக முதல்வர் முன்னிலையிலும் நடக்கும் அரைகுறை ஆடை அணிவகுப்பு அல்ல.இந்தக் கலைவிழாவை நடத்துபவர்கள் செங்கொடி தோழர்கள்.கம்யூனிஸ்ட்டுகளுக்கிடையே பல கொள்கை,பல குழப்பங்கள் நிலவி வந்தாலும் அவர்களின் கலை ஆர்வம் அலாதியானது.திராவிடக்கட்சிகள் தமிழுக்கு உயிர் ஊட்டினேன் என்று சொல்வது போன்ற போலி பாசாங்கெல்லாம் இங்கில்லை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து,விடியற்காலை நான்கு,ஐந்து மணி வரை நடக்கும் இவ்விழாவில் புகழ்பெற்ற பேச்சாளர் மட்டுமின்றி,சிறு,சிறு வளரும் கலைஞர்களும் பங்கெடுத்து பட்டையைக் கிளப்புவர். இதைவிட முக்கியமானது அங்கு அரங்கேறுவது முழுக்க,முழுக்க கிராமிய,தமிழ் மண் மணம் கமழும் கலைநிகழ்ச்சிகள்தான். மருந்துக்குக்கூட சினிமாப்பாடல் கிடையாது. ஆனாலும் விடிய,விடிய கூட்டம் கலையாமல் இருக்கும்.அவ்வப்போது அரசியல் நையாண்டிகளுக்கும் குறைவிருக்காது.
இதையெல்லாம் விட என்னைக் கவர்ந்தது அவர்களின் விளம்பரப் பதாகைகள்தான்.(தற்போது போல் ஓவியர்களின் வயிற்றிலடித்த டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அப்போது கிடையாது).சிறு,சிறு எளிய அருமையான கிராமியக் காட்சிகளை,கிராம மக்களை கண்முன் நிறுத்துவது போல் விளம்பர ஓவியங்கள் ஊரெங்கும் ஆக்கிரமித்திருக்கும்.சாலையில் செல்லும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் (ஷகீலா படங்கள் கூட அப்படித்தான் என நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல). அப்படிப் பார்த்த என் மனதில் பதிந்த ஒரு படம் உள்ளூர் நாளிதழில் வந்தது.பார்த்தவுடன் பரிதாபம் தூண்டும் ஒரு முதியவரின் தோற்றம்தான் அது.அப்பருவத்தில் கண்ணில் பட்டவையெல்லாம் கிறுக்குவது வழக்கம்.ஆனால் இது கருத்தையே கவர்ந்த படம்.விடுவேனா..?
முழுக்க,முழுக்க கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் வரைந்ததால் ஆங்காங்கே சில சில தீற்றல்கள் இருக்கும். வழக்கம் போல் குறைகள் அல்லது ஏதேனும் நிறைகள் தென்பட்டால் தெரியப்படுத்தவும்.
. நாளைமுதல் விடுமுறையில் தமிழகம் செல்லவிருப்பதால் இன்னும் பத்து,பதினைந்து நாள்களுக்கு பதிவோ, யாருக்கும் பின்னூட்டமோ போட்டு தொல்லை தரமாட்டேன் என்பதை மகிழ்வுடன், மனதிற்குள் சங்கடத்துடனும் அறிவித்துக்கொள்கிறேன்:-) :-) :-((((
டிஸ்கி: தலைப்பு ச்சும்மா லுலலாயி....