Monday, August 31, 2009

எங்கு தொடங்கி…எங்கு முடிக்க….பாகம்-1

       சுதந்திர தினம் சனிக்கிழமை வந்ததில் ஆனந்தமே.தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை என்பது, வாரத்திற்கு ஆறு நாளும் ஆணி பிடுங்குபவர்களுக்கு அல்வா கிண்டி வாயிலூட்டாத குறையாகும்.எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை குண்டுச்சட்டிக்குள் பிரியாணி பண்ணி,உண்டுறங்கிக் கழிப்பதை விட்டு, இம்முறை வெளியே செல்லலாமென இந்தோர் தமிழ்ச்சங்கம் முடிவெடுத்தது. தலைவர் என்னைக் கேட்காமலேயே தவேராவுக்கு முன்பணமும்,பச்மரி செல்ல பக்கா ப்ளானுமாக இருந்தனர் நண்பர்கள். எனது பங்கு என்பது வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிக்கு அறைச்சுதந்திரத்துக்கு முழுக்குப் போட்டு, இரு நாள்கள் வெளியுலகச்சிறைவாசம் செய்யக் கிளம்பவேண்டியது மட்டுமேயாகும்.

     பச்மரி என்பது ஊட்டி,கொடைக்கானல் போலொரு கோடை வாசஸ்தலம்.அது இந்தோரிலிருந்து 400 கி.மீ தொலைவில் போபாலைத் தாண்டி இருக்கிறது. வெளியில் அவ்வளவாகச் சுற்றுவதை விரும்பாத நான் இம்முறை ஏனோ முடிவெடுத்தேன். பின்புலச்சிக்கல்களிடமிருந்து ஒரு தற்காலிகத் தப்புதல்தான்.  ஏழு பேர் வருவதாகச் சொன்ன பிளான், புதனிரவே ஐவராகிப் பின் வியாழனிரவு நால்வராக வலுவிழந்து இருந்தது. ஆட்கள் குறைந்தால், செலவுப் பணம் அதிகமாகிவிடும் என்ற ஏழாம் வகுப்பில் படித்த நேர்மாறு, எதிர்மாறு விகிதக் கணக்கு பயமுறுத்தினாலும், தாராளமான இடவசதியோடு பயணிக்கலாமெனத் தேற்றிக் கொண்டோம் மனதை. ஆனால் கடைசி நேரத்தில், மற்ற மூவர் திடீர்ப் பிரசன்னமாகி இடைஞ்சலையும், இதர செலவினங்களையும் பங்கிட்டுக் கொண்டனர்.

    ரு வழியாகப் பயணம் திட்டமிட்டபடி, வெள்ளி இரவு (14.08.09) ஒன்றரை மணிக்குத் தொடங்கியது. முன்னிருக்கையில் ஓட்டுநருடன் நான் நவீனக் கிளீனராக அவதாரமெடுத்தேன். இதர நண்பர்கள் கும்மாளத்துடன், ஸ்பீக்கரில் அலறிய ‘ஓ ஈசாவுடன்’ சேர்ந்திசை செய்து கொண்டிருந்தனர்.பத்துப் பதினைந்து நிமிடங்களில் இந்தோரைக் கடந்து, புறவழிச்சாலையில் புழுதியுடன் கலக்க ஆரம்பித்திருந்தது வாகனம்.ஆங்காங்கே ரோட்டாரத் தாபாக்கள், போலீஸ் சௌக்கிகள்,பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் சுதந்திர நாளை வண்ணச் சீரியல் பல்புகளின் கண்சிமிட்டலில் வரவேற்றுக் கொண்டிருந்தன.ரோட்டோரம் மட்டும் பார்த்துக் கொண்டிராமல், ஓட்டுநர் தூங்கிவிடாமலிருக்க அவ்வப்போது என் பார்வையை வலப்பக்கமும் செலுத்திக் கொண்டிருந்தேன்.   

    ஒரு மணி நேரத்திற்கொரு முறை, ஓட்டுநரின் கைகள் ஸ்டியரிங்கிலிந்து முழுதும் விலகி பான் பராக் பாக்கெட்டின் தலையைத் திருகி, போதைத் தூள்களை வாய்க்குள் செலுத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது கறுத்த தார்ச்சாலையில் தனது எச்சிலால் சிவப்புப் பெயிண்ட் அடிக்கத் தவறவில்லை ஓட்டுநர். அதிகாலை நெருங்க நெருங்க பின்னாடியிருந்த கொண்டாட்ட ஒலியின் சுதி குறைந்து, போகப்போக குறட்டையொலியின் சுதி கூடிக் கொண்டிருந்தது.போபால் செல்லும் வழி நெடுக ‘ஸாவ்தான்’ எனத் தொடங்கும் ‘டேக் டைவர்ஸன்’ களின் ஆதிக்கம்தான். ஒரு கட்டத்தில் மறுபடியும் இந்தோர் வந்துவிடுமோ எனப் பயப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டேன்.இரவின் கறுமையின் மேல் வெள்ளை பூசியபின் வரும் ஒருவித சாம்பல் நிறத்தில் தெரிந்தது வானம். செல்பேசியின் முகத்தினோரம் 05:30 என மின்னிக் கொண்டிருந்தது.போபாலை நெருங்கி விட்டிருந்தோம். டெல்லியிலிருந்து, சென்னை செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸின் வேகத்தைத் தடுக்க வேண்டாமென முடிவு செய்து வாகனத்தை நிறுத்தியிருந்தோம்.அதற்குமுன் ரெயில்வே கிராஸ்ஸிங்க் கேட்டும் அடைக்கப் பட்டிருந்தது.ரெயில் கடந்து செல்கையில் உள்ளே எழும்பிய தமிழ்க் குரல்கள் என் காதுகளை வந்தடையவில்லை.ஊருக்குச் செல்லும் வாகனத்தைக் கண்டதும், அதற்கு முன் என் நினைவுகள் ஊருக்குச் சென்றிருந்தன. பிடித்திழுத்து வைப்பதற்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.

Image0356(டீக்கடையின் பாய்லர் ‘டர்போ சார்ஜர்’ தத்துவமோ..?)

     ’ச்சாய்’ கடையில் ஆளுக்கொரு ச்சாய் வாங்கிக் கொண்டு, கண்ணாடி தம்ளரின் சூட்டில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்.எங்கு தேனீர் குடித்தாலும், தமிழகக் கிராமத்துத் தேனீரின் சுவையைக் காணமுடிவதில்லை.எல்லாமே பாக்கெட் பாலில் போட்ட ஒருவிதச் செயற்கைச் சுவையை மட்டுமே கொண்டிருக்கின்றன. என்ன செய்ய, சில சமயங்களில் வாய்க்கும் ஏதாவது தண்ணி காட்ட வேண்டியிருக்கிறதே…?!எங்கிருந்தோ வந்த ஒரு (ஆன்மீகச்)சுற்றுலாப் பேருந்திலிருந்து இறங்கிய ஒரு சிறுமி வாந்தியெடுக்க, சற்றுக் கூச்சத்தோடு அவளின் 25 வயது அம்மா அவளின் தலையைக் குனியவைத்து உதவிக் கொண்டிருந்தாள்.அப்பாவோ இதற்குமெனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பொட்டலத்திலிருந்து துகள்களைக் கைகளில் கொட்டி, பக்குவமாக ஊதிவிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தான்.இதற்குள் ரெயில்வே கேட் திறந்து கொள்ள, புகைவண்டிப்பாதையைத் ‘தடதட’வெனக் கடந்தது எங்கள் வாகனம்.

      போபாலைக் கடக்கையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது.சாலை ஓரங்களில் நல்ல பசுமையைக் காணமுடிந்தது. ஆட்களையும், வண்ணங்களையும் தவிர்த்துப் பார்க்கையில்.எல்லாக் கிராமங்களுமே ஒரே விதமாகத்தான் இருக்கின்றன. தென்கோயில்களுக்கும், இங்கும் வித்தியாசம் என்பது முழுக்க அடிக்கப் பட்ட காவி வண்ணமும், உச்சியில் பறக்கும் காவிக் கொடியும்தான்.காலைகள் அழுக்கு ஜிப்பா ஆசாமிகளாலும், விதவிதமான கைவேலைப் பாடுகள் கொண்ட சேலைகள் அணிந்த எப்போதும் ஒருவித சோகத்தைத் தேக்கி வைத்த முகங்களுடைய பெண்களாலும் நிரம்பத் தொடங்கிக்கொண்டிருந்தன. சாலையோரச் செம்மண் முந்திய நாளின் மழையளவைத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருந்தது. யூனிஃபார்ம் அணிந்த சிறுசிறு மலர்கள், தேசியக் கொடியுடன் சுதந்திரம் வாங்கியதற்கு அடையாளமாகப் பள்ளிகளில் மிட்டாய் வாங்கச் சென்று கொண்டிருந்தனர்.

DSC01804 DSC01805

  வழியில் செம்மண் நிறத்தில் ஓடிய நதி நர்மதாவின் தங்கையாக இருக்கலாமென்பது எங்கள் எண்ணம். ஓட்டுநரின் கருத்தறிய எண்ணினால், என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை.பருவ காலங்களில் செழிப்பாக இருக்க வேண்டியவள், இன்னும் மெலிந்துதான் காணப் படுகிறாள் அகல,ஆழங்களில்.மழையில் கழுவப் பட்ட நிலங்கள் மற்றும் மலைகள் அடர் நிறங்களில் கண்ணைப் பறித்தன.

-தொடரும்…

குறைகள் கூறுங்கள். திருத்திக் கொள்ள முயல்கிறேன்…

14 comments:

  1. தமிழ்ப்பறவை அண்ணா உங்களோடு நாங்களும் பயணம் போவதுபோல ஒரு பிரமை வருகிறது.அழகாகத் தொடங்கியிருக்கிறீர்கள்.இன்னும் சுவாரஸ்யமும் அழகும் அற்புதமும் பார்க்கபோகிறேன் என்கிற ஆவலோடு தொடரும் இடத்தில் காத்திருக்கிறேன்.

    //சில சமயங்களில் வாய்க்கும் ஏதாவது தண்ணி காட்ட வேண்டியிருக்கிறதே…?!//

    அண்ணா...ம்ம்ம்....!

    அது என்ன ச்சாய்ன்னா?தேநீரா?

    ReplyDelete
  2. யப்பா..தல....என்னாமா கூட்டிக்கிட்டு போறிங்க..சூப்பரு ;))

    \\என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை\

    அப்போ நீங்க தல அஜீத் மாதிரி செவப்பா இருப்பீங்களா தல ;))

    ReplyDelete
  3. பயணக்கட்டுரை விவரித்திருக்கும் விதம் அருமை

    ReplyDelete
  4. ஆரம்பிச்சாச்சா?
    நடத்துங்க நடத்துங்க!

    ReplyDelete
  5. ஓசில பார்த்துட்டோமே..

    ReplyDelete
  6. @ஹேமா...
    நன்றி சகோதரி...
    //அது என்ன ச்சாய்ன்னா?தேநீரா?//
    அதிலென்ன சந்தேகம். தேநீர்தான் ஆனால் இங்குக் கிடைப்பவைகளின் சுவை அதனைத் தேநீர் என்று சொல்ல வைப்பதில்லை. அதனால்தான் ‘ச்சாய்’ என்றேன்..அதற்குள் எத்தனை ம்ம்ம்ம்...!

    @கோபிநாத்...
    வாங்க தலை.. நன்றி..நீங்க என்னப் பாரட்டுறீங்களா இல்லை ஓட்டுறீங்களா..?!
    //அப்போ நீங்க தல அஜீத் மாதிரி செவப்பா இருப்பீங்களா தல ;))//
    நோ கமெண்ட்ஸ்...

    @சக்தி...
    பாராட்டுக்கு நன்றி சக்தி.. இது இரண்டாம் பாகத்தை அதிகக் கவனத்துடன் எழுதச் சொல்கிறது...

    @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    @கார்க்கி...
    நன்றி சகா.. ஓசிலாம் கிடையாது. என் அக்கவுண்ட் நம்பர மெயிலுக்கு அனுப்புறேன். கைடு சார்ஞ் கொடுத்துடுங்க...

    @மண்குதிரை...
    வாங்க கவிஞரே...பாராட்டுக்கு நன்றி...

    ReplyDelete
  7. நல்லா விறுவிறுன்னு இருக்கு.

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா வந்திருக்கு பரணி. கூடவே வரமாதிரி உணர்வு. நண்பர்கள் உடன் இருந்தாலும், தனிமையில் நீங்க இருப்பது போலவும் ஒரு உணர்வு.

    தொடருங்கள். எழுதும் நடையும் ரொம்ப நல்லா இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete
  9. >>நவீனக் கிளீனராக அவதாரமெடுத்தேன்
    ???

    >>அவளின் 25 வயது அம்மா
    அந்த அம்மா நெத்தில 25 ன்னு ஒட்டிஇருந்தத?

    >>என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை
    Cycle gap-la ஊன்னோட அழகா சொல்லிட்ட !! :)

    நல்ல flow... in some places it reminded me of Rajeshkumar style... தொடரட்டும்...

    ReplyDelete
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  11. தலைப்பு கவிதமாரி இருக்கு..But, looks heavy..ஆனா இந்த சின்ன பயணத்துக்கு பொருத்தமா??..

    ReplyDelete
  12. @ரவிஷங்கர்...
    நன்றி சார்...அழைப்பை மதித்து வந்து கருத்திட்டு ஊக்குவித்தமைக்கு...

    @அனுஜன்யா...
    நன்றி அனுஜன்யா சார்.எதிர்பாரா வரவு. தங்களின் ஊக்கம் மேலும் எழுதத் தூண்டுகிறது.

    @கோசி...
    நன்றி கோசி...நீ கலாய்க்கிறதப் பார்த்தா நீயும் கூடிய சீக்கிரம் ப்ளாக்கர் ஆயிடுவ போலிருக்கு...
    //நல்ல flow... in some places it reminded me of Rajeshkumar style... //
    நான் ராஜேஷ்குமார் அதிகம் படிச்சிருக்கேன்னாலும், எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் அவர். என்னையுமறியாமல் வந்திருக்கலாம்.இது ப்ளஸ்ஸா, மைனஸா..??!!
    //தலைப்பு கவிதமாரி இருக்கு..But, looks heavy..ஆனா இந்த சின்ன பயணத்துக்கு பொருத்தமா??..//
    இது பயணத்துக்கான தலைப்பா நான் வைக்கலை. பதிவு போடுறதுக்கு முன்னாடி என்னோட குழம்பிய மனநிலை இது. எப்படித் தொடங்குறது, எப்படி முடிக்கிறதுன்னு... அதையே தலைப்பாக்கிட்டேன்...

    ReplyDelete
  13. ஆரம்பமே அசத்தல் தான்.. படங்களும் அருமை..
    //
    \\என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை\

    அப்போ நீங்க தல அஜீத் மாதிரி செவப்பா இருப்பீங்களா தல ;))//
    அவ்வ்வ்வ்வ் :-)

    ReplyDelete