Friday, September 16, 2011

வெள்ளையடித்தல் ஞாபகங்கள்

     வுசர் பருவத்தில் தீபாவளியை விட ஆர்வமூட்டும் நாளொன்று உண்டு. அது வீட்டுக்கு வெள்ளையடிக்கும் தினம்.நீலமும், கல்சுண்ணாம்பும் கலந்த வாடை அப்படியொன்றும் உவப்பானதாயிருந்ததில்லை எனக்கு.ஆனாலும் எங்கெங்கோ மூலையில் பதுங்கிய பொருட்கள் அன்றுதான் தரிசனத்திற்கு வரும், திருவிழாவில் மட்டும் கண்டுபிடிக்கப்படும் தாவணிகள் போல.விஐபிக்கள் இல்லாத நாட்களில் மூலையில் சிவப்போ, பச்சையோ அடிக்கப்பட்டு இருக்கும் கண்கவர் ட்ரெங்குப் பெட்டிகளும், கட்டம்போட்ட சூட்கேசுகளும்தான் எனது இலக்கு.நானும் என் தம்பியும் துழாவுவதற்கு வாட்டமாக பெரிய ‘குளுக்கை’ போன்ற ட்ரம் ஒன்று இருக்கும்.எங்கள் தாத்தா வாங்கிய பழைய பொருட்கள்,சேமித்த புத்தகங்கள், வால்வ் டைப் ரேடியோவின் விளக்க மேனுவல்,பழைய லைட்டர்கள் இன்னும் பல ஐட்டங்கள் தேடுதலில் அகப்படும்.புதிய புத்தகவாசனை எவ்வளவு இதமோ, கிட்டத்தட்ட அதே போன்றதொரு அனுபவம் தருபவை கரையான் அரித்த பழைய புத்தகங்களும். தாத்தா தீவிர திமுக என்பதால், அவருக்கு வந்த வாழ்த்து அட்டை எல்லாவற்றிலும் இளைஞர் முதல் கிழவர் வரை கலைஞரே சிரித்துக் கொண்டிருப்பார்.தாத்தாவின் வெறி எங்களையும் தொற்றிவிட்டிருந்தது. கலைஞரின் புகைப்படம் பார்த்தாலே ஒரு தனி உற்சாகம் வந்துவிடும்(இப்போது தலைகீழ்). சிறுவயதில் நான் கிறுக்கிய சாக்பீஸ் உருவங்களில் அதிகம் வருபவர் கலைஞர்தான்.முரசொலியின் பொங்கல்மலர்கள் கிடைக்கும். எப்போதோ ஒருமுறை தாத்தா பெங்களூர் சென்றிருந்தபோது எடுத்த படம் கிடைத்தது.அவருக்குக் கொஞ்சம் முடிவளரும் என்றாலும், மொட்டையடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்.அதற்கு காட்டுராஜா கடைக்குத்தான் செல்வார்.அதற்கென பிரத்யேகமாக முடிபிடுங்கும் மெஷின் வைத்திருப்பார்.

   வ்வொரு வருஷமும் இந்தத் தேடல் தொடரும். நான் பதினொன்றாம் வகுப்புப் படிக்கையில், கிறிஸ்துமஸ் அன்று தாத்தா விரும்பி இறந்துவிட்டார்.முதல்நாள் இரவு ஏதோ ஒரு நினைவில் வீட்டு உத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்னடா! நாளைக்கு நான் கிழக்க போகப் போறேன்னு பார்க்கிறியா?’ என்றார். ‘இல்ல தாத்தா. சும்மாதான்’ எனக்கூறினேன்.(கிழக்கில்தான் எங்கள் ஊர்ச் சுடுகாடு இருந்தது). அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியில்லை. அவர் அடிக்கடி இப்படிக் கேட்பவர்தான்.படுத்திருப்பார்.தண்ணீர் கொண்டு வரச் சொல்வார். படுக்கையில் இருந்தவாறே, வாயில் ஊற்றச் சொல்வார். அதே போல் செய்தால், ‘ நாளைக்குப் பால் ஊத்துறதுக்கு இப்பவே ட்ரைனிங்கா?’ எனக்கேட்பார் சிரித்துக்கொண்டே. சிலசமயம் என்னையும், தம்பியையும் கூப்பிட்டு, என்னை தலைப்பக்கமும், அவனைக் கால்பக்கமும் அமரச் செய்வார்.’நாளைக்கும் இப்டித்தான் உட்காந்திருக்கணும். மலர் மாமனை பத்தி பிடிச்சிட்டு வரச் சொல்லு’. ‘போங்க தாத்தா’ என வெட்கத்துடனும், சிரிப்புடனும் ஓடிவிடுவோம்.



   60 வயதுக்கு மேலானாலும், உடல்வாகு நன்றாகவே இருந்தது. நோய் உடலில் இல்லை. மனத்தில்தான்.இரு வருடங்களுக்கு முன்பு அம்மாச்சி இறந்த சோகம் செங்கல் செங்கல்லாகக் அடுக்கப்பட்டு, இந்தக் கிறிஸ்துமஸ் காலை அவரை மூச்சடைக்கச் செய்துவிட்டது. எங்கு வாங்கி வைத்திருந்தார் அந்தக் கயிறை எனத் தெரியவில்லை.திட்டமிடுவதை என்றுமே அவர் விரும்பிவந்தார்.என் தம்பி எழுந்து பார்க்கவில்லை முதலில் பார்த்திருந்தால் கொஞ்சம் பயந்திருப்பான். முதல்நாள் இரவு ரெண்டுமணிக்கெல்லாம், ஏணியை எடுத்து அங்குமிங்குமாக வாட்டமான இடம் பார்த்துக் கொண்டிருந்தாராம்.அரைகுறைத் தூக்கத்தில் பார்த்ததாக தம்பி சொன்னான்.அதுபற்றி அவன் விசேடமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர் இதுமாதிரி ஏதேனும் பழைய பொருட்களை அவ்வப்போது பரணில் நோண்டிக்கொண்டிருப்பார்.காலையில் கதவை உடைத்துப்பார்க்கையில்தான் அனைவருக்கும் புரிந்தது.

   வரைக் கிழக்கில் எரித்துவிட்டு, வீட்டுக்கு வெள்ளையடித்தோம்.அப்போது என் கைக்குக் கிட்டிய ஒரு சிறு கையேட்டில் அவரது கல்யாண வரவு-சிலவுக் கணக்கு இருந்தது. இன்னும் சிறு பக்கங்கள் தள்ளி, பழைய எழுத்து ஸ்டைலில்
முதலிரவு, அடுத்த இரவு அனுபவங்களைச் சுருக்கமாக, கவிதை நடையில் சொல்லியிருந்தார். முழுவதும் ஞாபகம் இல்லை.அம்மாச்சியின் அழகை வர்ணித்தும், இன்னும் சில வாசகங்களும் எழுதியிருந்தார். (இன்னொரு விஷயம் அவரின் கையெழுத்து அத்தனை அழகுவாய்ந்தது. அந்த ஸ்டைல் இன்றுவரை நான் யாரிடமும் பார்த்ததில்லை’

    ரு மூலையிலிருந்த இன்னொரு அலமாரியை ஒதுங்க வைக்கையில் ஒரு வெள்ளைவேட்டி சுற்றப்பட்டிருந்தது. அதனடியில் ஒரு சிறு பேப்பர், A4 வடிவில் பாதிதான் இருக்கும். அவரின் அழகுக் கையெழுத்து.ஏதோ எழுதிவைத்திருக்கிறார் என அவசரமாகப் பிரித்தோம்.

    ‘செலவுக்கு பீரோவில் இருக்கும் பத்தாயிரத்தை எடுத்துக் கொள். கரண்ட் பில், தண்ணிபில் ஒழுங்காகக் கட்டிவிடு.......
                  இவண்
               மா.தங்கராசு


பி.கு:... தாத்தா புகைப்படம் இப்போது கைவசம் இல்லை. நினைவிலிருந்து வரைந்தது.

4 comments:

  1. ippadi oru touch koduppeengkannu ninaikkalai...unmaiyil super...vaalththukkal

    ReplyDelete
  2. நெகிழ வைக்கிறது பரணி.

    என்னன்னு தெரியல, நெருக்கமாய்க் கொண்டே வருகிறீர்கள் :)

    ReplyDelete
  3. @சரவணன்...
    மிக்க நன்றி நண்பரே...

    @பாலா...
    மிக்க நன்றி பாலா...ஏற்கெனவே நெருங்கிட்டோமே...(மதுரக்காரய்ங்க) :)

    ப்ளாக்கில் யார் கமெண்ட் போட்டாலும் மெயிலுக்கு வரமாட்டேன் என்கிறது...:(
    பஸ்ஸிலேயே பகிர்ந்தால் உடனே அறிய ஏதுவாக இருக்கும். உங்கள் வசதி....நன்றி...!

    ReplyDelete
  4. ரொம்பவே நல்லா இருக்குங்க.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete