Saturday, December 13, 2008

நீர் வண்ண ஓவியம்...ஒரு சுய சோதனை முயற்சி

         
         இதுவரை எனது பதிவில் போட்ட பழைய ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னைச் சிறிது வெட்க வைத்தது. அதற்குக் கிடைத்த பாராட்டுக்களைப் பார்க்கையில், அவற்றிற்கு இப்போது நான் உரித்தானவனா என என்னுள் எழுந்த கேள்வியே என்னை இப்படம் வரையத்தூண்டியது.
இரு வாரத்திற்கு முன் என் வீட்டு மொட்டைமாடியில் உலாவச் சென்றிருந்த போது, கேட்பாரற்றுக் கிடந்தது கிழிந்த காலண்டர் ஒன்று. காலண்டர் என்றாலே கிழிந்துதான் இருக்கும் எனக் கேட்காதீர்கள். ஏனெனில் இது மாதக் காலண்டர்.புரட்டிப் பார்க்கையில் அழகிய வண்ண ஓவியங்கள் (ஆறில் நான்குதான்) இருந்தது.
ஜான் என்னும் ஓவியர் 'இந்தியப் பெண்கள்' என்னும் தலைப்பில் 98ஆம் ஆண்டு வரைந்தது. தற்போது அவர் உயிருடன் இல்லை எனும் குறிப்புகள் இருந்தன.
அதில் முதல் ஓவியமாக இப்படத்தைப் பார்த்தேன்.இப்படத்தைப் பார்த்தால் கவிஞருக்குக் கவிதையும், படைப்பாளிக்குக் கதையும் உடனே தோன்றும். எனக்குத் தோன்றியது பிரஷைக் கையிலெடுக்க வேண்டுமென்பதுதான். இதற்கு முன் 2007 ஆரம்பத்தில் வரைந்த இவ்வோவியத்திற்குப்(பென்சிலில்) பின், 2001ல் வரைந்த இவ்வோவியத்திற்குப்(வண்ணத்தில்) பின் , வெகு நீண்ட இடைவெளி விட்டு ஒரு விதத் தயக்கத்துடன் தொடங்கினேன். பரவாயில்லை. ஓரளவு திருப்தி தந்தது. இன்னும் இதில் திருத்தப்பட வேண்டிய பல குறைகள், செய்ய வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பினும் எனக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை, நேரமின்மை காரணமாக இத்துடன் திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று.,(பின்னர் நேரம் கிடைக்கையில் கை வைத்துக்கொள்ளலாம்).
வாட்டர்கலரில் போதிய அனுபவமில்லாததால் ஒரு வித ஃபினிஷிங் இருக்காது. இருந்தும் இவ்வோவியத்திற்கு வண்ணம் தீட்டுகையில் நிறையக் கற்றுக் கொண்டேன்...('0' நம்பர் பிரஷ் இருப்பது, பிரஷ்களில் ரௌண்ட், ஃப்ளாட் என வகைகள் இருப்பதும், வண்ணம் கலக்குவதும் என...)

பி.கு.: தற்போது உலகளாவிய அளவில் தொழில்துறையில் நிலவி வரும் தேக்கநிலை ஆட்டோமொபைல் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் நாட்கள் வெகுக் கடினமாக நகர்கின்றது. அதிக வேலை, அதைவிட வேலையில் நம்மை இருத்திக்கொள்ளும் நிலை, அதையும் விட என்னை நானே பலப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சூழலும் அமைந்து விட்ட படியால் வலைப்பூக்களில் முன்போல உலாவ நேரமில்லை. பதிவுக்குச் சிந்திப்பதற்கும் முடியவில்லை. இதுவரை எனது வலைப்பூவுக்கு வந்தும், வாழ்த்தியும், ஊக்கம் கொடுத்துப் பின்னூட்டியும், பின்னூட்டாமலும் சென்ற அனைத்து நல் உள்ள நண்பர்களுக்கும் நன்றிகளை வார்த்தையில் சொல்லவியலாமல் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன். ரெகுலராக நான் செல்லும் பதிவுகளுக்கு, அவ்வப்போது செல்லலாமென இருக்கிறேன். பின்னூட்டமிடுவது குறைந்து விடும் ஆனால் முற்றிலும் நின்று விடாது.
இடைவேளை.....

   படம் பெரிதாக இருந்ததால் ஸ்கேன் செய்து போட முடியவில்லை. புகைப்படமெடுத்துப் போட்டிருக்கிறேன்.