Tuesday, November 24, 2009

சர்வேசன் கதைப் போட்டியில் தேர்வான டாப் 20 இல் எனது கதை

      எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டியில் டாப்-20 இல் எனது கதையும் தேர்வாகியுள்ளது. முதல் சுற்று நடுவர்களாக சர்வேசனும், சென்ஷியும் தேர்வு செய்துள்ளனர். (விபரம் இங்கே) அடுத்த சுற்றில் வாசகர் வாக்கு+சென்ஷி+2 நடுவர்கள்(அறிவிக்கப் படவில்லை) இவர்களின் தேர்வில் டாப் 2 கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்.

      எழுதிய இரண்டாவது கதைக்கே கிடைத்த இவ்வங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப் படுத்தியுள்ளது.
படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் வாசகர்கள் தங்கள் வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இடவும்.
அதுபற்றிய விபரங்களை சர்வேசன் அளப்பார்... இல்லை இல்லை அளிப்பார் விரைவில்...

Sunday, November 15, 2009

ஒரு கிளி உருகுது...உரிமையில் பழகுது... சர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்காக...

ஒரு கிளி உருகுது.. . உரிமையில் பழகுது….

           சுமதிக்கு எழுந்திருக்கும் போதே சற்றுக் களைப்பாய்த்தான் இருந்தது.காரணமான ரவி சற்றுத் தள்ளிக் குப்புறப் படுத்து, தலையை மட்டும் ஒரு சாய்த்திருந்தான்.அவன் தூங்கும் கோலம் அவளுள் புன்னகையைத் தோற்றுவித்தது.அவன் இன்னும் குழந்தைதான்.கலைந்திருந்த போர்வையை அவன் மீது சரியாகப் போர்த்திவிட்டு,முகத்தினருகில் வருகையில் அவன் மீசையைத் தடவிக் கொடுத்தாள்.கறுகறுவென இருந்தது.அவள் மயங்கியதே இந்த மீசையின் புன்னகையில்தான். மீசை சிரிக்குமா?அவளைக் கேட்டால் சிரிக்கும் என்பாள்.எல்லார் மீசையும் சிரிக்குமோ தெரியாது.இவன் மீசை சிரித்தது. இவளுக்கு அப்படித்தான் தோன்றியது, முதன்முதலில் இவள் அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொன்ன போது.



‘நன்றி..!மீண்டும் வருக’

’வெல்கம் சீனிவாசா’ உணவகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் வசுமதி.தோள் வரையே உள்ள    கூந்தலை அவள் பின்னியிருந்த லாவகம், இன்னும் நீளமோ என யோசிக்கவைத்தது.அவளின் ஐந்தடி உயரம்கூட அப்படி எண்ண வைத்திருக்கலாம்.ஒற்றை ரோஜாவின் வாடிய நிலை, நேரம் சாயங்காலமாகிவிட்டதைக் காட்டியது.உடன் வந்த செல்வி இவளுக்கு முன், பணம் செலுத்திவிடவேண்டுமென்ற முனைப்புடன் தனது தோல் பர்ஸைப் பிரிக்க ஆரம்பித்தாள்.அதற்குள்  வசுமதி இருவரும் சாப்பிட்ட பில்லைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

‘ஏண்டி! நான் கொடுத்திருப்பேன்ல.’

‘சரி கொடுத்துக்கோ.. அடுத்த தடவை’- எனச் சொல்லிவிட்டு உதடு பிரியாமல் சிரித்தாள்.

‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!’-பின்னாலிருந்து குரல் கேட்டது.

தன்னைக் கூப்பிட்டிருக்க மாட்டார்களென எண்ணியும், அனிச்சையாய் தலை திரும்பியது.கொஞ்சமாய் உடலும்.

25 வயது இருக்கலாம். நின்றிருந்தான் அவன்.வார் வைத்த கறுப்பு லெதர்பேக்.கையில் ஹெல்மட்டுடன் இருந்தான்.இன்னொரு கையில் ஏதோ கார்டு இருந்தது.

‘நீங்கதானே வாசுமதி தேவராஜன்?பணம் எடுக்கையில இந்த ஏடிஎம் கார்டு கீழ விழுந்திருச்சு’
 
        உடன் முழுதும் திரும்பி, தன் கைப்பையை நொடிகளுக்குள் சோதனையிட்டுவிட்டு அசடுவழிந்த புன்னகையோடு அவனை நோக்கினாள்.

‘கார்டு என்னதுதான். ஆனா நான் வாசுமதி இல்லை. வசுமதி’

‘ஸாரிங்க..’ என்றவாறு கார்டைக் கொடுத்தான்.

கொடுக்கையில் விரல் நுனிகள் பட்டால் தீட்டு என்பது போல் பவ்யமாய்க் கொடுத்தான்.பளிச்சென்ற நகங்கள் வெட்டப்பட்டு அளவாய் இருந்தன.கொடுத்தவிதத்தில் அவன் முகத்தையும் கவனிக்கத் தோன்றியது.கார்டை வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ்’ சொல்லியவாறே ஏறிட்டுப் பார்த்தாள்.எண்ணெய் இல்லாத தலைமுடி, பிரில்கிரீமின் உபயோகத்தில் பளபளத்தது.மாநிறம்.சாதாரண கண்கள் கண்ணாடிக்குள் அடைபட்டிருந்தன. மூக்கு ஒன்றும் பிரமாதமில்லை.உதடு சற்றுக் கறுத்திருந்தது.லேசாகச் சிரிக்கவும் பிரயத்தனப்பட்டிருந்தான். அந்த சிரிப்பு அவன் மீசையோடு சேர்ந்து கொண்டாற்போல் இவளுக்குப் பிரமை ஏற்பட்டு லயித்திருந்தாள். லயித்தல் பிறிதொரு சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தித் தந்தது இவளுக்கும், அவனுக்கும்.அவை ‘ஹாய்’களாகத் தொடங்கி, ஒரே மேஜையில் உணவருந்தவும் வழி செய்தது.



               ணவு மேஜையில் அமர்ந்திருந்தான் ரவி.மேஜையில் காலி தட்டுக்கள் இருந்தன. இன்னும் ரெடியாகவில்லை போலும்.

‘வசு… என்ன டிஃபன்… சீக்கிரம் கொண்டு வா.. எனக்கு டைம் ஆச்சு’

‘கொஞ்சம் பொறுமையா இருப்பா. வந்துடுறேன்.எனக்கென்ன நாலு கையா இருக்கு’

‘உனக்கு நாலு கை வேணாம். இன்னும் ரெண்டு உதடு இருந்தாப் போதும். நீ டிஃபனே பண்ணவேணாம்.’

‘ஐயோடா…காலங்காத்தாலேயா ரொமான்ஸா.இதோ ரெடியாயிடுச்சி’ -சொல்லும்போதே இரவின் நினைப்பு வந்து போனதில் கொஞ்சம் கூசியது வசுமதியின் உதடுகள்.
 
       வி பறக்கும் இட்டிலியின் சூட்டினைச் சுவை பார்த்துக் கொண்டிருந்தன தட்டுகள்.வெங்காயச் சட்னி இவனுக்கு. தேங்காய்ச் சட்னி இவளது ஃபேவரைட். ஆளுக்கொரு சட்னியில் இட்டிலிகளைக் காலி செய்து கொண்டிருந்தனர்.இவனுக்கு முன் அவள் உண்டு முடித்திருந்தாள்.

‘ஏண்டி நீயெல்லாம் தமிழ்ப் பொண்ணா? புருஷன் சாப்பிடுறதுக்கு முன்னாடியே சாப்பிடுறே’-குறும்புடன் கேட்டான் ரவி.

‘நான் எங்க உங்க முன்னாடி சாப்பிட்டேன். சைடுல உக்காந்துதானே சாப்பிட்டேன்’

ஒரு நொடி புன்னகைப்பது போல் பாவலா காட்டிப் பின் அமைதியாய் ‘சிரித்தது போதுமா?’ என்றான்.

‘போதும். கையைக் கழுவிட்டு ஆஃபீஸ் கிளம்புங்க. நேரமாயிடுச்சு’

         வசர,அவசரமாக உடைமாற்றி, ஷூக்களுக்குத் தன் கால்களையும் கொடுத்து, வண்டிச்சாவியையும், ஹெல்மெட்டையும் எடுத்துக் கிளம்புவதற்குள் மணி எட்டாகியிருந்தது.எட்டு ஐந்துக்குள் வண்டியைக் கிளப்பினால்தான் சரியான நேரத்திற்குச் செல்ல முடியும்.

 ‘ரவி… நாம மீட் பண்ணி இன்னையோட நூறாவது நாள். ஞாபகம் இருக்குல்ல’

‘இல்லாமயா…’ என்றவாறு கதவினைத் திறந்து வெளியேறினான்.

’ஈவ்னிங் வெளிய போலாம். சீக்கிரம் வர ட்ரை பண்றேன். பாய்’

புன்னகையோடு கையசைத்த வசுமதி வீட்டிற்குள் நுழைந்தாள்.



              ண்டியில் சாவியை நுழைத்து லாக்கை விடுவித்துவிட்டுப் பின் வண்டியிலேறி அமர்ந்து கிக்கரை அழுத்தினான்.நோ ரெஸ்பான்ஸ்.இன்னொரு முறை. இன்னும் நான்கைந்து இன்னொரு முறைகள் தோல்வியைத் தந்தன. டேங்கை குலுக்கிப் பார்த்ததில் பெட்ரோல் இருந்த சுவடில்லை.பெட்ரோல்  சமீபத்தில்தான் போட்டதாக ஞாபகம்.’வீடு, ஆஃபீஸ் தவிர வேறு எங்கும் சுற்றவுமில்லையே….அதற்குள் எப்படித் தீர்ந்தது.’ நினைத்து முடிப்பதற்குள் மணி 8.10 ஐக் கடந்திருந்தது.

        பாஸுக்கு ஃபோன் செய்து லேட்டாக வருவதைத் தெரிவிக்கலாமென செல்ஃபோனை எடுக்கச் சட்டைப் பைக்குள் கைவிட்டவன் விரல்கள் அவன் நெஞ்சினைத்தான் வருடின.அடடா அதையும் மறந்துட்டோமா என அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வசுமதி இவனது பரபரப்பைப் பார்த்துவிட்டுப் பின்னாடியே வந்தாள்.

‘என்ன ஆச்சு … ஆபீஸ்க்கு லேட்டாயிருச்சு.. இன்னும் போகலையா.. உள்ள என்ன தேடிக்கிட்டிருக்கீங்க?’ என்றாள்.

‘வண்டில பெட்ரோல் இல்ல. பாஸூக்குச் சொல்லலாம்னா செல்ல மறந்துவச்சுட்டேன்.அவசரத்துல வச்ச இடத்துல கிடைக்க மாட்டேங்குது.’

‘நீங்க எப்பயுமே இப்படித்தான். இருங்க நானும் தேடுறேன்’ என்று களமிறங்கினாள் வசுமதி.

‘சரி உன்னோட செல்லில இருந்து ஒரு கால் கொடு. ‘

‘ஐயய்யோ என்னதுல பேலன்ஸ் தீர்ந்துடுச்சி. கால் பண்ண முடியாது’

‘மெஸேஜ் ஆவது பண்ணு. டோன் வருதான்னு பார்ப்போம்.’

வசுமதி மெஸேஜ் அனுப்பினாள். வீடெங்கும் காதுகளை அலையவிட்ட ரவிக்கு ஏமாற்றமே….



            டென்ஷனில் வேர்த்திருந்தது ரவிக்கு. அருகில் வந்து தன் புடவைத் தலைப்பால் அவன் முகம் துடைத்தவாறே சொன்னாள்..

‘கொஞ்சம் அமைதியா இருங்க.வெளியே போய் ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்’
 
      சோபாவில் அமர்ந்து சற்று ரிலாக்ஸான ரவியின் அருகில் வந்தமர்ந்த வசுமதி ‘பெட்ரோல் பங்க் நாலு கி.மீ.இனிமே தெருமுனை வரை நடந்து போய் ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸூக்குப் போய்த்தான் ஆகணுமா. அதான் தடங்கலாயிடுச்சில்ல. நம்ம செலப்ரேஷன் டேயவாவது கொண்டாட…..லா….மா? ’ என மெதுவாக இழுத்து முடித்தும் முடிக்காதவளைப் பார்த்தான்.எவ்வளவு கோபத்தையும் கரைத்துவிடுகிற அப்பாவி முகம்.சோகத்தில் இருப்பது போன்ற கண்கள் சொல்லுவதோ காதல் சேதி.அழுதால் கூட அழகாய் அழும் உதடுகள். இவை அழுவதை விடவும் சிரித்தால் பெட்டரா இருக்குமே.நூறாவது நாள் கொண்டாட்ட சேலை இவனுக்குப் பிடித்த மயில் கழுத்து நிறத்தில், அவளின் அழகை இன்னும் கூட்டியது. கழுத்து திடீரென மயில் கழுத்து போலக்கூடத் தோன்றி மறைந்தது.அதென்ன கழுத்தில் உத்திராட்சக் கொட்டை. மேலே பார்த்தால் கடுகடு மேனேஜர் மூஞ்சி தெரிகிறதே….

‘என்னய்யா… இன்னைக்கு ஆடிட் பத்தி டிஸ்கசன்னு சொன்னேன்ல. ஒரு மணி நேரம் லேட்டா வந்திருக்க.’

‘ஃபோன் பண்ணிச் சொன்னேன்ல சார்’

‘சொல்லிட்டா ஒரு மணி நேரம் உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆயிருமா? இருந்து வேலையை முடிச்சிட்டுப் போ.’

‘சார்.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்…பெர்சனல் ஒர்க் இருக்கு’

‘யோவ் என்னய்யா நினைச்சுட்டிருக்க… வர்றது லேட்டு.. போறது சீக்கிரமா.. இந்த இழவுக்கு உன்னய யாருயா வரச்சொன்னா…லீவப் போட்டிருக்கலாம்ல’

‘போட்டிடுறேன்’ சார் என்றவாறே நிகழ்காலத்துக்கு வந்தான்.

     பெட்ரோல் பங்க் தூரமும், ஆட்டோ குலுக்கலும், எரிந்து விழும் மேனேஜரும், வீட்டு நினைப்பில் அலுவலகத்தில் இருப்பதையும் கண்முன் நினைத்துப் பார்த்தான்.அவள் போட்டிருந்த கோகுல் ஸாண்டல் பவுடர் ,வியர்வையில் தோய்ந்து புது வாசத்தினை அவனுக்குக் காட்டியது.சில நேரங்களில் வாசமும் புது நேசம் சொல்லும்.நாளைய கவலை நாளைக்கு… அதுக்காக இன்றைய தருணத்தை நழுவ விடுவதா…

.
முழுதாக இயல்புக்கு வந்தவன் அவளிடம் சொன்னான்.

‘லாம்.’

புன்னகையில் மலர்ந்த வசு, ‘அப்போ வாங்க.. முதல்ல பிள்ளையார்கோயில் அப்புறம் மாயாஜால், ஈவினிங் நம்ம கோயில் ‘வெல்கம் சீனிவாசா’ ஹோட்டல். சீக்கிரம் கிளம்பலாம்’-பரபரப்புடன் சொல்லியவாறே ‘இச்’சிட்டு எழுந்தாள்.

’சரி சரி முதல்ல மொபைல்ல தேடுவோம்.’


                ருவரும் தேட ஆரம்பித்தனர். அரை மணித் தேடலுக்குப் பின், அவன் தலையணைக்கடியில் மொபைல் இருந்தது.எடுத்துக் கொண்டே,’பெட்ரோல் வாங்கிட்டு வர்றேன்’ எனக்கிளம்பினான்.

பாஸுக்கு முதலில் ஃபோன் செய்து லீவ் சொல்லிவிடலாமென மொபைலை எடுத்ததில் ஒரு மெஸேஜ் வந்தது தெரியவந்தது.வசு அனுப்பியது தான் எனத் தெரிந்து திறந்தான்.

‘வேணாங்க ….. இங்க ஒரு பாட்டில்ல பெட்ரோல் இருக்குது,. நான் நேத்து என் திறமையில சம்பாதிச்சது. இப்போதான் ஞாபகம் வந்தது’ -வசுமதியின் குரல்  கிண்டலாகக் கேட்டது.

செல்போன் திரையில் தெரிந்த ‘ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது’ என்ற வசுவின் மெஸேஜ், வடிவேலுவின் குரலில் இவன் காதுகளில் ஒலித்தது.


Saturday, November 14, 2009

பா...... இளையராஜா

 கேட்டுப் பாருங்க.... இந்த நாள் இனிய நாள் ஆகும்.
ராஜாவின் புதிய பட இசை ‘பா’-ஹிந்தி

*சங்கத்தில் பாடாத கவிதையும் இருக்குது

http://www.in.com/music/album-paa-%2067429.html

im busy with enjoying songs... no time to explain....bye