Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Wednesday, June 1, 2011

இசையென்னும் தவம்-இளையராஜா-டாப் டென் -வாழ்த்து-பென்சில்

   ஜூன் இரண்டாம் நாள் பிறந்தநாள் காணும் இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். இந்த ஒரு விஷயத்தில்  மட்டும் என் பேராசையைக் கட்டுப் படுத்த முடியாது....:)

அவர் பாடல்களை வரிசைப் படுத்துவது இயலாது.சட்டெனத் தோன்றியதில் எனக்குப் பிடித்த டாப் டென்...
1.மாலையில் யாரோ மனதோடு பேச...(சத்ரியன்)
2.முத்துமணி முத்துமணி (அதர்மம்)
3.தென்றல் வந்து தீண்டும்போது என்ன(அவதாரம்)
4.எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்(பட்டாக்கத்தி பைரவன்)
5.கண்ணன் ஒரு கைக்குழந்தை(பத்ரகாளி)
6.ஆகாசம் ஏனாதிதோ அனுராகம் ஆனாதிதே(தெலுங்கு-Nireekshana)-சங்கத்தில் பாடாத கவிதையின் சுந்தரத் தெலுங்கு வடிவம்.
7.ஆராரோ பாட்டுப் பாட நீயும் தாயில்லை(பொண்டாட்டி தேவை-(இது எனக்குத் தேவைதான் இப்போ :)   ))
8.கண்மணி நீ வரக் காத்திருந்தேன்(தென்றலே என்னைத் தொடு)
9.முத்தம்மா முத்து முத்து முத்தாளம்மா(தந்துவிட்டேன் என்னை)
10.விழியிலே மணி விழியிலே(நூறாவது நாள்)-ஜோதியல்லி(கீதா-கன்னடம்)....

   ஹ்ம்.... பட்டியல் தொடர்ந்துகிட்டே இருக்கு....
இந்த எல்லாப் பாடல்களையும் கேட்டுக்கிட்டே பண்ண படம் இந்த ஓவியம். பென்சிலில் வரைந்தது. ஆனாலும் ரப்பர் உபயோகிக்கவில்லை.கார்ட்ரிட்ஜ் பேப்பர்....

Saturday, April 30, 2011

இளையராஜா-சலிக்கவே சலிக்காத மனிதர்....

    பதிவெழுத வந்த மூன்றாண்டுகளில் முதல்முறையாக இந்த மாதம்தான் அதிகப் பதிவு(இது இம்மாதத்தின் 9வது பதிவு) வரவேண்டுமென்பதால், ஒரு க்விக் ஸ்கெட்ச்...அதற்கு நம்ம தலைவரை விட்டா யார் இருக்காங்க...??? :)

அதனால, நான் இப்ப கத்துட்டு வர்ற Impressionism style la 6,7 நிமிடங்களுக்குள்ளாக வரைந்த படம் இது... பால்பாயிண்ட் பென்னே துணை....!
 

Friday, April 22, 2011

இளையராஜா-White in Black-Music messiah

      முதல்முறையாக கறுப்புத்தாளில்(வெள்ளைத்தாளில் கறுப்பு வண்ணம் பூசிக் காயவைத்தது) வெள்ளை வண்ணத்தில் வரைந்து பார்த்தேன்.இப்படம் நன்றாக வந்ததற்குக் காரணம் இளையராஜா மட்டுமே... ஐ லவ் இளையராஜா
medium-Oil colors(black & white)

Friday, November 19, 2010

பாடல் தேடிய கதை(கண்டிப்பாக இளையராஜா ரசிகர்களுக்கு மட்டும்)

*ஜீவா ஹோவாகிதே*
             பெங்களூரு வால்வோக்களில் பயணிக்கையில், உள்ளூர்ப் பண்பலைகளில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்க நேர்ந்ததுண்டு. முக்கால்வாசி ஹிந்திப் பாடல்களும், கால்வாசி கன்னடப்பாடல்களும் வரும். கன்னடப்பாடல்கள் அனைத்தும், தென்னிந்திய மொழிகளுக்குண்டான ஃப்ளேவருடனும், கரோக்கியாக மாற்றிக் கேட்டால் எல்லாம் ஒன்றே போலவும் தோன்றும்.(விஜயாண்டஹாரிஸ்தேவவித்யாயுவரகுமான்கள் இசை) போல் ஒரே டெம்ப்ளேட்டில் இருக்கும்.அதனால் கண்களை அகல விரித்துக் கொண்டும், காதுகளை இறுக்க மூடிக்கொண்டும் இருந்துவிடுவேன். ஓரிரு நாட்களுக்கு முன் ஏறிய ஒரு பேருந்தில் கேட்ட பாடல்தான் இப்பாடல்.சரணத்திற்கு அடுத்துவரும் பல்லவியைக் கேட்டவுடன் புரிந்துவிட்டது இது ராஜாவின் பாடல் என்றும், பாடிக்கொண்டிருப்பவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் என்றும். ராஜ்குமாரின் குரலைக் கேட்கையில் இளகிய P.B.ஸ்ரீநிவாஸின் குரல் போலவே எனக்குப் படும்.





            மொழி தெரியாததால், வரிகளைக் கவனிக்க முடியவில்லை, ‘ஜீவ’ என்ற முதல் வார்த்தை மட்டுமே தெரிந்தது. கன்னட நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன். பாடிக் காட்டச் சொன்னார்கள்.காட்டினேன். ஏனோ அதன் பிறகு பேச்சையே குறைத்துக் கொண்டார்கள்.காதுல ஏதோ பிரச்சினை போலும் அவர்களுக்கு. வீட்டிற்கு வந்து யூ ட்யூபில் தேடிப் பார்த்தேன். “ஜீவ+ராஜ்குமார்+கன்னடா” இவையே எனது தேடலுக்கான வார்த்தைகள். கிடைத்துவிட்டது. பாடல் அந்ந்ந்ந்ந்ந்ந்ந்தக் காலத்து மரம்சுற்றும் டூயட்தான். இடையிடையே ‘ஜானி’ படத்தில் ரஜினி+ஸ்ரீதேவி ஓடிவது போல் ஸ்ல்ல்ல்ல்லோமோஷனில் ஓடுகிறார்கள்.ஹீரோயினை விட வயது அதிகம் எனினும் ராஜ்குமார் இளமையாகத் தோன்றுகிறார். இந்தப் பொல்லாப்பெல்லாம் வேண்டாம் என்பவர்கள், பாடலை ஓடவிட்டு, பிரவுசரின் பக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். செவிகள் மட்டும் கேட்டுக் கொள்ளட்டும். 80களில் வந்த ராஜ இசைதான். தமிழ்ப் பாடல் கேட்பது போல்தான் இருக்கிறது. ஆனாலும் ராஜ்குமாரின் குரலில் இன்னும் கொஞ்சம் மெருகேறி ஒலிக்கிறது பாடல். எனக்கென்னமோ இந்தப் பாடலும் என் ப்ளேலிஸ்ட்டில் சீக்கிரம் ஒட்டிக் கொள்ளுமெனத் தெரிகிறது.

   பி.கு: ரவிசார் அறியாத ஒரு பாடலைப் போட்டுவிட்டேன் என்ற திருப்தி :)

Wednesday, September 29, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...2

       எப்பொழுதும் தவறவிடாமல் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி விஜயில் வரும் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ தான்.இளங்கலைஞர்கள் பாடுகையில் ஏதோ நாமே மேடையில் பாடுவது போலொரு ஆனந்தம். இன்றும் அப்படித்தான். அதில் கிளாசிக் வகையைத் தேர்ந்தெடுத்த ஹரிணிதிவ்யா பாடிய பாடல் கேட்டவுடன் பிறந்ததே இப்பகிர்வு.
   
     ஷண்முகப்ரியா ராகமாம்.(நன்றி. எஸ்.பி. சைலஷா). எனக்குத் தெரியாது. ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன். ராஜாவின் இசையில் விரகமும், காதலும்(நல்லதோ கெட்டதோ காதல்தான் அது. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் ‘காமம்’), தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் பிரவாகமாய் வெளிப்படும் பாடல்.ஆரம்பப் பின்னிசையிலேயே நான் இதைத்தான் சொல்லப் போகிறேன் எனச் சொல்லிவிடுவார்.(இப்பல்லாம் படங்களுக்கு டிரைலர் காட்டுவது போல).
           
            குழலில் ஆரம்பிக்கும் தாகம், பின் வயலின்களின் வருகையால் ஆறுதலடையும் நேரத்தில் வந்துவிடுவார் ஜானகி ‘சொல்லாயா’ எனச் சொல்லிக் கொண்டு. உடனே ஆரம்பித்துவிடும் தபேலாவின் தட்டுக்கள் மற்ற ராஜாவின் பாடல்களில் வரும் தாலாட்டுத் தட்டுக்கள் அல்ல.சிறிதே சீண்டிப்பார்க்கும் செல்லத் தட்டுக்கள்.

    பல்லவி முடியவும் வரும் இசை சிதாரில் ஆரம்பித்துப் பின் வயலின்களைப் பாடவிட்டுப் பக்கவாத்தியமாகிவிடுகின்றது.
  சரணத்தில்
   ‘ஆகாய சூரியன் மேற்கினில் சாய...
    ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
    தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
    தாமதம் இனியேனோ இருமேனி கூட’ இதுவரையில் செல்லத்தட்டு தட்டிய தபேலா
‘அந்திவரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்’எனும் வரிகளில் வேக,விவேகமாக ரிதம் மாறி,  நம்மை ஒரு விதமாக உருட்டிச் செல்லும்.
இரண்டாவது பின்னிசையின் போது தபேலா மவுனமாக, வந்து விடுவார்கள் பிரதான வயலின் பாடகர்கள்.சிறிது தாபத்தை அது கொடுக்க புல்லாங்குழல் வந்து கசியவிடும் சோகம் இனிது.ஜானகியின் பங்களிப்பைப் பற்றி நானென்ன பெரிதாகச் சொல்லப் போகிறேன். அதெல்லாம் அனுபவிக்கணும்.


   கிளாசிக்கலோ, வெஸ்டர்னோ எதுவும் தெரியாத என்னைப் போன்ற பல பாமரர்களுக்கான இசைதான் இது.

   
            இசைக்கான வித்து நல்வித்து. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.
அதிலிருந்து சில பகுதிகள் இப்பாடல் காட்சியோடு தொடர்புடையவை கீழே சிறிது தந்திருக்கிறேன்.

          "அங்கே யாருமில்லை” என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று.முகம் பளபளவென்றிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று.காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே கீழே இறங்கியிருந்தது, முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே, இந்த இறக்கத்தால்தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப் பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஓரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளீர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது...... தங்கம்மா...


   

"நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன்., என்னைச் சோதனை செய்ததில் உனக்கென்ன பெருமை? சிங்கம் பூனையோடு பலப்பரீட்சை செய்வதுபோல்தான் இது. ஆனால்...அதாவது... என்ன.  இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்க மாட்டேன். நேற்ற் இரவைப் போல் வெளிக்கதவைத் தாழிட்டு விடுவேன். மதில் காவலா, மனம் காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால் உள்கதவும் திறக்காது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு மூடியிருப்பதும், வெளிக்கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.”.........பாபு



“நேத்தி ராத்திரி நான் வந்து ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன்.நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கவில்லை. எப்படித்தான் இவருக்குத் தூக்கம் வருகிறதோ என்று நினைச்சுண்டே நின்னேன்.எனக்குத் தூக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டு விட்டு எத்தனை நாழி ஒண்டியாக நின்னு கத்துகிறது.நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது.உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னுதான் பயமாயிருக்கு....................”.........தங்கம்மாவின் கடிதம்...


  இப்போது பாடல் கேட்டு, முள்ளை ஏற்றிக் கொள்ளுங்கள்.

Monday, September 27, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

        இன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எட்டு மணிக்கெல்லாம் பசி வந்துவிட்டது.வழக்கத்திற்கு மாறாக வெளியில் சாப்பிடக் கிளம்பினேன்.அறையிலிருந்து கிளம்புகையிலேயே கண்ணாடி சன்னல்கள் திடீர் திடீரென மங்கலான வெள்ளொளியைத் துப்பிக் கொண்டிருந்தன.சற்றுப் பொறுத்து மெல்லக் காதில் விழந்தது இடி சத்தம்.சாக்கிரதை உணர்வில்.ஒரு கம்பி மட்டும் உடைந்து மரபான  வடிவத்தைக் கட்டுடைத்த படி இருக்கும் பச்சைக் குடையை எடுத்துக் கொண்டேன்.கதவு தாண்டித் தெருவில் கால்வைத்தவரை சிற்றின்பத் தூறல்கள்தான் கொஞ்ச ஆரம்பித்திருந்தன.குடையை விரிப்பது அவசியமில்லை.ஆனால் குடை தேவையென இடி சொல்லிக் கொண்டிருந்தது அவ்வப்போது. பத்தடி தூரத்தில் உணவகம். வட இந்திய வாசம் விட்டுப் போகக் கூடாதென இரண்டு ஆலு பராத்தாக்களைக் கேட்டேன்.மேசைமீதிருந்த ஸ்பீக்கர்களில் ஹிந்திப் பாடல் தூறிக் கொண்டிருந்தது.இந்தோரில் இருந்த மூன்று வருடம் வெளியிடங்களில் தமிழ் கேட்க நான் பட்ட கஷ்டம் என் சகிப்புத்தன்மையைக் கூட்டியிருந்தது.என் வட இந்திய நண்பர்களின் மனைவிமார்கள் செய்த ஆலு பராத்தாவின் மிருதுவில் பாதிதான் இருந்தது இங்கு கிடைத்த பண்டம். .தயிரும், வெங்காயமும் தனியாக வைத்திருந்தனர், ஏதோ வாய்க்கால் தகராறு போலும்.சிறு சிறு மெது திண்மங்களாக உள்வைத்து அமுக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள் பராத்தாவின் கூட்டணியில் சிறிது ருசியுடன் பசியைத் தணித்துக் கொண்டிருந்தன.இதற்குள் திடீரெனச் சுருதி குறைந்த பாடலும், உணவகத்தினுள்ளே தெறித்த துளிகளும் மழையின் வேகம் வலுத்ததைக் காட்டின.குழந்தையின் ஆர்வத்தோடு வேகமாகச் சாப்பிட்டு முடித்தேன்.கை கழுவ வெளியேதான் செல்லவேண்டும்.குடையின்றிச் சென்றதால் நிகழ்ந்த முன்னோட்ட நனைதலில் உடைகளில் எடை கூட ஆரம்பித்தது.இருபத்தி ஐந்து ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளிப்புகுந்தேன் மழைக்குள், கொஞ்சமாய்க் குடைக்குள்ளும்.

          அயோத்தி தீர்ப்பு நாளை வந்துவிட்டால், கலவரம் வந்துவிட்டால்,ஊரடங்கு போட்டுவிட்டால்,கடைகள் அடைத்துவிட்டால்.....பல ட்டால்கள் மனதிற்குள் புதிதாகக் கிளைவிட்டுப் பெருக ஆரம்பித்திருந்தன.காய்கறிகள் வாங்க வேண்டும்.பப்பிள் டாப்பில் தண்ணீரின் அளவு திருகும் குழாய்க்குக் கீழே மண்டியிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.நீருக்குச் சொல்லவேண்டும்.இன்னும் எதை எதை மறந்தேனோ, எதை நினைத்தேனோ தெரியவில்லை.சிறு கவலைகள் மழைக்குள் உருத்தெரியாமல் போய்க் கொண்டிருந்தன.தெருவிற்குள் இறங்குவதற்குள் திடீரென இருள் கவ்விக் கொண்டது.மின்சாரம் என்னவோ மழையின் சம்சாரம் போலும். மழை வந்தவுடன் இது முகத்தைத் திருப்பிக் கொள்கிறது..எப்பொழுது திரும்ப வருமெனத் தெரியாது.ஆங்காரமோ, ஆர்ப்பரிப்போ தெரியவில்லை, மழை காட்டுக் கத்தலாய்ப் பெய்ய ஆரம்பித்திருந்தது.சாலையோர மணல் இப்போது செம்புலப் பெயல் நீராகி இருக்கும். இருட்டில் பார்க்கமுடியவில்லை.செருப்புகளினூடாகக் குறுகுறுத்த பாதங்கள் அதன் அடர்த்தியை உணர வைத்தது.ஒழுங்கற்ற எல்லைகொண்ட சாலைகளில் பாதியும், மழைச்சேற்றில் பாதியுமாக நடக்க ஆரம்பித்தேன்.வாகனங்கள் வருகையில் சற்று நின்றுதானாக வேண்டும்.ஒன்று அதன் எல்லை எனக்குப் பிடிபட வேண்டும். இல்லை நான் நிற்பதாவது வாகன ஓட்டிக்குத் தெரியவேண்டும்.எதிரெதிர் வாகனங்கள் பீய்ச்சிச் செல்லும் ஒளிக்கற்றைகளில் மழைக்கைகளின் ஒழுங்கற்ற நடனம் தெளிவாய்த் தெரிந்தது.பெரிய, சிறிய கோட்டுத் துண்டுகள் ஒன்றையொன்று இடைவெட்டியும்,நேர் சென்றும் கோணங்கித்தனமானதொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. சாலையில் கிடந்த குழிகளிலெல்லாம் குழந்தைகளைப் போல் குதித்துக் கொண்டிருந்தது மழை.இந்நேரத்திற்கெல்லாம் சிறிது குளிரும் உள்ளேறி, ஈர உடைகளினால் மேலும் வலுவானது.வாகனங்கள் கடந்தபின் இருளின் ஆதிக்கம் எதையுமே பார்க்கவிடவில்லை. எதிரிலிருந்து ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி எனது உயரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. யூகிக்க முடியவில்லை. என்னைக் கடந்த சில நொடிகளில் புரிந்தது. சைக்கிளில் வந்த ஒருவன் வாயில் செல்போனை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. செல்போனின் தலையிலிருந்து வந்ததுதான் அவ்வொளி. என்னை நொந்து கொண்டேன். நோக்கியா 1100 வைத்திருந்தால் வசதியாக இருக்குமே என்று. விலையுயர் செல்போன்களில் டார்ச்சும் இல்லை. மழை பட்டால் அதற்கு வாழ்வும் இல்லை. இன்னொன்றும் நினைவுக்கு வந்து தொலைத்தது.பேட்டரி சார்ஜ் நிலை காட்டும் இடம் ஒற்றைப் பல்லுடன் இருந்தது. அது பொக்கைவாயாவதற்குள் மின்சாரம் வந்துவிட வேண்டும்.

                நடக்க நடக்க எனது செருப்பு பின்புறம் பாதி நீரை வாரியடித்து பேண்டினைத் துவைத்துக் கொண்டிருந்தது. நாளைக் காலையில் பார்க்கையில் பான்பராக் எச்சில் துப்பியது போல் செம்மண் பொட்டுகள் ஒழுங்கின்றி ஒட்டியிருக்கும்.மறுபடியும் இடித்த இடி மழையைப் பற்றியே நினைக்கச் சொன்னது.கலைத்துவிட்ட தேன்கூட்டினை மீண்டும் சுற்றிச் சுற்றி ஒட்டும் தேனீக்களாய், குடை இருந்தும் என் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது மழை.ஏற்கெனவே ஒரு கம்பி போன நிலையில் , சற்று வேகமாக நடந்தால் என்னிடமிருந்து மழையைக் காப்பாற்றுவது போல் மேலாகத் திரும்பிக் கொள்கிறது குடை. மழை பற்றி மனதில் எழுதிய வாசகங்களை மழையே அழித்து வேறொன்றை எழுதிச் சென்றது.இப்போது சாலையில் சிறிது ஒளி பின்னிலிருந்து வந்தது. வெகு தூரத்தில் வரும் நான்கு சக்கர வாகனமாயிருக்கலாம்.ஒளி கூடக் கூட எனக்கு முன்னால் ஒரு உருவம் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்தது தென்பட்டது.வலது தோளில் தொங்கவிடப்பட்ட கைப்பையினை இறுக்கிக் கொண்டிருந்தது அவளது கை.மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது சுடிதார்.ஏற்கெனவே கால்களை இறுக்கும் கீழ் ஆடை மழையால் இன்னும் நெருங்கி, கோயில் சிலைகளின் கால்கள் போல் காட்டியது.’அக்கினிப் பிரவேசம்’ கங்காவைப் பற்றிய ஜெயகாந்தன் வர்ணனை நினைவில் வந்து போனது.ஆனால் இவளுக்கு இருபது வயதிருக்கலாம்.சடாலெனக் குனிந்து இடது கையில் தனது ஹை-ஹீல்ஸ்களைக் கையில் எடுத்துக் கொண்டு நடை போட்டாள். அதற்குள் வாகனம் கடந்து விட அவளும் பார்வையில் இருந்து விடைபெற்று விட்டாள்.எப்படி இருக்கும் முகம் கற்பனை செய்தேன். பாழாய்ப் போன சினிமாப் புத்தி ,பழைய நடிகைகள் மழையிலும் கரையாத மேக்கப் போட்டுக் கொண்டு கண்முன் வந்து போனார்கள். எதுவும் வாங்காமலேயே வீட்டிற்குள் நுழைந்தேன்.ஒற்றை மெழுகுவர்த்தியின் தரிசனத்தில் பொன்னாய் சொலித்துக் கொண்டிருந்தது அறை.நிசப்தம் கூட அதன் ஜோதியைக் கூட்டுவது போல் தோன்றியது.குடையை விரித்த வாக்கிலேயே வைத்துவிட்டு உடை மாற்றினேன். சன்னல் வழியே வெளிப்பார்க்கையில்தான் மழை குறைந்திருந்ததும், மேகத்தோடு விளையாடும் நிலவும் தெரிந்தது. இன்றைய நிலா இன்னும் சுத்தமாகக் காட்சியளிப்பது போல் தோன்றியது.வெளியில் இருந்த வயலில் வெட்டியிருந்த வாய்க்கால்களில் நிலவின் நீள்வட்ட நகல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வாய் பாடலொன்றை முணுமுணுக்க ஆரம்பித்தது.’பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’.
இரண்டடி பாடுவதற்குள் ,கண்ணைக் கசக்க வைத்த வெளிச்சம் பாடலை நிறுத்தியது. அறை மூலையிலிருந்து ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ கதற ஆரம்பித்து விட்டான். வாழ்க சன் டிவி...!வளர்க மின் துறை....!!

Wednesday, September 15, 2010

இளையராஜா-இப்பவும் நான் ராஜா

இன்னொரு முறை மகிழும் வாய்ப்பெனக்கு வந்திருக்கிறது. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.இதுநாள் வரை இல்லாத ஒன்றாக, ‘பின்னணி இசை’க்கென தனி விருது தொடங்கப்பட்டு அதன் முதல் விருதே இளையராஜாவுக்குத்தான் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும் அவ்விருது.’பழசிராஜா’(மலையாளம்) படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை இளையராஜாவுக்கு விருது பெற்றுத்தந்த படங்கள் அனைத்தும் இசையை மையமாகக் கொண்ட படங்களே. சாகரசங்கமம்(தெலுங்கு-1984-தமிழில் ‘சலங்கை ஒலி’),சிந்து பைரவி(1986), ருத்ரவீணை(தெலுங்கு-1989-தமிழில் ‘உன்னால் முடியும் தம்பி’). ‘பழசிராஜா’வோ முற்றிலும் வரலாற்றுப் பின்னணியில் வெளிவந்த படம். இதற்கு முன்பே ‘சிறைச்சாலை’,’ஹேராம்’ படங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ‘சேது’,’நான் கடவுள்’ இன்னும் பல படங்களின் பின்னணி இசை விருதுக்குத் தகுதியானவையே. நடுவர் குழு ஹிட்டான பாடல்களை மட்டும் கவனித்திருக்கலாம்.அல்லது ராஜாவின் பாடல்களுக்குள் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாமலிருந்திருக்கலாம்.இதில் இரண்டாவது வகையே அதிகம் என நினைக்கிறேன்.‘பழசிராஜா’வின் பாடல்கள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை.

சங்கீதங்கள் மட்டுமல்ல ராஜாவின் மவுனம் கூடச் சிறந்த இசைதான். பாலுமகேந்திராவின் கூற்று இது:’என் படங்களில் எங்கு இசை பேச வேண்டும். எங்கு மவுனம் இசைக்க வேண்டும் என்பது என் ராஜாவுக்குத் தெரியும்.’பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தின் பின்னிசையைக் கவனியுங்கள்.


பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ படத்தின் பின்னணி இசை ரசிக்க....




இளையராஜா-மணி ரத்னம் இணைவில் உருவான ஒரு முத்து கீழே...


இப்போதைக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் ராஜாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...

Friday, April 9, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...1

        இயந்திரத் தனமான வாழ்க்கையில் எப்போதும் சிறுசிறு இளைப்பாறுதல்கள் கிடைத்துக் கொண்டுதானிருக்கின்றது. அதனைக் கவனிப்பவர்கள் ரசிக்கிறார்கள். பயணங்களைத் தூங்கிக் கழிப்பவர்களும் உண்டு. எக்கனாமிக் டைம்ஸில் குறையும் பங்கு மதிப்பிற்காகத் தொலைப்பவர்களும் உண்டு.சில்லறையின் ஞாபகத்தில் சிதறவிடாத மனங்களும்,சிறு குழந்தையின் சிரிப்பில் சிதறிய கணங்களும் கொண்டவர்களும் உண்டு,எதிர்த் திசையில் பயணிக்கும் மர நிழல்களில் தேங்குபவர்களும் உண்டு.கம்பியில் சாய்ந்து அல்ஜீப்ராவை மனனம் செய்யும் சிறு பெண்ணின் பச்சை ரிப்பனில் பால்யத்தைக் கண்டடைந்தவர்களும் உண்டு.


   ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு பாடலை இயற்கை முணுமுணுத்துக் கொண்டுதானிருக்கிறது.அம்மாவின் தாலாட்டாகவோ, தமிழய்யா விளக்கிய ‘கொங்குதேர் வாழ்க்கை’யாகவோ,அப்பா மிதிக்கும் சைக்கிளோசையாகவோ,தட்டச்சு பயிலச் செல்கையில் வீட்டைக் கடக்கும் ஜெயமீனாவின் கொலுசொலி சேர்ந்த செருப்போசையாகவோ அவரவர் அனுபவங்களுக்கேற்ப காதில் ஒலிக்கலாம்.அப்படிக் கடந்த தருணங்களின் சுவை, இப்போது எட்டாத் தேனாய் கனவில் மட்டுமே ருசிக்க முடியும்.

    அப்படியொரு தேனின் சுவை மிச்சங்களை மீட்டெடுக்கும் ஒரு பாடல்தான் இது. ராஜாவின் விரல்வழிக் கசிந்த துளிகள் இசை வெள்ளமாய் மூழ்கடிக்கின்றது.பாண்ட்ஸ் பவுடரை அப்பிய பருவ ம்ங்கையாய் பனிப்புகையினூடே முகம் காட்டும் மலைப்பாதையும், அபாயம் காட்டினும் ஆச்சரியம் கூட்டும் கொண்டை ஊசி வளைவுகளும், ஆளிருக்கும் சமயத்தில் கூட யாவருமறியா வண்ணம் சீண்டிப் போகும் புது மனைவியின் கொஞ்சலை மிஞ்சும் சிறு தூறல் துளிகளும், நம் காலசைவில் வேகம் கூட்டும் வாகனமும் இன்னும் மொழிக்குள்ளும், விழிக்குள்ளும் அடங்காத காட்டு வாசனையும் கூடவே இந்தப் பாடலும்....


    

Sunday, December 6, 2009

பா...இந்திப்படம்...இளையராஜா...சிறுபார்வை

‘my paa is good'


'I dont know God, but i know my paa only'


'Paa is like an umbrella, protects us from rain and heat'


             இதெல்லாம் ‘பா’ படம் ஓடுற ஆட்லேப்ஸ் வளாகத்தின் ஒற்றை போர்டில் ஒட்டப்பட்ட சின்னச்சின்ன ஸ்லிப்புகளில் வாண்டுகள் கிறுக்கியது.அவர்களின் உயரமே உள்ள போர்டில் எழுதியிருந்தவைகளில் 90 சதம் உண்மையாகவும் இருக்கலாம்.அல்லது கூடவே அப்பா இருப்பதால் பயந்து கொண்டு நல்ல விதமாக எழுதியிருக்கலாம் அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில்கூட எழுதி இருக்கலாம்.’பா’ படத்துக்குக் குழந்தைகளின் ஆதரவைக் கூட்ட இதுவும் ஒரு விளம்பர உத்தி.


   என்கிட்ட கேட்டிருந்தா என்ன எழுதியிருப்பேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.சின்ன வயசுல ‘அப்பா நல்லவர்’ன்னு தமிழ்ல எழுதி இருப்பேன்.இப்போ என்ன தோணுதுன்னு தெரியலை... யோசிச்சுப் பார்த்தேன். சிறுவயது அப்பா பிரம்மாண்டம் இப்போது மேலும் விஸ்வரூபமாகி நெஞ்சினை முட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அதையெல்லாம் எழுத முடியுமான்னு தோணலை. உங்களை எழுதச் சொன்னா என்ன எழுதுவீங்கன்னு தெரியாது.அதே ஒன்றை ‘ப்ரோஜேரியா’ எனும் அரிய நோய் வந்து, தந்தை யார் எனத் தெரியாமல்,13 வயதிலேயே வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ’ஆரோ’விடம் கேட்டால்...அதுதான் ‘பா’. இரண்டரை மணி நேர உணர்ச்சிகள்...


   ‘ஆரோ’ன்னா...??


இதே கேள்வியை அவனை முதல் முதலாப் பார்க்கிற அவன் தாத்தா கேட்பாரு.


‘ஆரோன்னா ?’


‘A U R O'- இது ஆரோ.


‘ஓ. அப்ப ‘ஆரோ’ன்னா ஆரோபிந்தோ(அரவிந்தரா)...?’


‘இல்ல... ‘ஆரோ’ன்னா ‘ஆரோ’. அவ்வளவுதான்’- ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருந்தவாறே ஆரோவின் பதில்.


இதுதான் ஆரோ. 



   ‘ப்ரொஜேரியா’-முதலிலேயே மருத்துவர் விளக்கிவிடுகிறார். குழந்தைகளுக்கு வரும் வியாதி.தன்னைவிட  ஐந்து மடங்கு வயதாய்த் தோன்றும் உடல்,மூளையோ இயல்பு நிலை.13,14 வயதுகளைத் தாண்டுவதே கடினம்.உலகத்தில் இது நாற்பது,ஐம்பது பேர்களுக்குத்தான் இருக்கிறது. அதில் ஒருவன் தான் நமது ‘ஆரோ’. ஆரோவாக அமிதாப்.அடையாளம் தெரியாத அளவு மேக்கப்.துருத்திக் கொண்டு தெரியவில்லை.அபாரம். மேக்கப்ல உருவம் மாறலாம்.உயரம் எப்படிக் குறைவாகும்...?அந்த வேலையை பி.சி.ஸ்ரீராமோட விசேஷ லென்ஸ் பாத்துக்கிடுச்சு.


        நல்ல அரசியல்வாதியாக (முரண்...??!!) நினைக்கும் பணக்காரர் அமோல்(அபிஷேக்) , கேம்பிரிட்ஜில் படிக்கையில்,வித்யா(வித்யா பாலன்)வுடன் காதல்,கொஞ்சம் முற்றிப் போய் குழந்தை உருவாகிவிடுகிறது.இப்போதைய குழந்தை தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என அபிஷேக் அதைக் கலைக்கச் சொல்ல, வித்யா(கைனகாலஜிஸ்ட்) மறுத்து, உன் வழியில் தென்படாது எங்கள் சுவடுகள் என விலகிவிடுகிறார். இவையனைத்தும் இரண்டு நிமிட ‘முடி முடி ‘ பாடலிலேயே முடிந்துவிடுகிறது.இளையராஜாவும்,பி.சி.யும் கலந்த ஒரு இளமைக் காக்டெயில் இந்தப் பாடல்.


            புரொஜேரியா குழந்தையாக ஆரோ.அவனைப் பார்த்த ஒரு பெண், வித்யாவிடம் கேட்க, ‘மில்லியன் குரோம்சோம்ல ஒரு சின்ன இடமாற்றத்துல இப்படி ஆயிடும். ரொம்ப லக்கி இல்ல...’ எனச் சிரித்தவாறு கூறுகையில்,பேஸ்தடித்துப் போய்விடுகிறார் கேட்டவர்.


           இவ்வளவு பில்டப் இருக்கே... இதுக்கப்புறம் கர்ச்சீப்பைக் கையில் வச்சுக்கிட்டுதான் படம் பார்க்கணுமான்னு கேட்கறீங்களா...?அந்தக் கேள்வியை அடிச்சு தூள் பண்ணிடுறான் ஆரோ.கிரியேட்டிவிட்டி,குறும்புத்தனம்,பாசம்,எடக்குமடக்குக் கேள்விகள் இவைதான் அவன் சொத்து.


       ஒரு பள்ளிவிழாவில் அவனை அமோல் எம்.பி. பார்க்க, பின் மீடியா வெளிச்சம் ஆரோ மேல் பாய்கிறது. அதை விரும்பாத ஆரோ,அமோலுக்கு மெயிலனுப்ப, துளிர்விட ஆரம்பிக்கிறது புதிய உறவு.அதன்பின் ஆரோவுக்கு அமோல்தான் தன் அப்பா எனத் தெரியவந்து, தன் பெற்றோரை ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை.


        இதுதான் கதை என்றாலும் சொன்னவிதம் மழையில் கழுவிவிட்ட தார்ச்சாலை போல பளிச்.பள்ளியில் ஆரோவின் குறும்புத்தனம்,தன்னை நோக்கி வரும் சிறுமியைக் கண்டதும் ‘எஸ்’ஸாகிவிடும் உஷார்,பாட்டியை ‘பம்’ என்று செல்லப் பேர் வைத்துக் கிண்டல் செய்வது,எம். பியுடன் ராஷ்டிரபதி பவன் பார்க்கச் சென்றதாக நண்பர்களிடம் பீலா விடுவதும், குட்டு உடைந்தவுடன் வழிவதும் எனக் கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிக்ஸர்தான். கேட்கும் கேள்விகள், சொல்லும் பதில்கள் எல்லாமே ‘நச்’...


   அமோல்: உன் பெற்றோர் என்ன பண்றாங்க...
  
   ஆரோ    : they are preparing kids. but i dont want promotion.


   இதைவிட ஆஸ்பத்திரியில் ஆரோவிடம் அனுதாபம் காட்டுவதாகப் பேசும் அவன் தாத்தாவிடம்(பரேஷ் ராவல்), இவன் அளிக்கும் பதில் சரியான நெத்தியடி.


ஆரோ மட்டுமல்ல. படத்தில் அனைவரின் வசனமுமே கலக்கல்தான்.திருமணம் வேண்டாமென மறுக்கும் அமோலிடம் அவன் அப்பா சந்தேகத்துடன் கேட்கும் கேள்வி ‘ஆர் யு  கே (gay) ?'.


  ஆரோ விலகிச்சென்றாலும், நெருங்கி நெருங்கி வரும் சிறுமி அழகான தேர்வு... பின் அவள் ‘ஸாரி’ கேட்பதும் மிக அழகு. அதற்கான காரணமும் சரியான திருப்பம்.


    ஆரோவின் அம்மாவாக வித்யா பாலன். அமிதாப்புக்கு அடுத்து ஸ்கோர் செய்வது இவர்தான்.கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார்.காதல்,கோபம், பாசம் அனைத்திலும் இவரின் முகம் காற்றிலாடும் தீபம் போல அழகாகப் பிரதிபலித்திருக்கிறது.(special credits to p.c.sriram)



   அபிசேக்தான் ‘பா’.நேர்மையான அரசியல் வாதி,பாசமிகு அப்பா.’நீட்டலும், மழித்தலும் வேண்டாம்’ என்பது போல் அளவான நடிப்பு.


  உண்மையான ஹீரோ டைரக்டர் பால்கிதான். அசத்தியிருக்கிறார்.இது இரண்டாவது படம்தான்(’சீனிகம்’ முதல் படம். பார்த்துவிடுங்கள்).சீரியல் போன்ற ஒரு கதையை, இரண்டரை மணி நேரத்தில் கொடுப்பதற்கு இவரது முந்தைய விளம்பர உலகம் கை கொடுத்திருக்கிறது.


   இளையராஜா...படம் எது, இசை எது என நம்மைப் பிரித்துப் பார்க்க முடியாதவாறு கட்டிப் போடுகிறார். அவருக்குப் பாடல்கள் கூட கதையின் தன்மையைச் சொல்லும் பின்னணி இசைதான்.க்ளைமேக்ஸ் இல் வசனங்கள் இல்லை. இசைதான் பேசியது.பாடல்களில் ஒரு இளமைத்துள்ளல். ‘முடிமுடி’ மற்றும் அதன் வெர்ஷன்களான ‘கலி உதி’,’உதி உதி’அட்டகாசம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ இங்கு ‘கும்சும்கும்’ ஆக நீட்டாக ரீபெர்த் ஆகி இருக்கிறது. படத்தில் ஒரு நிமிடம் வருவதுதான் குறை. ‘ஹிச்கி ஹிச்கி’ -சரியான இடத்தில் வருகிறது.தீம் மியூசிக் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்டது.(தமிழில் வந்த ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் வரும் ‘காட்டுவழி’ பாடல்).வயலின், கீ போர்டு இரண்டில் இருந்தும் அனாயசமாக வழியவிட்டிருக்கிறார் இசையருவியை.


   பி.சி.ஸ்ரீராம்-க்ளீன்...படம் முழுவதும் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது.கேமரா லென்ஸை இவர் விபூதி போட்டுக் கழுவிட்டு படமெடுப்பாரோ...?
   எடிட்டிங்- கனகச்சிதம்.
படம் முடிகையில் தொண்டை அடைத்துவிடுகிறது. இது ஒரு புது அனுபவம்.

           

Saturday, November 14, 2009

பா...... இளையராஜா

 கேட்டுப் பாருங்க.... இந்த நாள் இனிய நாள் ஆகும்.
ராஜாவின் புதிய பட இசை ‘பா’-ஹிந்தி

*சங்கத்தில் பாடாத கவிதையும் இருக்குது

http://www.in.com/music/album-paa-%2067429.html

im busy with enjoying songs... no time to explain....bye

Tuesday, June 2, 2009

இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

என்னை இன்னமும் தாலாட்டிக் கொண்டிருக்கும் இன்னொரு அன்னை. என் இதய அறைகளில் ஆக்ஸிஜனை அனுமதிக்க மறுக்கும் அறைகள் கூட காற்றில் கலந்திருக்கும் உன் இசையைத்தான் பூச்செண்டோடு வரவேற்கின்றன.நீ தொட்டுப் போட்ட மெட்டுக்களில்தான் எத்தனை எத்தனை குட்டி உலகங்கள் எனக்குள் திறந்தன.பெண்ணைக் காதலித்ததில்லை. உன் பாடல் கேட்கையில் காதலிப்பவனை விடவும் அதிக அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன்.என் கண்களின் சுரப்பிகளைத் தூண்ட உன் வயலினின் ஓரிரு மீட்டல்களே போதுமானது.உன் குழலும்,தபேலாவும் கட்டிவிட்ட சிறகுகளில்தான் கால வெளியெங்கும் மிதக்கிறேன்.உன் ஸ்வர எழுத்துக்களில் நகரத்து இறுக்கமும் தெரியும், கிராமத்துத் தெருக்களும் விரியும்.உனக்கென்ன ஆயிரம் சாமி உண்டு...ஆசிரமம் உண்டு...தியானமுண்டு....உன்னை எண்ணும் எனக்கு இவை எல்லாமாய் நீயுண்டு... உன் பரவெளிப் பேரானந்தம் அங்கே...என் பேரானந்தம் உன்னிசையில் இங்கே....இன்று ஜூன் 2ம் நாள், இசைக்குப் பிறந்தநாள்...செவிகள் நல்லிசைக்குத் திறந்தநாள்...வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்றால் அரசியல் கோஷமாகிவிடும், இச்சிறு பதிவில் உனக்காகச் சில வார்த்தைகளை மட்டுமே என்னால் கோர்க்க  முடிந்தது.

இசையோடு இணைவோம்.....

பி.கு: தாமத வாழ்த்திற்கு மன்னிக்கவும்.
ஓவியம் மீள்பதிவுதான்.

Tuesday, August 5, 2008

இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம்




அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு. அந்த உறவின் இழையூட்டம்தான் இளையராஜா என்கிற இசை.அ(தை)வரைப் பற்றிப் பேசத் தெரியாட்டியும் உணரத் தெரியும்.
ஆனா கடந்த இரு வாரங்கள்ல நம்ம தமிழ்மணத்துல அவரை விமர்சிக்கும் முறையில் இரு பதிவுகள் வந்தது.அதைப் படிக்க ஆரம்பிச்ச உடனே கோபம் வந்தது.ஆனா பின்னூட்டங்களைப் படிச்சவுடனே மனசு லேசாயிடுச்சு.உதாரணம்... நம்ம பரிசல்காரரோட பின்னூட்டம்.(புகழனோட பதிவுல)
பரிசல்காரன் said... அன்பு நண்பரே...
அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?
குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?
கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!
ராஜா ராஜாதான்!

அப்புறம் சர்வேசனோட பதிவு ஒண்ணு. அதைப் படிச்சவுடனே பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா தாறுமாறா சில பின்னூட்டம் வரவும், சரி இங்க வேணாம்ன்னு விட்டுட்டேன். அதில ராஜநடராஜன் சொல்லிருக்காரு..
"1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்."

எந்தப் பாட்டில ராஜா ,வைரமுத்து வரியை அமுக்கி இருக்காரு?ராஜா,எம்.எஸ்.வி யைத் தவிர எல்லா இசைஅமைப்பாளர்களும்க‌விஞ‌ர்க‌ளின் வ‌ரிக‌ளை மூச்சுத் திண‌ற‌ச் செய்வ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள்.(ரகுமான்,யுவ‌ன்,இமான்...)வித்யாசாக‌ர் ச‌ற்று விதிவில‌க்கு. ராஜாவின் பாட‌ல்க‌ள் ஹிட் ஆன‌த‌ற்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ர் தேர்ந்தெடுக்கும் பாட‌ல் வ‌ரிக‌ள்,அத‌னை அனைவ‌ரின் வாயிலும் எளிதாக‌ நுழையும்ப‌டி போட்ட‌ மெட்டு.(நினைவெல்லாம் நித்யா,காத‌ல் ஓவிய‌ம்,முத‌ல் ம‌ரியாதை இன்னும் ப‌ல‌ப்ப‌ல‌).அவ‌ரே ஒரு ந‌ல்ல‌ பாட‌ல் ஆசிரிய‌ர் என்ப‌து வேறு விஷ‌யம்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
"அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்."
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.

"வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை."
கானா பிரபா கூறிய வரவேற்கத்தக்க கருத்து. இப்போ 'தனம்' படத்துல கூட ஒரு பாட்டு வரும் 'தனம்,தனம்'ன்னு. வாலி சும்மா ஏனோதானோன்னு கிறுக்கி இருப்பார்.ஆனால் ராஜாவின் தனிப்பட்ட உரிமைகளில் நாம் தலையிட முடியாது.
"படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?"_சர்வேசன் கூற்று. மிக முக்கியமான கருத்து இதுதான். நல்ல படம் அமையலை.(நான் கடவுள் அப்படி இருக்காது என நம்பலாம்.) ஆனா சமீப காலங்களில் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படங்களில் நல்ல,நல்ல மெலோடிகள் புதிதாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில்தான் ராஜாவின் மலையாளப் பாடல்கள் கேட்டேன். தெலுங்கில் கூட கடந்த வாரம் 'மல்லிப்புவு' படப்பாடல்கள் வெளியிடப்பட்டது.(இன்னும் கேட்கவில்லை).
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...



அப்புறம் ரொம்ப சமீபத்தில வெளியான 'தனம்' படத்துல இருந்து ஒரு பாடல் பவதாரிணி பாடுனது.'ஒரு நாள் ஒரு கனவு' படத்துல வரும் 'காற்றினிலே வரும் கீதமே' பாடல் வரிசையில் இன்னுமொரு எளிய, இனிய,மனதை அள்ளும் பாடல்.(வரிகள்‍ விஷாலி கண்ணதாசன்)

இதே படத்துல வர்ற இன்னொரு பாடல் ராஜா பாடுனது.

இங்க நான் பாடல்களை விமர்சிக்க வரவில்லை. இன்னும் இளையராஜா அருமையான பாடல்கள் கொடுப்பார் என நம்புவோம். ஆனால் ஒன்று, அவை நம்மை(ராஜா ரசிகர்கள்) மகிழ்விப்பது போல் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராஜாவின் வரிகளில் சொன்னால் "நான் பாப்கார்ன் தர முடியாது. சாப்பாடுதான் தருவேன். ஆனா பாப்கார்ன் ஏன் அதிகம் விக்குதுன்னு கேட்காதீங்க. அது வேற விஷயம்." நமக்கு தேவை இல்லாதது.
இறுதியாக...
இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...