Saturday, December 13, 2008

நீர் வண்ண ஓவியம்...ஒரு சுய சோதனை முயற்சி

         
         இதுவரை எனது பதிவில் போட்ட பழைய ஓவியங்களுக்கு கிடைத்த வரவேற்பு என்னைச் சிறிது வெட்க வைத்தது. அதற்குக் கிடைத்த பாராட்டுக்களைப் பார்க்கையில், அவற்றிற்கு இப்போது நான் உரித்தானவனா என என்னுள் எழுந்த கேள்வியே என்னை இப்படம் வரையத்தூண்டியது.
இரு வாரத்திற்கு முன் என் வீட்டு மொட்டைமாடியில் உலாவச் சென்றிருந்த போது, கேட்பாரற்றுக் கிடந்தது கிழிந்த காலண்டர் ஒன்று. காலண்டர் என்றாலே கிழிந்துதான் இருக்கும் எனக் கேட்காதீர்கள். ஏனெனில் இது மாதக் காலண்டர்.புரட்டிப் பார்க்கையில் அழகிய வண்ண ஓவியங்கள் (ஆறில் நான்குதான்) இருந்தது.
ஜான் என்னும் ஓவியர் 'இந்தியப் பெண்கள்' என்னும் தலைப்பில் 98ஆம் ஆண்டு வரைந்தது. தற்போது அவர் உயிருடன் இல்லை எனும் குறிப்புகள் இருந்தன.
அதில் முதல் ஓவியமாக இப்படத்தைப் பார்த்தேன்.இப்படத்தைப் பார்த்தால் கவிஞருக்குக் கவிதையும், படைப்பாளிக்குக் கதையும் உடனே தோன்றும். எனக்குத் தோன்றியது பிரஷைக் கையிலெடுக்க வேண்டுமென்பதுதான். இதற்கு முன் 2007 ஆரம்பத்தில் வரைந்த இவ்வோவியத்திற்குப்(பென்சிலில்) பின், 2001ல் வரைந்த இவ்வோவியத்திற்குப்(வண்ணத்தில்) பின் , வெகு நீண்ட இடைவெளி விட்டு ஒரு விதத் தயக்கத்துடன் தொடங்கினேன். பரவாயில்லை. ஓரளவு திருப்தி தந்தது. இன்னும் இதில் திருத்தப்பட வேண்டிய பல குறைகள், செய்ய வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பினும் எனக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை, நேரமின்மை காரணமாக இத்துடன் திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று.,(பின்னர் நேரம் கிடைக்கையில் கை வைத்துக்கொள்ளலாம்).
வாட்டர்கலரில் போதிய அனுபவமில்லாததால் ஒரு வித ஃபினிஷிங் இருக்காது. இருந்தும் இவ்வோவியத்திற்கு வண்ணம் தீட்டுகையில் நிறையக் கற்றுக் கொண்டேன்...('0' நம்பர் பிரஷ் இருப்பது, பிரஷ்களில் ரௌண்ட், ஃப்ளாட் என வகைகள் இருப்பதும், வண்ணம் கலக்குவதும் என...)

பி.கு.: தற்போது உலகளாவிய அளவில் தொழில்துறையில் நிலவி வரும் தேக்கநிலை ஆட்டோமொபைல் துறையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் நாட்கள் வெகுக் கடினமாக நகர்கின்றது. அதிக வேலை, அதைவிட வேலையில் நம்மை இருத்திக்கொள்ளும் நிலை, அதையும் விட என்னை நானே பலப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு சூழலும் அமைந்து விட்ட படியால் வலைப்பூக்களில் முன்போல உலாவ நேரமில்லை. பதிவுக்குச் சிந்திப்பதற்கும் முடியவில்லை. இதுவரை எனது வலைப்பூவுக்கு வந்தும், வாழ்த்தியும், ஊக்கம் கொடுத்துப் பின்னூட்டியும், பின்னூட்டாமலும் சென்ற அனைத்து நல் உள்ள நண்பர்களுக்கும் நன்றிகளை வார்த்தையில் சொல்லவியலாமல் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறேன். ரெகுலராக நான் செல்லும் பதிவுகளுக்கு, அவ்வப்போது செல்லலாமென இருக்கிறேன். பின்னூட்டமிடுவது குறைந்து விடும் ஆனால் முற்றிலும் நின்று விடாது.
இடைவேளை.....

   படம் பெரிதாக இருந்ததால் ஸ்கேன் செய்து போட முடியவில்லை. புகைப்படமெடுத்துப் போட்டிருக்கிறேன்.

Sunday, November 23, 2008

ச்சும்மா போட்ட படம்...


 ச்சும்மா போட்ட படம்...'அண்ணாமலை' சீரியல் டைட்டில் பாடல்ல வந்த ஒரு பெரியவரின் படம்.ஒரு இன்ஸ்டன்ட் ஓவியம் அவ்வளவுதான்.

Sunday, November 16, 2008

நினைவில் நின்ற புத்தகங்கள்- இரண்டாம் பாகம்

                சென்ற பதிவின் தொடர்ச்சி இது. முதல் பதிவை ப் படிக்காவிடினும் பரவாயில்லை.அப்படியொன்றும் கெட்டுப்போய் விடாது.
கல்லூரி சென்றபின் படிப்பார்வம் குறைந்துவிட்டது என்பது கசப்பான உண்மை.இளங்கலை முடித்தபின் வேலைக்குப் போராட்டம்.வேலை கிடைத்தபின் நல்ல வேலைக்குப் போராட்டம். இத்தகைய காலங்களில் எனக்கு ஆறுதலாயிருந்தது விகடன் மட்டுமே.அதன்மூலம்தான் என்னால் ஓரளவிற்கு பிற எழுத்தாளர்களைப் பற்றி அறிய முடிந்தது. என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டுமென மனப்பட்டியல் போட முடிந்தது. பின்பு முதுநிலை படிப்பின் போது ஓரளவிற்கு புத்தகங்கள் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பின் வேலை கிடைத்து வட இந்தியா வந்தபின் மறுபடியும் வாய்ப்புக் குறைந்துவிட்டது. இருந்தும் தமிழ் இணையத்தின் மூலம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். படிக்க வேண்டிய, வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே வருகிறது. இத்தோடு முன்னுரையை நிறுத்தி விடுகிறேன். இதுவரை படித்த புத்தகங்களின் நினைவு அலையில் சற்றுக் கால் இல்லையில்லை விரல்நுனியாவது நனைப்போம்.  
துளசிதளம்,மீண்டும் துளசி: பள்ளி இறுதி நாட்களில் படித்தது. எண்டமூரி வீரேந்திரநாத் தெலுங்கில் எழுதி, சுசீலா கனகதுர்காவினால் மொழிபெயர்க்கப் பட்டது. நான் எப்போது ப‌டித்தாலும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்போடிருக்கும்.  


ஜெயகாந்தன் சிறுகதைகள்: கல்லூரியில் படிக்கையில் நண்பனொருவன் படிக்கக் கொடுத்தது. இதில் படித்த சிறுகதைகளின் வரிகள் பல, என் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் செயலாற்ற, செயலற்றுப் போக உதவி இருக்கின்றது. இதில் மனதில் நின்ற சிறுகதைகள்:‍  
1.சிலுவை: கன்னியாஸ்திரீயாக விரும்பிய இளம்பெண்ணில் வேர் விட்ட‌ பருவக்காதல் நினைப்பும், அதன் விளைவும். முடிவு 'நச்'.  
2.அக்னிப்பிரவேசம்: ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை எழுத்துக்களில் ஏற்படுத்தியது. இக்கதை பற்றி அளவுக்கதிகமாக அலசி ஆராயப் பட்டதால் விட்டுவிடுவோம். 3.இருளைத் தேடி: 'நிர்வாணம் தான் அழகு. காட்டிலுள்ள் மான், மயில்களுக்கு உடை அணிவித்தால் நன்றாக இருக்குமா...?ஏன் மனிதன் மட்டும்.?' விபச்சாரத் தொழிலை விடுத்து வேறு வேலை தேடுபவள், தோழியின் ஆலோசனைப் படி அவளின் தொழிலான, ஓவியர்களுக்கு நிர்வாண மாடலாக இருக்க அரைகுறையாகச் சம்மதித்துப் பின் ஓவியக் களத்தில் அனைவரின் முன் வெளிச்சத்தில் நிர்வாணமாய் இருப்பதை விட இருளில் விபச்சாரியாய் இருப்பது மேல் என மறுபடியும் செல்கிறாள் இருளைத்தேடி. 4.குருபீடம்: சோம்பேறியைத் திருத்த குருவே, சிஷ்யனாய் மாறி இறுதியில் யார் குருவென உணரவைத்த கதை.  
'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது', 'புதுச் செருப்பு கடிக்கும்' இன்னும் பல பெயர் மறந்த, கதை மறக்காத கதைகள். அடித்தரப்பு மக்களின் வாழ்க்கையை 'கேன்டிட் கேமரா' போல் எடுத்துச் சொன்னவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள்.


சித்திரப்பாவை: அகிலனின் படைப்பு. கதைநாயகன் ஓவியனாய் இருந்ததால் அதிக ஆர்வமெடுத்துப் படித்தேன். கொஞ்சம் பழையபடம் பார்த்த உணர்வு,.  


பஞ்சும், பசியும்: தொ.மு.சி. ரகுநாதன் படைப்பு. இதுவும் பழைய தமிழ்ப்படம் பார்த்த அலுப்பூட்டும் உணர்வைத்தான் கொடுத்தது. கம்யூனிஸ்ட் போராட்டம் கலந்திருந்தது. மனதில் ஒட்டவில்லை.  


மெர்க்குரிப்பூக்கள், இரும்புக் குதிரைகள்: எம்.ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்த போது பிரேக் பற்றிப் பாடமெடுத்த எனது ஆசிரியர் சொல்லிக் கேள்விப்பட்டுதான் 'இரும்புக் குதிரைகள்' படித்தேன்.(அவர் மலையாளி.ஆனால் அவர் தமிழ்,ஆங்கில இலக்கியத்தில் ஆர்வமிக்கவர். நன்கு படமும் வரைவார். துறை சார் அறிவிலும் அவர் மாஸ்டர்.) எனக்கு முடிவைத் தவிர, நாவல் நன்கு பிடித்திருந்தது.இதைப் பற்றி நண்பர் வசந்தகுமாரின் இப்பதிவிலும், பின்னூட்டத்திலும் படித்துக் கொள்ளுங்கள்.
'மெர்க்குரிப் பூக்கள்' இப்போதும் அடிக்கடி வாசிக்கிற புத்தகம். கணேசன், கோபாலன், சாவித்திரி,சியாமளி,சங்கரன், இன்ஸ்பெக்டர் பெருமாள், ஃபாக்டரி முதலாளி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்(நல்லவரோ, கெட்டவரோ) செதுக்கி இருப்பார். இன்றும் எங்காவது 'வீடு' எனும் வார்த்தை படிக்கையில், இந்நாவலில் வரும் "வீடென்று எதைச் சொல்லுவீர்" கவிதை நினைவுக்கு வரும். இதை விடுத்து பாலகுமாரனின் 'பூந்தோட்டம்' இன்னும் சில பெயர் மறந்த நாவல்கள். பாலகுமாரனின் எழுத்துநடை எனக்கு இன்னும் விருப்பம். அது ஒரு சுகானுபவம்.

சே குவேராவின் 'மோட்டார் சைக்கிள் பயணக் குறிப்புகள்': அடிக்கடி வாசிக்கும் மற்றுமொரு புத்தகம். அவ்வளவு வேலையிலும் அவர் நாட்குறிப்பு எழுதி இருக்கிறார் அதுவும் இலக்கியவாதி போல். மனிதர்களை மதித்த அவரின் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுபற்றிப் பிறிதொரு தனிப் பதிவே போடலாம்.  


துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணின் எழுத்து இதயத்திற்கு அருகாமையில் கண்காட்சி நடத்தும் வல்லமை பெற்றவை. பல மனிதர்கள், பல கதைகள். எதைப் படித்தாலும், நாம் நினைத்து ,நம்மால் எழுத்தில் கொண்டுவரமுடியாமல் விடப் பட்ட கணங்களை அழகாக வெளிப்படுத்துவார். எனது இப்போதைய ஃபேவரைட் இவர்தான். 'கதாவிலாசம்' படித்திருக்கிறேன்.


செம்பருத்தி: தி.ஜானகிராமனைப் பற்றிக் கேள்விப் படாத காலத்திலேயே மூன்று, நான்கு முறைகள் இப்புத்தகத்தைப் படித்திருக்கிறேன். கதையும், சம்பவங்களும் நினைவிருக்கும் அளவுக்கு, கதாபாத்திரப் பெயர்கள் நினைவிலில்லை. என்னை மிகவும் கவர்ந்த நாவல். மறுபடியும் படிக்க ஆசை. 'மோகமுள்' இன்னும் படிக்கவில்லை. இதுவரை நான் படித்த எல்லாமே ஒருவித ஒழுங்கில்லாமல் கிடைத்ததை எல்லாம் படித்து வந்திருக்கிறேன். 
இப்பதிவில் நிறைய விடுபட்டுள்ளது எனினும் இதற்கு மேல் பதிவைத் தொடர எனக்கு விருப்பமில்லை.  
இத்தொடர் பதிவைத் தொடர நான் அழைப்பது  
1.ரவி ஷங்கர்   
2. தர்ஷினி 
3.குடுகுடுப்பையார்  


ஆள விடுங்கப்பா... பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள ஷ் அப்பா... ஓவரா கண்ணக் கட்டுதே...

Saturday, November 15, 2008

ச்சும்மா...

ஸ்டிக்கர் பொட்டு
நகத்துண்டுகள் 
கிழிந்த டிக்கட்டுகள்
சாக்லெட்கவர்
தலைமுடி
நிரம்பியது பர்ஸ் 
உனது காதலைத் தவிர...  

ஐடி வேலை
ஐந்திலக்க சம்பளம் 
ஐந்தாறு கடனட்டைகள் 
ஐநூறுரூபாய் நோட்டுகள் 
நிரம்பியது பர்ஸ் 
வெயிட்டிங் லிஸ்ட்டில் 
உனது காதல்....

Thursday, November 13, 2008

நினைவில் நின்ற புத்தகங்கள்-முதல் பாகம்

பதிவுச்சோம்பேறியான என்னை இப்புத்தக வாசிப்புத் தொடர் விளையாட்டிற்கு அழைத்த முரளிகண்ணன் , கடையம் ஆனந்த்  இருவருக்கும் நன்றிகள். எனது முதல் பொதுப்பத்திரிக்கை வாசிப்பு தொடங்கியது 'தினத்தந்தி'யில் முதல் பக்கத்தில் வரும் 'சிரிப்பு' தான். அதனை 'சீப்பு' என வாசித்துப் பின் திருத்தியது இன்னும் நினைவில் உள்ளது. முடிவுறாமல் தொடரும் வாசிப்பின் முதற்படியாக எனக்கு வாய்த்தது, அதேபோல் தொடரும் 'சிந்துபாத்' தான். என் அப்பா வைத்திருந்தது டீக்கடை என்பதால் பத்திரிக்கைகளுக்குப் பஞ்சமில்லை. பொது வாடிக்கையாளர்களுக்காக 'தினத்தந்தி'யும்,எங்கள் வீட்டிற்காக 'தினகரனும்' வாங்குவோம்(அப்பா தி.மு.க அபிமானி).அதில் சினிமாச்செய்திகள் படிப்பது அப்போதே எனக்குத் தொடங்கிற்று( 3ம்,4ம் வகுப்பிலேயே). பின்பு எனது வாசிப்பு 'தினமணி'யில் சென்றது. அதில் வரும் ரகமி, ராண்டார்கை யின் கட்டுரைகளும், அறந்தை நாராயணன் எழுதிய 'குடியால் குடை சாய்ந்த கோபுரங்கள்' கட்டுரைகளும், பிரபஞ்சனின் தொடர்கதைகளுமாக எனது வாசிப்பார்வம் தொடர்ந்தது. பிரபஞ்சன் எழுதிய 'வானம் வசப்படும்' (வலைப்பூவின் தலைப்பே அதுதான்) தொடர்கதையும், அதில் வரும் 'தாவீது' (ஹீரோ என நினைக்கிறேன்) எனும் ஓவியரின் கதாபாத்திரமும், அதற்கு ஓவியம் வரைந்த மாருதியின் ஓவியங்களும் (தாவீது பாத்திரம் குறுந்தாடியுடன் இருக்கும்), ஆங்காங்கே வரும் ஃப்ரஞ்சு வார்த்தைகளும் ஓரளவு இன்னும் பசுமையாய் நினைவில் உள்ளது. ஆறாம் வகுப்பு வந்தபின் கதைகளின் மேல் இன்னும் அதிகக் காதல் வரக் காரண்ம் பாடப்புத்தகங்களில் ஒன்றாக அறிமுகமான 'சிறுகதைச் செல்வங்கள்' நூலே. அதில் வந்த கதையான 'பெயரில் என்ன இருக்கிறது' வை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.அதன்பின் ஒவ்வொரு உயர்நிலை வகுப்பு செல்லும்போதும், முதலில் படித்து முடிப்பது 'சிறுகதைச்செல்வங்கள்' தான்.
பத்தாம் வகுப்போ, அதற்கு மேல்பட்ட வகுப்பில் வந்த கதைகளான, கி.ரா.வின் 'கதவு', தி.ஜானகிராமனின் 'முள்முடி'இனும் சில கதைகள் இன்னும் என் நினைவில் படங்களாய் இருக்கிறது. அதிலும் 'முள்முடி' கதையில் வரும் ஆசிரியர் அனுகூலசாமியின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் நெகிழ்வைத் தந்த ஒன்று. இந்தப் பள்ளிப் படிப்புக்காலங்களில் எல்லாரையும் போல லயன் காமிக்ஸ் பைத்தியம் என்னையும் ஆட்டுவித்தது. லக்கிலுக் தான் என்னோட ஃபாவரைட் ஹீரோ. மற்றபடி செவ்விந்தியர் கதைகள்,ஜேம்ஸ்பான்ட், மாடஸ்டி, இரும்புக்கை ஆர்ச்சி, தினத்தந்தி ஞாயிறுமலரில் வரும் 'மான்டிரக்' என எல்லாமும் பிடிக்கும். எங்கள் வீட்டில் புத்தகம் எல்லாம் வாங்கித்தரமாட்டார்கள். எல்லாம் பக்கத்து வீடுகளில் வாங்கும் ஓ.சிதான். சிறுவர்மலர்,பூந்தளிர், அம்புலிமாமா,பேசும்படம், மய்யம்(கமல் ரசிகர்மன்ற வெளியீடு) என படித்தது எல்லாம் ஓ.சிதான்.பூந்தளிரில் வரும் 'வேட்டைக்கார வேம்பு', காக்கை காளியா, முட்டாள் வேலைக்காரன்(பெயர் நினைவிலில்லை.) கதாபாத்திரங்களும் அவற்றின் சித்திரங்களும் பசுமரத்தாணி இன்றும்.
இந்தக் கலவையான படிப்புச் சூழலில் ,பள்ளியில் நடக்கும் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டிகளில் கலந்துகொள்வேன். அதற்காக எங்கள் ஊரில் அமைந்திருக்கும் கிளை நூலகம் செல்ல ஆரம்பித்தேன். அங்குதான் விகடனும், குமுதமும் அறிமுகம். நூலகத்தில் படித்த புத்தகங்களுள் என்னால் மறக்க இயலாத, இன்னுமொருமுறை படிக்க ஏங்கிய புத்தகம் 'உமர்கய்யாமின் வாழ்க்கை வரலாறு' ஒரு கவிஞராக மட்டுமே அவரை அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு வானியல் வல்லுநர் என்பதும் வாழ்வின் கடைசி நேரத்தில்தான் காத்ல் தோல்வியால் கவிதை எழுதிப் பிரபலமானார் என்பதும் புதிதாக இருந்தது. இப்போது கூட எங்கள் ஊர் நூலகம் சென்றால் என்னையும் அறியாமல் நான் தேடும் புத்தகம் அதுதான். பின் நாவல்கள். எல்லாவித நாவல்கள் படித்தாலும் எனது ஃபாவரைட் சுபா மற்றும் பி.கே.பி தான். ராஜேஷ்குமார் நாவல்கள் கரு நன்றாக் இருந்தாலும், மிகவும் சைவமாகவும், முடிவு 'சப்'பென்றும் இருக்கும்.ஆனால் சுபா நாவல்கள் ஒருவித விறுவிறுப்பையும், நரேன் வைஜ் உரையாடல்கள் சுவாரஸ்யத்தையும் தந்தது. சுபாவின் இன்னொரு துப்பறியும் கேரக்டரான செல்வாவின் கதைகள் நகைச்சுவையாக இருக்கும். செல்வாவும், அஸிஸ்டெண்ட் முருகேஷனும் அவனது அத்தைகளும், ஆட்டோ டிரைவர் டெல்லியும் அவனது 'மிஸ்டர். லாரி, மிஸ்டர். டேபிள்' போன்ற மரியாதையான டயலாக்குகளும் எனது ஃபேவரைட். பி.கே.பி.யின் பரத் சுசீலா ஜோடி விளையாட்டுக்கள் , சுசீலாவின் டீஷர்ட் வாசகங்கள் வாசிப்பை இன்னும் சுவாரஸ்யமாக்கியது அந்தப் பதின்ம வயதுகளில்.
இரண்டாவது பாகம் ஓரிரு நாட்களில்...

Monday, October 27, 2008

தொட்டுத் தொடரும் ஒரு குட்டி விளையாட்டு(சினிமா)

நாகார்ஜூனன் தொட்டிழுக்க ஆரம்பித்த இச்சினிமாத்தேரின் வடம் பலரது ரேகை படித்து, ஒரு ஓரத்தில் எனது விரல்நுனியையும் உரசிப்போக வந்துள்ளது.உரச உதவிய நண்பர்க‌ள் விஷ்ணு மற்றும் அத்திரிக்கு நன்றி. கேள்விகள் பார்த்தவுடன் குழப்பம்,இதற்கு ஓரிரு வரிகளில் விடைஇறுப்பதா இல்லை பத்திகளில் விடைஇறுப்பதா என. மற்ற கல்வி,சமூகம் போன்ற விஷயங்களாய் இருந்தால் சுருக்கமாக முடித்துவிடலாம்.ஆனால் தமிழனின் கல்வி,சமூகம்,அரசியல் என அனைத்து நிலைகளிலும் தெரிந்தும்,தெரியாமலும் வேர் பாய்ச்சி நிற்பது சினிமாதான். நானும் ஒரு சராசரித் தமிழன் தானே. இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் தமிழ்மணத்தில் வந்ததும்,அவற்றைத் திறந்தவுடன் எனக்கேற்பட்ட சலிப்பும் என்னை இத்தொடரை எழுதவிடாமல் ஒருவாரம் அலைக்கழித்து விட்டது.சமீபத்தில் யார் அந்த நாகார்ஜூனன், நம்மை இப்படி யோசிக்க வைத்து விட்டாரே என எண்ணி அவரின் வலைப்பூ சென்றிருந்தேன்.அங்கேயும் தமிழ்தான் இருந்தது.ஆனால் எல்லாமும் எனக்குப் புரியவில்லை.ஆனால் சினிமாத்தொடர் விளையாட்டு ஆரம்பித்ததன் நோக்கம் ஓரளவுக்குப் புரிந்தது.எனது புரிதல் அளவில் இது ஒரு சர்வே அல்லது கள ஆய்வு போன்றது. ஓரளவு என்னில் தெளிவு கிடைத்ததால் எழுத ஆரம்பித்து விட்டேன்.
1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?  
இரண்டு வயதிலேயே பார்க்க ஆரம்பித்ததாக எனது வீட்டில் சொன்னார்கள்.


ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?  
பள்ளிக்குப் போகும் முன்பே 'மை டியர் குட்டிச்சாத்தான்' படம் பார்த்ததாக நினைவு.


இ)என்ன உணர்ந்தீர்கள்? 
மதுரை மதி திரையரங்கில் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.அரங்கினுள் படம் பார்க்கையில் 'முப்பரிமாணக் கண்ணாடி' அணிந்து பார்த்தோம். எனக்கு அதில் அவ்வளவாகப் புரிபடவில்லையாதலால் வெறும் கண்ணோடு,தெளிவில்லாமல் படம் பார்த்த ஞாபகம். எப்படி அப்பா,அம்மா மட்டும் அந்தக் கண்ணாடி அணிந்து படம் பார்க்கிறார்கள் என ஆச்சரியப் பட்டேன்.அந்நாள் நினைவுகளை மீட்டெடுக்க மறுபடியும் ஒரு முப்பரிமாணப்படம் பார்க்க வேண்டுமென்பது ஆவல்.


2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? 'சுப்பிரம‌ணியபுரம்'.காதலியின் துரோகம் மிகவும் பாதித்தது.எங்கள் ஊர்ப் பக்கம்(மதுரை அருகில்) இதெல்லாம் யதார்த்தம் என்ற உண்மைநிலை எனது கையாலாகாத்தனத்தைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தது.


3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? 'அஞ்சாதே'
எனது அறையில்; கணிணியில்  
மருத்துவமனையில் ஒருவனைப் போட்டுத் தள்ள வரும் கும்பல்,வெகு சாதாரணமாக அனைவரையும் அப்புறப்படுத்துவது (காவலர் உட்பட) கண்டவுடன் அதில் தெரியும் வாழ்வின் நிகழ்நிலை கண்டு அதிர்ச்சியுற்றேன். வெகு சாதாரணமாக நடைபெறும் கடத்தல், கற்பழிப்புகள் ஒரு நேரடி ஒலிபரப்பு காண்பது போல் அதிர்ச்சியின் அதிர்வெண்ணைக் கூட்டியது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மூன்றாம்பிறை,சேது,நந்தா,பருத்திவீரன்,வண்ணவண்ணப் பூக்கள்,மகாநதி,சிப்பிக்குள் முத்து,பாசவலை,உதிரிப்பூக்கள்,ஜானி,முள்ளும் மலரும்,பாரதி,தென்றல்,அஞ்சாதே,சுப்பிரமணியபுரம்.....


5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தங்கர் பச்சான் காலில் விழுந்த விவகாரம் 


ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம் கிராஃபிக்ஸ்.இது என்னை ரொம்பத் தாக்குது. அதனால நொந்து போய் இருக்கேன்.எது எதுக்குத்தான் கிராஃபிக்ஸ் தேவைன்னு தெரியாமப் பயன்படுத்துறது எனக்குப் பிடிக்கலை. என்னைப் பொறுத்தவரை கிராஃபிக்ஸ் என்பது செய்தால், பார்வையாளனுக்குத் தெரியக் கூடாது. 'காதலர்தினம்' பாடல் ல வர்ற தங்கப் பறவைகள்.அத கிராஃபிக்ஸ் ல பறக்க விட்டதுக்கு பத்து புறாவைப் பறக்க விட்டிருந்தா இன்னும் உணர்வுப்பூர்வமா இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ஷங்கர் படங்கள் பார்க்கிறதுக்கு விட்டலாச்சார்யா படங்கள் எவ்வளவோ தேவலை.  


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கடந்த ஆண்டு வரை விகடனின் எந்தத் தமிழ்ச்சினிமா விமர்சனத்தையும் விட்டதில்லை.அவர்களின் அளவீடு தெரியுமென்பதால் ,நான் பார்க்க வேண்டிய படங்களை வரிசைப் படுத்திக் கொள்வேன். செழியனின் 'உலக சினிமா' தொடர் ஆவலுடன் படித்தேன். பாலாவின் சுயசரிதைக் கட்டுரைகளை விரும்பிப் படித்தேன். பொதுவாக சினிமா பற்றி வாசிப்பதில் அதிக ஆர்வம்.  


7.தமிழ்ச்சினிமா இசை?  
இளையராஜா மட்டுமே.  
ஏனெனில் தமிழ்ச்சினிமா இசை என்பது பாடல்கள் மட்டுமல்ல. பின்னணி இசை,படத்தின் வெற்றிக்கு அதன் பங்கு,இசையின் வடிவங்களான‌ செவ்வியல்,நாட்டுப்புற,மேலைப் பாணி ஆகியவற்றைப் பொருத்தமாகக் கலந்து ஜனரஞ்சகமாக்கல் ஆகிய காரணிகளைக் கொண்டதால் இப்படியொரு எண்ணம்.


8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மொழியின் முழு அர்த்தம் தெரியாமல் படம் பார்ப்பதில் விருப்பமில்லை. இருந்தும் தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் 'தாரே ஜமீன் பார்' கலங்க வைத்த படம். ஆங்கிலத்தில் 'காட்ஃபாதர்' பன்ச் டயலாக்குகளின் ஃபாதர் எனலாம். தெலுங்கில் 'கோதாவரி' நதி போன்ற தெளிவான,அழகான படம். 'ஆனந்த்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.


9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா இல்லை.(அப்பாடா 4 கேள்விக்கு பதில் சொல்ற‌துல இருந்து எஸ்கேப்பு)


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்சினிமாக்கள் தொழில்நுட்பங்களில் காட்டும் அக்கறையை கதையில்,திரைக்கதையில் காட்டாதவரை விளங்காது.கதையை யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோடியில பட்ஜெட் போடுறானுங்க.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?  
எனக்கு முதலில் கஷ்டமாகத்தானிருக்கும். பின் புத்தகங்கள் படிக்க அதிக நேரம் கிடைத்ததே என மகிழ்வேன்.
தமிழர்களுக்கு (அப்போ நான் தமிழன் கிடையாதா?) என்ன ஆகும்...? யப்பாஆஆஆ இதுக்கு யோசிச்சா தலையே வெடிச்சுடும் போல இருக்கு.


நான் அழைக்க இருப்பவர்கள் இத்துறையில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். எனினும் அவர்கள் கருத்துக்களும் தேவை அல்லவா... 1.இரா.வசந்தகுமார்  2.ஹேமா 

Monday, October 20, 2008

ஒரு கணக்கு நோட்டும்,சில காதல் தீர்வுகளும்...


நீ விட்டு சென்ற
வாசத்தில் வசமிழந்து 
வகுப்பறையில்
நான் மட்டும் ...

விழிகளில் இடறியது
கதறும்
குழந்தையாய் உனது
கணக்கு நோட்டு ..
தாவி எடுத்தேன்
தாள்களை புரட்டினேன்



முதல் பக்கத்திலேயே
முத்திரைக்கவிதையாய்,
தாளுக்கும் வலிக்காத எழுத்துக்களில்
உனது பெயர்...



பிள்ளையார் துணையுடன்
துவக்குகிறாய் பாடத்தை
'உ' போட்டு...
பிழையின்றிப் படிக்கிறேன்
அதையும்
உருப்போட்டு...



அல்ஜீப்ராவும்,
அபிலியன் குலமும்
அம்புலிமாமாவை
அடையாளமும் காட்ட
புரியாத தேற்றங்கள்
புதிதான தோற்றங்களில்


வாசலில் நிழலாட,
வைத்த‌ க‌ண் இட‌ம் மாற‌
குயில் உந்தன்
குரல் தான் ...

என்ன பார்வை

எனது நோட்ஸ் ஆஃப் லெஸனில்..?
ஆயிர‌ம் வழியல்
அடியேன் முகத்தில் ..
"ஸாரி.. டீச்ச‌ர்..
வெட்கத்தை மறைத்து
வெளிநடப்பு செய்தேன் ..
வேகமாக ...





கவிதைக்குறிப்பு:
கருவான கவிதைக்கு உருத் தந்த நண்பர் விஷ்ணுவுக்கு நன்றிகள்.

ஓவியக்குறிப்பு:
ஓவியர் ம.செ..இந்த மாதிரி மொக்கைக்கெல்லாம் படம் போட மாட்டேன்னுட்டதால, அவர் பாணியில் நானே போட்டுக்கொண்ட ஓவியம்...இல்லை இல்லை 'காப்பி'யம் இது.

Thursday, October 2, 2008

முத்தம் தருவது உடலுக்குக் கேடு

ஹலோ... உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு அழகான பொண்ணுங்களைக் கண்டாலே பிடிக்காது.அது ஏன்னு எனக்கும் தெரியலை.அதுக்கு முன்னாடி நான் எங்க இருக்கேன்னு சொல்லிடுறென்.நான் இருக்கிறது இந்தோர்ல.இந்தோரைப் பத்திக் குறிப்பிட்டுச் சொல்லணும்னா, இது ஒரு தொழில் வளமுள்ள ஒரு நகரம்.(இப்படியே போனா நியூஸ் ரீல் ஆயிடும்.மேட்டருக்கு வருவோம்)இங்க பொண்ணுங்கதான் இன்னொரு சிறப்பு.இங்க இருக்கிற பொண்ணுங்களை ரெண்டு வகையாப் பிரிக்கலாம்.முதல் வகை அழகானவங்க. ரெண்டாவது வகை ரொம்ப அழகானவங்க. முன்னயே சொன்ன மாதிரி எனக்கு அழகான பொண்ணுங்களைப் பிடிக்காததுனால, ரொம்ப அழகான பொண்ணுங்களைப் பார்க்குறதுக்காகவே 'மங்கள்சிட்டி'ன்ற புண்ணியதலத்துக்கு தினமும் ஈவினிங் விசிட் பண்ணுவேன்.இத்தலத்தை 'ஷாப்பிங் மால்'ன்னு தெளிவா, தமிழ்ல சொன்னாப் புரியும்ன்னு நினைக்கிறேன்.இங்க பொருள் வாங்குறதெல்லாம் நம்ம பழக்கமில்லை.ஏன்னா அதெல்லாம் வாங்குனா காசு குடுக்கணுமாம்.அதனால சிம்பிளா ஒரு வசதியான இடத்துல உட்கார்ந்துகிட்டோ, நின்னுகிட்டோ வேடிக்கை பார்த்துட்டிருப்போம்.(என்ன பன்மை வந்துடுச்சேன்னு பார்க்குறீங்களா..நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் கூடச் சேர்ந்துட்டாரு). நான் அக்கறையா ஒரு தூரத்துப் பச்சையைப் பார்த்துட்டிருக்கப்ப, ராஜா (அட..புது கேரக்டரெல்லாம் கிடையாது.ஃப்ரெண்டோட பேருதான்)'உனக்கு ஃபோன்'னு அவன் மொபைலக் குடுத்தான்..


'சரி'ன்னு ஃபோனை வாங்கி அவன்( (ராகவன் எ ரெமோ)கிட்ட‌ பேசினேன்.

'சித்தப்பு..எனக்கு சௌத் இந்தியன் மிஸ் இருக்க இடம் தெரியும் 'ன்னு சொன்னான்.
ஃபிகர் கடந்து விட்ட கடுப்பில்,'அடேய்.. சௌத் இந்தியன் மிஸ் எல்லாம் பிட்டர். இந்தோர் மிஸ்தான் பெட்டர்' ன்னேன். 'அட பட்டரு...நான் சொன்னது சௌத் இந்தியன் மெஸ்ஸை. சோறு அன்லிமிட்டெட் ஆஃபர். வந்தா வா...'ன்னுட்டு காலை கட் பண்ணிட்டான்."சோறு கண்ட இடம் சொர்க்கம்"ன்னு சும்மாவா சொன்னாங்க. பொண்ணப் பார்த்தா, வழக்கம் போல பன்னத் தின்னுட்டு, தண்ணியைக் குடிக்க வேண்டியதுதான்னு ஒரு எச்சரிக்கை உணர்வோட மறுபடியும் ரெமோவுக்குக் கால் பண்ணேன். 'நண்பா... பழி வாங்குறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இப்போ மெஸ் எங்க இருக்கு சொல்லு ராஜா'ன்னு தாஜா பண்ண ஆரம்பிச்சதுல, பயபுள்ள உருகி வழி சொல்ல ஆரம்பிச்சான். 'இப்போ எங்க இருக்க..? மங்கள்சிட்டியிலயா... சரி அப்படியே ரோட்டக் கிராஸ் பண்ணி,இந்தப் பக்கம் ரெண்டு எட்டு எடுத்து வச்சேன்னா, ஒரு சந்து வரும் அதுல உள்ள நுழஞ்சு அப்டியே ,இப்டி வந்தேன்னா...' சொல்லிக்கிட்டே போனவன இடைமறிச்சு,'அடேய் வென்ரு, ஃபோன்ல பேசும் போது
கைய‌,கால நீட்டிலாம் வழி சொல்லக்கூடாது. ஒழுங்கா சொல்லு'ன்னேன்.ஒருவழியா வழிசொல்லும் படலம் முடிஞ்சு,நாங்க நடக்க ஆரம்பிச்சாச்சு.ஸ்பாட்டை நெருங்குறதுக்கு முன்னாடி உறுதி செஞ்சுக்கிறதுக்காக மறுபடியும் அவனைக் கூப்பிட்டு, நாங்க இருக்க இடத்தைச் சொன்னேன். 'அப்படியே நேரா வந்தா, இங்க ஒரு எலக்ட்ரிசிட்டி கம்பம் இருக்கும். பக்கத்துல நான் நிக்கிறேன்'ன்னான். 'நீ இருக்கிற உசரத்துக்கு ,கம்பம் பக்கத்துல நிக்காத. எவனாவது தப்பா நினைச்சுக்கிட்டு உன்மேல டுட்டோரியல் சென்டரு,கம்ப்யூட்டர் சென்டரு நோட்டீஸெல்லாம் ஒட்டிறப் போறானுங்க'ன்னு நான் முடிக்கிறதுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.


ஒருவழியா இடத்தைக் கண்டுபிடிச்சு, சம்பவம் நடந்த இடத்திற்குப் போனோம்.(தலைப்பை மறந்துட்டீங்களா..?) SICA (South Indian Cultural Association) அப்படீன்ற அமைப்பு நடத்துறதுதான் இந்த மெஸ். நம்ம சௌத் இந்தியன் டிஷஸெல்லாமே கிடைக்கும்,கொஞ்சம் காஸ்ட்லி. அதுவா முக்கியம்.(சோறே சொர்க்கம்).இங்க மேனேஜர் மட்டும் தமிழ் ஆளு(தூத்துக்குடி ஏரியா) அதனால தமிழ் கொஞ்சம் தேங்காயெண்ணை வாசத்தோடு இருக்கும். வேலை பார்க்குற, சமைக்கிற, பரிமாறுற எல்லாரும் வட இந்தியர்களே. இங்க சாப்பிட வர்றவங்க சரிபாதி பேருதான் (தமிழ் மற்றும் ஆந்திரம்). மீதி எல்லாரும் கிண்ணத்துல முக்கி,முக்கி சாம்பார் குடிக்க வர்ற 'ஹம் ஆப்கே கெயின்கோன் ஃபாமிலி'தான். அதனால யாரையுமே பாத்த உடனே அடையாளம் கண்டுபிடிச்சு தமிழ்ன்னா உடனே மொக்கை போட ஆரம்பிச்சுருவோம். திராவிட நிறத்தில இருந்தா தமிழ்ன்னு உடனே தெரிஞ்சுரும். கொஞ்சம் கலராவோ,ஆனால் மீசையுடனோ இருந்தா லைட்டா டவுட் வரும் தமிழா, ஆந்திராவான்னு. ஆனா அது அவ‌ர் எதை முதல்ல சாப்பிடுறார்ங்கிறதப் பார்த்தவுடனே தெரிஞ்சுடும். ஊறுகாயைத் தொட்டா ஆந்திரா. அப்பளம் கேட்டா தமிழ்நாடுன்னு. சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போது தமிழ் தெரியாத ஆள்ங்க வந்தா எங்களுக்குள்ளேயே தமிழ்ல கமெண்ட் பண்ணி சிரிச்சிப்போம். முடிஞ்சளவுக்கு ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்து, முழுக்க,முழுக்கத் தமிழ்லேயே பேசிப்போம்.(வட இந்திய அம்மணிகள் முள் கரண்டியால் தோசை சாப்பிடும் அழகே அழகு).


சம்பவம் நடந்த அன்னிக்கு நான்,ராஜா,ரெமோ மூணு பேரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். அப்போதான் அந்த நாலு பேரு ஒரு இரண்டரை வயசுக் குழந்தையோட உள்ள வந்தாங்க.ரெண்டு தம்பதிகள். அதுல ஒருத்தர் நல்லா உயரமா,குறுந்தாடியோட இருந்தார். இரண்டு பெண்களுமே பளீரெனத் தெரிந்தனர்.வட இந்திய உடையில் இருந்ததால், அவர்கள் அனைவருமே வட இந்தியர்கள் என ஒரு மினி பொதுக்குழு போட்டு முடிவு பண்ணிட்டோம்.அப்போதான் ராஜா சொன்னான்,'மச்சான்..எனக்கு டவுட்டாத்தான் இருக்கு. கொஞ்சம் அமுக்கி வாசிப்போம்'னு.சரினு மெதுவான குரலில் கிசுகிசுக்க ஆரம்பித்த வேளையில ,குறுந்தாடிக்காரர் தன் மகளிடம் 'அப்பளம் சாப்பிடு'ன்னு சொன்ன உடனே நாங்க உஷாராயிட்டோம். அப்புறம்தான் தெரிஞ்சது வந்தவங்கள்ள, குழந்தையோட வந்திருந்த தம்பதிகள் தமிழ்நாடுன்னு.


அவங்க தமிழ்நாடுன்னு தெரிஞ்சப்புறம்,கமெண்ட்டை நிறுத்திட்டு எப்படி அவங்ககிட்ட பேச்சை ஆரம்பிக்கிறதுன்னு நெனச்சுட்டிருந்தோம்.வழக்கம்போல எங்களுக்குள்ளேயெ தமிழ்ல கொஞ்சம் சத்தமா பேச ஆரம்பிச்சோம்.எல்லோரையும் போலவே அந்தக் குறுந்தாடிக்காரரும் எங்களைப் பார்த்து 'எங்க வேலை பார்க்குறீங்க'ன்னு விசாரிக்க ஆரம்பிச்சார்.அதைப் பிக்கப் பண்ணிட்டு, சகஜமாப் பேச ஆரம்பிச்சோம்.இடையிடையே குழந்தையுடன் விளையாடிக்கிட்டே நாங்க எங்க டின்னர முடிச்சோம்.அப்படியே அவங்ககிட்ட சொல்லிட்டுக் கிளம்பினோம்.எனக்கு முன்னாடி ராஜாவும், ரெமோவும் பில்லுக்குப் பணம் கொடுக்கப் போயிட்டாங்க.நான் குழந்தைக்கு டாட்டா காமிச்சுட்டே ,கிளம்பி கதவுக்கிட்டப் போகையில, அவங்க அப்பா குழந்தைகிட்ட,'மாமாவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடு'ன்னாரு.நானும் திரும்பி நின்னேன். பாப்பாவும் ஒரு பறக்கும் முத்தம் குடுத்துச்சு. பதிலுக்கு நானும் ஒண்ணு குடுத்துட்டு திரும்பப் புறப்படுறப்போ,'அங்கிள்...' பாப்பாவின் குரல் கேட்டு நின்னு திரும்பிப் பார்த்தேன்.பாப்பா சிரிச்சுக்கிட்டே................'அங்கிள்... மம்மிக்கு கிஸ்...?'ன்னு போட்டது ஒருபோடு.

அப்போதான் எனக்குக் கண்ணக் கட்டுச்சு.ஒரு வினாடி செயலிழந்து,அப்புறம் உடனே சுதாரிச்சுட்டேன்.இதுக்கப்புறம் அவங்க இருந்த ஏரியா பக்கமே பார்க்காம விறுவிறுன்னு நடையைக் கட்ட ஆரம்பிச்சேன்.பாப்பாவின் (அ)நியாயமான திடீர்க் கோரிக்கையில் அமைதியான இடம் ஓரிரு நிமிடங்களுக்குப் பின்னாடி இரு பெண்களின் 'கலீர்'ச் சிரிப்புடன் தொடர்ந்த (முத்தம் குறித்த)கேலிப்பேச்சினால் நார்மலானது.பாப்பாவுக்கு முத்தம் குடுக்கச் சொன்ன அவங்க அப்பாவோட முகத்தை என்னால கற்பனை கூடப் பண்ணிப்பார்க்க முடியல.

இப்போ சொல்லுங்க... ஏதோ அறியாத்தனமா அந்தக் குழந்தை கேட்டதுக்காக முத்தம் குடுத்துருந்தா என் உடலுக்குத்தானே கேடு.....

பி.கு.1:அந்தக் குறுந்தாடிக்காரர் தற்பொழுது தமிழகத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டார்.

பி.கு.2:சௌத் இந்தியன் மெஸ் சில, பல நிர்வாகக்காரணங்களால் இரு மாதங்களுக்கு முன் மூடப்பட்டுவிட்டது.

டிஸ்கி: தயவுசெய்து பி.கு.1 க் காரணம் ,இப்பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுதான் என நீங்களாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்.


Monday, September 15, 2008

முதலிடத்தில் பாவனா(ஓணம் விருந்து)



என்ன இன்ப அதிர்ச்சியா இருக்கா? இது தொடரணும்னா நேராவோ இல்ல மவுஸக் குண்டக்கா மண்டக்கா அமுக்கியோ http://thamira-pulampalkal.blogspot.com/2008/09/blog-post_1250.htmlஇங்க போங்க... நம்ம தாமிரா அண்ணாச்சி மப்பு இல்லாமெயே நல்லா புலம்பி இருப்பாரு. அதுக்கு இடது பக்கம் மூணு வாக்குப்பெட்டிஇருக்கும். முதல் ரெண்டையும் உட்டுட்டுங்க. அதெல்லாம் பெரிய மனுஷங்களுக்கானது.அப்டியே கீழ வந்தா 'நம்மள‌ மாதிரி யூத்துங்களுக்காகவே' ஒரு வாக்குப்பெட்டி இருக்கும். அதுல 'பால்வெளி அழகி' பாவனாவுக்கு ஒரு வாக்கைப் போட்டுட்டு ரிசல்ட்டைப் பார்த்துக்கோங்க.. தாமிரா படம் எதுவும் போடலை..அதனால 'கேன்வாஸிங்'குக்காக நான் படம் போட்டிருக்கேன்.. என்ஞாய்...












டிஸ்கி 1: பாவனா ரசிகர்களுக்கு மட்டும்...


டிஸ்கி 2: மேலே சிவப்பில்,தடித்த எழுத்து வார்த்தைகள் முக்கியம்

Saturday, August 30, 2008

ஆனந்த விகடனும்,அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்...












ஆனந்த விகடன் படிக்கும் பழக்கம் பள்ளி இறுதியாண்டு படிக்கும் காலத்தில் தொடங்கியது.அப்பொழுது திரைப்பட இயக்குனர் அதியமான் எழுதிய 'சொர்ணமுகி' தொடர்கதை வெளிவந்துகொண்டிருந்தது.(இணையாக திரைப்படமாகவும் எடுத்துக்கொண்டிருந்தார்கள்). அதைப் படிக்கத்தொடங்கிய நான் பின் ஆனந்தவிகடனுக்கே அடிமையாக மாறுமளவு ஆகிவிட்டேன்.(தமிழ்மணம் படிக்க ஆரம்பித்தபின் அந்த ஈர்ப்பு பெருமளவு குறைந்து விட்டது).
ஆனந்தவிகடனில் எனக்குப் பிடித்தது ஜோக்ஸ். பிறகு திரைவிமர்சனங்கள், வெளியாகும் கதைகளின் ஓவியங்கள் (ம.செ, மாருதி, அரஸ்) மற்றும் அழகிகளின் ஓரளவு நாகரிகமான ,தெளிவான புகைப்படங்கள்.(தற்போது குமுதத்திற்கும்,விகடனுக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு படங்கள் வெளியாகின்றன.) அப்படி வந்த ஒரு அட்டைப்பட அழகி(எனக்கு அழகியாகத் தெரிந்தாள்)தான் இவள். பெயர் தெரியவில்லை.ஆனால் பார்த்தவுடன் கண்ணைப் பறித்தாள். கைகளைப்பரபரக்கச் செய்தாள் படமாகத் தீட்டுவதற்கு.

அதுநாள் வரை பேனா அல்லது பென்சிலில் மட்டுமே படம் வரைவது வழக்கம். வண்ணங்கள் தொடுவது வெகு அரிதுதான். அப்படியான‌ ஒரு அரிதான ஓவியம்தான்(எனக்கு மட்டும்) இது. போஸ்டர் கலரில் வரைந்தேன்.முடித்தபின் எனக்கு 90 சதவீதம் திருப்தி தந்த படங்களில் இதுவும் ஒன்று. வழக்கம் போல் குறை,நிறைகளைத் தெரிவிக்கவும்...


Monday, August 11, 2008

சோதனைப் பதிவுதான். திறக்க வேண்டாம்



த.மு.எ.ச. இன்னும் தமிழகத்தின் கிராம,சிறு நகர்ப்புறங்களில் 'கலை இரவு' நடத்தி வருகிறார்கள்.(தற்பொழுது நிலவரம் தெரியவில்லை). 'த.மு.எ.ச(தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) கலை இரவு' என்பது தற்போது துபாயிலும்,சிங்கையிலும்,சில சமயங்களில் தமிழக முதல்வர் முன்னிலையிலும் நடக்கும் அரைகுறை ஆடை அணிவகுப்பு அல்ல.இந்தக் கலைவிழாவை நடத்துபவர்கள் செங்கொடி தோழர்கள்.கம்யூனிஸ்ட்டுகளுக்கிடையே பல கொள்கை,பல குழப்பங்கள் நிலவி வந்தாலும் அவர்களின் கலை ஆர்வம் அலாதியானது.திராவிடக்கட்சிகள் தமிழுக்கு உயிர் ஊட்டினேன் என்று சொல்வது போன்ற போலி பாசாங்கெல்லாம் இங்கில்லை. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து,விடியற்காலை நான்கு,ஐந்து மணி வரை நடக்கும் இவ்விழாவில் புகழ்பெற்ற பேச்சாளர் மட்டுமின்றி,சிறு,சிறு வளரும் கலைஞர்களும் பங்கெடுத்து பட்டையைக் கிளப்புவர். இதைவிட முக்கியமானது அங்கு அரங்கேறுவது முழுக்க,முழுக்க கிராமிய,தமிழ் மண் மணம் கமழும் கலைநிகழ்ச்சிகள்தான். மருந்துக்குக்கூட சினிமாப்பாடல் கிடையாது. ஆனாலும் விடிய,விடிய கூட்டம் கலையாமல் இருக்கும்.அவ்வப்போது அரசியல் நையாண்டிகளுக்கும் குறைவிருக்காது.

இதையெல்லாம் விட என்னைக் கவர்ந்தது அவர்களின் விளம்பரப் பதாகைகள்தான்.(தற்போது போல் ஓவியர்களின் வயிற்றிலடித்த டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் பேனர்கள் அப்போது கிடையாது).சிறு,சிறு எளிய அருமையான கிராமியக் காட்சிகளை,கிராம மக்களை கண்முன் நிறுத்துவது போல் விளம்பர ஓவியங்கள் ஊரெங்கும் ஆக்கிரமித்திருக்கும்.சாலையில் செல்லும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் (ஷகீலா படங்கள் கூட அப்படித்தான் என நீங்கள் கேட்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல). அப்படிப் பார்த்த என் மனதில் பதிந்த ஒரு படம் உள்ளூர் நாளிதழில் வந்தது.பார்த்தவுடன் பரிதாபம் தூண்டும் ஒரு முதியவரின் தோற்றம்தான் அது.அப்பருவத்தில் கண்ணில் பட்டவையெல்லாம் கிறுக்குவது வழக்கம்.ஆனால் இது கருத்தையே கவர்ந்த படம்.விடுவேனா..?

முழுக்க,முழுக்க கறுப்பு பால் பாயிண்ட் பேனாவால் வரைந்ததால் ஆங்காங்கே சில சில தீற்றல்கள் இருக்கும். வழக்கம் போல் குறைகள் அல்லது ஏதேனும் நிறைகள் தென்பட்டால் தெரியப்படுத்தவும்.


. நாளைமுதல் விடுமுறையில் தமிழகம் செல்லவிருப்பதால் இன்னும் பத்து,பதினைந்து நாள்களுக்கு பதிவோ, யாருக்கும் பின்னூட்டமோ போட்டு தொல்லை தரமாட்டேன் என்பதை மகிழ்வுடன், மனதிற்குள் சங்கடத்துடனும் அறிவித்துக்கொள்கிறேன்:-) :-) :-((((

டிஸ்கி: தலைப்பு ச்சும்மா லுலலாயி....

Tuesday, August 5, 2008

இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம்




அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு. அந்த உறவின் இழையூட்டம்தான் இளையராஜா என்கிற இசை.அ(தை)வரைப் பற்றிப் பேசத் தெரியாட்டியும் உணரத் தெரியும்.
ஆனா கடந்த இரு வாரங்கள்ல நம்ம தமிழ்மணத்துல அவரை விமர்சிக்கும் முறையில் இரு பதிவுகள் வந்தது.அதைப் படிக்க ஆரம்பிச்ச உடனே கோபம் வந்தது.ஆனா பின்னூட்டங்களைப் படிச்சவுடனே மனசு லேசாயிடுச்சு.உதாரணம்... நம்ம பரிசல்காரரோட பின்னூட்டம்.(புகழனோட பதிவுல)
பரிசல்காரன் said... அன்பு நண்பரே...
அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?
குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?
கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!
ராஜா ராஜாதான்!

அப்புறம் சர்வேசனோட பதிவு ஒண்ணு. அதைப் படிச்சவுடனே பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா தாறுமாறா சில பின்னூட்டம் வரவும், சரி இங்க வேணாம்ன்னு விட்டுட்டேன். அதில ராஜநடராஜன் சொல்லிருக்காரு..
"1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்."

எந்தப் பாட்டில ராஜா ,வைரமுத்து வரியை அமுக்கி இருக்காரு?ராஜா,எம்.எஸ்.வி யைத் தவிர எல்லா இசைஅமைப்பாளர்களும்க‌விஞ‌ர்க‌ளின் வ‌ரிக‌ளை மூச்சுத் திண‌ற‌ச் செய்வ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள்.(ரகுமான்,யுவ‌ன்,இமான்...)வித்யாசாக‌ர் ச‌ற்று விதிவில‌க்கு. ராஜாவின் பாட‌ல்க‌ள் ஹிட் ஆன‌த‌ற்கு ம‌ற்றொரு முக்கிய‌ கார‌ணம் அவ‌ர் தேர்ந்தெடுக்கும் பாட‌ல் வ‌ரிக‌ள்,அத‌னை அனைவ‌ரின் வாயிலும் எளிதாக‌ நுழையும்ப‌டி போட்ட‌ மெட்டு.(நினைவெல்லாம் நித்யா,காத‌ல் ஓவிய‌ம்,முத‌ல் ம‌ரியாதை இன்னும் ப‌ல‌ப்ப‌ல‌).அவ‌ரே ஒரு ந‌ல்ல‌ பாட‌ல் ஆசிரிய‌ர் என்ப‌து வேறு விஷ‌யம்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
"அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்."
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.

"வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை."
கானா பிரபா கூறிய வரவேற்கத்தக்க கருத்து. இப்போ 'தனம்' படத்துல கூட ஒரு பாட்டு வரும் 'தனம்,தனம்'ன்னு. வாலி சும்மா ஏனோதானோன்னு கிறுக்கி இருப்பார்.ஆனால் ராஜாவின் தனிப்பட்ட உரிமைகளில் நாம் தலையிட முடியாது.
"படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?"_சர்வேசன் கூற்று. மிக முக்கியமான கருத்து இதுதான். நல்ல படம் அமையலை.(நான் கடவுள் அப்படி இருக்காது என நம்பலாம்.) ஆனா சமீப காலங்களில் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படங்களில் நல்ல,நல்ல மெலோடிகள் புதிதாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில்தான் ராஜாவின் மலையாளப் பாடல்கள் கேட்டேன். தெலுங்கில் கூட கடந்த வாரம் 'மல்லிப்புவு' படப்பாடல்கள் வெளியிடப்பட்டது.(இன்னும் கேட்கவில்லை).
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...



அப்புறம் ரொம்ப சமீபத்தில வெளியான 'தனம்' படத்துல இருந்து ஒரு பாடல் பவதாரிணி பாடுனது.'ஒரு நாள் ஒரு கனவு' படத்துல வரும் 'காற்றினிலே வரும் கீதமே' பாடல் வரிசையில் இன்னுமொரு எளிய, இனிய,மனதை அள்ளும் பாடல்.(வரிகள்‍ விஷாலி கண்ணதாசன்)

இதே படத்துல வர்ற இன்னொரு பாடல் ராஜா பாடுனது.

இங்க நான் பாடல்களை விமர்சிக்க வரவில்லை. இன்னும் இளையராஜா அருமையான பாடல்கள் கொடுப்பார் என நம்புவோம். ஆனால் ஒன்று, அவை நம்மை(ராஜா ரசிகர்கள்) மகிழ்விப்பது போல் அனைவரையும் ஈர்க்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் ராஜாவின் வரிகளில் சொன்னால் "நான் பாப்கார்ன் தர முடியாது. சாப்பாடுதான் தருவேன். ஆனா பாப்கார்ன் ஏன் அதிகம் விக்குதுன்னு கேட்காதீங்க. அது வேற விஷயம்." நமக்கு தேவை இல்லாதது.
இறுதியாக...
இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...







Saturday, July 19, 2008

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...?!


பார்க்க..! ரசிக்க..!
எப்பிடில்லாம் விளம்பரப் 'படுத்துரானுங்க' பாருங்க..










ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
ஒரு கோலமயில் என் துணையிருப்பு....!

வாங்குற சம்பளமெல்லாம் வாய்க்கும்,கைக்கும்(பை) பத்த மாட்டேங்குது...







துள்ளுவதோ இளமை...




அள்ளுவதே புதுமை....








ஒரு 'கப்(பு)' சாப்பிட்டுப் பாருங்க...










டேய்...கைய வைச்சுகிட்டு
சும்மா இருடா...












. பறவை... நீ ஓவரா மொக்கை போட்டதால உன்ன போட்டுத் தள்ள
ஒருத்தன் பொருளோட வர்றான் ..எஸ்கேப் ஆகிக்கோஓஒ...
















டிஸ்கி : பார்வர்ட் மெயிலில் வந்தது .முன்பே பார்த்திருந்தால் பொறுத்தருள்க.. (கமெண்ட் நம்மது)...
அனுப்பிச்ச புண்ணியவானுக்கு நன்றிங்கோ ...

Monday, July 14, 2008

எவனோ ஒருவன்....!?

சரியான வேலை அல்லது வேலை அற்றிருந்த தருணங்களில் எனக்கு பகல் பொழுது கொடுமையாகக் கழியும்.(வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நத்தையை(ஆமை..?) விட மெதுவாக நகரும் ...நன்றி எஸ்.ராதாகிருஷ்ணன்) .இரவோ இன்னும் கொடுமை..



அப்படியான சமயங்களில் எனக்கு ஒரே பொழுதுபோக்கு பென்னால் படம் வரைவதாகும்.. பென்சிலில் வரைந்தால் அழித்து வரைய சோம்பல்தனம். .


ஒரு தருணத்தில் ஒரு வாரப்பத்திரிக்கையில் இப்படத்தைக் கண்டேன். எளிய , ஆனால் அழகிய சிரிப்புடன் கவர்ந்திழுத்தது.கவனத்துடன் (பிழை ஏற்பட்டால் காகிதம் கிழிபடும்..)பால் பாயின்ட் பென்னால் வரைந்து முடித்தேன்..வெகு நாட்கள் ஆகி விட்டதால் பேப்பர் சிதைவுற்று விட்டதால் சரியாக பதிவேற்ற முடியவில்லை..நிறை ,குறைகளை எதிர்பார்க்கிறேன்..

Saturday, July 5, 2008

பாவனாவும், நானும்





பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே நம்ம ரசிகர்கள் (...?) எல்லாம் கோச்சுக்கக்கூடாதுன்னு ஒரு சின்ன பதிவு.... மொக்கை.. எப்பிடி வேணும்னாலும் வச்சுக்கலாம்..
ஒரு வருஷத்துக்கு முன்னாடி பென்சில்ல கிறுக்கினது. படத்தை 'க்ளிக்கி'ப்பார்த்துட்டு நிறையோ குறையோ சொல்லுங்க..
இந்தப் படத்துக்கு கவுஜை எழுத முயற்சித்தேன். முடியல..

உங்களால் முடிஞ்சா சொல்லுங்க...

ஏதோ என்னால முடிஞ்சது இதுதான்...

" சின்னவளே

சிரிப்பால கொன்னவளே"

Wednesday, June 18, 2008

போலி தசாவதாரம்

சரி ரொம்ப நாள் கழிச்சு இந்தோர்ல தமிழ் படம் போடுறாங்கன்னு (போன வருஷம் சிவாஜி போட்டாங்களாம்) தடபுடலா இங்க இருக்கிற நம்ம தங்க தமிழர்களை எல்லாம் பி.வி.ஆர் காம்ப்ளெக்ஸ் கூட்டிட்டி போனா (டிக்கெட் லாம் அவங்க அவங்க பொறுப்புதான்) ,அங்க போனப்புரம்தான் தெரிஞ்சது தசாவதாரம் ஹிந்தில தான் போட்டிருக்காங்களாம்..

சரி.. நமக்கு தெரிஞ்ச 'ஆவோ' ,'ஜாவோ' ஹிந்திய வைச்சுக்கிட்டு அளம்பிரலாம்னு பசங்களை டிக்கெட் எடுக்க அனுப்பிச்சுட்டு ,நான் போஸ்டர் பார்க்க போனேன். (என்னதான் தியேட்டர்ல முழு படமும் பார்க்க போரோம்னாலும் , சுவர் ஒட்டில படம் பார்த்து கதைய அனுமாநிக்கிரதுல தமிழன மிஞ்ச முடியாது..)

பார்த்தா போஸ்டர்ல அசினையும் காணாம்,மல்லிகாவையும் காணாம். வேற நிறைய சாமி படமா இருந்தது..ராமர்,க்ரிஷ்ணர்ந்னு ..சரி அதெல்லாம் நம்ம கமல்தான் அப்படி வேஷம் கட்டிருக்காருன்னு நம்பி.., அடுத்தடுத்த போஸ்டரா பார்த்திட்டிருந்தேன் .

ஒரு வழியா ரெண்டு மூணு இடத்துல மல்லிகா ஷெராவத் படத்தை பார்த்தேன்.. சரி நம்ம கமல் அசினை டம்மி ஆக்கிட்டு ,மல்லிகா அக்காவுக்கு முக்கியத்துவம் குடுத்துட்டாருன்னு நினைச்சுக்கிட்டேன்..

டிக்கெட் எடுக்க போன பசங்க ரொம்ப நேரமா வரலை.. என்ன கொடுமைடா இது ? இங்க தமிழ் படத்துக்கு கூடவா இவ்வளவு கூட்டம்ன்னு நினைச்சுகிட்டிருந்த நேரம் , டிக்கெட் எடுக்க போன நம்ம தங்கங்கள் எல்லாம் கொஞ்சம் சோகமா வந்தானுங்க..

சரி..கமல் படம்ன்றதால இங்கயும் அரங்கம் நிறைஞ்ச்டுச்சி போல நாளைக்கு பார்க்கலாம்ன்னு பசங்களை தேத்த போனேன்..'விடுற மாப்ளை ,தமிழ் படமா இருந்தாலும்,தலைவர் படம் இல்லையா..அதான் ஹவுஸ் புல் ஆயிடுச்சு..புக் பண்ணிட்டு வரலாம்' ன்னு சொல்லி முடிக்கலை..

அதுக்குள்ள அவன் ரெண்டு நல்ல வார்த்தைய எடுத்துவிட்டான் (தனிக்கைகுரியது)

' இது கமலோட தசாவதாரம் இல்ல. கிருஷ்ணரோட தச அவதாரங்கள் ..ஹிந்தி அனிமேஷன் மூவி .இதோட பேரும் தசாவதார். '

வாயில பட்ட ஜிலேபி ,காலில விழுந்த மாதிரி ஆச்சு.

'சரி வாங்கடா , படத்துக்கு வேணாம் ..சும்மா சுத்தி பார்க்கலாம்..ஏகப்பட்ட மல்லிகாவும் ,அசினும் நேராவே பார்க்கலாம்ன்னு ' கூப்ட்டேன்..

'இல்லைடா.. வந்தது வந்திட்டோம் . இதுக்கே டிக்கெட் எடுத்திட்டேன் வாடா படம் பார்க்கலாம்' ன்னான்.

'அடப்பாவி.. கேயாரெஸ் பார்க்க வேண்டிய படமெல்லாம் இந்த சின்ன வயசுல நமக்கு எதுக்கு?' ன்னு சொல்லி நூறு ரூபா போனாலும் பரவாயில்லைன்னு ,ஓடி வந்தாச்சு..

நான் பார்த்த மல்லிகா போஸ்டர் எல்லாம் ஹிந்தி பட போஸ்டர்.

எனக்கு ஒரு டவுட்டு .. எப்படி இந்த மாதிரி படத்தை தயாரா வச்சுட்டு , நம்ம படம் வெளி ஆகுற அதே நாள்ல ,அதே பேர்ல வெளி இட்டாங்க ..? ரூம் போட்டு யோசிக்கிரதுன்னா இதானா..?

தசாவதாரம் போலி அல்ல.. போலி தசாவதாரம் தான் நான் சொல்ல வந்தது ..

(கடைசில பிட்டு படம் பார்க்க போயி ,ரிஷானு போட்ட மசாலா படம் பார்த்த மாதிரி ஆயிடுச்சு)





Tuesday, June 17, 2008

தமிழ் படம் பார்க்க மூளை தேவையா..?

இது தாமதமான பதிவுதான் ..ஆனா ரொம்ப தாமதம் இல்லைன்னு நான் நினைக்கிறேன்.இப்போதான் அந்த கண்றாவி படத்தை பார்க்க வேண்டியதாச்சு. 'யாரடி நீ மோகினி' தான் அது.இது போல அபத்தக்குவியலை சமீபத்தில் நான் பார்த்ததில்லை. பட்டியலிடுகிறேன் அபத்தங்களை..
  1. முதல்ல கம்ப்யுட்டர் நிறுவன ஆள் எடுக்கும் காட்சி. குழு விவாதத்தில தனுஷ் பொருளாதாரத்தை பத்தி பொளந்து கட்டுவாரு தமிழ்லயே..(நல்லவேளை யுவன் பின்னணி இசையால பேச்சை அமுக்கி இருப்பாரு)
  2. எந்த மாங்கா மடையனும் தன் பையன் காதலுக்காக இடம்,பொருள்,ஏவல் தெரியாம இப்படி எல்லார் முன்னாடியும் காதல் பிச்சை கேட்க மாட்டான்.ஆனா மெட்ரோ சிட்டியில வேலை பார்க்கிற ஒரு நடுத்தரக் குடும்பத்து அப்பா(ரகுவரன்) ,இவ்வளவு கேவலமா நயன்தாரா கிட்ட கெஞ்சுவாரு..(இயக்குனர் குழு கதை விவாதத்தில என்னதான் ஆணி புடுங்கிரான்களோ..?)
  3. நயன்தாரா குடும்பத்தை பத்தி நாம தனியா பேச வேண்டியதில்லை . தனுஷ் சொல்லிருவாரு அது ஒரு 'லூசு குடும்பம்' ன்னு ..
  4. தனுஷும்,அப்பா ரகுவரனும் பேசிக்கிற காட்சிகள் ரொம்ப அன்னியோன்னியம் ..(இதை விட 'ம..','ங்..' அப்படின்னு பேசி இருந்தா ரொம்ப எதார்த்தமா இருந்திருக்கும்..ஆமா தனுஷ் வீட்டுல எப்பிடி..?!)
  5. நயனோட கதா பாத்திரம் அருமை..?! தனுஷை காதலிக்கிறாங்களா இல்லை சைட் மட்டும் அடிக்கிறாங்களா இல்லை டெஸ்ட் பண்ணுறாங்களா அட சாமி ஒரு எழவும் புரியல்லை. (இதோட தெலுங்கு மூலம் இவ்வளவு மோசமாவா இருந்தது.? நான் பார்க்கலை . யாராவது பார்த்தவங்க சொல்லுங்க..)
  6. தன் மனைவியா வரப் போகும் நயனை வர்ணிச்சு பாட ,தன்னோட நண்பனை கூப்பிடுவாரு பாருங்க..இதான்யா கற்பனை ..கண்றாவிடா ...(செருப்பை கழட்டி அடிக்கலாம்ன்னு தோனுச்சு..செல்வா வா இப்படில்லாம் கதை பண்ணாரு..?!)
  7. பாம்பு காமெடி(..?)..யோவ் இயக்குனரே இதை பார்த்து உங்க வீட்டு குழந்தை கூட சிரிக்காது..
  8. நயனோட தங்கை தன்னோட காதலை அக்காகிட்ட சொல்லும்போது நயன் கோபப்படுறது கூட அவளோட அறியா வயசு காதலை நினைச்சு இல்லை..தன்னை சைட் அடிச்ச தனுஷை ,தங்கச்சி ரூட் விட்டதால ஏற்பட்ட கோபம்தான் அது..நல்ல அக்கா ,நல்ல தங்கை..
  9. தன்னோட தங்கச்சி சின்ன பொண்ணு ..அதுனால அவளுக்காக அக்காவே முதலிரவு சாங் கற்பனை பண்ணுவாங்க பாருங்க..சூப்பரப்பு..
  10. கடைசி காட்சில தனுஷ்,கார்த்திக்,நயன் மூணு பேரும் தாத்தாகிட்ட மாறி மாறி "நான்தான் தப்பு பண்ணினேன் .என்னை கம்பால அடிங்க.."ன்னு சண்டை போடுறப்போ , 'இந்தப்படத்தை இவ்வளவு நேரம் பார்த்தது என் தப்பு..என்னை முதல்ல கம்பால அடிங்க..'ன்னு என்னை கதற வைச்சிட்டாங்க..
  11. கல்யாண மேடையில கார்த்திக் எப்படி நெளிஞ்சுக்கிட்டு உக்கார்ந்திருப்பாரோ ,அப்படி உக்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன்..(ஏன் பார்த்தான்னு கேட்கிறீங்களா ..பக்கத்துல என் நண்பன் ஒருத்தன்,தனுஷ் வெறியன் உணர்ச்சிவசப்பட்டு பார்த்துகிட்டிருந்தான் ..இதுல அப்பா செண்டிமெண்ட் சூப்பர்ன்னு டைலாக் வேற..)

சரி படத்துல நல்ல விஷயமே இல்லையான்னு கேட்கிறீங்களா ..எனக்கு பிடிச்ச நல்லவைகள்..

  1. குட்டி பொண்ணு சரண்யா (ஏற்கெனவே ஒ.நா.ஒ.க பாட்டில இருந்தே எனக்கு பிடிக்கும்ன்னு சொல்ல தேவை இல்லை)
  2. தனுஷின் நண்பன் கார்த்திக்
  3. ஆங்காங்கே ஆங்கில வரிகளை தவிர்த்து பார்த்தால் பாடலும்,இசையும்

இப்போ சொல்லுங்க தமிழ் படம் பார்க்க மூளை தேவையா இல்லையா..?(இதுல 'அஞ்சாதே','சந்தோஷ் சுப்பிரமணியம்' படங்கள் சேர்த்தி இல்லை)..

இது என்னோட தமிழ்மண(ன) நுழைவு பதிவு..குறைகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன் வரும் பதிவுகளில்..

Saturday, March 15, 2008

கண்ணுக்கும்,காதுக்கும் விருந்து

" மாலையில் யாரோ" ..எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
முடிந்தால் கேட்டு பாருங்கள்.

மன்னிக்கவும். இணைப்பை தற்போது எடுத்து விட்டேன்.

Wednesday, March 12, 2008

iniya vanakkam

இது என்னுடைய முதல் இடுகை .இப்போதைக்கு எனது வருகையை பதிஞ்சுக்கிரேன்..