Tuesday, November 15, 2011

பாரீஸில் பறவை

   சென்னை பாரிமுனை மட்டுமே பாரீஸ் என நினைத்துக்கொண்டிருந்த நான், உண்மையான பாரீஸிற்குச் செல்லும் தங்க வாய்ப்பும் கிடைத்தது. சென்றவார ஆம்ஸ்டர்டாம் பயணத்தின் சுவடுகளைச் சுமந்தபடியே கடந்தசனி இரவு பாரீஸிற்குச் சென்றேன்.இம்முறை பேருந்துப்பயணம்தான். அதுவும் இரவில். 9 மணிநேரப்பயணத்தின் பாதியில் ஒருமணிநேரம் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டுமென்பது விதி.

    விளக்குகள் ,சூரிய ஒளியில் மங்க ஆரம்பித்ததொரு தருணத்தில் நான் பாரீஸில் இறக்கிவிடப்பட்டிருந்தேன். ஏற்கெனவே அலுவல் காரணமாக அங்கு தங்கியிருந்த நண்பன் விஜயராகவன் வரவேற்கக் காத்திருந்தான்.இனிமேல் அவன் அறைக்குச் சென்று ரெஃப்ரஷ் ஆகித் திரும்பினால் நேரமாகிவிடுமென்பதால் பேருந்து அருகே இருந்த நவீன கழிப்பறை & குளியலறையிலேயே காலைக்கடன்களை முடித்துக் குளித்துக் கிளம்பினோம்.

      பாரீஸில் ஒரு சிறப்பம்சம், சுரங்கப்பாதை ரெயில்கள்.கவுண்ட்டரை அணுகினால், எல்லா இடங்களும் அடங்கிய மேப் கொடுக்கிறார்கள். அதிலேயே சுற்றுலாத் தலங்கள் மட்டும் சிறப்புவண்ணத்தில் குறித்திருக்கிறார்கள்.எந்தெந்த ரெயில்கள், எங்கெங்கு,எவ்வப்பொழுது,எந்த ப்ளாட்ஃபார்மில் வரும் எனத் துல்லியமாகக் கொடுத்திருக்கிறார்கள். பாரீஸிற்குச் சென்றால், வழிகாட்டி துணையே தேவையில்லை. இந்த மேப்பும், ரயில் டிக்கெட்டும் போதும்.

   முதலில்  சென்ற இடம் , வேறென்ன ஈஃபிள் டவர்தான். டவரைச் சுற்றிலும் நான்கைந்து கிமீட்டர்களில் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. தூரத்திலே இருந்து படமெடுத்துவிட்டு, டவரை நெருங்கினோம். சிறப்புக் கட்டுமானத்திற்குப் புகழ்பெற்ற ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற பெருமிதம் தோன்றியது.அப்புறம் அடுத்தவேலைதான்...

     சரியான ஒரு கோணம்,இடம் தேர்ந்தெடுத்துவிட்டு ரெனால்ட்ஸ் பேனாவையும், நோட்டையும் கையிலெடுத்து வரைய ஆரம்பித்துவிட்டேன்;.சுமார் ஒன்றரை மணிநேரங்கள் பிடித்தது. ஸ்கெட்ச் கீழே...வெகு சந்தோஷம்...



   ஈஃபிள் டவர் முடிந்தவுடன், நாட்ரடாம்ஸ் சர்ச்சுக்குச் சென்றோம். தலைவலி காரணமாக அதிகம் ரசிக்க இயலாமல் அறைக்குத் திரும்பிவிட்டோம்.

    மறுநாள் காலை புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் புன்னகைத்துக் கொண்டிருக்கும் லூவர் அருங்காட்சியகம் சென்றோம். அப்பாஅ..ஆஅ...எவ்ளோ பெரிசு. இதை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்க 4 நாட்கள் தேவைப்படும். எனக்கிருந்ததோ முழுதாக அரைநாள் மட்டுமே...அதனால் அவர்கள் கொடுத்த கையேட்டில் மிக முக்கியமான ஓவியங்கள் மட்டும் இருக்கும் தளங்களுக்குச் செல்வதென முடிவெடுத்தோம்.


    17-19 நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய பாணி ஓவியங்கள் முழு விருந்தை அளித்தன. பெரும்பாலும் பைபிள் காட்சிகளைத்தான் ஓவியப் படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற வீனஸ் சிலை முடமான நிலையில் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் நம் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏமாற்றும் வகையில் சிறிய அளவில் இருக்கிறது. அங்கு மட்டும் அதிகக் கூட்டம்.ஃபோட்டோ ஃப்ளாஷ் அடிக்காமல் எடுக்கவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஃப்ளாஷுடன் க்ளிக்கித் தள்ளிக் கொண்டுருந்தனர்.

    ஒவ்வொரு பெயிண்டிங்கையும் நின்றுநிதானமாய் ரசிப்பதற்கு நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக நகர்ந்துகொண்டிருந்தோம். இதற்கே மணி மூன்றாகிவிட்டது.

  வெளியே அமர்ந்து, லூவர் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை வரைந்தது.

பாரீஸ் பயணம் இனிதே நிறைவுற்றது. :)

Tuesday, November 8, 2011

சொர்க்கத்தின் வாசற்படி அல்லது ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள்...

         என்னை மாதிரி ஒரு கேர்லெஸ் ஃபெல்லோவை நீங்க பார்த்திருக்கவே முடியாது. ஒரு இடத்துக்குப் போறோம்,அங்க என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு கூட மெனக்கெடுறது கிடையாது.இரு வாரத்துக்கு முன் பிரபல டிவிட்டர், ஆயிரத்தில் ஒருவனான(ஆயிரம் ஃபாலோயர்ஸுக்கு மேல வச்சிருக்காரு. செந்தில் மாதிரி அடுத்த கேள்வியை என்கிட்டக் கேட்டீங்க உதைதான்) நண்பர் திருமாறன் ஆம்ஸ்டர்டாம் வாங்கன்னு சொன்னதுக்கப்புறம் கூட அது எந்த நாடுன்னு தெரிஞ்சுக்க விரும்பலை. அவரே சொன்னாரு வான்காஃப் அருங்காட்சியகம் இருக்குன்னு.எனக்குத் தெரிஞ்ச வான்காஃப், ஒரு காதினை அறுத்துக் கொண்டவர்,மனநோய் முற்றித் தற்கொலை செய்து கொண்டவர். இன்னும் மேலதிகமாக அவரின் சில பெயிண்டிங்குகள் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரைட்டாக, மஞ்சள் மேலோங்கிய(அவரின் சன்ஃப்ளவர் ஒவியம் பிரபலமானது)தன்மையுடையன. ஒரு அப்ரெசெண்டி ஓவியன் என்ற முறையில் சரி அங்குபோகலாமென ஒத்துக் கொண்டேன். அதன்பின் பயணத்திற்கு இருநாட்களுக்கு முன் வேலையில்லாத ஒரு பகற்பொழுதில் பஸ்ஸிலிருந்து ஒதுங்கிய சிறு நேர இடைவெளியில் இணையத்தில் அலசி, அங்கிருக்கும் இன்னொரு இடமான ரைஸ் அருங்காட்சியகத்தில் ரெம்பிராண்ட்டின் ஓவியங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன்.இதையும் திருவிடம் சொன்னேன்.முன்பே டிக்கெட் புக் பண்ணிவிட்டார்.
    யூரோ எக்ஸ்பிரஸில் பயணம். அசால்ட்டாக மணிக்கு 200 மைல் வேகத்தில் பயணம். எதிரெதிராக அமர்ந்துகொள்ளும் இருக்கைகள். பொழுதுபோக்கிற்கு வேறென்ன ஸ்கெட்சிங்தான்.(போகையிலும், வருகையிலும் செய்த ட்ரெய்ன் ஸ்கெட்சஸ் கீழே)


          சனிக்கிழமை காலையில் உட்ரெக்ட்(திருவின் நண்பர் வீடு. அங்குதான் தங்கல் தூங்கல் தொங்கல் எல்லாம்)டிலிருந்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தோம்.ஊரெல்லாம் கால்வாய்கள்(நீர்ப்பாதை எனக் கொள்வோம்.நம்மூர்க் கேரளா மாதிரி.ஆனால் இன்னும் அழகு).மோட்டார் படகில் பயணம்.இதுவொரு முக்கிய சுற்றுலாத் தலம் என்பதை அங்கு சென்றுதான் அறிந்து கொண்டேன். இங்குள்ள மக்கள், ஜெர்மானிய மக்களுக்கு நேரெதிர். அவர்கள் மன்மோகன் சிங் என்றால் இவர்கள் குஷ்வந்த்சிங் சாதி.கிட்டத்தட்ட எல்லா மரங்களும் பூமிக்கு இலைக்காணிக்கை செலுத்திவிட்டிருந்தன.வளவளா வேண்டாம்.விஷயத்திற்கு வருவோம்.

           முதலில் சென்றது ரைஸ் அருங்காட்சியகம்.முகப்பில் வைக்கப்பட்டிருந்த வெர்மியரின் 'மில்க்மெய்ட்' ஓவியப்பெண்ணின் பெரிய பதாகைப் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்(வரலாறு முக்கியம் அமைச்சரே).டிக்கெட்டுடன் உள்நுழைகையில் அதை வாங்கியவர் ஐந்து யூரோ கேட்டார்.திகிலடைந்து அதான் பதினைந்து யூரோவுக்கு டிக்கெட் இருக்குல்ல எனப் பினாத்தியதில், சிரித்து 'ஜஸ்ட் ஃபார் ஃபன்' என அனுப்பி வைத்தார்.(இங்க வந்ததுல இருந்து எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது அறுபதாம் வாய்ப்பாடுதான். எல்லாமே காஸ்ட்லிதான். சரக்கைத் தவிர.)ஆடியோ டூரும் உண்டு.ஒரு ஹெட்ஃபோனும்,அதனுடன் அண்ணாச்சி கடை கால்குலேட்டர் மாதிரி ஒரு கருவியும் தருகிறார்கள். உள்ளிருக்கும் ஓவியங்களின் அருகில் இருக்கும் எண்ணை அழுத்தினால், அந்த ஓவியம் பற்றிய தகவல்கள் காதினுள் தேன் போலப் பாயும்(எப்டி கொழகொழன்னா எனக் கேட்காதீர்கள்).
          
          மொத்தம் மூன்று தளங்கள். கீழ்த்தளத்தில் நெதர்லாந்து பற்றிய வரலாற்றுப் படிமங்கள்,ஓவியங்கள், ராஜா காலத்திய மர அலமாரிகள், வாட்கள், துப்பாக்கிகள் என எல்லாம் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருக்கின்றனர்.கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சற்று உள்நோக்கிப் பார்க்க முனைந்த போது, நெற்றியில் பட்ட அடிக்குப் பின் தான் கண்ணாடித் தடுப்பு இருக்கிறது என்ற வரலாற்று உண்மை எனக்குப் புரிந்தது(அனுபவமே சிறந்த பாடம்)

          இரண்டாவது தளத்தில் ரெம்ப்ராண்ட் மற்றும் அவரது சமகாலத்தவர்கள்(17ஆம் நூற்றாண்டு), அவருடன் பயின்றவர்களின் தைல வண்ண ஓவியங்கள் நிறைக்கப்பட்டிருந்தன. ஸ்டில் லைஃப், போர்ட்ரெய்ட், குரூப் போர்ட்ரெய்ட், லேன்ட்ஸ்கேப் என அனைத்து வகையிலும் புகுந்துவிளையாடி இருக்கிறார்கள்.நவீன ஓவியங்கள் கிளைவிடாத காலத்தில் ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையைக் காக்க மிகுந்த பிரயத்தனப் பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ரெம்பிராண்டின் ஓவியங்கள் செறிவான நுண்விபரங்களுடனும்,ஆச்சர்யப் படுத்தத் தக்கவகையில்கூடிய ஒளியின் பரிமாணங்களுடனும் தனித்துத் தெரியத் தொடங்கியிருந்தன.அவரின் செல்ஃப் ஃபோர்ட்ரெயிட்கள் பிரபலம். வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவர் தன்னைத்தானே அதிகம் வரைந்திருக்கிறார். ரெம்பிராண்ட் அதிகம் லேன்ட்ஸ்கேப்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. போர்ட்ரெயிட்கள், அதன் கேரக்டர்கள், டீட்டெயிலிங், லைட் எஃபக்ட்ஸ் ஆன் சப்ஜெக்ட் இவைகளே அவரின் ஓவியங்களில் தெரிகின்றன.என்க்ரேவிங் எனப்படும் தகடுகளில் ஓவியம் பதிக்கும் முறையிலும் சிறந்தவர்.சிறப்பாக வாழ்ந்த காலத்தில் சராசரியாக 300 கில்டர்கள் கமிசனாக வாங்கி வந்துள்ளார். அதே தொகை அங்கு ஓராண்டில் துணி துவைப்பவர் ஈட்டும் வருமானமாகும்.'ஒளிமயமான' என்பதெல்லாம் அப்போது அவர் எதிர்காலத்தில் பார்க்கவில்லை அவரின் ஓவியங்களில் மட்டும்தான் பார்த்துள்ளார் போலும்.

          பலவித பரிசோதனை ஓவியங்கள் செய்து கொண்டிருந்தாலும், கிறிஸ்தவ பைபிள் கதைக் காட்சிகளை அடிக்கடி வரைந்துவந்துள்ளார். அக்காலத்தில் விற்கக்கூடிய சரக்கு அது(இப்பவும் மதம்தானே நல்ல வியாபாரம்). நெதர்லாந்துல ஏகப்பட்ட வின்ட்மில் இருந்தது அப்போது.இவரின் அப்பா ஒரு மில் முதலாளி. அவர் பேர்ல 'மில்லர்'னு வரும்.சராசரியான குடும்பம்தான்.ஆனா தலைவருக்குக் கல்யாணத்துல அடிச்சிருக்கு லக்கிபிரைஸ்.வேலை சம்பந்தமாகப் போய்வந்த இடத்தில் 'சாஸ்கியா'ன்ற பொண்ணப்பார்த்து லவ்வி, அப்புறம் பெற்றோர் சம்மத்தோட கல்யாணம் பண்ணிருக்காரு.வரதட்சணையா 40000 கில்டர்ஸ் வாங்கி இருக்காரு மனுசன்.

        ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷம் தொழில் நல்லபடியாப் போயிட்டிருந்திருக்கு. இவரோட ஆர்ட் கலெக்டர்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட பணமுடையில, இவரோட தொழிலும் படுத்திருச்சு, அப்புறம் இவர் பண்ணின 'நைட் வாட்ச்' ங்கிற மெகா ஓவியம்தான் இவருக்குக் கொஞ்சம் பணத்தையும், புகழையும் மீட்டுக் கொடுத்திருக்குது.இங்க மூன்றாவது தளத்துல கிளைமேக்ஸ் பரபரப்பு போல அந்த ஓவியத்தைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். தனி அறை , அதற்கெனப் பிரத்யேகமான விளக்கமைப்புகள் இதோட சேர்த்து பார்க்கிறப்போ, ஓவிய மனிதர்கள் நேரில் வந்து நிற்பது போல் இருந்தது. கொடுத்த பதினைஞ்சு யூரோ இந்த ஒரு படத்துக்கே பத்தாது போல. நாங்க பாத்ததெல்லாம் எட்செட்ரா. :)

    மதியம் இத்தாலியன் ரெஸ்டாரெண்டில்தான் லஞ்ச். பிஸ்ஸா,நம்மூர்ப் பிஸ்ஸா போல் வரட்டிமாதிரி இல்லாமல், நெளிநெளியாக நெகிழ்வாக இருந்தது. அடுத்த இடம் வான்காஃப் அருங்காட்சியகம்.

   அதுவும் ரைஸ் அருங்காட்சியகத்துக்குப் பக்கத்திலேயே இருந்தது. இங்கு வான்காஃபின் ஓவியங்களை அவரின் வாழ்க்கை வரலாற்றுப்படி வரிசையாக அடுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓவியங்கள் விற்குமிடத்தில் வேலைசெய்துகொண்டிருந்த வான்காஃப் தனது இளமைப் பருவத்தில்தான் ஓவியங்கள் வரையவேண்டுமென நினைத்துப் பின் கற்றுக் கொண்டு பயிற்சி மேற்கொண்டிருக்கிறார், ஓவியங்கள் வரைய கேன்வாஸ், வண்ணங்கள் இதர உபகரணங்களுக்கு அவரின் சகோதரர் உதவியிருக்கிறார். ஜப்பானிய ஓவியங்கள் மேல் மிகுந்த ஆர்வங்கொண்டிருக்கிறார்.அதுபோலவே சில ஓவியங்களும் முயன்றிருக்கிறார்.ஆனால் அவையும் வான்காஃபின் தனித்தன்மையுடன் வந்திருக்கின்றன.

   ரியலிச ஓவியங்களைப் பார்த்துரசித்த கண்களுக்கு வான்காஃபின் ஓவியங்கள் சற்றுச் சோர்வேற்படுத்துகின்றன.நவீன ஓவியங்களை ரசிப்பதற்கும் தனி மனரசனை தேவைப்படுகின்றது. மூன்று மணிநேரம் சுற்றிப் பார்த்தோம். பின் வீடுதிரும்பல்.நண்பரின் கைவண்ணத்தில் அருமையான தோசை மற்றும் பருப்புக் குழம்பு.தூங்கல்.


    காலையில் 9மணிக்கு அடுத்தபயணம். நெதர்லேந்தின் பாரம்பரியப் பொருட்கள் வைத்திருக்கும் Zaanz museum அது. நெதர்லாந்து காற்றாலைகள் மற்றும் பால்வளத்திற்குப் பெயர்பெற்றநாடு.  அந்த வகையில் மாடலுக்காக நான்கைந்து காற்றாலை வீடுகள் அமைத்து டெமோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே விதவிதமான ஃப்ளேவர்களில் ‘சீஸ்’ தயாரிக்கும் சிறு தொழிற்சாலையும் இருக்கிறது.முந்தைய நூற்றாண்டில் குளிருக்காக மரத்தாலான காலணி அணியும் வழக்கும் இருந்திருக்கிறது.அக்காலணிகள் தயாரிக்கும் மினிதொழிற்சாலையும் இருக்கிறது. வெகு இயற்கையோடு ஒட்டிய சூழலில் இக்காட்சியணிவகுப்பு  இதமாக இருந்தது.

     ஆம்ஸ்டர்டாம் போனதின் நினைவாக அங்கு வரைந்த லைவ் ஸ்கெட்ச் இதோ.ஏதோ ஒரு சைனாக்காரர், என்னையும், வரைந்துகொண்டிருந்த படத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டார்(அவ்வ்வ் இண்டர்நேசனல் ஃபேமஸாகிட்டேன் போல:)   )


Thursday, November 3, 2011

ஒற்றையிலை

இங்கு இப்போது இலையுதிர்காலம். வெளியில் எங்கு சென்றாலும் கண்ணைக்கவர்வது மஞ்சள், சிவப்பு நிறங்களில் மேப்பில் இலைகள்தான்.
மரம் வரைவது லட்சியம், இப்போதைக்கு இலை நிச்சயம் என நேற்று எடுத்துவைத்திருந்த ஒற்றையிலையை எடுத்தேன்.புத்தகத்தினுள் வைத்திருந்ததால் நிறம் மங்கி வாடிப்போயிருந்த இலைக்கு, காகிதத்தில் கற்பனை வண்ணம் கொடுத்து வைத்தேன்.
வாட்டர்கலர், சைஸ், துரித பெயிண்டிங்....

பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

நம்மூர்ல இந்த மரம் பார்த்ததா ஞாபகமில்லை. அங்க என்ன பேர் இதுக்கு?