Tuesday, November 15, 2011

பாரீஸில் பறவை

   சென்னை பாரிமுனை மட்டுமே பாரீஸ் என நினைத்துக்கொண்டிருந்த நான், உண்மையான பாரீஸிற்குச் செல்லும் தங்க வாய்ப்பும் கிடைத்தது. சென்றவார ஆம்ஸ்டர்டாம் பயணத்தின் சுவடுகளைச் சுமந்தபடியே கடந்தசனி இரவு பாரீஸிற்குச் சென்றேன்.இம்முறை பேருந்துப்பயணம்தான். அதுவும் இரவில். 9 மணிநேரப்பயணத்தின் பாதியில் ஒருமணிநேரம் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டுமென்பது விதி.

    விளக்குகள் ,சூரிய ஒளியில் மங்க ஆரம்பித்ததொரு தருணத்தில் நான் பாரீஸில் இறக்கிவிடப்பட்டிருந்தேன். ஏற்கெனவே அலுவல் காரணமாக அங்கு தங்கியிருந்த நண்பன் விஜயராகவன் வரவேற்கக் காத்திருந்தான்.இனிமேல் அவன் அறைக்குச் சென்று ரெஃப்ரஷ் ஆகித் திரும்பினால் நேரமாகிவிடுமென்பதால் பேருந்து அருகே இருந்த நவீன கழிப்பறை & குளியலறையிலேயே காலைக்கடன்களை முடித்துக் குளித்துக் கிளம்பினோம்.

      பாரீஸில் ஒரு சிறப்பம்சம், சுரங்கப்பாதை ரெயில்கள்.கவுண்ட்டரை அணுகினால், எல்லா இடங்களும் அடங்கிய மேப் கொடுக்கிறார்கள். அதிலேயே சுற்றுலாத் தலங்கள் மட்டும் சிறப்புவண்ணத்தில் குறித்திருக்கிறார்கள்.எந்தெந்த ரெயில்கள், எங்கெங்கு,எவ்வப்பொழுது,எந்த ப்ளாட்ஃபார்மில் வரும் எனத் துல்லியமாகக் கொடுத்திருக்கிறார்கள். பாரீஸிற்குச் சென்றால், வழிகாட்டி துணையே தேவையில்லை. இந்த மேப்பும், ரயில் டிக்கெட்டும் போதும்.

   முதலில்  சென்ற இடம் , வேறென்ன ஈஃபிள் டவர்தான். டவரைச் சுற்றிலும் நான்கைந்து கிமீட்டர்களில் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. தூரத்திலே இருந்து படமெடுத்துவிட்டு, டவரை நெருங்கினோம். சிறப்புக் கட்டுமானத்திற்குப் புகழ்பெற்ற ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற பெருமிதம் தோன்றியது.அப்புறம் அடுத்தவேலைதான்...

     சரியான ஒரு கோணம்,இடம் தேர்ந்தெடுத்துவிட்டு ரெனால்ட்ஸ் பேனாவையும், நோட்டையும் கையிலெடுத்து வரைய ஆரம்பித்துவிட்டேன்;.சுமார் ஒன்றரை மணிநேரங்கள் பிடித்தது. ஸ்கெட்ச் கீழே...வெகு சந்தோஷம்...



   ஈஃபிள் டவர் முடிந்தவுடன், நாட்ரடாம்ஸ் சர்ச்சுக்குச் சென்றோம். தலைவலி காரணமாக அதிகம் ரசிக்க இயலாமல் அறைக்குத் திரும்பிவிட்டோம்.

    மறுநாள் காலை புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் புன்னகைத்துக் கொண்டிருக்கும் லூவர் அருங்காட்சியகம் சென்றோம். அப்பாஅ..ஆஅ...எவ்ளோ பெரிசு. இதை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்க 4 நாட்கள் தேவைப்படும். எனக்கிருந்ததோ முழுதாக அரைநாள் மட்டுமே...அதனால் அவர்கள் கொடுத்த கையேட்டில் மிக முக்கியமான ஓவியங்கள் மட்டும் இருக்கும் தளங்களுக்குச் செல்வதென முடிவெடுத்தோம்.


    17-19 நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய பாணி ஓவியங்கள் முழு விருந்தை அளித்தன. பெரும்பாலும் பைபிள் காட்சிகளைத்தான் ஓவியப் படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற வீனஸ் சிலை முடமான நிலையில் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் நம் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏமாற்றும் வகையில் சிறிய அளவில் இருக்கிறது. அங்கு மட்டும் அதிகக் கூட்டம்.ஃபோட்டோ ஃப்ளாஷ் அடிக்காமல் எடுக்கவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஃப்ளாஷுடன் க்ளிக்கித் தள்ளிக் கொண்டுருந்தனர்.

    ஒவ்வொரு பெயிண்டிங்கையும் நின்றுநிதானமாய் ரசிப்பதற்கு நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக நகர்ந்துகொண்டிருந்தோம். இதற்கே மணி மூன்றாகிவிட்டது.

  வெளியே அமர்ந்து, லூவர் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை வரைந்தது.

பாரீஸ் பயணம் இனிதே நிறைவுற்றது. :)

No comments:

Post a Comment