Friday, January 14, 2011

ஆடுகளம்-எனது பார்வை

    Disclaimer:இப்பார்வையில் படத்தின் கதை எங்கும் சொல்லப்படவில்லை. தைரியமாகப் படிக்கலாம்.  இப்படம் எனக்குக் கொடுத்த உணர்வை மட்டும் பகிர்கிறேன்.

    ரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தீபாவளியின் போது ‘பொல்லாதவன்’ வந்திருந்தது. தியேட்டர் எதிரே டீக்கடையில் இரண்டு பேர் அது ஏதோ பல்ஸார் விளம்பரப்படம் எனப் பேசிக்கொண்டிருந்ததில், ஜெர்க்காகி, ‘கண்ணாமூச்சி ஏனடா’ ஓடும் தியேட்டருக்குச் சென்று கூராகச் சீவிய ஆப்பில் அமர்ந்து வந்தேன். அந்தத் தீபாவளி ரிலீஸில் கறுப்புக் குதிரையாய் வெற்றி பெற்றது வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’.அதன்பின் அப்படம் பார்த்து அதன் மேக்கிங்கில் வியந்தேன்.


   ம்முறை அப்படி ஆகிவிடக்கூடாதென்று முதல்நாள் முதல் ஷோவே ‘ஆடுகளம்’ போய்விட நினைத்திருந்தேன்.இரவின் பயணக்களைப்பில் சற்றுக் கண்ணசந்ததில் இரண்டாவது ஷோதான் போகமுடிந்தது. டைட்டில் போடும்போதே பின்குரலில் ‘சேவக்கட்டு’தான் கதை என்பதைச் சொல்லிவிடுகிறார்கள்.அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது எனச் சற்று சோர்வாக அமர நினைக்கையில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் எழுந்துநின்று கைதட்ட வைக்கிறது. 90 நிமிடங்கள் ஓடுகிற முதல் பாதியில் டைரக்டர் எங்கெங்கு விசிலடிக்க வைக்க வேண்டுமென்று ஸ்கெட்ச் போட்டு திரைக்கதை பண்ணி உழைத்திருப்பது தெரிகிறது. சேவல் சண்டையில் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருக்கும் பேட்டைக்காரரின்(வ.ஐ.ச.ஜெயபாலன்) உடன் இருப்போர் கருப்பு(தனுஷ்), துரை(கிஷோர்),அயூப்(பெரியகருப்பத் தேவர்)களுக்கும், ஒரு முறையாவது பந்தயத்தில் ஜெயித்து தன் குலப்பெருமையைக் காப்பாற்ற நினைத்து அடிக்கடித் தோற்றுவிடும் இன்ஸ்பெக்டர் ரத்தினத்துக்கும் இடையில் நடக்கும் ஆடுகள நிகழ்வுகள்தான் முதல் பாதி.

          பேட்டைக்காரரின் கெத்து, அவரின் தோரணை, பெரியமனுஷத்தனம்,சேவக்கட்டில் எப்போதும் தவறாத அவரது கணிப்பு எல்லாம் கச்சிதம். தனுஷ் டெய்லர் மேட் பாத்திரம். கிஷோர் வித்தியாசமாக முடி, தாடியுடன் வருகிறார். இடையில் கண்டதும் காதல் கொள்வதற்கென்றே வரும் ஹீரோயினாக டாப்ஸி பன்னு(அப்டித்தான் டைட்டிலில் போடுகிறார்கள்). களவாண்ட சேவலைக் கண்டடையும் இடத்தில் தனுஷுக்கான கோழியாக மாட்டுகிறார் டாப்ஸீ,ஆங்கிலோ இந்தியப் பெண் பாத்திரம்.(வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களோ. இல்ல வெயிலுக்கே காட்டாம வளர்த்தாய்ங்களோ-நச்சின்னு சொல்லிட்டாய்ங்க பாடலில்). பழக்கப்பட்ட காட்சிகள் எனினும், மதுரை ரெயில்வே காலனி பின்புறத்தில்,மதுரை பாஷையில் ஓரளவு கலகலப்பாக நகர்கிறது காதல் காட்சிகள்.

      னுஷ் நாயகியின் மேல் உருகும் போது வரும் பாடல் ‘யாத்தே...யாத்தே’. இப்பாடலைத் தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என முன்பே முடிவெடுத்திருந்தேன்.சற்றும் ஏமாற்றவில்லை. விசில்களால் அதிர்கிறது திரையரங்கம். தனுஷிடம் டாப்ஸீ தனது காதலைச் சொன்னபிறகு வரும் ஒரு பாடலில் தனுஷின் டப்பாங்குத்து செம்ம கெத்து.டாப்ஸீக்கு அவ்வளவாக நடிக்கும் வேலையில்லை. பொம்மைதான்.அவர் பேசும் ஆங்கிலம் தனுஷை மட்டுமல்ல தியேட்டரில் அனைவரையும் கடுப்பேற்றுகிறது. அவரை அசத்த தனுஷ் ஆங்கிலத்தில் சொல்லும் ‘ஐ யாம் லவ் யூ’ க்யூட் காமெடி.ட்ரைலரில் எனக்குப் பிடித்த ‘கொன்ண்டே புடுவேன்’ ஐ அவர் படத்தில் உபயோகிக்கும் இடம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ‘சுனாமிலே சும்மிங் பன்றவங்க’ ,’அம்பானிக்கே அட்வைஸ் பண்றவைங்க’ தனுஷின் டெலிவரியில் நன்றாக எடுபடும் வசனங்கள்.

     ரு கட்டத்தில் காதல் காட்சிகள் ஓரங்கட்டப்பட்டு, சேவல்சண்டை வருகிறது.நடைபெறும் விதம்,போட்டி விதிகள்,அதற்கான கட்டுப்பாடு என நம்மை உள்ளிழுத்துவிடுகிறார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏத்தி இண்டர்வல் ப்ளாக்கில் ஒரு முழு ஆக்‌ஷன் படத்தின் கிளைமேக்ஸ் உணர்வை ஏற்றிவிடுகிறார் வெற்றிமாறன். சேவல் சண்டைதானே எனச் சொல்லிவிடமுடியாத படி ஒரு 20-20 கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆவலை ஏற்படுத்திவிடுகிறார். உயிர்வதை செய்யக் கூடாதென்பதற்காக, சேவல் சண்டைகளை முழுக்கமுழுக்க அனிமேஷனில் பண்ணியிருக்கிறார்கள்.அது அவ்வளவு இயல்பாகத் தெரிந்ததில் உழைப்பு விளங்குகிறது.இடைவேளை விட்டவுடன் படம் முடிந்த திருப்தி தெரிகிறது.


      ன்னும் அதிக எதிர்பார்ப்பில் அமர்ந்தால் இரண்டாம்பாதியில் கொஞ்சம் ஏமாற்றிவிட்டார் இயக்குனர்.படம் ஓவர் கமர்ஷியலாகப் போய்விடுமோ எனப்பயந்து,கொஞ்சம் சீரியஸாகக் கதை சொல்லுகிறார். அதிக சோகக் காட்சிகள்...ஆனால் சொன்னவிதத்தில் அதிலும் அழுத்தம் இல்லை.நம்பிக்கை, துரோகம், காதல்,அம்மா பாசம், வீரம், வைராக்கியம் இவையனைத்தையும் பின்பாதியில் ஒரேயடியாகத் திணித்துவிட முனைந்ததில் சற்றுப் பின்னடைந்திருக்கிறார். மருந்துக்குக் கூட கமர்ஷியல் காட்சிகள் இல்லை பின்பகுதியில்.சொல்லவந்ததைச் சொல்லிவிட்டார் ஆனால் அது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லையென்பது கண்கூடாகத் தெரிகிறது. கொஞ்சம் எடிட்டிங்கிற்கு வேலை கொடுத்திருந்தால் கச்சிதமான பேக்காஜாக இருந்திருக்கும் ‘ஆடுகளம்’


    2 பாடல்கள் ஏற்கெனவே ஹிட் பின்னணி இசை பரவாயில்லை.ஜிவி பிரகாஷ் தேறிவருகிறார். ஒளிப்பதிவு (வேல்ராஜ்) அழகு. ஒவ்வொரு ஃப்ரேமும் எதிர்பாராத ஆங்கிள்களில் எடுக்கப் பட்டிருக்கிறது திரையில் வரும் காட்சிகளை நடிகர்களை மட்டும் எடுத்துவிட்டால் அப்படியே சுவரில் மாட்டிவிடும் ஓவியங்கள் போல் உள்ளது. அதிகாலை, பின்னிரவுக் காட்சிகள் கச்சிதமாக நேர்த்தியான வண்ணக்கலவையுடன் நேரில் பார்ப்பது போல் உள்ளது. ஆனால் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே இருப்பதால் பொதுசனரசனை ஏற்றுக் கொள்வது சந்தேகமே.சண்டைகள் அதிகம் இல்லை. இரண்டுதானெனினும் இயல்பு, வன்முறை அதிகம்.


        ரண்டாவது படத்திலும் வெற்றிமாறன் எனக்குப் பிடித்தபடமே தந்திருக்கிறார். படத்தின் ரிசல்ட் அவரது பேரின் முதல் பாதியில் மட்டும் இருப்பது போல் முதல் பாதியிலேயே தொக்கிவிடுகிறது.

    சன் பிக்சர்ஸ் ஓட்டிவிடும்....

வெற்றிமாறனை எனக்கு அதிகமாகப் பிடித்துப் போகிறது. காட்சிகளைச் செதுக்கிய விதம் அவரின் திறமையைக் காட்டுகிறது. புதிய அனுபவம் தேடுவோர் கட்டாயம் பார்க்கலாம்.