Wednesday, September 29, 2010

விரல்வழிக் கசியும் துளிகள்...2

       ப்பொழுதும் தவறவிடாமல் பார்க்கும் ஒரே நிகழ்ச்சி விஜயில் வரும் ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ தான்.இளங்கலைஞர்கள் பாடுகையில் ஏதோ நாமே மேடையில் பாடுவது போலொரு ஆனந்தம். இன்றும் அப்படித்தான். அதில் கிளாசிக் வகையைத் தேர்ந்தெடுத்த ஹரிணிதிவ்யா பாடிய பாடல் கேட்டவுடன் பிறந்ததே இப்பகிர்வு.
   
     ண்முகப்ரியா ராகமாம்.(நன்றி. எஸ்.பி. சைலஷா). எனக்குத் தெரியாது. ரவி சார் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன். ராஜாவின் இசையில் விரகமும், காதலும்(நல்லதோ கெட்டதோ காதல்தான் அது. வள்ளுவரின் வாக்கில் சொன்னால் ‘காமம்’), தவிப்பும், ஏக்கமும், இயலாமையும் பிரவாகமாய் வெளிப்படும் பாடல்.ஆரம்பப் பின்னிசையிலேயே நான் இதைத்தான் சொல்லப் போகிறேன் எனச் சொல்லிவிடுவார்.(இப்பல்லாம் படங்களுக்கு டிரைலர் காட்டுவது போல).
           
            குழலில் ஆரம்பிக்கும் தாகம், பின் வயலின்களின் வருகையால் ஆறுதலடையும் நேரத்தில் வந்துவிடுவார் ஜானகி ‘சொல்லாயா’ எனச் சொல்லிக் கொண்டு. உடனே ஆரம்பித்துவிடும் தபேலாவின் தட்டுக்கள் மற்ற ராஜாவின் பாடல்களில் வரும் தாலாட்டுத் தட்டுக்கள் அல்ல.சிறிதே சீண்டிப்பார்க்கும் செல்லத் தட்டுக்கள்.

    ல்லவி முடியவும் வரும் இசை சிதாரில் ஆரம்பித்துப் பின் வயலின்களைப் பாடவிட்டுப் பக்கவாத்தியமாகிவிடுகின்றது.
  சரணத்தில்
   ‘ஆகாய சூரியன் மேற்கினில் சாய...
    ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
    தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
    தாமதம் இனியேனோ இருமேனி கூ’ இதுவரையில் செல்லத்தட்டு தட்டிய தபேலா
அந்திவரும் தென்றல் சுடும் ஓர் விரகம் விரகம் எழும்’எனும் வரிகளில் வேக,விவேகமாக ரிதம் மாறி,  நம்மை ஒரு விதமாக உருட்டிச் செல்லும்.
இரண்டாவது பின்னிசையின் போது தபேலா மவுனமாக, வந்து விடுவார்கள் பிரதான வயலின் பாடகர்கள்.சிறிது தாபத்தை அது கொடுக்க புல்லாங்குழல் வந்து கசியவிடும் சோகம் இனிது.ஜானகியின் பங்களிப்பைப் பற்றி நானென்ன பெரிதாகச் சொல்லப் போகிறேன். அதெல்லாம் அனுபவிக்கணும்.


   கிளாசிக்கலோ, வெஸ்டர்னோ எதுவும் தெரியாத என்னைப் போன்ற பல பாமரர்களுக்கான இசைதான் இது.

   
            சைக்கான வித்து நல்வித்து. தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’.
அதிலிருந்து சில பகுதிகள் இப்பாடல் காட்சியோடு தொடர்புடையவை கீழே சிறிது தந்திருக்கிறேன்.

          "அங்கே யாருமில்லை” என்ற அர்த்தத்தில் அவள் உதடு பிதுங்கிற்று.முகம் பளபளவென்றிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு கன்னத்தில் வீசிக் கொட்டிற்று.காதின் முன் மயிர் சற்று அதிகமாகவே கீழே இறங்கியிருந்தது, முகத்தின் களையை இன்னும் உயர்த்திவிட்டது. அந்த முகம் அழகி என்று சொல்வதே, இந்த இறக்கத்தால்தானோ என்னவோ! முகத்தில் ரோஜா நிறப் பவுடர் குளுகுளுவென்று கமழ்ந்தது. தலையில் வைத்திருந்த பூவின் ஓரம் வெள்ளையாக எடுப்பாகத் தெரிந்தது. பளீர் என்று மஞ்சள் குங்குமம். மூக்கில் ஒரு வைரப்பொட்டு நீலமாக இறைத்தது...... தங்கம்மா...


   

"நீ சோதனை செய்தாய் நான் தோற்றுவிட்டேன்., என்னைச் சோதனை செய்ததில் உனக்கென்ன பெருமை? சிங்கம் பூனையோடு பலப்பரீட்சை செய்வதுபோல்தான் இது. ஆனால்...அதாவது... என்ன.  இனிமேல் நான் அஜாக்ரதையாக இருக்க மாட்டேன். நேற்ற் இரவைப் போல் வெளிக்கதவைத் தாழிட்டு விடுவேன். மதில் காவலா, மனம் காவலா என்று சிரிப்பதுண்டு சிலர். ஆனால் உள்கதவும் திறக்காது என்பதற்கு அடையாளம்தான் வெளிக்கதவு மூடியிருப்பதும், வெளிக்கதவு மூடியிருந்தால் உள்கதவு திறவாது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும்.”.........பாபு



“நேத்தி ராத்திரி நான் வந்து ஜன்னலில் நின்று தொண்டை வறளக் கத்தினேன். கதவைத் தட்டினேன்.நீங்கள் ஒன்றுக்கும் எழுந்திருக்கவில்லை. எப்படித்தான் இவருக்குத் தூக்கம் வருகிறதோ என்று நினைச்சுண்டே நின்னேன்.எனக்குத் தூக்கம் வரவில்லையே! எனக்குக் கோபம் கோபமாக வந்தது. ஒரு பொம்மனாட்டி மானத்தை விட்டு விட்டு எத்தனை நாழி ஒண்டியாக நின்னு கத்துகிறது.நீங்கள் கதவைச் சாத்திண்டு தூங்கினதுமே எனக்குப் பயமாயிருந்தது.உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையோன்னுதான் பயமாயிருக்கு....................”.........தங்கம்மாவின் கடிதம்...


  இப்போது பாடல் கேட்டு, முள்ளை ஏற்றிக் கொள்ளுங்கள்.

Monday, September 27, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

        ன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எட்டு மணிக்கெல்லாம் பசி வந்துவிட்டது.வழக்கத்திற்கு மாறாக வெளியில் சாப்பிடக் கிளம்பினேன்.அறையிலிருந்து கிளம்புகையிலேயே கண்ணாடி சன்னல்கள் திடீர் திடீரென மங்கலான வெள்ளொளியைத் துப்பிக் கொண்டிருந்தன.சற்றுப் பொறுத்து மெல்லக் காதில் விழந்தது இடி சத்தம்.சாக்கிரதை உணர்வில்.ஒரு கம்பி மட்டும் உடைந்து மரபான  வடிவத்தைக் கட்டுடைத்த படி இருக்கும் பச்சைக் குடையை எடுத்துக் கொண்டேன்.கதவு தாண்டித் தெருவில் கால்வைத்தவரை சிற்றின்பத் தூறல்கள்தான் கொஞ்ச ஆரம்பித்திருந்தன.குடையை விரிப்பது அவசியமில்லை.ஆனால் குடை தேவையென இடி சொல்லிக் கொண்டிருந்தது அவ்வப்போது. பத்தடி தூரத்தில் உணவகம். வட இந்திய வாசம் விட்டுப் போகக் கூடாதென இரண்டு ஆலு பராத்தாக்களைக் கேட்டேன்.மேசைமீதிருந்த ஸ்பீக்கர்களில் ஹிந்திப் பாடல் தூறிக் கொண்டிருந்தது.இந்தோரில் இருந்த மூன்று வருடம் வெளியிடங்களில் தமிழ் கேட்க நான் பட்ட கஷ்டம் என் சகிப்புத்தன்மையைக் கூட்டியிருந்தது.என் வட இந்திய நண்பர்களின் மனைவிமார்கள் செய்த ஆலு பராத்தாவின் மிருதுவில் பாதிதான் இருந்தது இங்கு கிடைத்த பண்டம். .தயிரும், வெங்காயமும் தனியாக வைத்திருந்தனர், ஏதோ வாய்க்கால் தகராறு போலும்.சிறு சிறு மெது திண்மங்களாக உள்வைத்து அமுக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள் பராத்தாவின் கூட்டணியில் சிறிது ருசியுடன் பசியைத் தணித்துக் கொண்டிருந்தன.இதற்குள் திடீரெனச் சுருதி குறைந்த பாடலும், உணவகத்தினுள்ளே தெறித்த துளிகளும் மழையின் வேகம் வலுத்ததைக் காட்டின.குழந்தையின் ஆர்வத்தோடு வேகமாகச் சாப்பிட்டு முடித்தேன்.கை கழுவ வெளியேதான் செல்லவேண்டும்.குடையின்றிச் சென்றதால் நிகழ்ந்த முன்னோட்ட நனைதலில் உடைகளில் எடை கூட ஆரம்பித்தது.இருபத்தி ஐந்து ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளிப்புகுந்தேன் மழைக்குள், கொஞ்சமாய்க் குடைக்குள்ளும்.

          யோத்தி தீர்ப்பு நாளை வந்துவிட்டால், கலவரம் வந்துவிட்டால்,ஊரடங்கு போட்டுவிட்டால்,கடைகள் அடைத்துவிட்டால்.....பல ட்டால்கள் மனதிற்குள் புதிதாகக் கிளைவிட்டுப் பெருக ஆரம்பித்திருந்தன.காய்கறிகள் வாங்க வேண்டும்.பப்பிள் டாப்பில் தண்ணீரின் அளவு திருகும் குழாய்க்குக் கீழே மண்டியிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.நீருக்குச் சொல்லவேண்டும்.இன்னும் எதை எதை மறந்தேனோ, எதை நினைத்தேனோ தெரியவில்லை.சிறு கவலைகள் மழைக்குள் உருத்தெரியாமல் போய்க் கொண்டிருந்தன.தெருவிற்குள் இறங்குவதற்குள் திடீரென இருள் கவ்விக் கொண்டது.மின்சாரம் என்னவோ மழையின் சம்சாரம் போலும். மழை வந்தவுடன் இது முகத்தைத் திருப்பிக் கொள்கிறது..எப்பொழுது திரும்ப வருமெனத் தெரியாது.ஆங்காரமோ, ஆர்ப்பரிப்போ தெரியவில்லை, மழை காட்டுக் கத்தலாய்ப் பெய்ய ஆரம்பித்திருந்தது.சாலையோர மணல் இப்போது செம்புலப் பெயல் நீராகி இருக்கும். இருட்டில் பார்க்கமுடியவில்லை.செருப்புகளினூடாகக் குறுகுறுத்த பாதங்கள் அதன் அடர்த்தியை உணர வைத்தது.ஒழுங்கற்ற எல்லைகொண்ட சாலைகளில் பாதியும், மழைச்சேற்றில் பாதியுமாக நடக்க ஆரம்பித்தேன்.வாகனங்கள் வருகையில் சற்று நின்றுதானாக வேண்டும்.ஒன்று அதன் எல்லை எனக்குப் பிடிபட வேண்டும். இல்லை நான் நிற்பதாவது வாகன ஓட்டிக்குத் தெரியவேண்டும்.எதிரெதிர் வாகனங்கள் பீய்ச்சிச் செல்லும் ஒளிக்கற்றைகளில் மழைக்கைகளின் ஒழுங்கற்ற நடனம் தெளிவாய்த் தெரிந்தது.பெரிய, சிறிய கோட்டுத் துண்டுகள் ஒன்றையொன்று இடைவெட்டியும்,நேர் சென்றும் கோணங்கித்தனமானதொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. சாலையில் கிடந்த குழிகளிலெல்லாம் குழந்தைகளைப் போல் குதித்துக் கொண்டிருந்தது மழை.இந்நேரத்திற்கெல்லாம் சிறிது குளிரும் உள்ளேறி, ஈர உடைகளினால் மேலும் வலுவானது.வாகனங்கள் கடந்தபின் இருளின் ஆதிக்கம் எதையுமே பார்க்கவிடவில்லை. எதிரிலிருந்து ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி எனது உயரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. யூகிக்க முடியவில்லை. என்னைக் கடந்த சில நொடிகளில் புரிந்தது. சைக்கிளில் வந்த ஒருவன் வாயில் செல்போனை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. செல்போனின் தலையிலிருந்து வந்ததுதான் அவ்வொளி. என்னை நொந்து கொண்டேன். நோக்கியா 1100 வைத்திருந்தால் வசதியாக இருக்குமே என்று. விலையுயர் செல்போன்களில் டார்ச்சும் இல்லை. மழை பட்டால் அதற்கு வாழ்வும் இல்லை. இன்னொன்றும் நினைவுக்கு வந்து தொலைத்தது.பேட்டரி சார்ஜ் நிலை காட்டும் இடம் ஒற்றைப் பல்லுடன் இருந்தது. அது பொக்கைவாயாவதற்குள் மின்சாரம் வந்துவிட வேண்டும்.

                டக்க நடக்க எனது செருப்பு பின்புறம் பாதி நீரை வாரியடித்து பேண்டினைத் துவைத்துக் கொண்டிருந்தது. நாளைக் காலையில் பார்க்கையில் பான்பராக் எச்சில் துப்பியது போல் செம்மண் பொட்டுகள் ஒழுங்கின்றி ஒட்டியிருக்கும்.மறுபடியும் இடித்த இடி மழையைப் பற்றியே நினைக்கச் சொன்னது.கலைத்துவிட்ட தேன்கூட்டினை மீண்டும் சுற்றிச் சுற்றி ஒட்டும் தேனீக்களாய், குடை இருந்தும் என் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது மழை.ஏற்கெனவே ஒரு கம்பி போன நிலையில் , சற்று வேகமாக நடந்தால் என்னிடமிருந்து மழையைக் காப்பாற்றுவது போல் மேலாகத் திரும்பிக் கொள்கிறது குடை. மழை பற்றி மனதில் எழுதிய வாசகங்களை மழையே அழித்து வேறொன்றை எழுதிச் சென்றது.இப்போது சாலையில் சிறிது ஒளி பின்னிலிருந்து வந்தது. வெகு தூரத்தில் வரும் நான்கு சக்கர வாகனமாயிருக்கலாம்.ஒளி கூடக் கூட எனக்கு முன்னால் ஒரு உருவம் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்தது தென்பட்டது.வலது தோளில் தொங்கவிடப்பட்ட கைப்பையினை இறுக்கிக் கொண்டிருந்தது அவளது கை.மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது சுடிதார்.ஏற்கெனவே கால்களை இறுக்கும் கீழ் ஆடை மழையால் இன்னும் நெருங்கி, கோயில் சிலைகளின் கால்கள் போல் காட்டியது.’அக்கினிப் பிரவேசம்’ கங்காவைப் பற்றிய ஜெயகாந்தன் வர்ணனை நினைவில் வந்து போனது.ஆனால் இவளுக்கு இருபது வயதிருக்கலாம்.சடாலெனக் குனிந்து இடது கையில் தனது ஹை-ஹீல்ஸ்களைக் கையில் எடுத்துக் கொண்டு நடை போட்டாள். அதற்குள் வாகனம் கடந்து விட அவளும் பார்வையில் இருந்து விடைபெற்று விட்டாள்.எப்படி இருக்கும் முகம் கற்பனை செய்தேன். பாழாய்ப் போன சினிமாப் புத்தி ,பழைய நடிகைகள் மழையிலும் கரையாத மேக்கப் போட்டுக் கொண்டு கண்முன் வந்து போனார்கள். எதுவும் வாங்காமலேயே வீட்டிற்குள் நுழைந்தேன்.ஒற்றை மெழுகுவர்த்தியின் தரிசனத்தில் பொன்னாய் சொலித்துக் கொண்டிருந்தது அறை.நிசப்தம் கூட அதன் ஜோதியைக் கூட்டுவது போல் தோன்றியது.குடையை விரித்த வாக்கிலேயே வைத்துவிட்டு உடை மாற்றினேன். சன்னல் வழியே வெளிப்பார்க்கையில்தான் மழை குறைந்திருந்ததும், மேகத்தோடு விளையாடும் நிலவும் தெரிந்தது. இன்றைய நிலா இன்னும் சுத்தமாகக் காட்சியளிப்பது போல் தோன்றியது.வெளியில் இருந்த வயலில் வெட்டியிருந்த வாய்க்கால்களில் நிலவின் நீள்வட்ட நகல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வாய் பாடலொன்றை முணுமுணுக்க ஆரம்பித்தது.’பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’.
இரண்டடி பாடுவதற்குள் ,கண்ணைக் கசக்க வைத்த வெளிச்சம் பாடலை நிறுத்தியது. அறை மூலையிலிருந்து ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ கதற ஆரம்பித்து விட்டான். வாழ்க சன் டிவி...!வளர்க மின் துறை....!!

Wednesday, September 15, 2010

இளையராஜா-இப்பவும் நான் ராஜா

இன்னொரு முறை மகிழும் வாய்ப்பெனக்கு வந்திருக்கிறது. இளையராஜாவுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.இதுநாள் வரை இல்லாத ஒன்றாக, ‘பின்னணி இசை’க்கென தனி விருது தொடங்கப்பட்டு அதன் முதல் விருதே இளையராஜாவுக்குத்தான் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும் அவ்விருது.’பழசிராஜா’(மலையாளம்) படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இதுவரை இளையராஜாவுக்கு விருது பெற்றுத்தந்த படங்கள் அனைத்தும் இசையை மையமாகக் கொண்ட படங்களே. சாகரசங்கமம்(தெலுங்கு-1984-தமிழில் ‘சலங்கை ஒலி’),சிந்து பைரவி(1986), ருத்ரவீணை(தெலுங்கு-1989-தமிழில் ‘உன்னால் முடியும் தம்பி’). ‘பழசிராஜா’வோ முற்றிலும் வரலாற்றுப் பின்னணியில் வெளிவந்த படம். இதற்கு முன்பே ‘சிறைச்சாலை’,’ஹேராம்’ படங்களுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ‘சேது’,’நான் கடவுள்’ இன்னும் பல படங்களின் பின்னணி இசை விருதுக்குத் தகுதியானவையே. நடுவர் குழு ஹிட்டான பாடல்களை மட்டும் கவனித்திருக்கலாம்.அல்லது ராஜாவின் பாடல்களுக்குள் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாமலிருந்திருக்கலாம்.இதில் இரண்டாவது வகையே அதிகம் என நினைக்கிறேன்.‘பழசிராஜா’வின் பாடல்கள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை.

சங்கீதங்கள் மட்டுமல்ல ராஜாவின் மவுனம் கூடச் சிறந்த இசைதான். பாலுமகேந்திராவின் கூற்று இது:’என் படங்களில் எங்கு இசை பேச வேண்டும். எங்கு மவுனம் இசைக்க வேண்டும் என்பது என் ராஜாவுக்குத் தெரியும்.’பாலுமகேந்திராவின் ‘வீடு’ படத்தின் பின்னிசையைக் கவனியுங்கள்.


பாண்டியராஜனின் ‘ஆண்பாவம்’ படத்தின் பின்னணி இசை ரசிக்க....




இளையராஜா-மணி ரத்னம் இணைவில் உருவான ஒரு முத்து கீழே...


இப்போதைக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் ராஜாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...