Friday, July 17, 2009

பழைய சரக்கு…

   இன்னும் கொஞ்ச காலத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயலாது. சில,பல சுய காரணங்களின் அணிவகுப்பு இதற்குப் பின்புலம் உள்ளது.
மற்றபடி சரக்கும் தீர்ந்துவிட்டது போல் உணர்வு…
எப்பவோ ட்ராஃப்டல இருந்ததை மானிட்டர் தூசு தட்டி இப்போ பதிவிட்டிருக்கேன். இந்த கவிதை(..?)களெல்லாம் ஹைக்கூன்னு சொன்னா ரவி சார் அடிக்க வந்துடுவாரு… அதனால தலைப்பு எதுவும் கொடுக்கலை. படிங்க புரியும்.. புரியலைன்னா விட்டுருங்க… இன்னும் சுகம்….மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் உத்தரவு வாங்கிக்கிறேன்….
*****
காற்றில்லாப் பொழுது
இலையை அசைத்தது
நிழல்...
******
மின்தடை நேரம்
புத்தகம் வாசிக்கும்
இருள்...
******

பென்சில் துருவலில்
விரிந்தது ஓவியம்
மரத்தூள்...
******
யானை புலி சிங்கம்
ஒருசேர அழிந்தது
வெள்ளையடிக்கையில்...
******

Sunday, July 5, 2009

32 கேள்விகளும், அதற்கு மேற்பட்ட பதில்களும்…

    இந்தக் கேள்வி-பதில் தொடருக்கு அழைத்த நண்பர் இரா.வசந்தகுமாருக்கு நன்றி. அவரை அழைத்த ‘யோசிப்பவரு’க்கும் நன்றி.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
   ’தமிழ்ப்பறவை’- வலைப்பூ உருவாக்க முயன்ற போதே ஒரு பிடிவாதம்.. பெயரில் கட்டாயம் ‘தமிழ்’ இருக்க வேண்டுமென. ஒரு நிமிடத்துக்கும் குறைவான யோசனையில் தமிழுடன் சிறகாய் ஒட்டிக்கொண்டது பறவை. முன்பே வலைப்பூவின் தலைப்பு ‘வானம் வசப்படும்’ எனத்தீர்மானித்துவிட்டபடியால், பறவை என்னும் பெயர் இலக்கை அடையச் சரியானதாக இருக்குமென வைத்துக்கொண்டேன்.
  பிடிக்காமல் வைத்துக்கொள்ளமுடியுமா? ஆனால் இது பலருக்கும் பிடித்திருக்கிறது எனப் பின்னால் அறிந்ததில் ஒரு பெருமிதம்.

பரணி ராஜன்’: இது இயற்பெயர். காரணம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன்.அப்பொழுது ‘பரணி தரன்’ என்ற பெயர்தான் பொதுவாக வைப்பார்கள். என் தாத்தா, இவன் ராஜா மாதிரி (மாதிரிதான்...ராஜா இல்லை) இருக்க வேண்டுமென நினைத்து ‘பரணிராஜன்’ எனச்சூட்டிவிட்ட பெயர், இங்கு இந்திக்காரர்களின் வாயில் படாதபாடு படுகிறது.
என் பெயரின் ஆங்கில வடிவம் இன்னும் சிக்கலானது. அதைப் பிறிதொரு பதிவில் விளக்குகிறேன்.

  இப்பெயரும் எனக்குப் பிடிக்கும்.இந்தப் பெயர் ‘சுரேஷ்’,ரமேஷ்,சங்கர் போல்  ,வேறுபடுத்திக்காட்ட ஒன்றிரண்டு இனிஷியல்கள் வைப்பதைத் தவிர்க்கவைத்த சிக்கனமான பெயர்.
எப்பொழுது பெயரைப் பற்றிச் சிந்தித்தாலும் ,ஆறாம் வகுப்பு துணைப்பாடநூலில் படித்த ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதை நினைவோரம் நின்று விட்டுப் போகிறது.


2) கடைசியா அழுதது எப்போது?
  ஏதோ ஒரு தமிழ்ப்படம் பார்க்கும்போது, ஞாபகமில்லை இப்போது.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
  நான் 5ந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து ,பிடிக்க வைக்க எவ்வளவு முயன்றும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நன்றாக எழுதும் பலரின் கையெழுத்தைப் போல எழுத முயன்று வெற்றி பெற்றாலும், அது தற்காலிகமே.பின் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.(இதுக்கு அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்...)
4) பிடித்த மதிய உணவு?
   பிரியாணி... இதில் பல வகை இருந்தாலும், மதுரைப் பக்கம் ‘முனியாண்டி விலாஸ்’களில் எண்ணெய் மிதக்கத் தயாராகும் பிரியாணி மற்றும் சால்னா வகை பிடிக்கும். இது தினசரி சாத்தியமில்லை என்பதால் முட்டையுடன் கூடிய ரசம் சாதம் மிகப் பிடிக்கும்.
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
ஒரு வினாடி கூட யோசிக்காமல் வைத்துக்கொள்வேன்.பரணியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன? (மேனேஜர்களைத் தவிர)
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
  கடல்,அருவிக்குளியல் அதிகம் அனுபவப் பட்டதில்லை.வியர்வை சிந்திய தேகத்துடன் அறையில் குளிர்நீராடப் பிடிக்கும்.
கிராமத்து வயல்வெளியில் பம்ப்செட்டில் குளிக்க இன்னும் ஆசை.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
   நாம் பேசினால் கேட்பாரா என்று... இல்லை அவர் பேசினால் நம்மால் கேட்க முடியுமா என்று...
8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்த விஷயம்: எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம்: சோம்பல்...
9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
  கேள்வி கேட்ட புண்ணியவான் குடும்பஸ்தன் போல.. அதான் எங்கள மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ஆப்சன் வைக்கலை.,.
வருங்கால துணைவிகிட்டன்னு கேள்வியை மாத்திக்கிட்டு பதில் சொல்றேன்...
  பிடிக்கப் போகும் விஷயம்: புன்னகை
  பிடிக்கப் போகாத விஷயம்: நச்சரிப்பு
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
     என் குடும்பத்தார்...
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
   நீலம்+வெள்ளை (என்ன நிற ஆடைன்னு கேள்வி தெளிவா இருக்கப்போ ஏன் எல்லோரும், அவங்க போட்டிருக்கிற,போட நினைக்கிற உடையைப் பத்தில்லாம் கலர்,கலரா ரீல் விடுறாங்கன்னு தெரியலையே..?!. இருந்தும் எல்லைமீறல்களில் இருக்கும் சுகமே அலாதிதான்)
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
  பார்ப்பது: எல்.ஜி. மானிட்டர்..(யோவ் பதிவெழுதுறப்போ படம் பார்த்துட்டா போட முடியும். எல்லாரும் அவனவன் மானிட்டரைத்தான் பார்ப்பான்)
கேட்பது:
   ‘ஊரடங்கும் சாமத்தில்’ பாடலில் ஆரம்பித்து,’ராசாவே உன்னை விட மாட்டேன் நான்’ எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது,அநேகமாக பதிவு முடிக்கும் வேளையில் ‘தென்றல் வந்து என்னைத் தொட’ ஆரம்பித்திருக்கலாம்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்பு
14) பிடித்த மணம்?
மல்லிகை
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?
மகேஷ்:  ‘ரசிகன்’ என்னும் வலைப்பூவில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாக ,அழகாகச் சொல்லி வருகிறார்.எனது கல்லூரி ஜூனியர்.தம்பி.மற்றபடி எனக்கும் ரசிகன்.
கபீரன்பன்: இவரின் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும். எனது ஓவியங்களைப் பதிவு செய்யத் தூண்டிய பதிவுகளில் இவருடையதும் ஒன்றெனலாம்.இவருக்கும் நான் ஏகலைவன் தான்.
தர்ஷினி: ஒரு நாளைக்கு இவருக்கு 48 மணி நேரம்ன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவ்வளவு பொறுமையான, நேரமெடுக்கும் கை வினைப் பொருள்களைச் செய்து வருகிறார். இவரின் வலைப்பூவில் இதுபோன்ற தொடர்கள் எழுதமாட்டார் எனத் தெரியும். இருந்து இன்விடேஷனை நீட்டிவிட்டேன்.எப்படியாவது நிறைவேற்றிவிடுவாரென எண்ணுகிறேன்.
கயல்விழிநடனம்: இவரின் வலைப்பதிவுகள் தரமாக இருக்குமென்பதற்கு ஒரே சாட்சி இவர் வலைப்பூவின் தலைப்புதான்.சிறுசிறு விஷயத்தையும் நகைச்சுவையோடு சுவையாகச் சொல்கிறார்.பொதுவாக மகளிர் பதிவுகளுக்குச் செல்கையில் எடுத்துச் செல்ல வேண்டிய கர்ச்சீஃபுக்கு இவர் பதிவில் வேலை இருக்காது.
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இரா.வசந்தகுமார்---காலப்பயணியின் கதை ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இவரின் 95 சதவீதப் பதிவுகள் பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.ஒரு விஷயத்தை எப்படி அழகாகப் பதிவில் பண்ணவேண்டுமென்பதற்கு இவர் எனக்கு நிகழ்த்திய லைவ் டெமான்ஸ்ட்ரேஷன் இப்பதிவு. இது எனக்குக் கடந்த வாரத்தில் நேர்ந்த அனுபவம். அதை இவரிடம் கால் மணிநேரம் சொல்லி இருப்பேன். அதைக்கூட அழகான கிசுகிசு டைப் கிச்சுகிச்சு பதிவாக்கி இருக்கிறார்...

  
இன்னொரு பதிவு:இந்த மொக்கையான கேள்வி-பதில் தொடரைக் கூட எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பாருங்கள்…

17) பிடித்த விளையாட்டு?
  சதுரங்கம்..
(பிடிக்காத விளையாட்டு: வாழ்க்கை)
18) கண்ணாடி அணிபவரா?
ஆம்..(ரெஃப்: ப்ரொஃபைல் ஃபோட்டோ)
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லா மாதிரியாகவும். அதிகம் விருப்பம் காதல்,காமெடி திரைப்படங்கள்(காதலே காமெடி என யாருப்பா சொல்றது..?!)
20) கடைசியாகப் பார்த்த படம்?
‘வினோத யாத்ரா’- இளையராஜாவுக்காகப் பார்த்தது. இன்னும் இளையராஜாவை உயிர்ப்போடு உபயோகப் படுத்தும் இயக்குனர்களில் ‘சத்யன் அந்திக்காடு’ம் ஒருவர்.
21) பிடித்த பருவ காலம் எது?
குழந்தைப் பருவ காலம்....
மழைக்காலம்...
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
பழைய விகடன்கள், கோபி கிருஷ்ணனின் ‘இடாகினிப்பேய்களும்’,எப்போது மனது சஞ்சலப் பட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’...
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
   அடிக்கடி மாற்றுவது எனக்குப் பிடிக்காது.கொஞ்சம் செண்டிமெண்ட்டும் கூட... எனது டெஸ்க்டாப் படம் இப்பதிவிலிருக்கும் படம்தான்
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:
      இசை
பிடிக்காத சத்தம் : இரைச்சல்
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
1500 கி.மீ... கடந்ததில் வந்தது இப்போதிருக்கும் இந்தூர்..
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறதெனெவே நினைக்கிறேன் இருந்தும் சரியாக வெளிப்படுத்தியதில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இந்திய அரசியல்.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
     உள்ளே மட்டும் என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சாத்தான் Mr.சோம்பலார்தான்.
இந்தக் கேள்வி,பதில் தொடருக்கான அழைப்பு வந்து பத்து நாட்களாகியும், நேற்று வசந்த் அலைபேசியில் மிரட்டல் வைத்தபின் தான் முடிக்க முடிந்தது.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
சென்னை
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்டாக ஆசை
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
இப்போ நான் விரும்பிச் செய்யுற எல்லாக்  காரியங்களிலும் மனைவி இல்லை. சொல்லப் போனா மனைவியே இல்லை.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
zero shirt விளம்பரவாசகம் ஒண்ணு பார்த்தது எனக்குப் பிடித்திருந்தது. ஏன்னா அது வாழ்க்கைக்கு ஃப்ளெக்ஸிபிளா பல இடங்களில் பொருந்துகிறது.
”Take Life as it comes"