Friday, April 24, 2009

’அடேங்கப்பா’ அசைவ உணவகம்

        ஷ்ஷ் அப்பா... இப்பவே கண்ணக் கட்டுதே.கரூர் போய்ச் சேர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.’பசி வந்தாப் பத்தும் பறந்து போகும்’ ன்னு சொல்லுவாங்க.ஆனா  பஸ் பறந்து போக மாட்டேங்குதே என்ற கவலை எனக்கு.
     எப்போல்லாம்  ரொம்பத்தூரம் பயணம் போறேன்னோ, அப்பல்லாம் வழித்துணைக்கும், வாய்த்துணைக்கும் சேர்த்து ரெண்டு,மூணு கடலைமிட்டாய் எடுத்துட்டுப் போவேன். ஒரு மிட்டாய் சாப்பிட்டாலே, உடனடி எனர்ஜி கிடைக்கும். கூடவே கொஞ்சம் தண்ணீர் குடிச்சா, பசி போற இடம் தெரியாது.அஞ்சு நிமிஷம் அக்கம் பக்கம் வேடிக்கை பார்க்கலாம். அதுக்கப்புறம் உற்சாகமாத் தூங்கலாம். இதுதான் என்னோட வாடிக்கை.அதுக்கு ஒரு அரசுப்பேருந்து நடத்துனர் ஆப்பு வெச்சிட்டார்.


               மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுல ,பஸ் ஏறுறதுக்கு முன்னாடி ,விகடனும் ,குமுதமும் வாங்குனேன். கூடவே ஃபேவரைட் கடலை மிட்டாயும் வாங்கிட்டேன். வாங்கிட்டு சேலம் போறதுக்காக நின்ன பஸ்கள்ல முதலாவதுல ஏறி ஜன்னலோர இருக்கையும் போட்டுட்டு, பெரிய பேக்கை மேலேயும், சின்ன பேக்கை கையிலயும் வச்சிக்கிட்டேன்.பஸ் கிளம்புறதுக்கு முன்னாடியே சிறு கடனைக் கழிச்சுட்டு வரலாம்ன்னு வெளிய வந்தென். அப்போதான் இன்னொரு அரசுப் பேருந்து,. நானிருந்த பஸ்ஸ முந்திட்டுப் போயி முன்னாடி லேண்ட் ஆச்சு. பார்த்துட்டுருக்கும்போதே, இந்தப் பஸ்ஸோட நடத்துனர் வந்து விட்டார்.
   “ சேலம் போறவங்கள்ளாம் முன்னாடி நிக்குற பஸ்ஸுல ஏறிக்குங்க. இந்த பஸ் செட்டுக்குப் போகப் போகுது” -ன்னார்.
   ‘அடங்கொய்யால.... முன்னல்லாம் பஸ் நகர்ந்ததுக்கப்புறம்தானடா உயிரெடுப்பீங்க.. இப்பல்லாம் அதுக்கு முன்னாடியேவா..?!’ -ன்னு நினைச்சுக்கிட்டே, இன்னொரு பஸ்ஸுலயும் ஜன்னலோர இடம் பிடிக்கணும்னு அவசரத்துல , உள்ள போய் பெரிய பேக்கை எடுத்துட்டு வெளியே வந்தேன். பேக்கில சிப் சரியாப் போடாததால சைடுல வச்சிருந்த என்னோட க.மி. அந்தப் பஸ்சோட அப்பர் பெர்த்லேயே, அதோட டிக்கட்டைக் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டது எனக்குத் தெரியலை.


             இந்த விஷயம் திண்டுக்கல் போறதுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, அங்கேயே  இடைக்கால நிவாரணத்துக்காக ஏதாவது வாங்கியிருக்கலாம்.பஸ்சுல ஏறினதுல இருந்து என் சீட்டுக்கு நேர் எதிர் சீட்டுக்கு முன்னாடி ஓரத்துல உக்காந்திருந்த கேரள ஃபிகரு    (மொழியே தேவையில்லை கண்டுபிடிக்க. முழியும், முடியும் போதாதா...என்னது வேறொண்ணும் இருக்கா.. அதை ‘ரன்’ படத்துக்குப் பாட்டெழுதுன முத்துக்குமாரைத்தான் கேட்கணும்) கடைக்கண் பார்வையையே எதிர்பார்த்திருந்ததுல என் கவனம் பேககிலும், புத்தகத்தின் மீதும் போகவில்லை. அதற்குள் திண்டுக்கல்லும் வந்துவிட்டது. கேரளாவும் போய் விட்டது.
 
          அதுக்கப்புறம் குமுதத்தை விரித்துப் பக்கங்களுக்குள் பார்வையை ஓடவிட்டேன். சமையல் பகுதியைப் பார்த்தபின் தான் பசி எட்டிப் பார்த்தது.சரி..நம்ம டிஷ்சை எடுத்துடலாம்னு பேக்ல கைவிட்ட போதுதான், கடலை மிட்டாய் என்னைக் கை விட்ட விஷயம் தெரிந்தது. முதலில் புன்னகைத்த பசி இப்போது பல்லிளிக்கவே ஆரம்பித்து விட்டது.
 
                இன்னும் அரை மணி நேரத்தில் கரூர் வந்து விடும். பஸ் எப்படியும் கால்மணி நேரம் நிக்கும். டிஃபனே சாப்பிட்டுக்கலாம்னு என்னையும், வயிறையும் சமாதானப் படுத்திக்கிட்டேன்.பசிச்சா எனக்குத் தூக்கமும் வராது. வெளியே வேடிக்கை பார்க்கவும் மனசு வராது.அந்த அரைமணிநேரப் பயணமானது, ஏதோ பாலைவனத்தில் மூன்று மணிநேரம் பயணித்த அலுப்பைத் தந்தது.
 
           அப்பாடா... ஒரு வழியாக கரூருக்குள் பஸ் நுழைந்தே விட்டது. பஸ் ஸ்டேண்டிற்குள் நுழையும் முன்னரே, உள்ளே ஏறிய ஒருவர் கூவ ஆரம்பித்துவிட்டார். “ டீ, காபி, டிபன் சாப்பிடுறவங்கெல்லாம் இறங்கிப் போய் சாப்பிட்டு வாங்க. பஸ் இருபது நிக்கும்” -ன்னார். இந்த வார்த்தைகள் எனக்குள் அசரீரி போல் தோன்றியது.

             பஸ்ஸிலிருந்து இறங்கிப் பார்த்தால் , கண் முன் தெரிந்தது பெரிய ரம்பா படம் போட்ட போர்டு. ‘அடேங்கப்பா அசைவ உணவகம்’. வண்ண வண்ண சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட அந்தப் போர்டில் , மிகச்சரியாக ரம்பாவின் தொடைக்கு அருகில் ‘லெக் பீஸ் கிடைக்கும்’ என்ற வார்த்தை முடிந்திருந்தது.நல்ல ரசனைக்கார ஓவியர்ன்னு மனசுக்குள்ள பாராட்டிக்கிட்டே ஹோட்டலுக்கள் போனேன்.
   
              எப்பவும் விலைப் பட்டியல் இருக்கிற இடத்துக்கு எதிர்ல இருக்க மாதிரியான டேபிள்தான் என்னோட சாய்ஸ்.ஆனா  பஸ் ஸ்டாண்டுக்குள்ள இருக்க ஹோட்டல்கள்ல ,விலைப்பட்டியல், எண்ணுள்ள பில் இது போல ஜனநாயகமெல்லாம் எதிர்பார்க்க முடியாதுன்றதால ராண்டமா ஒரு இடத்துல உட்கார்ந்தேன்.
  
              எல்லா சர்வர்களையும் போலவே, டம்ப்ளருக்குள் அதிக பட்ச விரல்களுக்கு ஜலக்ரீடை செய்தவாறே அந்த சர்வரும் வந்தார். இம்மாதிரி ஹோட்டல்களில் நாம் விரும்புவதைக் கேட்பதைவிட , சர்வர் சொல்பவற்றில் இருந்து நமக்குப் பிடித்த உணவைத் தேர்வு செய்வதுதான் உத்தமம் எனத் தோன்றியதால் கேட்டென்.
      “என்னப்பா இருக்கு?”
     கேட்டு முடிப்பதற்குள் , அவர் பட்டியலிட்டவற்றைச் சொன்னால் இது தொடர் கட்டுரையாகி விடுமென்பதால், அதனை விட்டுவிடுகிறேன்..இரண்டு தோசை மட்டுமே ஆர்டர் செய்தேன். சொல்லி முடித்த இரண்டாவது நிமிடம் தோசைகள் அடங்கிய தட்டும், ஒரு கிண்ணத்தில் கிரேவியும் கொண்டு வைத்தார் சர்வர். சிவந்த கிரேவியும், மிதந்த எண்ணையும் பார்த்த நான்,’ அடடா, இங்க சால்னா சூப்பராக இருக்கும்’ என்றெண்ணி, உடனே, தோசையில் கவிழ்த்தேன். இரண்டு, மூன்று சிறு துண்டங்கள் உருண்டோடின.தொட்டுப் பார்த்தவுடன் தான் தெரிந்தது அது சிக்கன் துண்டுகளென.
 
               நான் அசைவ ஆசாமிதான். கிடைக்கிற கேப்புல எல்லாம் கெடாச் சோறு சாப்பிடுபவன்தான். ஆனாலும் இதுபோல் திடீர்க்கடைகளில் சாப்பிடுவதை விரும்பமாட்டேன். ஏன்னா இங்க ஒருதடவை வரும் கஸ்டமர் மறுமுறை வருவதற்கு நிகழ்தகவு மிகவும் குறைவென்பதால் தரம் எதிர்பார்க்க முடியாது. மேலும் அவர்கள் சொல்வதுதான் விலை.சொல்வதைக் கொடுத்துவிட்டுப் போக வேண்டியதுதான்.இவ்விரண்டிற்கும் பயந்துதான் சிக்கன் துண்டுகளை ,ராக்கி கட்ட வரும் ஃபிகர் போல வெறுப்புடன் பார்த்தேன்.
   
     சர்வரைக் கூப்பிட்டு,” நான் சிக்கன்லாம் சாப்பிட மாட்டேன். எடுத்துட்டுப் போ” என்றேன்.
       “ அய்ய, உன் எச்சிய சாப்பிட நாங்க உன் பொண்டாட்டியா?”-சர்வர்.
பேச்சு வார்த்தை முதல் சுற்றிலேயே தோல்வி கண்டதால், விதியை நொந்து சாப்பிட ஆரம்பித்தேன் பில்லைப் பற்றிய அடுத்த கவலையுடன். சிக்கன் பரவாயில்லை சிக்கன் மாதிரித்தான் இருந்தது(பல இடங்கள்ல காக்கா, குருவி மாதிரில்லாம் இருக்குமாம்..!)
  
          அப்பொழுது அருகிலிருந்த சேர்களில் இருவர் வந்து உட்கார்ந்தனர்.அவர்களையும், அவர்களின் பேச்சையும் கேட்கையில் புரிந்து விட்டது அவர்கள் உள்ளூர் என்று.ஆளுக்கு மூன்று தோசை ஆர்டர் பண்ணினார்கள். சரி அவர்களை எச்சரிக்கலாம் என நினைத்தேன். பின் நமக்கேன் வம்பு என விட்டுவிட்டேன்.
 
                நான் எதிர்பார்த்த மாதிரியே இரண்டு தட்டுக்களில் அவர்கள் கேட்ட தோசையும், இரு கிண்ணங்களில் கிரேவி(அ) சிக்கன் குழம்பும் வந்து சேர்ந்தது. வைத்துவிட்டு சர்வர் அடுத்த டேபிளுக்குச் சென்று விட்டார்.அதன் பின் நடந்ததுதான் நான் எதிர்பார்க்காதது.
           
              வந்த இருவரும் அவசரமாக கிரேவி கிண்ணத்திற்குள் கை விட்டு சிக்கன் துண்டுகளை எடுத்து, தோசைகளுக்கு நடுவில் பதுக்கிக் கொண்டனர். பின் சர்வரை அழைத்தனர்.
         “ஏப்பா, ஊருல திருவிழா. காப்புக் கட்டிருக்கு. அசைவம் சாப்பிட மாட்டோம். இத எடுத்துக்கிட்டு, சாம்பார்,சட்னி வச்சுட்டுப் போ”
       வந்த சர்வரும் எதுவும் பேசாமல் ‘மிஸ்ஸாயிடுச்சே’ என நினைத்துக் கொண்டே, சிக்கன்(..?) குழம்புக் கிண்ணங்களை திரும்ப எடுத்துக் கொண்டு, சாம்பார் எடுத்து வர உள்ளே சென்றார்.
  
             இதற்குள் எனக்கு பில் வந்திருந்தது. இரண்டு தோசை 8ரூ, சி.குழம்பு-50 ரூ என மொத்தம் 58ஐ க் காட்டியது. எனக்கு ஆப்பானாலும், ’அடேங்கப்பா’வுக்கே அவர்கள் வைத்த ஆப்பை எண்ணி மனதிற்குள் சிரித்தவாறே வெளியேறினேன்.

Tuesday, April 14, 2009

யுவனின் ‘வாமன’ அவதாரம்-இசை விமர்சனம்

           ’குங்குமப்பூவும்,கொஞ்சும்புறாவும்’,’சர்வம்’ படங்களுக்குப் பின் யுவனின் புதிய ஆல்பம் ‘வாமனன்’.புது இயக்குனரின் படம். தொழில்நுட்பக் கூட்டணியை அப்படியே செல்வராகவனிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறார். இசை-யுவன்,பாடல்கள்-நா.முத்துக்குமார்,ஒளிப்பதிவு-அரவிந்த் கிருஷ்ணா.

          யுவனிடமிருந்து ஓரளவு வேலை வாங்கியிருக்கிறார் என்றே கூறலாம். ஐந்து பாடல்கள். ஐந்தில் மூன்று தேறுகிறது.மீதி இரண்டு ஆல்பத்தில் மட்டுமே சேருகிறது. காதில் கூட ஏறவில்லை.இசைச் சேர்ப்பும், கோர்ப்பும் கச்சிதம்.

        ‘ஒரு தேவதை பார்க்கும் நேரமிது’. கஸல் பாடல் கேட்பது போன்ற உணர்வினைத் தோற்றுவிக்கிறது. ’வெண்மதி வெண்மதியே நில்லு’ புகழ் ரூப்குமார் ரத்தொட் பாடி இருக்கிறார்.அமைதியான, மனதை வருடும் மயிலிறகு இசை.சிற்சில இடங்களில் ‘நினைத்து,நினைத்துப் பார்த்தேனை’ நினைத்துப் பார்க்க வைக்கிறது.

         ‘ஏதோ செய்கிறாய்’ -ஏதோ கேட்க வைக்கிறது.உள்ளே ஏதும் செய்யவில்லை.வித்யாசாகரின் இரண்டாம் தர மெலடி போல் உள்ளது.  ஜாவித் அலி தமிழைச் சாப்பிட்டு விட்டார்.பெண்பாடகி சௌம்யா ராவ் பரவாயில்லை.
தொடர் கேட்புகளில் பிடித்துப்போகலாம்.

          ’யாரைக் கேட்பது’-விஜய் ஏசுதாஸின் பாடலில் சோக நெடி அதிகம். ஆனாலும் ரசிக்க வைக்கிறது. படமாக்கலைப் பொறுத்து பாடல் வெற்றியடையலாம்.வரிகள் நாமே எழுதியது போல் மிகச்சாதாரணம்.(பாடல்கள்: நா. முத்துக்குமார்..?!)

        ‘லக்கிஸ்டார்’(பிளேஸ்,சுவி)- சினிமா ஹீரோ கனவில் இளைஞன் பாடுவது..வேறென்ன சொல்ல..?(’ஏலே எங்க வந்த-மாயக்கண்ணாடி டைப்பில்.)
இந்த சூழலுக்கு அன்றும், இன்றும் பெஸ்ட், ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ தான்..

       இன்னொரு பாட்டு ‘மணி மணி’- பெண் பாடகியின் குரலில் ஏக்கம் அதிகம்(...:-))யுவன் வாங்குன ‘மணி’யை விட அதிகமா, சும்மா போட்டுக் கொடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்.

      ‘சர்வம்’ பாடல்களோடு ஒப்பிடுகையில் ‘வாமனன்’  உருவத்தில் மட்டுமல்ல...  தரத்திலும்தான்..

Saturday, April 4, 2009

பார்க்க... முடிந்தால் ரசிக்க....(பேனா கோட்டோவியம்,ரமணர்)



அனைவருக்கும் வணக்கம். பதிவு போட்டு நெடு நாட்களாகி விட்ட படியால், யாரும் என்னை மறந்து விடாமலிருக்க ஒரு பதிவு அவ்வளவே...
இது ரமண மகரிஷிகளின் படம். ஆனந்தவிகடனின் தீவிர வாசகனாயிருந்த கால கட்டத்தில் திரு. ஜே.பி என்பவர் வரைந்த கோட்டொவியங்கள் என்னை ஈர்த்தன. இன்னும் கோட்டொவியம் என்பதற்குத் தெளிவான வரையறை என்னிடம் கிடையாதெனினும், எனக்குப் புரிந்த அளவில் சில கோட்டொவியங்களை வரைந்தேன்.
   இளங்கலை பொறியியல் முடித்து சற்றும் தெளிவில்லாமல் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கையில் , வீட்டில் பணம் கட்டி விட்டார்களே என்று முதுகலைப் பொறியியலுக்கான நுழைவுத் தேர்வான ‘கேட்’  எழுதுவதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரிக்குச் சென்றேன்.(அதுதான் அங்கு செல்வது முதல் முறை). அப்பொழுது எல்லாம் ‘கேட்’ தேர்வில் , இப்போதிருப்பது போல் நாலு விரலில் ஒன்றைத்தொட்டு விடையளிக்க முடியாது. அது ‘விரிவான விடை அளிக்கும்’ தேர்வாகும். ஒன்றும் படிக்கவில்லை. ஆனால் தேர்வுக்கட்டணம் வீணாக அரசுக்குச் சென்று விடக்கூடாது என்பதற்காகவே தேர்வுக்குச் சென்றேன்.

    ஓரிரு கோடிட்ட இடங்களைத் தவிர்தது எல்லாமே என் கண்ணைக் காட்டில் விட்டது போலிருந்ததால், நேரம் போவதற்காக, கோட்டொவியம் பழக ஆரம்பித்தேன் தேர்வறையில்(நல்ல வேளை அங்கு எந்த ஃபிகரும் வரவில்லை, ஆண் சூப்பர்வைசர்தான்)என் கவனம் சிதைக்கக் கூடிய அளவில் யாருமில்லை. ஓடு மேய்ந்த உத்திரத்தைப் பார்த்து வினாத்தாளின் கடைசிப் பக்கம் வரைய ஆரம்பித்தேன் . இரண்டரை மணி நேரம் முடிந்ததே தெரியவில்லை.

  அப்படி ஆரம்பித்ததுதான் இந்தக் கோட்டொவியப் பழக்கம்.இந்தப் படம் வரைந்த போது ஒரு வேலையை விட்டு நின்றிருந்தேன். அன்று எனக்குப் பிறந்த நாள் வேறு. கையில் காசில்லாச் சூழல். ஆனால் டீக்கடையில் இருக்கும் அக்கவுண்டின் உதவியோடு வயிற்றுக்கும் சிறிது ஈந்து விட்டு(பால் டீயும் ,சமோசாவும்), வரைந்து முடித்த படம்.
இதற்குப் பின் இன்னும் வரலாறுகள் உண்டு. இப்போதைக்கு இது போதும்.