Saturday, December 31, 2011

ச்சும்மா ட்ரா

  சித்திரமும் கைப்பழக்கம்....எப்பொழுதாவது வரைவதைவிட தினமும் பயின்றால் நல்லது என எண்ணி www.chummadraw.blogspot.com இல் இணைந்துள்ளேன். தினம் ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அதற்கேற்ப ஏதாவது வரைய வேண்டும். அம்முயற்சியினால் அடிக்கடி ப்ளாக் அப்டேட்டப் படாது இங்கு. அவ்வப்பொழுது எனக்குப் பிடித்த சில படங்களை இங்கு போடலாமென இருக்கிறேன். மற்றவை உங்கள் விருப்பம்...


Sunday, December 25, 2011

கெம்பேகவுட அருங்காட்சியகம் பெங்களூர் 25122011

வாட்டர்கலர் ஆன் வாட்டர்கலர் பேப்பர்...
ஏற்கெனவே இதே இடத்தின் முன்பகுதியை பால்பாயிண்ட் பென்னால் வரைந்தது குறிப்பிடத்தக்கது ;)

Saturday, December 24, 2011

நந்தி ஹில்ஸ்-பெங்களூரு-241211-படங்கள்

பெங்களூரைத் தாண்டி வெளியிடத்திற்குச் சுற்றலாம் எனக் காற்றில் ஒரு திட்டம் போட்டு வைத்திருந்தேன். உறுதுணையாக தம்பி ரசிகன் மகேஷ் சென்னையிலிருந்து வருவதாகவும் சொல்லியிருந்தார். அவர் வேலை புகைப்படம், என் வேலை ஸ்கெட்சிங்...

எட்டு மணிக்குத் திட்டமிட்ட பயணம் தொடங்க பத்துமணி ஆகிவிட்டது.60 கிமீட்டர்கள். வண்டியிலேயே பயணம். அது ஹில்ஸ்டேஷன் எனக் கேள்விப் பட்டிருந்ததால், ஜெர்கினோடு வேறு பயணம். போகும் வழியில் வியர்த்தபோது, ‘சரி இங்கதான் இப்டி, மலையேறியாச்சுன்னா ரொம்ப உபயோகப்படும்’ என சுய சமாதானம் சொல்லியவாறே தொடர்ந்தோம். ஒயிட்ஃபீல்டிலிருந்து, ஹொஸ்கட்டே, தேவனஹல்லி வழியாக நந்திஹில்ஸ் போவதுதான் எங்கள் வழித்திட்டம். ஸ்டேட் ஹைவேஸ், போக்குவரத்து நெருக்கடி, சிக்னல் எதுவும் இல்லாததால் இனிதாகப் பயணித்தோம்.

8 கிமீட்டருக்கு முன்னதாக மலைப்பாதை ஆரம்பம். எனக்கு சும்மாவே ஹைட்டுன்னா பயம். எப்படி வண்டி ஓட்டப் போகிறேனோ என மனசுக்குள் மாரியாத்தாளைக் கும்பிட்டபடி , தக்கிமுக்கி மலையுச்சி சென்று சேர்ந்தோம்.(4000 மீட்டர் கடற் பரப்புக்கு மேலே). போனா சுள்ளுன்னு அடிக்குதுய்யா வெயிலு...அவ்வ்வ்வ்

அப்படியொன்றும் ஈர்ப்பான இடமாய்ப் படவில்லை எனக்கு. வெயில் வேற கொல்லுது, நான் கற்பனை செய்த காட்சிகள் எதுவும் இல்லை. என்ன சுற்றிப்பார்ப்பது எனத் தெரியாமல் வாழ்க்கையே வெறுத்துப் போனோம். அப்போது எங்களைக் கடந்த ஒருவரிடம், இந்தப் பக்கம் போகிறீர்களே என்ன இருக்கிறது எனக் கேட்டோம்.அவர் சொன்னபதில் சூழலுக்குத் தக்கது, ‘சூஸைட் பாயிண்ட்’.இதுக்கு இவ்வளவு தூரம் மேல வரணுமா?? வீட்டிலேயே ‘மங்காத்தா’ சீடி, இல்ல சாருவோட ப்ளாக் படிச்சாப் போதாதான்னு தோணுச்சு...

பக்கத்துலயே திப்பு லாட்ஜ் இருந்தது. அவர் சம்மர் ல இங்கு வந்து தங்குவாராம்.யோவ் விண்டர்லயே இங்க வேகுது, சம்மர்ல என்ன கிளுகிளுப்புய்யா இருக்கும் உமக்குனு மனசுக்குள்ள திட்டிட்டு உடனே மன்னிப்பும் கேட்டுக்கிட்டேன். அந்த இடத்துல பெரிய அளவுல ,வாழையிலை போன்ற இலைகள் பார்த்தேன். பெயர் தெரியவில்லை.(படம் கீழே)...

இன்னும் மேலே போனா, நந்தி கோயில் இருக்கு. கால்ல மாவை இழுகிட்டுப் போனா, ஒரு நிமிசத்துல தோசையாப் பிச்சு வாயில போட்டுக்கலாம் போல மொட்டப் பாறைல கொட்டிக் கிடக்குது வெயிலு....சரி கடமையைச் செய்வோம்னு வேலையில இறங்கிட்டேன்...

வாட்டர்கலரில் இருக்கும் பூக்கள் வழியில் பார்த்தவை. பெயர் தெரியவில்லை என ‘நிம்மி’, ‘ஜிம்மி’ எனப் பெயரிட்டு ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். நண்பர் ஒருவர் அது ‘ஸ்லீப்பிங் ஹைபிஸ்கஸ்’ எனச் சொன்னார். சரி நம்ம சாதிதான் போலன்னு நினைச்சுக்கிட்டேன்...


வாழையிலையை வாட்டர்கலரில் வரைய நினைத்து மொக்கையாகிவிட்டது. ‘pen' புத்தி பின் புத்தி என்பதுபோல பின், பென்னால் சரிசெய்ய முயற்சித்தேன்.


இந்த சிலைகள், நந்தி கோயிலுக்குள் இருக்கும் துணை தெய்வங்கள்...(நல்ல வேளை ஜெயமோகன் கண்ணுல படல. பட்டா, ‘சூடு’ன்னு 5000 பக்கம் நாவல் எழுதிருப்பாரு.)பால்பென்னில் வரைந்தது....

Sunday, December 18, 2011

சிலையும் கலையும் -பெங்களூர்-18டிசம்பர்2011

நேற்றிரவு சமகாலட்விட்டர்களான டிபிசிடி(டிபிகேடி),பாலா, சமூகம் (எ) சண்முகம் ஆகியோரும், சங்ககால ட்விட்டர்களான புருனோ மற்றும் அடியேனாகிய நானும் ஒயிட்ஃபீல்டிலுள்ள எனது வீட்டில் கூடி சமூகப் பிரச்சினைகளை ஆய்ந்தணுகினோம். பின்நவீனத்துவத்தில் ஆரம்பித்துப் பல விஷயங்களைப் பிய்த்துப் பிராண்டினோம்.நல்லதொரு சந்திப்பு. கார்த்திக் அருள் மற்றும் முகம்மது கஃபில் இல்லாதது மட்டுமே குறை.

இரவு தொடர்ந்து, காலை வரை ஒவ்வொருவராகப் பறவையின் கூட்டிலிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

காலையில் கப்பன் பார்க்கிற்கு அருகிலுள்ள அரசு அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தேன். இன்று பென்சில் ஜாம் அங்கேதான். பெங்களூர் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கப்பன் பார்க் சென்றதில்லை. இன்று அதன் அருகில் சென்றும் உள்ளேசெல்லவில்லை. அருங்காட்சியகத்தில் என்ன இருக்கும்?
பழைய போர்க்கருவிகள், உடைந்த பானைகள், சிலைகள்(தலையுடனும், தலையில்லாமலும்) இன்னும் பண்டைய பொருட்கள்...

போய் வந்ததின் நினைவாகச் சில ஓவியங்கள்...
முதலாவது...
வித்தியாசமாகத் தென்பட்ட பண்டையப் போர்க்கருவிகள்.. பிட் பென், வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...




இரண்டாவது ஒரு சிலை....பிட் பென் இன் வாட்டர்கலர் பேப்பர்...




மூன்றாவது வெளியே கேண்டீனில் டீ சாப்பிட அமர்ந்தபோது திடிரென வரைய ஆரம்பித்தது. கொஞ்சம் சப்பையாத்தான் இருக்கும்.அதிகத் திட்டமிடல் இல்லாத காரணத்தால்...வாட்டர்கலர் இன் வாட்டர்கலர் பேப்பர்...



சிலைகளை வரைவது மிகக் கடினமாக இருந்தது. அடுத்தவாரம் நந்திமலை சென்றுவரலாமென ஒரு எண்ணம்.

Sunday, December 11, 2011

சொந்தக் கதை சோகக் கதை 111211

ஷ்ஷப்பா....

இந்த வீக் எண்டு பெண்டை நிமிர்த்திருச்சு. ஜெர்மன் ட்ரிப் முடிஞ்சு போன வாரம் ஊருக்குப் போயிட்டு வந்ததால ஏகப்பட்ட வேலை பெண்டிங்.நேத்தும் இன்னைக்கும் ஒரு வழியா ஓரளவுக்கு முடிச்சு வச்சேன்.

*வண்டி இன்சுரன்ஸ் ரெனுவல்(சொல்ல மறந்துட்டேன் வண்டி எடுத்து ஒரு வருஷம் ஆச்சு. நேத்து அதுக்கு ரெண்டாவது பிறந்தநாள். சர்வீஸ் முடிஞ்சதும் நேரா பெட்ரோல் பேக்கரி போய் 5 லிட்டர் பெட்ரோல் ஊட்டிவிட்டேன்)
*வண்டி சர்வீஸ்
*துணியெல்லாம் துவைக்கக் கொடுத்தாச்சு
*சாக்ஸ் தொவைச்சாச்சு(30 செட்டு)(ஒரு மாசத்துக்குக் கவலையில்லை)
காயப் போட்டாச்சு.(காயவைக்கிற இடம் ?? இருக்கவே இருக்கு டிராயிங் போர்டுதான்)
*இன்னைக்கு பென்சில் ஜாம் செஸ்ஸன் அட்டெண்ட் பண்ணியாச்சு(ரொம்ப நாளைக்கப்புறம் பிரஷைத் தொட்டேன்)
*ரூம் கிளீனிங்(80% ஓவர்)
*நைட் சிக்கன் சமையல்

வீக் எண்ட்ல மதியம் தூங்குறதைக் கஷ்டப்பட்டு தியாகம் பண்ணிட்டா ஏகப்பட்ட வேலை செய்யலாம்...
நாளைக்கு ஆஃபீஸ் போறதுக்குக் கூட எல்லாம் ரெடி. ஷர்ட் அயர்ன் பண்ணியதை வாங்கி ஹேங்கரில் தொங்கவிட்டாச்சு. பேண்ட்ல பெல்ட் உட்பட எல்லாம் போட்டு செட் பண்ணியாச்சு. சாக்ஸை ஷூ மேல வச்சாச்சு. ஆனா ஒரே ஒரு முக்கிய வேலை அதுதான் பிரச்சினையும் கூட. நாளைக்கு அட்லீஸ்ட் ௮ மணிக்காவது எந்திருக்கணும்...

ரூம் க்ளின் பண்ணதுல முக்கியமான விஷயம், இனிமேதான் கமிட்மெண்ட்ஸூக்கெல்லாம் படம் வரைஞ்சு கொடுக்கணும்,,, பஸ்ல வராட்டி இன்னும் கொஞ்ச நேரம் மிச்சமாகும்...

இந்தக் கதையெல்லாம் சொல்ல ஒரு போஸ்ட்டான்னு கேக்கக் கூடாது. சரி விஷயத்துக்கு வர்றேன். இன்னைக்கு பென்சில் ஜாம், அல்சூர் ஏரி தான். கடந்த ஆறுமாசத்துல இது மூணாவது தடவை. ஏற்கெனவே ஒருதடவை பண்ணி எனக்குப் பிடிக்காத ஒரு வியூவை இன்னைக்கு மறுபடியும் பண்ணேன். பெட்டர். ஆனால் இன்னும் பிடிக்கலை. :(

இருந்தாலும் உங்கள் பார்வைக்கு...அல்சூர் ஏரி...

நம்ம பதிவுகள்ல மக்களுக்குத் தேவையான விஷயம் இல்லைன்னு பலபேர் சொல்லக் கேள்வி...அதான் ஒரு கருத்து சொல்லிட்டுப் போகலாம்னு....மன்னிச்சூ....

“பொய்யை ஒத்துக்கிட்டவனின் கஷ்டம், அடுத்து அவன் உண்மையே பேசும்போதுதான் தெரியவரும்”

Tuesday, December 6, 2011

ஜெர்’மென்’ அண்ட் ’விமன்’



காலை, மாலை இரு வேளைகளிலும் மெட்ரோ ரெயிலில் அரைமணிநேரப் பயணம் அலுவலகத்திற்கு. அப்போது கிறுக்கியது. படங்களைப் பார்த்தாலே ஜெர்மானியர்களின் கேரக்டர்கள் புரிந்திருக்கும். வெட்டிப் பேச்சு கிடையாது. ரயிலுக்குக் காத்திருப்பதிலிருந்து, ஏறி, அமர்ந்து, நின்று, இறங்கும்வரை கையி
ல் ஏதாவது ஒரு புத்தகம்(ஜெர்மன் மொழியில்தான்) அல்லது ஸ்மார்ட் ஃபோனில் பிரவுசிங் அல்லது கேமிங்...

அவர்களின் செயல்களை சிம்பிளாக வரைய நினைத்துப் பின் அவர்களின் முக வேறுபாடுகளில் கவனம் செலுத்திவிட்டேன். சிறு சிறு கோடுகளாக இணைக்காமல், பெரிய பெரிய ஸ்ட்ரோக்குகள் வரையச் செய்த முயற்சிகள் இவை.பார்த்தமைக்கும், ரசித்தமைக்கும் நன்றிகள்...!






















நாளிதழ்களில் வருவது போல் ஒரு ஃப்ளாஷ் நியூஸ்,,,, இதே படங்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தேன். இண்டர்நேசனல் ஃபேமஸ் வாட்டர்கலரிஸ்ட் டெரைன் அவர்களின் லைக்கும், கமெண்ட்டும் கீழே...
சில விஷயங்கள் சிலருக்கு சாதாரணமாகவும், சிலருக்கு வெகு அசாதாரணமாகவும் தோன்றலாம். எனக்கு இது இரண்டாவது வகை. ஒரு சின்ன லைக் எவ்வளவோ செய்யச் சொல்லும். நன்றிகள் அனைவருக்கும்...!

Tuesday, November 15, 2011

பாரீஸில் பறவை

   சென்னை பாரிமுனை மட்டுமே பாரீஸ் என நினைத்துக்கொண்டிருந்த நான், உண்மையான பாரீஸிற்குச் செல்லும் தங்க வாய்ப்பும் கிடைத்தது. சென்றவார ஆம்ஸ்டர்டாம் பயணத்தின் சுவடுகளைச் சுமந்தபடியே கடந்தசனி இரவு பாரீஸிற்குச் சென்றேன்.இம்முறை பேருந்துப்பயணம்தான். அதுவும் இரவில். 9 மணிநேரப்பயணத்தின் பாதியில் ஒருமணிநேரம் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் வலுக்கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டுமென்பது விதி.

    விளக்குகள் ,சூரிய ஒளியில் மங்க ஆரம்பித்ததொரு தருணத்தில் நான் பாரீஸில் இறக்கிவிடப்பட்டிருந்தேன். ஏற்கெனவே அலுவல் காரணமாக அங்கு தங்கியிருந்த நண்பன் விஜயராகவன் வரவேற்கக் காத்திருந்தான்.இனிமேல் அவன் அறைக்குச் சென்று ரெஃப்ரஷ் ஆகித் திரும்பினால் நேரமாகிவிடுமென்பதால் பேருந்து அருகே இருந்த நவீன கழிப்பறை & குளியலறையிலேயே காலைக்கடன்களை முடித்துக் குளித்துக் கிளம்பினோம்.

      பாரீஸில் ஒரு சிறப்பம்சம், சுரங்கப்பாதை ரெயில்கள்.கவுண்ட்டரை அணுகினால், எல்லா இடங்களும் அடங்கிய மேப் கொடுக்கிறார்கள். அதிலேயே சுற்றுலாத் தலங்கள் மட்டும் சிறப்புவண்ணத்தில் குறித்திருக்கிறார்கள்.எந்தெந்த ரெயில்கள், எங்கெங்கு,எவ்வப்பொழுது,எந்த ப்ளாட்ஃபார்மில் வரும் எனத் துல்லியமாகக் கொடுத்திருக்கிறார்கள். பாரீஸிற்குச் சென்றால், வழிகாட்டி துணையே தேவையில்லை. இந்த மேப்பும், ரயில் டிக்கெட்டும் போதும்.

   முதலில்  சென்ற இடம் , வேறென்ன ஈஃபிள் டவர்தான். டவரைச் சுற்றிலும் நான்கைந்து கிமீட்டர்களில் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. தூரத்திலே இருந்து படமெடுத்துவிட்டு, டவரை நெருங்கினோம். சிறப்புக் கட்டுமானத்திற்குப் புகழ்பெற்ற ஒரு இடத்தில் இருக்கிறோம் என்ற பெருமிதம் தோன்றியது.அப்புறம் அடுத்தவேலைதான்...

     சரியான ஒரு கோணம்,இடம் தேர்ந்தெடுத்துவிட்டு ரெனால்ட்ஸ் பேனாவையும், நோட்டையும் கையிலெடுத்து வரைய ஆரம்பித்துவிட்டேன்;.சுமார் ஒன்றரை மணிநேரங்கள் பிடித்தது. ஸ்கெட்ச் கீழே...வெகு சந்தோஷம்...



   ஈஃபிள் டவர் முடிந்தவுடன், நாட்ரடாம்ஸ் சர்ச்சுக்குச் சென்றோம். தலைவலி காரணமாக அதிகம் ரசிக்க இயலாமல் அறைக்குத் திரும்பிவிட்டோம்.

    மறுநாள் காலை புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் புன்னகைத்துக் கொண்டிருக்கும் லூவர் அருங்காட்சியகம் சென்றோம். அப்பாஅ..ஆஅ...எவ்ளோ பெரிசு. இதை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்க 4 நாட்கள் தேவைப்படும். எனக்கிருந்ததோ முழுதாக அரைநாள் மட்டுமே...அதனால் அவர்கள் கொடுத்த கையேட்டில் மிக முக்கியமான ஓவியங்கள் மட்டும் இருக்கும் தளங்களுக்குச் செல்வதென முடிவெடுத்தோம்.


    17-19 நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய பாணி ஓவியங்கள் முழு விருந்தை அளித்தன. பெரும்பாலும் பைபிள் காட்சிகளைத்தான் ஓவியப் படுத்தியிருக்கிறார்கள். புகழ்பெற்ற வீனஸ் சிலை முடமான நிலையில் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் நம் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏமாற்றும் வகையில் சிறிய அளவில் இருக்கிறது. அங்கு மட்டும் அதிகக் கூட்டம்.ஃபோட்டோ ஃப்ளாஷ் அடிக்காமல் எடுக்கவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஃப்ளாஷுடன் க்ளிக்கித் தள்ளிக் கொண்டுருந்தனர்.

    ஒவ்வொரு பெயிண்டிங்கையும் நின்றுநிதானமாய் ரசிப்பதற்கு நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக நகர்ந்துகொண்டிருந்தோம். இதற்கே மணி மூன்றாகிவிட்டது.

  வெளியே அமர்ந்து, லூவர் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியை வரைந்தது.

பாரீஸ் பயணம் இனிதே நிறைவுற்றது. :)

Tuesday, November 8, 2011

சொர்க்கத்தின் வாசற்படி அல்லது ஆம்ஸ்டர்டாம் அனுபவங்கள்...

         என்னை மாதிரி ஒரு கேர்லெஸ் ஃபெல்லோவை நீங்க பார்த்திருக்கவே முடியாது. ஒரு இடத்துக்குப் போறோம்,அங்க என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்னு கூட மெனக்கெடுறது கிடையாது.இரு வாரத்துக்கு முன் பிரபல டிவிட்டர், ஆயிரத்தில் ஒருவனான(ஆயிரம் ஃபாலோயர்ஸுக்கு மேல வச்சிருக்காரு. செந்தில் மாதிரி அடுத்த கேள்வியை என்கிட்டக் கேட்டீங்க உதைதான்) நண்பர் திருமாறன் ஆம்ஸ்டர்டாம் வாங்கன்னு சொன்னதுக்கப்புறம் கூட அது எந்த நாடுன்னு தெரிஞ்சுக்க விரும்பலை. அவரே சொன்னாரு வான்காஃப் அருங்காட்சியகம் இருக்குன்னு.எனக்குத் தெரிஞ்ச வான்காஃப், ஒரு காதினை அறுத்துக் கொண்டவர்,மனநோய் முற்றித் தற்கொலை செய்து கொண்டவர். இன்னும் மேலதிகமாக அவரின் சில பெயிண்டிங்குகள் பார்த்திருக்கிறேன். எல்லாம் பிரைட்டாக, மஞ்சள் மேலோங்கிய(அவரின் சன்ஃப்ளவர் ஒவியம் பிரபலமானது)தன்மையுடையன. ஒரு அப்ரெசெண்டி ஓவியன் என்ற முறையில் சரி அங்குபோகலாமென ஒத்துக் கொண்டேன். அதன்பின் பயணத்திற்கு இருநாட்களுக்கு முன் வேலையில்லாத ஒரு பகற்பொழுதில் பஸ்ஸிலிருந்து ஒதுங்கிய சிறு நேர இடைவெளியில் இணையத்தில் அலசி, அங்கிருக்கும் இன்னொரு இடமான ரைஸ் அருங்காட்சியகத்தில் ரெம்பிராண்ட்டின் ஓவியங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன்.இதையும் திருவிடம் சொன்னேன்.முன்பே டிக்கெட் புக் பண்ணிவிட்டார்.
    யூரோ எக்ஸ்பிரஸில் பயணம். அசால்ட்டாக மணிக்கு 200 மைல் வேகத்தில் பயணம். எதிரெதிராக அமர்ந்துகொள்ளும் இருக்கைகள். பொழுதுபோக்கிற்கு வேறென்ன ஸ்கெட்சிங்தான்.(போகையிலும், வருகையிலும் செய்த ட்ரெய்ன் ஸ்கெட்சஸ் கீழே)


          சனிக்கிழமை காலையில் உட்ரெக்ட்(திருவின் நண்பர் வீடு. அங்குதான் தங்கல் தூங்கல் தொங்கல் எல்லாம்)டிலிருந்து ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்தோம்.ஊரெல்லாம் கால்வாய்கள்(நீர்ப்பாதை எனக் கொள்வோம்.நம்மூர்க் கேரளா மாதிரி.ஆனால் இன்னும் அழகு).மோட்டார் படகில் பயணம்.இதுவொரு முக்கிய சுற்றுலாத் தலம் என்பதை அங்கு சென்றுதான் அறிந்து கொண்டேன். இங்குள்ள மக்கள், ஜெர்மானிய மக்களுக்கு நேரெதிர். அவர்கள் மன்மோகன் சிங் என்றால் இவர்கள் குஷ்வந்த்சிங் சாதி.கிட்டத்தட்ட எல்லா மரங்களும் பூமிக்கு இலைக்காணிக்கை செலுத்திவிட்டிருந்தன.வளவளா வேண்டாம்.விஷயத்திற்கு வருவோம்.

           முதலில் சென்றது ரைஸ் அருங்காட்சியகம்.முகப்பில் வைக்கப்பட்டிருந்த வெர்மியரின் 'மில்க்மெய்ட்' ஓவியப்பெண்ணின் பெரிய பதாகைப் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்(வரலாறு முக்கியம் அமைச்சரே).டிக்கெட்டுடன் உள்நுழைகையில் அதை வாங்கியவர் ஐந்து யூரோ கேட்டார்.திகிலடைந்து அதான் பதினைந்து யூரோவுக்கு டிக்கெட் இருக்குல்ல எனப் பினாத்தியதில், சிரித்து 'ஜஸ்ட் ஃபார் ஃபன்' என அனுப்பி வைத்தார்.(இங்க வந்ததுல இருந்து எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது அறுபதாம் வாய்ப்பாடுதான். எல்லாமே காஸ்ட்லிதான். சரக்கைத் தவிர.)ஆடியோ டூரும் உண்டு.ஒரு ஹெட்ஃபோனும்,அதனுடன் அண்ணாச்சி கடை கால்குலேட்டர் மாதிரி ஒரு கருவியும் தருகிறார்கள். உள்ளிருக்கும் ஓவியங்களின் அருகில் இருக்கும் எண்ணை அழுத்தினால், அந்த ஓவியம் பற்றிய தகவல்கள் காதினுள் தேன் போலப் பாயும்(எப்டி கொழகொழன்னா எனக் கேட்காதீர்கள்).
          
          மொத்தம் மூன்று தளங்கள். கீழ்த்தளத்தில் நெதர்லாந்து பற்றிய வரலாற்றுப் படிமங்கள்,ஓவியங்கள், ராஜா காலத்திய மர அலமாரிகள், வாட்கள், துப்பாக்கிகள் என எல்லாம் கண்ணாடிச் சட்டமிட்டு வைத்திருக்கின்றனர்.கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சற்று உள்நோக்கிப் பார்க்க முனைந்த போது, நெற்றியில் பட்ட அடிக்குப் பின் தான் கண்ணாடித் தடுப்பு இருக்கிறது என்ற வரலாற்று உண்மை எனக்குப் புரிந்தது(அனுபவமே சிறந்த பாடம்)

          இரண்டாவது தளத்தில் ரெம்ப்ராண்ட் மற்றும் அவரது சமகாலத்தவர்கள்(17ஆம் நூற்றாண்டு), அவருடன் பயின்றவர்களின் தைல வண்ண ஓவியங்கள் நிறைக்கப்பட்டிருந்தன. ஸ்டில் லைஃப், போர்ட்ரெய்ட், குரூப் போர்ட்ரெய்ட், லேன்ட்ஸ்கேப் என அனைத்து வகையிலும் புகுந்துவிளையாடி இருக்கிறார்கள்.நவீன ஓவியங்கள் கிளைவிடாத காலத்தில் ஒவ்வொருவரும் அவரது தனித்தன்மையைக் காக்க மிகுந்த பிரயத்தனப் பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் ரெம்பிராண்டின் ஓவியங்கள் செறிவான நுண்விபரங்களுடனும்,ஆச்சர்யப் படுத்தத் தக்கவகையில்கூடிய ஒளியின் பரிமாணங்களுடனும் தனித்துத் தெரியத் தொடங்கியிருந்தன.அவரின் செல்ஃப் ஃபோர்ட்ரெயிட்கள் பிரபலம். வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் அவர் தன்னைத்தானே அதிகம் வரைந்திருக்கிறார். ரெம்பிராண்ட் அதிகம் லேன்ட்ஸ்கேப்கள் வரைந்ததாகத் தெரியவில்லை. போர்ட்ரெயிட்கள், அதன் கேரக்டர்கள், டீட்டெயிலிங், லைட் எஃபக்ட்ஸ் ஆன் சப்ஜெக்ட் இவைகளே அவரின் ஓவியங்களில் தெரிகின்றன.என்க்ரேவிங் எனப்படும் தகடுகளில் ஓவியம் பதிக்கும் முறையிலும் சிறந்தவர்.சிறப்பாக வாழ்ந்த காலத்தில் சராசரியாக 300 கில்டர்கள் கமிசனாக வாங்கி வந்துள்ளார். அதே தொகை அங்கு ஓராண்டில் துணி துவைப்பவர் ஈட்டும் வருமானமாகும்.'ஒளிமயமான' என்பதெல்லாம் அப்போது அவர் எதிர்காலத்தில் பார்க்கவில்லை அவரின் ஓவியங்களில் மட்டும்தான் பார்த்துள்ளார் போலும்.

          பலவித பரிசோதனை ஓவியங்கள் செய்து கொண்டிருந்தாலும், கிறிஸ்தவ பைபிள் கதைக் காட்சிகளை அடிக்கடி வரைந்துவந்துள்ளார். அக்காலத்தில் விற்கக்கூடிய சரக்கு அது(இப்பவும் மதம்தானே நல்ல வியாபாரம்). நெதர்லாந்துல ஏகப்பட்ட வின்ட்மில் இருந்தது அப்போது.இவரின் அப்பா ஒரு மில் முதலாளி. அவர் பேர்ல 'மில்லர்'னு வரும்.சராசரியான குடும்பம்தான்.ஆனா தலைவருக்குக் கல்யாணத்துல அடிச்சிருக்கு லக்கிபிரைஸ்.வேலை சம்பந்தமாகப் போய்வந்த இடத்தில் 'சாஸ்கியா'ன்ற பொண்ணப்பார்த்து லவ்வி, அப்புறம் பெற்றோர் சம்மத்தோட கல்யாணம் பண்ணிருக்காரு.வரதட்சணையா 40000 கில்டர்ஸ் வாங்கி இருக்காரு மனுசன்.

        ஒரு பத்துப் பதினைஞ்சு வருஷம் தொழில் நல்லபடியாப் போயிட்டிருந்திருக்கு. இவரோட ஆர்ட் கலெக்டர்கள், நண்பர்களுக்கு ஏற்பட்ட பணமுடையில, இவரோட தொழிலும் படுத்திருச்சு, அப்புறம் இவர் பண்ணின 'நைட் வாட்ச்' ங்கிற மெகா ஓவியம்தான் இவருக்குக் கொஞ்சம் பணத்தையும், புகழையும் மீட்டுக் கொடுத்திருக்குது.இங்க மூன்றாவது தளத்துல கிளைமேக்ஸ் பரபரப்பு போல அந்த ஓவியத்தைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். தனி அறை , அதற்கெனப் பிரத்யேகமான விளக்கமைப்புகள் இதோட சேர்த்து பார்க்கிறப்போ, ஓவிய மனிதர்கள் நேரில் வந்து நிற்பது போல் இருந்தது. கொடுத்த பதினைஞ்சு யூரோ இந்த ஒரு படத்துக்கே பத்தாது போல. நாங்க பாத்ததெல்லாம் எட்செட்ரா. :)

    மதியம் இத்தாலியன் ரெஸ்டாரெண்டில்தான் லஞ்ச். பிஸ்ஸா,நம்மூர்ப் பிஸ்ஸா போல் வரட்டிமாதிரி இல்லாமல், நெளிநெளியாக நெகிழ்வாக இருந்தது. அடுத்த இடம் வான்காஃப் அருங்காட்சியகம்.

   அதுவும் ரைஸ் அருங்காட்சியகத்துக்குப் பக்கத்திலேயே இருந்தது. இங்கு வான்காஃபின் ஓவியங்களை அவரின் வாழ்க்கை வரலாற்றுப்படி வரிசையாக அடுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓவியங்கள் விற்குமிடத்தில் வேலைசெய்துகொண்டிருந்த வான்காஃப் தனது இளமைப் பருவத்தில்தான் ஓவியங்கள் வரையவேண்டுமென நினைத்துப் பின் கற்றுக் கொண்டு பயிற்சி மேற்கொண்டிருக்கிறார், ஓவியங்கள் வரைய கேன்வாஸ், வண்ணங்கள் இதர உபகரணங்களுக்கு அவரின் சகோதரர் உதவியிருக்கிறார். ஜப்பானிய ஓவியங்கள் மேல் மிகுந்த ஆர்வங்கொண்டிருக்கிறார்.அதுபோலவே சில ஓவியங்களும் முயன்றிருக்கிறார்.ஆனால் அவையும் வான்காஃபின் தனித்தன்மையுடன் வந்திருக்கின்றன.

   ரியலிச ஓவியங்களைப் பார்த்துரசித்த கண்களுக்கு வான்காஃபின் ஓவியங்கள் சற்றுச் சோர்வேற்படுத்துகின்றன.நவீன ஓவியங்களை ரசிப்பதற்கும் தனி மனரசனை தேவைப்படுகின்றது. மூன்று மணிநேரம் சுற்றிப் பார்த்தோம். பின் வீடுதிரும்பல்.நண்பரின் கைவண்ணத்தில் அருமையான தோசை மற்றும் பருப்புக் குழம்பு.தூங்கல்.


    காலையில் 9மணிக்கு அடுத்தபயணம். நெதர்லேந்தின் பாரம்பரியப் பொருட்கள் வைத்திருக்கும் Zaanz museum அது. நெதர்லாந்து காற்றாலைகள் மற்றும் பால்வளத்திற்குப் பெயர்பெற்றநாடு.  அந்த வகையில் மாடலுக்காக நான்கைந்து காற்றாலை வீடுகள் அமைத்து டெமோ காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்திலேயே விதவிதமான ஃப்ளேவர்களில் ‘சீஸ்’ தயாரிக்கும் சிறு தொழிற்சாலையும் இருக்கிறது.முந்தைய நூற்றாண்டில் குளிருக்காக மரத்தாலான காலணி அணியும் வழக்கும் இருந்திருக்கிறது.அக்காலணிகள் தயாரிக்கும் மினிதொழிற்சாலையும் இருக்கிறது. வெகு இயற்கையோடு ஒட்டிய சூழலில் இக்காட்சியணிவகுப்பு  இதமாக இருந்தது.

     ஆம்ஸ்டர்டாம் போனதின் நினைவாக அங்கு வரைந்த லைவ் ஸ்கெட்ச் இதோ.ஏதோ ஒரு சைனாக்காரர், என்னையும், வரைந்துகொண்டிருந்த படத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டார்(அவ்வ்வ் இண்டர்நேசனல் ஃபேமஸாகிட்டேன் போல:)   )


Thursday, November 3, 2011

ஒற்றையிலை

இங்கு இப்போது இலையுதிர்காலம். வெளியில் எங்கு சென்றாலும் கண்ணைக்கவர்வது மஞ்சள், சிவப்பு நிறங்களில் மேப்பில் இலைகள்தான்.
மரம் வரைவது லட்சியம், இப்போதைக்கு இலை நிச்சயம் என நேற்று எடுத்துவைத்திருந்த ஒற்றையிலையை எடுத்தேன்.புத்தகத்தினுள் வைத்திருந்ததால் நிறம் மங்கி வாடிப்போயிருந்த இலைக்கு, காகிதத்தில் கற்பனை வண்ணம் கொடுத்து வைத்தேன்.
வாட்டர்கலர், சைஸ், துரித பெயிண்டிங்....

பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....!

நம்மூர்ல இந்த மரம் பார்த்ததா ஞாபகமில்லை. அங்க என்ன பேர் இதுக்கு?

Sunday, October 30, 2011

சுற்றம் 'பார்க்'கின் குற்றம் இல்லை‍ லைவ் ஸ்கெட்ச் 301011

கொஞ்ச நாளாக் குளிர் விட்டுப் போச்சு. எனக்கு மட்டுமில்லைங்க. இங்க குளிர் குறைஞ்சிடுச்சு...இரண்டு வாரமாச்சு. ஓரளவு பழகியாச்சு.

எல்லா இடத்துலயும் ஜெர்மன் மொழியில்தான் எழுதி இருக்காங்க. ஏதோ நினைப்பில நாம நடந்து போன, எதிர்ல வர்றவங்க 'ஹலோ' சொல்லிட்டுப் போறாங்க. திடுக்கிட்டு என்னனு பார்க்கிறதுக்குள்ள அவங்க வேலையைப் பார்த்துட்டுப் போக ஆரம்பிச்சுடுறாங்க.

நிறையப் பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். சைக்கிளை டிரையினிலும் ஏற்றுகிறார்கள்.நல்ல யோசனைதான்.

குளிரைத் தாங்குவதற்காக எல்லாக்கட்டிடங்களுமே பாதிக் கட்டுமானம் மரத்தில் செய்திருக்கிறார்கள். மச்சுவீடு மாடிவீடு எல்லாம் கிடையாது, பார்த்தவரை ஓட்டு வீடுதான்.#நல்ல தரமான கட்டைகள் போலும்

பெண்கள்... எழுத ஆரம்பித்தால் மானிட்டர் நனைந்துவிடும். அலுவலக லேப்டாப் என்பதால் அதனைத் தவிர்க்க நினைக்கிறேன். ஒரே வரியில் சொன்னால், 'திருத்தமாக இருக்கிறார்கள்'. ரயிலிலேயே மேக்கப்பையும் முடிக்கிறார்கள்(எல்லா ஊர்லயும் இதே கூத்துதான் போல).போன பாராகிராப்பில் கடைசியில் போட்ட ஹேஷ்டேக் வார்த்தைகளை இந்த பாராகிராப்போடு நீங்கள் குழப்பிப் படித்தான் நான் பொறுப்பல்ல ;)

இன்னும் ஃப்ரான்ங்ஃபர்ட் தவிர ஊர்சுற்ற ஆரம்பிக்கவில்லை. திட்டம் இருக்கிறது. விரைவில் பகிர்கிறேன்.

விதவிதமான பானங்கள் கிடைக்கின்றன். இது இங்கே 'குடி'சைத் தொழில் போலும். பெயர் எல்லாம் அவர்கள் மொழியிலேயே இருப்பதால், எது விஸ்கி, ஓட்கா, ஒயின் , பீர் எனத் தெரியவில்லை. நமக்கு அது தேவையில்லை என்பதால் விட்டுவிட்டேன்.(பகிர்ந்தது பொதுநலன் சேவை கருதி) ;)


காஸ்ட் ஆஃப் லிவிங் அதிகம். சரக்கைத் தவிர்த்து எல்லாப் பொருட்களும் விலை அதிகம். மெக்டொனால்ட்ஸ் இருக்கிறது.நேற்றுதான் கேஃஎஃப் சியைக் கண்டுபிடித்தேன்.

இன்று காலை போகவேண்டிய பார்க் இது. தூங்கிவிட்டதால் மதியம் சென்றேன். ஆர்டிஸ்ட் பென்னில் வரைந்தது. ஒன்றரை மணிநேரம்.

பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள்....

நிறைய பல்புகள் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இருக்கின்றன பகிர்வுக்கு,

இப்பதிவு ஓவிய ரசிப்புக்கு என்பதால் பின்னர் சொல்கிறேன்.

இன்னொரு விஷயம், ப்ளாக்கருக்கு தீபாவளி சட்டை போட்டுவிட்டேன். புது டெம்ப்ளேட் எப்படியிருக்கிறது என நேரங்கிடைத்தால் பார்த்துவிட்டு ஃபீட்பேக் சொல்லுங்கள்....:)

Sunday, October 23, 2011

ரோம்பெர்பெர்க்-பிரான்க்பார்ட் -Sketch -23 OCT 2011




ஜெர்மனி வந்த நாள்ள இருந்து இந்த நாள் வரை கடுமையான ஜலதோஷம், கூடவே காதல் போலக் காய்ச்சலும் ..(உள்ள இருந்து படுத்தி எடுக்குது, வெளிய யாருக்கும் தெரியலை).ஆபீஸ், ஹோட்டல் ரூம், ட்ரைன் மற்றும் ஷாப்பிங் மால் தவிர எல்லா இடத்துலயும் குளிர் கொல்லுது. வந்து இறங்கினப்போ பத்து டிகிரி இருந்தது. போகப் போக தேமுதிக செல்வாக்கு மாதிரி குறைஞ்ச கிட்டே இருக்குது.



muukku சிந்திச் சிந்தி அது காணாமப் போகாததுதான் மிச்சம்,,,(அது போகாது, இன்னும் ஏகப்பட்ட பேர்கிட்ட நோஸ்கட்வாங்க வேண்டி இருக்குதே..;) )




நேத்து புல்லா தூங்கியே கழிச்சாச்சு...இன்னைக்குக் காலையில சீக்கிரம் பத்து மணிக்கெல்லாம் எழுந்து இந்த இடத்துக்குத்தான் போனோம்.இது முனிசிபாலிட்டி பிள்டிங்க்காம் , ரெண்டாவது உலகப் போர் அப்ப , மேயர்கள் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் இங்கதாn ரகசிய மீட்டிங் போட்டாங்களாம். அப்புறம் இங்கு குண்டு போட்டாங்களாம். அதுக்கப்புறம் புதுசா நிர்மாணம் செய்தார்களாம்...என் நண்பன் சொல்லக் கேள்வி. அங்கு எல்லாமே ஜெர்மன் மொழியிலையே எழுதி இருக்காங்க...அட்லீஸ்ட் மதுரைத் தமிழ்ல கூட எழுதி வைக்கலை. விக்கிப்பீடியாவில பார்த்தாலும் ஜெர்மன் தான்...:(


இந்த இடத்தைத் தாண்டிப் போனால் 'ரெயின்நதி வருகிறது....




இந்தக் கட்டிடத்திற்கு நான் போன நேரம் பதினோரு மணி இருக்கும். வரைய ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் என் அருகில் ஒரு ஜென்டில் மேன் வந்தார் தொப்பியுடன். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொப்பியைக் கீழே வைத்துவிட்டு முழங்கால் போட்டு அமர்ந்தார்....ஒ ஒ... நம்ம ஒர்க்குக்கு 'HATS OFF' சொல்கிறாரோ சிம்பாலிக்காக என்று நினைத்தேன். பின்புதான் தெரிந்தது, அவர் பிசினசிற்காக கல்லாவைத் திறந்திருக்கிறார் என. (அது சர்ச் வாசல். நிறைய சில்லறை தேரும்) இதைப் பார்த்துப் பதறிய என் நண்பன் என்னைச் சுற்றிலும் ஏதும் டப்பா இருக்குதா என செக் செய்துவிட்டு இல்லைஎன்ற பிறகுதான் பெருமூச்சு விட்டான்..,(இருந்திருந்தா அட்லீஸ்ட் ஒரு பர்கருக்காவது தேறி இருக்கும்...:( )




நேற்று புதிதாக சில pens வாங்கினேன்... அதை முதல் முறையாக உபயோகித்து வரைந்தது... தொண்ணுறு நிமிடங்கள் செலவானது...


பி.கு: என் ஹெச் எம் இல்லை., தமிழ் எடிட்டரில் காப்பி செய்து பேஸ்ட் செய்ய முடியவில்லை.... அதனால் இந்த 'ஜாக்கி'த தமிழை மன்னிக்கவும்....












Saturday, October 15, 2011

ஸ்கெட்ச் க்ராவ்லர்ஸ் பெங்களூர் ஷாப்பிங்

காலைல முக்கியமான ஷாப்பிங் போகணும்,. இன்னைக்கு முழுக்கவே ஷாப்பிங்தான் ப்ளான்.ஆனாலும் கொஞ்சம் நேரம் கிடைச்சது. அதனாலஸ்கெட்ச் கிராவ்ல்நிகழ்வுக்குப் போயிட்டேன்.Sketch crawlerss ந்றது, உலகம் முழுக்க எல்லா ஓவியர்களும் ஏதாவது ஒரு இடத்துல ஒண்ணு கூடிக்
கும்மியடிச்சிட்டு, கொஞ்சம் கிறுக்கிட்டு ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ்க்கான இணையதளத்துல அப்லோட் பண்ணனும்.இது மூணுமாசத்துக்கொருக்கா ஏதாவது ஒரு சனிக்கிழமை நடக்கும்(அனேகமா ரெண்டாவது சனிக்கிழமையா
இருக்கும்).

ஏன் அங்க போக முடிவெடுத்தேன்னா, அது பிரிகேட் ரோடு. என் ஷாப்பிங்கையும் அங்க முக்கால்வாசி முடிச்சிடலாம்.ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு; அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சுன்ற கதையா முதல்ல ஸ்கெட்ச் கிராவ்லர்ஸ் நிகழ்வுக்குப் போனேன். இது போன்ற நிகழ்வில் நான் கலந்து கொள்வது இரண்டாவது தடவை. நடுவில் ஒரு முறை ஒர்க்ஷாப் ஒன்றிற்குச் சென்றதால் மிஸ் ஆகிவிட்டது. ஆறேழு பேர் வந்திருந்தாங்க.பிரிகேட் ரோட்டில இருக்க ஓபரா ஹவுஸ்தான் டார்கெட். ஆனா இன்னிக்கு ஓவர் வெயில் அஜித்தைப் பொளந்துருச்சு. அதனால கூலா அதுக்கு எதிர்த்தாப்புல இருந்த மால்லகபே காபி டேக்குள்ள தஞ்சம் புகுந்துட்டோம். பென் மட்டும்தான் இருந்தது. அதிலயே அட்ஜஸ்ட் பண்ணி இந்த ரெண்டு படத்தைப் போட்டுட்டேன்.


மதியம் பிஸ்ஸா ஹட் போனா, கல்யாண வீட்டு அப்பளம் சைஸுல இருக்கிறவெஜ் சுப்ரீமோலார்ஜ் க்கு (மூணு பேர் சாப்பிட்டோம்), 600 ரூபா பில்லப் போட்டுட்டான் வக்காளி. பிட்சர் வேணுமான்ன்னு கேட்டான். ‘டேய் நான் சொன்னது செவன் அப்டான்னேன். எனக்குத் தெரிஞ்சதுபிட்சர்னா பீர் தான். அப்புறம்தான் புரிஞ்சதுபிட்சர்னா பெரிய ஜாடியாம். அது ஃபுல்லாக் கொடுப்பானுங்களாம் கூல் ட்ரிங்க்ஸை.


நண்பர்களின் ஆலோசனையோடு புதுக்கேமரா வாங்கியாச்சு. மயில் மற்றும் உமாநாத் செல்வனுக்கு நன்றிகள். அவர்கள் சொன்னது சோனி. ஆனா அது 10 மெகாபிக்சல். அதான் நான் கேனான் 14 மெகாபிக்சல் கேமரா வாங்கிட்டேன். 5 X ஜூம்.விலை ஏழாயிரத்துக்குக் கொஞ்சம் கீழே. முதல் ஃபோட்டோ திருஷ்டி கழிக்கிறதுக்காக சேல்ஸ்மேன் என்னையே எடுத்தாரு. அதனால அத என் டெஸ்க்டாப்ல வச்சிருக்கேன். வெளியாள் பார்வைக்கு அனுமதியில்லை.



ஏகப்பட்ட ஷாப்பிங் இன்னைக்கு. ஒரே ஆள் நான், டூவீலர்ல வச்சுக் கொண்டு வரமுடியல. இதுக்கு ரெண்டு தீர்வு இருக்கு. ஒண்ணு கல்யாணம் பண்ணனும் இல்ல கார் வாங்கணும். இன்வெஸ்ட்மெண்ட் காஸ்ட்,மெயிண்டெனன்ஸ் செலவு ரெண்டும் வச்சுக் கம்ப்பேர் பண்ணிப்பார்த்தா கார் வாங்குறதுதான் பெட்டர்னு தோணுது. என்னலே நாஞ்சொல்றது சரிதானே....???!!!!


ஏன்ப்பா பஸ்ஸை ஷெட்டுல போட்டுப் பூட்டப் போறாங்களாமே அது உண்மையா? :( சரி சரி அடுத்து வர்ற ஹை டெக் ட்ராவல்ஸ்ல (கூகிள்+) ஏறி இடம் பிடிச்சுக்குவோம்....