Tuesday, December 15, 2009

வன்முறை

             வன்முறை 
















குசல விசாரிப்புகளின் முடிவில்
ஆரம்பிக்கும் கேள்வி
லச்சுவைப் பற்றியே...
எப்படி மாமா இருக்கா?
ஃபோனைக் குடுங்க
சிறு மௌனம், சிறு சத்தம்,
சின்ன வீறிடல்களில் கை மாறி இருக்கும் செல்ஃபோன்
அலோ... நா சினேகா பேச்றேன்
அவளின் அம்மா வகையறாக்கள்
வைத்த பெயர்...எனக்கு லச்சுதான்...
எப்படி இருக்க.. சாப்டியா?
நல்லா ஈக்கேன் மாமா
பதில் சொன்னவளைப் பாடச்
சொல்கையில் அவளும் ஏதேனும்
குத்துப்பாடலை அவசர அவசரமாகப்
பாடி முடிப்பாள் வீசியெறியப் பட்ட
பொம்மையைத் தேடியவாறு...

புகைப்பட உதவி: மகேஷ்

Tuesday, December 8, 2009

பிடிக்குது...பிடிக்கலை...


       தமிழ் வலையுலகில் பெரும்பாலும் அனைவராலும் எழுதப்பட்ட பிடித்த,பிடிக்காத 10 தொடர்விளையாட்டுக்கு ஷக்திப்ரபா அழைத்திருந்தார்கள்.அவர்கள் அழைப்பினை ஏற்று இப்பதிவு....


1.எழுத்தாளர்
பிடித்தவர் :எஸ்.இராமகிருஷ்ணன்
பிடிக்காதவர் :ராஜேஷ்குமார்

2.கவிஞர்
பிடித்தவர் :முகுந்த் நாகராஜன்

பிடிக்காதவர் :புரியாமல் எழுதுபவர்கள் எல்லாரும்


3.இயக்குனர்
பிடித்தவர் : பாலா
பிடிக்காதவர் :ஷங்கர்

4.குணம்
பிடித்தது :அன்பை வழங்குதல்

பிடிக்காதது :அதிகாரம் செய்தல்,பொய்மை பாராட்டுவது


5.நடிகை
பிடித்தவர் : பாவனா, 
பிடிக்காதவர் : ஸ்ரேயா

6.இசையமைப்பாளர்
பிடித்தவர் :இளையராஜா
பிடிக்காதவர் :ஏ.ஆர்.ரகுமான்


7. ஓவியர்
பிடித்தவர் :மாருதி
பிடிக்காதவர் :அரஸ்

8. பதிவர்
பிடித்தவர் :எனது வலைப்பூவின் வலது கீழ் மூலையில் இருக்கும் பட்டியலில் இருப்பவர்கள்,இன்னும் பலரைச் சேர்க்கவில்லை...அவர்களும்

பிடிக்காதவர் :.......................................................................(மூன்று பெயர்கள் எழுதியிருந்தேன்... எடுத்துவிட்டேன்)

9.பயணம்
பிடித்தது: அலுவலகம் டூ வீடு (பேருந்தில்)
பிடிக்காதது: வீடு டூ அலுவலகம்(பேருந்தில்)


10.வலையுலகில்
பிடித்தது: பின்னூட்டமிடுவது
பிடிக்காதது: பதிவிடுவது

 நன்றி: பதிவுக்கு டெம்ப்ளேட் கொடுத்து உதவிய அண்ணன் ஆதிமூலகிருஷ்ணன்





Sunday, December 6, 2009

பா...இந்திப்படம்...இளையராஜா...சிறுபார்வை

‘my paa is good'


'I dont know God, but i know my paa only'


'Paa is like an umbrella, protects us from rain and heat'


             தெல்லாம் ‘பா’ படம் ஓடுற ஆட்லேப்ஸ் வளாகத்தின் ஒற்றை போர்டில் ஒட்டப்பட்ட சின்னச்சின்ன ஸ்லிப்புகளில் வாண்டுகள் கிறுக்கியது.அவர்களின் உயரமே உள்ள போர்டில் எழுதியிருந்தவைகளில் 90 சதம் உண்மையாகவும் இருக்கலாம்.அல்லது கூடவே அப்பா இருப்பதால் பயந்து கொண்டு நல்ல விதமாக எழுதியிருக்கலாம் அல்லது ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில்கூட எழுதி இருக்கலாம்.’பா’ படத்துக்குக் குழந்தைகளின் ஆதரவைக் கூட்ட இதுவும் ஒரு விளம்பர உத்தி.


   என்கிட்ட கேட்டிருந்தா என்ன எழுதியிருப்பேன்னு யோசிச்சுப் பார்த்தேன்.சின்ன வயசுல ‘அப்பா நல்லவர்’ன்னு தமிழ்ல எழுதி இருப்பேன்.இப்போ என்ன தோணுதுன்னு தெரியலை... யோசிச்சுப் பார்த்தேன். சிறுவயது அப்பா பிரம்மாண்டம் இப்போது மேலும் விஸ்வரூபமாகி நெஞ்சினை முட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.அதையெல்லாம் எழுத முடியுமான்னு தோணலை. உங்களை எழுதச் சொன்னா என்ன எழுதுவீங்கன்னு தெரியாது.அதே ஒன்றை ‘ப்ரோஜேரியா’ எனும் அரிய நோய் வந்து, தந்தை யார் எனத் தெரியாமல்,13 வயதிலேயே வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் ’ஆரோ’விடம் கேட்டால்...அதுதான் ‘பா’. இரண்டரை மணி நேர உணர்ச்சிகள்...


   ‘ஆரோ’ன்னா...??


இதே கேள்வியை அவனை முதல் முதலாப் பார்க்கிற அவன் தாத்தா கேட்பாரு.


‘ஆரோன்னா ?’


‘A U R O'- இது ஆரோ.


‘ஓ. அப்ப ‘ஆரோ’ன்னா ஆரோபிந்தோ(அரவிந்தரா)...?’


‘இல்ல... ‘ஆரோ’ன்னா ‘ஆரோ’. அவ்வளவுதான்’- ஆஸ்பத்திரிப் படுக்கையில் இருந்தவாறே ஆரோவின் பதில்.


இதுதான் ஆரோ. 



   ‘ப்ரொஜேரியா’-முதலிலேயே மருத்துவர் விளக்கிவிடுகிறார். குழந்தைகளுக்கு வரும் வியாதி.தன்னைவிட  ஐந்து மடங்கு வயதாய்த் தோன்றும் உடல்,மூளையோ இயல்பு நிலை.13,14 வயதுகளைத் தாண்டுவதே கடினம்.உலகத்தில் இது நாற்பது,ஐம்பது பேர்களுக்குத்தான் இருக்கிறது. அதில் ஒருவன் தான் நமது ‘ஆரோ’. ஆரோவாக அமிதாப்.அடையாளம் தெரியாத அளவு மேக்கப்.துருத்திக் கொண்டு தெரியவில்லை.அபாரம். மேக்கப்ல உருவம் மாறலாம்.உயரம் எப்படிக் குறைவாகும்...?அந்த வேலையை பி.சி.ஸ்ரீராமோட விசேஷ லென்ஸ் பாத்துக்கிடுச்சு.


        நல்ல அரசியல்வாதியாக (முரண்...??!!) நினைக்கும் பணக்காரர் அமோல்(அபிஷேக்) , கேம்பிரிட்ஜில் படிக்கையில்,வித்யா(வித்யா பாலன்)வுடன் காதல்,கொஞ்சம் முற்றிப் போய் குழந்தை உருவாகிவிடுகிறது.இப்போதைய குழந்தை தனது அரசியல் வாழ்க்கையைப் பாதிக்கும் என அபிஷேக் அதைக் கலைக்கச் சொல்ல, வித்யா(கைனகாலஜிஸ்ட்) மறுத்து, உன் வழியில் தென்படாது எங்கள் சுவடுகள் என விலகிவிடுகிறார். இவையனைத்தும் இரண்டு நிமிட ‘முடி முடி ‘ பாடலிலேயே முடிந்துவிடுகிறது.இளையராஜாவும்,பி.சி.யும் கலந்த ஒரு இளமைக் காக்டெயில் இந்தப் பாடல்.


            புரொஜேரியா குழந்தையாக ஆரோ.அவனைப் பார்த்த ஒரு பெண், வித்யாவிடம் கேட்க, ‘மில்லியன் குரோம்சோம்ல ஒரு சின்ன இடமாற்றத்துல இப்படி ஆயிடும். ரொம்ப லக்கி இல்ல...’ எனச் சிரித்தவாறு கூறுகையில்,பேஸ்தடித்துப் போய்விடுகிறார் கேட்டவர்.


           இவ்வளவு பில்டப் இருக்கே... இதுக்கப்புறம் கர்ச்சீப்பைக் கையில் வச்சுக்கிட்டுதான் படம் பார்க்கணுமான்னு கேட்கறீங்களா...?அந்தக் கேள்வியை அடிச்சு தூள் பண்ணிடுறான் ஆரோ.கிரியேட்டிவிட்டி,குறும்புத்தனம்,பாசம்,எடக்குமடக்குக் கேள்விகள் இவைதான் அவன் சொத்து.


       ரு பள்ளிவிழாவில் அவனை அமோல் எம்.பி. பார்க்க, பின் மீடியா வெளிச்சம் ஆரோ மேல் பாய்கிறது. அதை விரும்பாத ஆரோ,அமோலுக்கு மெயிலனுப்ப, துளிர்விட ஆரம்பிக்கிறது புதிய உறவு.அதன்பின் ஆரோவுக்கு அமோல்தான் தன் அப்பா எனத் தெரியவந்து, தன் பெற்றோரை ஒன்று சேர்த்து வைப்பதுதான் கதை.


        இதுதான் கதை என்றாலும் சொன்னவிதம் மழையில் கழுவிவிட்ட தார்ச்சாலை போல பளிச்.பள்ளியில் ஆரோவின் குறும்புத்தனம்,தன்னை நோக்கி வரும் சிறுமியைக் கண்டதும் ‘எஸ்’ஸாகிவிடும் உஷார்,பாட்டியை ‘பம்’ என்று செல்லப் பேர் வைத்துக் கிண்டல் செய்வது,எம். பியுடன் ராஷ்டிரபதி பவன் பார்க்கச் சென்றதாக நண்பர்களிடம் பீலா விடுவதும், குட்டு உடைந்தவுடன் வழிவதும் எனக் கிடைக்கிற கேப்பிலெல்லாம் சிக்ஸர்தான். கேட்கும் கேள்விகள், சொல்லும் பதில்கள் எல்லாமே ‘நச்’...


   அமோல்: உன் பெற்றோர் என்ன பண்றாங்க...
  
   ஆரோ    : they are preparing kids. but i dont want promotion.


   இதைவிட ஆஸ்பத்திரியில் ஆரோவிடம் அனுதாபம் காட்டுவதாகப் பேசும் அவன் தாத்தாவிடம்(பரேஷ் ராவல்), இவன் அளிக்கும் பதில் சரியான நெத்தியடி.


ஆரோ மட்டுமல்ல. படத்தில் அனைவரின் வசனமுமே கலக்கல்தான்.திருமணம் வேண்டாமென மறுக்கும் அமோலிடம் அவன் அப்பா சந்தேகத்துடன் கேட்கும் கேள்வி ‘ஆர் யு  கே (gay) ?'.


  ஆரோ விலகிச்சென்றாலும், நெருங்கி நெருங்கி வரும் சிறுமி அழகான தேர்வு... பின் அவள் ‘ஸாரி’ கேட்பதும் மிக அழகு. அதற்கான காரணமும் சரியான திருப்பம்.


    ரோவின் அம்மாவாக வித்யா பாலன். அமிதாப்புக்கு அடுத்து ஸ்கோர் செய்வது இவர்தான்.கண்களிலேயே உணர்ச்சிகளைக் காட்டிவிடுகிறார்.காதல்,கோபம், பாசம் அனைத்திலும் இவரின் முகம் காற்றிலாடும் தீபம் போல அழகாகப் பிரதிபலித்திருக்கிறது.(special credits to p.c.sriram)



   அபிசேக்தான் ‘பா’.நேர்மையான அரசியல் வாதி,பாசமிகு அப்பா.’நீட்டலும், மழித்தலும் வேண்டாம்’ என்பது போல் அளவான நடிப்பு.


  ண்மையான ஹீரோ டைரக்டர் பால்கிதான். அசத்தியிருக்கிறார்.இது இரண்டாவது படம்தான்(’சீனிகம்’ முதல் படம். பார்த்துவிடுங்கள்).சீரியல் போன்ற ஒரு கதையை, இரண்டரை மணி நேரத்தில் கொடுப்பதற்கு இவரது முந்தைய விளம்பர உலகம் கை கொடுத்திருக்கிறது.


   இளையராஜா...படம் எது, இசை எது என நம்மைப் பிரித்துப் பார்க்க முடியாதவாறு கட்டிப் போடுகிறார். அவருக்குப் பாடல்கள் கூட கதையின் தன்மையைச் சொல்லும் பின்னணி இசைதான்.க்ளைமேக்ஸ் இல் வசனங்கள் இல்லை. இசைதான் பேசியது.பாடல்களில் ஒரு இளமைத்துள்ளல். ‘முடிமுடி’ மற்றும் அதன் வெர்ஷன்களான ‘கலி உதி’,’உதி உதி’அட்டகாசம். ‘சங்கத்தில் பாடாத கவிதை’ இங்கு ‘கும்சும்கும்’ ஆக நீட்டாக ரீபெர்த் ஆகி இருக்கிறது. படத்தில் ஒரு நிமிடம் வருவதுதான் குறை. ‘ஹிச்கி ஹிச்கி’ -சரியான இடத்தில் வருகிறது.தீம் மியூசிக் ஏற்கெனவே பிரபலம் ஆகிவிட்டது.(தமிழில் வந்த ‘அது ஒரு கனாக் காலம்’ படத்தில் வரும் ‘காட்டுவழி’ பாடல்).வயலின், கீ போர்டு இரண்டில் இருந்தும் அனாயசமாக வழியவிட்டிருக்கிறார் இசையருவியை.


   பி.சி.ஸ்ரீராம்-க்ளீன்...படம் முழுவதும் ஒருவித ஃப்ரெஷ்னெஸ் தெரிகிறது.கேமரா லென்ஸை இவர் விபூதி போட்டுக் கழுவிட்டு படமெடுப்பாரோ...?
   எடிட்டிங்- கனகச்சிதம்.
படம் முடிகையில் தொண்டை அடைத்துவிடுகிறது. இது ஒரு புது அனுபவம்.

           

Thursday, December 3, 2009

அகர முதல...

   வெகு நாட்களுக்கு முன் வந்த தொடர்பதிவு அழைப்பு.ஊருக்குச் சென்று வந்ததுக்கப்புறம் பதிவுகள் போடவில்லையாதலால், தாமதமாக அரங்கேறியிருக்கிறது. அழைத்த ஹேமா,சரவணகுமரன்,கயல்விழிநடனம் அனைவரும் தாமதத்தைப் பொறுத்தருள்வார்கள் என நம்புகிறேன்...

1. A - available/single? - Single...
2.B-.Best friend -music
3.C- Cake or Pie - Coffee
4.D - Drink of Choice - Refer answer for 3rd qn
5.E- Essential item you Use every day - love
6.F-favorate color - Blue
7.G-gummy bears or worms - Sorry... Next question pls..
8.Home Town - Cumbum.
9.I-Indulgence - choice இல்லையா....?
10.J- january/february - january
11.K-Kids and their Names - Out of syllabus
12.L-Life is incomplete with out - I
13.Marriage Date - வெறுப்பேத்தாதீங்கப்பா...
14.N - Number of sibilings - ஒரு தம்பி...
15.O-Orange or Apples - ஆப்பிள்...(easy for eating)
16.P- Phobias/fears - Dogs
17.Q-Quote for today - நன்றே செய்..இன்றே செய்...(எனக்குச் சொன்னேன்...)
18.R-Reason to Smile - children
19.S-Season - மழை/பனி/க்காலம்...
20.T-Tag4 People - MAGESH
21.U-Unknown fact about me - If i donno, how can i say that is fact ???
22.V-Vegetable you won't Like - கருணைக்கிழங்கு
23.W-worst Habit - sleeping
24.X- Xrays you had - ya. 4th standard arm fracture
25.Y-Your favorate Food -  தோசை...தோசை..தோசை....
26.Z-Zodiac sign - மேஷம்


அன்புக்குரியவர்கள் - அப்பா, அம்மா, தம்பி மற்றும் நண்பர்கள்..
ஆசைக்குரியவர் - கிடைத்ததும் சொல்கிறேன்...
இலவசமாய் கிடைப்பது - அறிவுரை and Ideas
ஈதலில் சிறந்தது - கல்வி...
உலகத்தில் பயப்படுவது - எனக்கு தான்...
ஊமை கண்ட கனவு - கஷ்டம்தான்
எப்போதும் உடன் இருப்பது - அன்பு
ஏன் இந்த பதிவு - ஹேமா,சரவண குமரன்,கயல்விழிநடனம் அழைத்ததால்
ஐஸ்வர்யத்தில் சிறந்தது - கல்வி...
ஒரு ரகசியம் - சொல்ல முடியாது.
ஓசையில் பிடித்தது - தாளிக்கும் ஓசை
ஔவை மொழி ஒன்று -அறம் செய விரும்பு.

Tuesday, December 1, 2009

என் முதல் காதலி...

      வளைப் பற்றிச் சொல்லணும்னா செமை கட்டைன்னு சொல்லலாம்.கொஞ்சம் பருமன்னு கூட நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு அப்படித் தோணலை.நல்லாப் பாடுவா. நல்ல குரல் வளம். ஆம்பிளைக் குரல்ல கூட பாடுவான்னா கேட்டுக்குங்களேன்.நான் எட்டாங்கிளாஸ் படிக்கிறப்பவே அவளுக்காக உருக ஆரம்பிச்சிட்டேன். ஆனா தொட்டா மட்டும் ‘ஷாக்’ தான்.பின்ன என்னங்க... வாங்கி 25 வருஷத்துக்கு மேலாச்சுனா, ஷாக் அடிக்காம இருக்குமா ‘வால்வு டைப் ரேடியோ’??!!


          என்னதான் சிஸ்டத்துலயும், ’ஐ பாடு ’ லயும் ஆயிரத்துச் சொச்சம் பாட்டுக்களை நுணுக்கி நுணுக்கிச் சேர்த்து வச்சு, நினைக்கிற நேரத்துல பாட்டு கேட்டாலும் வானொலியின் சுகம் வருவதில்லை. இப்போ இருக்கிற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு இடையில தேடியெடுத்துப் பாட்டு கேட்க முடியாத நம்ம இயலாமை கூட ஒரு காரணமா இருக்கலாம். சரி பண்பலையாச்சும் கேட்கலாம்னா, நம்ம காதுக்குள்ளயே கடை போடுற விளம்பரங்கள், தொகுப்பாளினி(ளர்) யோட முக்கல், முனகல்கள், இதையெல்லாம் தாண்டிப் போய்க் கேட்டாலும் காதுக்குள்ள ஈயத்தைக் காய்ச்சி ஊத்துற மாதிரியான பாட்டுக்கள்தான் கேட்க முடியுது.

               அதனால திடீர்ன்னு ஒரு கொசுவர்த்தியைச் சுத்திப் போட்டுடலாம்ன்னு தோணுச்சு.இத நீங்களும் கொஞ்சம் அனுபவப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். முதல்ல வானொலியில பாட்டுக்கள் கேட்குறதை விட நாடகங்கள் கேட்பேன். இரவு 7 மணிக்கு மேல் இலங்கை வானொலி கேட்காது.அதன்பின் மதுரை வானொலியில் இரவில் போடும் நாடகங்களுக்காகத் தவமிருப்பேன்.


           துரை(உட்பட எல்லாத் தமிழக வானொலிகளிலும்) வானொலியில் ஒவ்வொரு வருடமும், ஒரு வாரத்திற்கு இரவு 9.30 முதல் 10.30 வரை அகில இந்திய நாடக விழா ஒலிபரப்புவார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு வானொலி நிலையத்தின் நாடகம் ஒலிபரப்பாகும்.தூங்கி வழியும் கண்களோடு காத்திருப்பேன்.ஒவ்வொரு செவ்வாய் இரவும் 'மனோரஞ்சிதம்' எனும் தலைப்பில் பழைய பாடல்கள் போடுவார்கள்.9.30 முதல் 10.30 வரை. கண்ணதாசன், எம்.எஸ்.வியின் பாடல்கள்தான் பெரும்பாலும்.

     அப்புறம் நாடகக்குரல்களில் என்னால் இன்றும் மறக்க முடியாத குரல்,இப்போது கூட என் காதுகளைச் சுற்றுவது போல் ஒரு பிரமை...அப்படிஓர் கணீர்க்குரலுக்குச் சொந்தக்காரர் மறைந்த நாடக நடிகர் ஹெரான் ராமசாமி அவர்கள்.பெரும்பாலும் சரித்திர நாடகங்கள்தான்.கெட்டியான எருமை மாட்டுப்பாலில் குடித்த ஸ்ட்ராங்கான காஃபி போல் சுவையான குரல் அவர் குரல்.நீங்கள் 'யார்?' படம் பார்த்திருக்கிறீர்களா..? அதில் முதலில் வந்து இறந்துவிடும் முனிவர் வேடத்தில் நடித்தவர் அவர்தான்.


           ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி சமீபத்தில் கேட்க ஆரம்பிக்கும் குறள்,’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ அதன் பின் தொடர்ச்சியாக ‘மண்ணும்,மணியும்’ ஒலிபரப்பாகி,பயிர், உரம்,பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும். பின் செய்திகள்.திருச்சி வானொலி அவ்வப்போது 7.10க்கும் 7.15க்கும் இடையில் பாடல் கூட ஒலிபரப்பும். ஆனால் மதுரை வானொலி அப்படியே தூர்தர்சன் மாதிரிதான்.

           இலங்கை வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளும் அத்துப்படி. அப்துல் ஹமீதுவின் ‘பாட்டுக்குப் பாட்டு’ ஃபேவரைட்.புதுப்புதுப் பாடல்கள் கேட்கலாம். பண்டிகை சமயங்களில்தான் காதை அடைக்கும் ஜவுளிக்கடை விளம்பரங்கள் வரும்.

           நான் முன்பே சொன்னதுபோல எங்கள் வீட்டு வானொலி தொட்டா அவ்வப்போது ‘எர்த்’ அடிக்கும். ரெடியா ஒரு டெஸ்டர் வச்சிருப்பேன். அதவச்சுத் தொட்டுத்தான் வானொலியின் பதம் பார்த்துக் கை வைப்பேன்.அதோட மட்டுமில்லாம சோதனை ஆராய்ச்சியெல்லாம் பண்ணிப் புதுப்புது ரேடியோ ஸ்டேசன்லாம் கண்டுபிடிப்பேன்.அதில் வெளிநாட்டு வானொலி(சிங்கப்பூர் ஒலி95.4(....?),பிபி.சி,சீனவானொலி) ஒலிபரப்புகளைக் (கரகரப்புடன்) கேட்பதில் இருந்த சுகம், இப்போது ஒரு தொடலில் துல்லிய ஒலிபரப்பு கேட்பதில் இருப்பதில்லை.இவற்றைக் கேட்பதற்காக வானொலியின் குமிழிகளை நோண்டி,நொங்கெடுத்தது(தாத்தாவிற்குப் பயந்து கொண்டே)இன்று நினைவுக்கு வருகிறது.

          னது சிறுவயது கனவு டேப் ரெக்கார்டர் வாங்குவது. கல்லூரிக்காலம் முடியும் வரை இயலவில்லை. வேலைக்கு வந்தபின்தான் நிறைவேறியது.ஆனால் அதற்காக அலைந்த பருவங்களின் தொலைந்த கன்வுகளைத்தான் என்னால் மீட்டெடுக்க முடியவில்லை.தற்போதைக்கு நினைவுகள் மட்டுமே மிச்சமாய்...

விளம்பரம்:  சர்வேசன் ‘நச்’ கதைப் போட்டிக்கான சர்வே இங்கு நடக்கிறது.சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டுச் செல்லவும். 20 கதைகளையும் படித்துப் பார்த்து பிடித்த கதைகளுக்கு வாக்களிக்கவும். எனது கதையும் அதில் ஒன்று என நான் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை என நினைக்கிறேன்.

Tuesday, November 24, 2009

சர்வேசன் கதைப் போட்டியில் தேர்வான டாப் 20 இல் எனது கதை

      எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, சர்வேசன் நடத்திய ‘நச்’ சிறுகதைப் போட்டியில் டாப்-20 இல் எனது கதையும் தேர்வாகியுள்ளது. முதல் சுற்று நடுவர்களாக சர்வேசனும், சென்ஷியும் தேர்வு செய்துள்ளனர். (விபரம் இங்கே) அடுத்த சுற்றில் வாசகர் வாக்கு+சென்ஷி+2 நடுவர்கள்(அறிவிக்கப் படவில்லை) இவர்களின் தேர்வில் டாப் 2 கதைகள் தேர்ந்தெடுக்கப் படும்.

      எழுதிய இரண்டாவது கதைக்கே கிடைத்த இவ்வங்கீகாரம் என்னை மேலும் ஊக்கப் படுத்தியுள்ளது.
படித்துப் பார்த்து, பிடித்திருந்தால் வாசகர்கள் தங்கள் வாக்குகளையும், பின்னூட்டங்களையும் இடவும்.
அதுபற்றிய விபரங்களை சர்வேசன் அளப்பார்... இல்லை இல்லை அளிப்பார் விரைவில்...

Sunday, November 15, 2009

ஒரு கிளி உருகுது...உரிமையில் பழகுது... சர்வேசன் நச் சிறுகதைப் போட்டிக்காக...

ஒரு கிளி உருகுது.. . உரிமையில் பழகுது….

           சுமதிக்கு எழுந்திருக்கும் போதே சற்றுக் களைப்பாய்த்தான் இருந்தது.காரணமான ரவி சற்றுத் தள்ளிக் குப்புறப் படுத்து, தலையை மட்டும் ஒரு சாய்த்திருந்தான்.அவன் தூங்கும் கோலம் அவளுள் புன்னகையைத் தோற்றுவித்தது.அவன் இன்னும் குழந்தைதான்.கலைந்திருந்த போர்வையை அவன் மீது சரியாகப் போர்த்திவிட்டு,முகத்தினருகில் வருகையில் அவன் மீசையைத் தடவிக் கொடுத்தாள்.கறுகறுவென இருந்தது.அவள் மயங்கியதே இந்த மீசையின் புன்னகையில்தான். மீசை சிரிக்குமா?அவளைக் கேட்டால் சிரிக்கும் என்பாள்.எல்லார் மீசையும் சிரிக்குமோ தெரியாது.இவன் மீசை சிரித்தது. இவளுக்கு அப்படித்தான் தோன்றியது, முதன்முதலில் இவள் அவனிடம் ‘தேங்க்ஸ்’ சொன்ன போது.



‘நன்றி..!மீண்டும் வருக’

’வெல்கம் சீனிவாசா’ உணவகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் வசுமதி.தோள் வரையே உள்ள    கூந்தலை அவள் பின்னியிருந்த லாவகம், இன்னும் நீளமோ என யோசிக்கவைத்தது.அவளின் ஐந்தடி உயரம்கூட அப்படி எண்ண வைத்திருக்கலாம்.ஒற்றை ரோஜாவின் வாடிய நிலை, நேரம் சாயங்காலமாகிவிட்டதைக் காட்டியது.உடன் வந்த செல்வி இவளுக்கு முன், பணம் செலுத்திவிடவேண்டுமென்ற முனைப்புடன் தனது தோல் பர்ஸைப் பிரிக்க ஆரம்பித்தாள்.அதற்குள்  வசுமதி இருவரும் சாப்பிட்ட பில்லைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

‘ஏண்டி! நான் கொடுத்திருப்பேன்ல.’

‘சரி கொடுத்துக்கோ.. அடுத்த தடவை’- எனச் சொல்லிவிட்டு உதடு பிரியாமல் சிரித்தாள்.

‘எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!’-பின்னாலிருந்து குரல் கேட்டது.

தன்னைக் கூப்பிட்டிருக்க மாட்டார்களென எண்ணியும், அனிச்சையாய் தலை திரும்பியது.கொஞ்சமாய் உடலும்.

25 வயது இருக்கலாம். நின்றிருந்தான் அவன்.வார் வைத்த கறுப்பு லெதர்பேக்.கையில் ஹெல்மட்டுடன் இருந்தான்.இன்னொரு கையில் ஏதோ கார்டு இருந்தது.

‘நீங்கதானே வாசுமதி தேவராஜன்?பணம் எடுக்கையில இந்த ஏடிஎம் கார்டு கீழ விழுந்திருச்சு’
 
        உடன் முழுதும் திரும்பி, தன் கைப்பையை நொடிகளுக்குள் சோதனையிட்டுவிட்டு அசடுவழிந்த புன்னகையோடு அவனை நோக்கினாள்.

‘கார்டு என்னதுதான். ஆனா நான் வாசுமதி இல்லை. வசுமதி’

‘ஸாரிங்க..’ என்றவாறு கார்டைக் கொடுத்தான்.

கொடுக்கையில் விரல் நுனிகள் பட்டால் தீட்டு என்பது போல் பவ்யமாய்க் கொடுத்தான்.பளிச்சென்ற நகங்கள் வெட்டப்பட்டு அளவாய் இருந்தன.கொடுத்தவிதத்தில் அவன் முகத்தையும் கவனிக்கத் தோன்றியது.கார்டை வாங்கிக் கொண்டு ‘தேங்க்ஸ்’ சொல்லியவாறே ஏறிட்டுப் பார்த்தாள்.எண்ணெய் இல்லாத தலைமுடி, பிரில்கிரீமின் உபயோகத்தில் பளபளத்தது.மாநிறம்.சாதாரண கண்கள் கண்ணாடிக்குள் அடைபட்டிருந்தன. மூக்கு ஒன்றும் பிரமாதமில்லை.உதடு சற்றுக் கறுத்திருந்தது.லேசாகச் சிரிக்கவும் பிரயத்தனப்பட்டிருந்தான். அந்த சிரிப்பு அவன் மீசையோடு சேர்ந்து கொண்டாற்போல் இவளுக்குப் பிரமை ஏற்பட்டு லயித்திருந்தாள். லயித்தல் பிறிதொரு சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தித் தந்தது இவளுக்கும், அவனுக்கும்.அவை ‘ஹாய்’களாகத் தொடங்கி, ஒரே மேஜையில் உணவருந்தவும் வழி செய்தது.



               ணவு மேஜையில் அமர்ந்திருந்தான் ரவி.மேஜையில் காலி தட்டுக்கள் இருந்தன. இன்னும் ரெடியாகவில்லை போலும்.

‘வசு… என்ன டிஃபன்… சீக்கிரம் கொண்டு வா.. எனக்கு டைம் ஆச்சு’

‘கொஞ்சம் பொறுமையா இருப்பா. வந்துடுறேன்.எனக்கென்ன நாலு கையா இருக்கு’

‘உனக்கு நாலு கை வேணாம். இன்னும் ரெண்டு உதடு இருந்தாப் போதும். நீ டிஃபனே பண்ணவேணாம்.’

‘ஐயோடா…காலங்காத்தாலேயா ரொமான்ஸா.இதோ ரெடியாயிடுச்சி’ -சொல்லும்போதே இரவின் நினைப்பு வந்து போனதில் கொஞ்சம் கூசியது வசுமதியின் உதடுகள்.
 
       வி பறக்கும் இட்டிலியின் சூட்டினைச் சுவை பார்த்துக் கொண்டிருந்தன தட்டுகள்.வெங்காயச் சட்னி இவனுக்கு. தேங்காய்ச் சட்னி இவளது ஃபேவரைட். ஆளுக்கொரு சட்னியில் இட்டிலிகளைக் காலி செய்து கொண்டிருந்தனர்.இவனுக்கு முன் அவள் உண்டு முடித்திருந்தாள்.

‘ஏண்டி நீயெல்லாம் தமிழ்ப் பொண்ணா? புருஷன் சாப்பிடுறதுக்கு முன்னாடியே சாப்பிடுறே’-குறும்புடன் கேட்டான் ரவி.

‘நான் எங்க உங்க முன்னாடி சாப்பிட்டேன். சைடுல உக்காந்துதானே சாப்பிட்டேன்’

ஒரு நொடி புன்னகைப்பது போல் பாவலா காட்டிப் பின் அமைதியாய் ‘சிரித்தது போதுமா?’ என்றான்.

‘போதும். கையைக் கழுவிட்டு ஆஃபீஸ் கிளம்புங்க. நேரமாயிடுச்சு’

         வசர,அவசரமாக உடைமாற்றி, ஷூக்களுக்குத் தன் கால்களையும் கொடுத்து, வண்டிச்சாவியையும், ஹெல்மெட்டையும் எடுத்துக் கிளம்புவதற்குள் மணி எட்டாகியிருந்தது.எட்டு ஐந்துக்குள் வண்டியைக் கிளப்பினால்தான் சரியான நேரத்திற்குச் செல்ல முடியும்.

 ‘ரவி… நாம மீட் பண்ணி இன்னையோட நூறாவது நாள். ஞாபகம் இருக்குல்ல’

‘இல்லாமயா…’ என்றவாறு கதவினைத் திறந்து வெளியேறினான்.

’ஈவ்னிங் வெளிய போலாம். சீக்கிரம் வர ட்ரை பண்றேன். பாய்’

புன்னகையோடு கையசைத்த வசுமதி வீட்டிற்குள் நுழைந்தாள்.



              ண்டியில் சாவியை நுழைத்து லாக்கை விடுவித்துவிட்டுப் பின் வண்டியிலேறி அமர்ந்து கிக்கரை அழுத்தினான்.நோ ரெஸ்பான்ஸ்.இன்னொரு முறை. இன்னும் நான்கைந்து இன்னொரு முறைகள் தோல்வியைத் தந்தன. டேங்கை குலுக்கிப் பார்த்ததில் பெட்ரோல் இருந்த சுவடில்லை.பெட்ரோல்  சமீபத்தில்தான் போட்டதாக ஞாபகம்.’வீடு, ஆஃபீஸ் தவிர வேறு எங்கும் சுற்றவுமில்லையே….அதற்குள் எப்படித் தீர்ந்தது.’ நினைத்து முடிப்பதற்குள் மணி 8.10 ஐக் கடந்திருந்தது.

        பாஸுக்கு ஃபோன் செய்து லேட்டாக வருவதைத் தெரிவிக்கலாமென செல்ஃபோனை எடுக்கச் சட்டைப் பைக்குள் கைவிட்டவன் விரல்கள் அவன் நெஞ்சினைத்தான் வருடின.அடடா அதையும் மறந்துட்டோமா என அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தான்.

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த வசுமதி இவனது பரபரப்பைப் பார்த்துவிட்டுப் பின்னாடியே வந்தாள்.

‘என்ன ஆச்சு … ஆபீஸ்க்கு லேட்டாயிருச்சு.. இன்னும் போகலையா.. உள்ள என்ன தேடிக்கிட்டிருக்கீங்க?’ என்றாள்.

‘வண்டில பெட்ரோல் இல்ல. பாஸூக்குச் சொல்லலாம்னா செல்ல மறந்துவச்சுட்டேன்.அவசரத்துல வச்ச இடத்துல கிடைக்க மாட்டேங்குது.’

‘நீங்க எப்பயுமே இப்படித்தான். இருங்க நானும் தேடுறேன்’ என்று களமிறங்கினாள் வசுமதி.

‘சரி உன்னோட செல்லில இருந்து ஒரு கால் கொடு. ‘

‘ஐயய்யோ என்னதுல பேலன்ஸ் தீர்ந்துடுச்சி. கால் பண்ண முடியாது’

‘மெஸேஜ் ஆவது பண்ணு. டோன் வருதான்னு பார்ப்போம்.’

வசுமதி மெஸேஜ் அனுப்பினாள். வீடெங்கும் காதுகளை அலையவிட்ட ரவிக்கு ஏமாற்றமே….



            டென்ஷனில் வேர்த்திருந்தது ரவிக்கு. அருகில் வந்து தன் புடவைத் தலைப்பால் அவன் முகம் துடைத்தவாறே சொன்னாள்..

‘கொஞ்சம் அமைதியா இருங்க.வெளியே போய் ஃபோன் பண்ணி சொல்லிக்கலாம்’
 
      சோபாவில் அமர்ந்து சற்று ரிலாக்ஸான ரவியின் அருகில் வந்தமர்ந்த வசுமதி ‘பெட்ரோல் பங்க் நாலு கி.மீ.இனிமே தெருமுனை வரை நடந்து போய் ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸூக்குப் போய்த்தான் ஆகணுமா. அதான் தடங்கலாயிடுச்சில்ல. நம்ம செலப்ரேஷன் டேயவாவது கொண்டாட…..லா….மா? ’ என மெதுவாக இழுத்து முடித்தும் முடிக்காதவளைப் பார்த்தான்.எவ்வளவு கோபத்தையும் கரைத்துவிடுகிற அப்பாவி முகம்.சோகத்தில் இருப்பது போன்ற கண்கள் சொல்லுவதோ காதல் சேதி.அழுதால் கூட அழகாய் அழும் உதடுகள். இவை அழுவதை விடவும் சிரித்தால் பெட்டரா இருக்குமே.நூறாவது நாள் கொண்டாட்ட சேலை இவனுக்குப் பிடித்த மயில் கழுத்து நிறத்தில், அவளின் அழகை இன்னும் கூட்டியது. கழுத்து திடீரென மயில் கழுத்து போலக்கூடத் தோன்றி மறைந்தது.அதென்ன கழுத்தில் உத்திராட்சக் கொட்டை. மேலே பார்த்தால் கடுகடு மேனேஜர் மூஞ்சி தெரிகிறதே….

‘என்னய்யா… இன்னைக்கு ஆடிட் பத்தி டிஸ்கசன்னு சொன்னேன்ல. ஒரு மணி நேரம் லேட்டா வந்திருக்க.’

‘ஃபோன் பண்ணிச் சொன்னேன்ல சார்’

‘சொல்லிட்டா ஒரு மணி நேரம் உன் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆயிருமா? இருந்து வேலையை முடிச்சிட்டுப் போ.’

‘சார்.. இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும்…பெர்சனல் ஒர்க் இருக்கு’

‘யோவ் என்னய்யா நினைச்சுட்டிருக்க… வர்றது லேட்டு.. போறது சீக்கிரமா.. இந்த இழவுக்கு உன்னய யாருயா வரச்சொன்னா…லீவப் போட்டிருக்கலாம்ல’

‘போட்டிடுறேன்’ சார் என்றவாறே நிகழ்காலத்துக்கு வந்தான்.

     பெட்ரோல் பங்க் தூரமும், ஆட்டோ குலுக்கலும், எரிந்து விழும் மேனேஜரும், வீட்டு நினைப்பில் அலுவலகத்தில் இருப்பதையும் கண்முன் நினைத்துப் பார்த்தான்.அவள் போட்டிருந்த கோகுல் ஸாண்டல் பவுடர் ,வியர்வையில் தோய்ந்து புது வாசத்தினை அவனுக்குக் காட்டியது.சில நேரங்களில் வாசமும் புது நேசம் சொல்லும்.நாளைய கவலை நாளைக்கு… அதுக்காக இன்றைய தருணத்தை நழுவ விடுவதா…

.
முழுதாக இயல்புக்கு வந்தவன் அவளிடம் சொன்னான்.

‘லாம்.’

புன்னகையில் மலர்ந்த வசு, ‘அப்போ வாங்க.. முதல்ல பிள்ளையார்கோயில் அப்புறம் மாயாஜால், ஈவினிங் நம்ம கோயில் ‘வெல்கம் சீனிவாசா’ ஹோட்டல். சீக்கிரம் கிளம்பலாம்’-பரபரப்புடன் சொல்லியவாறே ‘இச்’சிட்டு எழுந்தாள்.

’சரி சரி முதல்ல மொபைல்ல தேடுவோம்.’


                ருவரும் தேட ஆரம்பித்தனர். அரை மணித் தேடலுக்குப் பின், அவன் தலையணைக்கடியில் மொபைல் இருந்தது.எடுத்துக் கொண்டே,’பெட்ரோல் வாங்கிட்டு வர்றேன்’ எனக்கிளம்பினான்.

பாஸுக்கு முதலில் ஃபோன் செய்து லீவ் சொல்லிவிடலாமென மொபைலை எடுத்ததில் ஒரு மெஸேஜ் வந்தது தெரியவந்தது.வசு அனுப்பியது தான் எனத் தெரிந்து திறந்தான்.

‘வேணாங்க ….. இங்க ஒரு பாட்டில்ல பெட்ரோல் இருக்குது,. நான் நேத்து என் திறமையில சம்பாதிச்சது. இப்போதான் ஞாபகம் வந்தது’ -வசுமதியின் குரல்  கிண்டலாகக் கேட்டது.

செல்போன் திரையில் தெரிந்த ‘ப்ளான் பண்ணாம எதுவும் பண்ணக்கூடாது’ என்ற வசுவின் மெஸேஜ், வடிவேலுவின் குரலில் இவன் காதுகளில் ஒலித்தது.


Saturday, November 14, 2009

பா...... இளையராஜா

 கேட்டுப் பாருங்க.... இந்த நாள் இனிய நாள் ஆகும்.
ராஜாவின் புதிய பட இசை ‘பா’-ஹிந்தி

*சங்கத்தில் பாடாத கவிதையும் இருக்குது

http://www.in.com/music/album-paa-%2067429.html

im busy with enjoying songs... no time to explain....bye

Thursday, September 17, 2009

பொக்கிஷமான பொழுதுகள்…சேரனுக்கு நன்றி

   ரசனைகள் மாறுபடும். இதில் பதிவிடப்போவது என் ரசனையை மட்டுமே பிரதிபலிக்கும்.

     ந்தப் படத்தை ஏன் இத்தனை நாள் பார்க்கவில்லை என்ற கேள்வியை என்னுள் ஊட்டிய படம் ‘பொக்கிஷம்’.இலக்கிய வடிவில் ஒரு இயல்பான சினிமா என துணைத்தலைப்பைப் பார்த்ததும், இதர பதிவர்களின் தாறுமாறான விமர்சனங்களும், முன்பே கதை தெரிந்துவிட்டதும் நான் பொக்கிஷத்தைத் தேடுவதற்கான நாட்களைச் சற்று தள்ளிப்போட்டுவிட்டன.

   அதையும் மீறி தனிமையும்,நானும் மட்டும் ஓரிரு மதியப்பொழுதுகளிலும்,ஒரு இரவுப்பொழுதிலும் இதனை ரசித்தோம்.பார்த்து ரசிப்போர்களுக்கு மத்தியில் நான் ரசித்துப் பார்ப்பவன்.அதனால்தான் தெரிந்த கதை,கதை நாயகனாக சேரன்,கடிதக்காதல் இவையெல்லாம் புறந்தள்ளப்பட்டு ஒரு கலைப்பொக்கிஷமாகவே என் மனதில் நிற்கிறது படம்.

    காதலர்கள் பல்விளக்குவதற்குக்கூட கைப்பேசியின் அலைகளை அனுப்பும் இக்காலகட்டத்தில் ஆரம்பிக்கும் படம், தொடக்கத்திலேயே நவீனக்காதலர்களின் அவசரநிலையைச் சொல்லிவிடுகிறது.மகேஷாக வரும் ஆர்யன் ராஜேஸ் தற்செயலாக தனது அப்பா லெனினின்(சேரன்) பழைய பெட்டியைத் திறப்பதில் இன்னும் வாசம் மாறாமலிருக்கும் அவரது காதல் கடிதப்பூக்களைக் காண்கிறான்.தனது காதலி நதீராவுக்கும்(பத்மப்ரியா),அவருக்கும் இடையிலிருந்த காதலின் சாட்சிகளாய் இருந்த கடிதங்களையும்,நாட்குறிப்பேடுகளையும் பிரித்துப்படிக்கையில் விரிகிறது 1971 காலகட்டம்.

     கல்கத்தாவில் கப்பல்துறையில் பொறியாளர் லெனின், தன் தந்தையின் மருத்துவசிகிச்சைக்காக சென்னை வருகிறார். அதே மருத்துவமனையில் தாயின் நலம் நோக்கி நாகூரிலிருந்து வருபவர் நதீரா. தமிழ் இலக்கியம் பயிலும் நதீராவின் தமிழில் கவரப்பட்ட லெனின் நட்புக்குடை விரிக்க,அதில் பட்டும் படாமல் மனம் நுழைக்கிறார் நதீரா.பின் இருவரும் அவரவர் இடங்கள் செல்ல,நட்பை மட்டும் கடிதத்தில் வளர்க்க மறக்கவில்லை.நட்பு மெலிந்ததால், காதல் வலுத்ததா இல்லை நட்பு வலுத்ததால் காதல் பிறந்ததா எனப் பார்க்கவியலாமலேயே காதல் பூத்து விடுகிறது.ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு சென்றடையும் தகவல் வந்து சேரும் அரை நிமிடங்களுக்கே ஆளாய்ப் பறக்கிறோம். அப்படியிருக்கையில் ஒருவார காலம் கழித்தே பதில் கடிதம் வருமென்ற நிலையில் காதல் படும்பாடுதான் என்னவாயிருக்கும்…

     ழகுத்தமிழில் கடிதமனுப்புவதும், அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டு அதற்குக் குடை விரிப்பதும், தபால் காரர் சரியாக வேலை செய்கிறாரா என வேவு பார்ப்பதும் என காதலுக்கான எல்லாப் பைத்தியக்காரத் தனங்களையும் பதிவிட்டிருப்பது அழகு.பின்புலமாகக் கடிதவரிகள் வாசிக்கப்படும்போது, அக்கடிதத்தில் அஞ்சல் துறை முத்திரையிடுகையில் குரலில் தோன்றும் வலி ரசிக்க வைத்தது.அவ்வப்பொழுது அணைமீறாத அலையாய் வந்து செல்லும் குறும்பாடல்களும்,கதையைச் சொல்லும் பாடல்வரிகளும் சிறந்த தேர்வு.கல்கத்தாவின் அக்காலத்திய டிராம் வண்டிகள்,இறுக்கம் நுழையாத தெருக்கள், அதே போல 70களின் சென்னை,பேருந்துகள் என அழகாக வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குனர் வைரபாலன்.

Copy of vlcsnap-25692

   ளிப்பதிவு நல்லா இருக்குன்னு சொன்னா, எப்படி உனக்குத் தெரியும்..அதன் நுணுக்கமா,இல்லை வெளிச்ச அளவா எனத் தொழில்நுட்பத்தில் நுழைந்து கேட்ட என் மனசாட்சிக்குச் சொன்னேன்,பார்க்கும் காட்சிகளில் நடிகர்கள் இருப்பதை விட நான் இருந்தால் நல்ல ஒளிப்பதிவு என்று.நதீராவைப் பார்க்க வந்து,அவர் எங்கு போனார் எனத் தெரியாமல், தேவதையின் தடங்கள் ஒட்டிய மணல் துகளாவது சாட்சியாகாதா எனத் தேடித் திரியும் காட்சிகளில் அலைபாய்வது லெனின் மட்டுமல்ல,நாமும்தான்.அக்காட்சிகளில் வெறுமையை,காதலி தந்தையின் துரோகத்தைக் கண்களுக்குள் பாய்ச்சி விடுகிறது ஒளிப்பதிவு(ராஜேஷ் யாதவ்).

     நதீராவுடன் கடிதத்தில் காதலிக்க ஆரம்பித்த பிறகு, முதன் முறை தொலைபேசியில் தவிப்புடன் பேச,உடனேயே அணை திறந்த மடையென ‘உன்னைப் பார்க்கவேண்டும்’ என நதிரா கொட்டிவிடும் காட்சியும்,அவரைப் பார்க்கப் பேருந்தில் வருகிற போது,உடன் தொடரும்,”வரும் வழியெங்குமே உன் முகம் தோன்றுமே” பாடலும் நெகிழ்வின் கதவுகளை உடைத்துவிட்டது.

      தீராவைத் தேடிக் கிடைக்காத நாட்கள் லெனினின் நாட்குறிப்பேட்டில் விதவையாக இருக்கின்றன. அவளுக்கு அனுப்ப நினைத்த கடிதங்கள் முகவரியற்று முடங்கிக் கிடக்கின்றன.அதற்க்குள்ளிருக்கும் வரிகள் லெனினுக்கு மட்டுமே தெரியும்.நதீராவின் பார்வை படாததால் கல்லாய்ச் சமைந்த அகலிகையான எழுத்துக்களை அவர்வசம் சேர்க்க லெனினின் ம்கன் மகேஷ் முடிவெடுப்பது,லெனினின் மரணத்தோடு காதல் முடிந்துவிடவில்லை எனச் சொல்ல வைக்கிறது.

    தேடியலைந்து மலேஷியாவில் முதுமை தழுவிய, அப்பாவின் காதலியைக் கண்டு அறிமுகம் செய்து கொள்கையில், நதீராவின் அழுகையில் தெறித்த காதல் என்னையும் நனைத்துவிட்டது.தனக்கான கடிதங்களைக் காலம் தாமதமாகக் கொடுக்கிறது என்பதை அறிந்த நதீரா,அதே சமயம் தன் காத்திருப்பின் அவசியம் பூரணமானதையும் உணர்கிறாள்.

    அக்கால முஸ்லீம்களின் கடுமையான சட்டங்களுக்கிடையிலும் காதல் வைராக்கியத்தில் தனித்திருக்கும் நதீராவின் பெருமூச்சோடு படம் முடிந்தாலும், மூச்சின் வெப்பம் இன்னும் என்னைச் சுடுகிறது.இதில்தான் சேரனின் வெற்றி அடங்கியிருக்கிறது.சத்யம்,மாயாஜாலில் 50 நாள் ஓடுவது வெற்றியல்ல என்பது என் எண்ணம்.சேரன் வடித்த கவிதை எனக்குப் புரிந்தது. பிடிபட்டது.ரசிக்கவைத்தது.அழ வைத்தது.சினிமா விமர்சனம் பண்ணக்கூடாதென்ற என் நிலையை மாற்றி இப்படிப் பதிவிடவும் தூண்டியது.

       நிறைகள் இன்னும் நிறைய இருக்கின்றன. குறைகளும் குறைவாய் இருக்கின்றன …என் மனதுக்குள் பதிவிட்டு மகிழ்ந்து கொள்கிறேன்…

பானைச் சோறு இதோ….

இது பற்றிய இன்னுமொரு பதிவு இங்கே…

Thursday, September 10, 2009

பச்மரி-பயணத்தின் பிம்பங்கள்…(எ.தொ.எ.மு-2)

  யணத்தின் முதல் பகுதி இங்கே…(அப்படியொன்றும் விசேஷமாய் இருக்காது. நேரடியாக இங்கிருந்தே கூட வரலாம்.)

       15.08.09 காலையின் இளவெயில், எறும்பு போல் எங்கள் மேல் ஏறும் நேரத்தில் போபாலை முற்றிலுமாகக் கடந்துவிட்டிருந்தோம்.வாகனத்தின் கண்ணாடியை, வைப்பர்கள் அரைமணி நேரத்திற்கொருமுறை ஓரிரு நிமிடங்கள் மட்டும் துடைக்கும் வகையில் விட்டுவிட்டுத் தூறிக்கொண்டிருந்தது.சாலையோரம் சிறுசிறு ஓடைகள் திடீர்ப் பிரசன்னமாகியிருந்தன.கடந்த சிறிய ஊர்களின் வழியெங்கும் பள்ளிகளில் கொடியேற்றம் முடிந்து, சுதந்திர தினத்தைச் சின்னத்திரைகளில் பூரணமாகக் கொண்டாடக் கிளம்பியிருந்தனர் மாணவக்கண்மணிகள்.என் பள்ளிநாட்களில் சுதந்திர தின இனிப்பென்பது பிறைவடிவிலிருக்கும் ஆரஞ்சு மிட்டாயாகும். இப்போது காட்பரீஸூம்,எக்லேர்ஸூம் இடம்பிடித்திருக்கலாம்.இரவில் விழித்த களைப்பில் சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன்.விழிக்கையில் ஹொஷங்காபாத்தைக் கடந்து விரைந்து கொண்டிருந்தது வாகனம்.

       கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் பச்மரியை. இன்னும் முப்பத்திச் சொச்சம் கிமீட்டர்களில் எட்டிவிடலாம்.மலைப்பாதை ஆரம்பித்திருந்தது.நம்மூர் மலைப்பாதை போல் அவ்வளவாக ஏற்றமில்லை.இங்கு ஊர்களே ஏறக்குறைய சமதளமான(மாக்கப்பட்ட) மலைகளில்தான் அமைந்திருக்கின்றன என்பதால் மலையேற்றம் என்பதைச் சற்றே சாய்வுபாதை எனக்கொள்ளலாம். இங்கும் கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. கொடைக்கானல்,கொல்லி மலைகளில் இருப்பது போல் அப்படியொன்றும் அபாயகரமானவை அல்ல.வழியெங்கும் ஒருவித ஈரத்தன்மையை உணரமுடிந்தது.குளித்து முடித்துக் காற்றில் தலையுலர்த்தும் மங்கையின் கூந்தல் போல் மரங்கள்,இலைகள் அனைத்தும் ஈரம் பூசியிருந்தன.மலையேற்றத்திற்கே உரிய மனநிலை மேலும் மயங்கிப்போனது.

        ஒருவழியாக பதினோரு மணிக்கெல்லாம் பச்மரியை வந்தடைந்துவிட்டோம்.உள்நுழைவதற்கு ஒரு நுழைவுச்சீட்டு ஒன்றும் 25 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டோம்.இப்போது அனைவரின் ஒரே தேவை, தங்குவதற்கும்,புத்துணர்வு கொள்வதற்கும் ஒரு அறையாகும்.பயணத்திட்டம் போட்ட நண்பர்கள் முன்பே இணையத்தில் பார்த்து, ஹோட்டல் அறைகளை தொலைபேசியில் முன்பதிவு செய்ய நினைத்தது பணாலாகியிருந்தது.தொலைபேசி வழி முன்பதிவு கிடையாதாம். கூட்டம்,கூட்டமாய் வாகனங்கள் வந்து கொண்டிருந்தன.இரண்டு நாள் விடுப்பினைக் கழிக்க இது சிறந்த இடமென அவர்களின் வருகையே சொல்லியது.மேலும் முன்னேறிச் சென்றதில் சிறிய சாலைகளின் இருபுறமும் நெரிசலாய்க் கடைகள்,ஹோட்டல்கள் தட்டுப்பட்டன.விதவிதமான கைவேலைப்பாடுகள் கொண்ட பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் பெரும்பான்மையாக இருந்தன. அதில் வாங்கவந்த மங்கைகளின் கூட்டமே மலர்க்கண்காட்சியாயிருந்தன.இருந்தும் அறை தேடுவதே முதல் குறி என்பதால் என்னளவு கூட ரசிக்கமுடியாமல் இருந்தனர் நண்பர்கள். ஒருமணி நேரம் தேடியும் அறை கிடைக்கவில்லை.சீசன் டைம் போலும். மேலும் இங்கு வரவிரும்புபவர்கள் காலை எட்டு மணிக்குள் வந்தால் தங்க இடம் எளிதில் கிடைக்குமெனப் புரிந்தது.ஒரு அறையின் ஒரு நாள் வாடகை 1500க்கு மேல்.ஒருநாள் மட்டும் தங்கலாமென நினைத்துக் கேட்டால் இடம் தரமாட்டார்களாம்.இருநாள் தங்க வேண்டுமாம்.சுற்றுலா இடங்களில் இது ஒரு பெரிய தொல்லை.அவர்கள் வைத்ததுதான் சட்டம்.சரி அப்படியாவது செலவு செய்து தங்கலாமெனில்,அவர்கள் காட்டிய இடங்கள் நமது ஊரின் ஒதுக்குப்புறங்களில் இருக்கும் லாட்ஜூகளைவிட மோசம்.

      இயற்கை கொஞ்சும் இடங்கள்தானே.இங்கு ஏதாவது அருவி அல்லது ஓடைப்பக்கம் போய் காலைக்கடன்களை மட்டுமாவது முடித்துக்கொண்டால் போதுமென அனைவரின் முகங்களும் சொல்லியது.எங்களைக் கவனித்துக் கொண்டே கடந்த ஒரு சிறுவன் தேவதூதன் போல் திரும்பிவந்து ‘தங்க அறை சீப்பாக வேண்டுமா?’ எனக் கேட்டான்.போய்த்தான் பார்ப்போமே என அவனையும் வாகனத்தில் அள்ளிப் போட்டுக் கொண்டு நகர்ந்தோம்.சிறுசிறு சந்துகளுக்கிடையே வியாபாரம் சூடேற ஆரம்பித்த கடைகளைக் கடந்து சென்றோம்.வீடுகள் சூழ்ந்த ஒரு பகுதிக்குக் கூட்டிச்சென்றான்.ஒரு வீட்டின் முன் இறங்கச் செய்தான். அவன் அழைத்ததில் சொர்ணாக்கா போல் ஒரு பெண்மணி வந்து நாங்கள் தங்க வேண்டிய அறையைக் காட்டினாள். அது அறையல்ல. இன்னும் கட்டிமுடிக்கப்படாத சிறுவீடு.90 சத வேலைகள் முடிந்திருந்தது. கதவு,பூட்டு,சாவி கூட உண்டு. ஆனால் ஜன்னல் இருக்க வேண்டிய இடத்தில் ஜன்னலின் சதுரச் சட்டம் மட்டும் இருந்தது. கம்பிகள் இல்லை,கதவுகள் இல்லை.அந்த ஏரியாவில் எல்லோரும் நல்லவர்கள் போல என நினைத்துக்கொண்டே வீட்டைச் சுற்றி(?)ப் பார்த்தோம். முன்னால் ஒரு பெரிய அறை,உள்ளே ஒரு சிறிய அறை,சமையலறை,குளியலறை. சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு இது போதும் என்ற எண்ணம் தோன்றியது.தரையில் மெத்தைகள் போடப்பட்டன.ஒருநாள் வாடகை 1000 ரூபாய். சிக்கனமாய்க் கிடைத்த சின்னவீடு எங்களுக்கு அப்போது மாளிகை போல் தோன்றியது.

       டைம்டேபிள் போட்டுக் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வெளிவருவதற்குள் ஒரு மணிநேரம் ஓடியிருந்தது. முதலில் எங்கு செல்வது என முடிவெடுக்கவியலாமல் ஓட்டுநரைக் கேட்டோம்.அவர் அருகிலிருந்த டீக்கடையில் விசாரித்து ‘honeybee falls’ செல்லலாமென்றார்.சிறுநகரச் சந்தடிகளைக் கடந்த வாகனம், ஓரிரு மலையேற்றப் பாதைகளைக் கடந்து அருவி செல்லும் இடத்தை வந்தடைந்தது.

    பச்மரியில் இதுபோல மலையேற்றப் பாதைகளைக் கடப்பதற்காகவே ‘ஜிப்சி’ வாகனங்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன. ஒரு நாளுக்கு 2000 ரூபாய் வாங்கிவிடுகிறார்கள். இவைகளின் சிறப்பு ‘four wheel drive’ ஆகும். அதனால் இவை எளிதாக மலையேறிவிடும். ஆனால் பட்ஜெட்டில் போர்வை விழுந்துவிடும் என்பதால் தவேராவிலேயே கிளம்பினோம்.

மதியம் இரண்டரை மணிக்கு மேல் கிளம்பிய பயணம் சிறிது சீரான மலையேற்றப் பாதைக்குப் பின் அருவியின் அருகில் செல்லச் செல்ல சேறு நிரம்பிய பாதைக்கு மாற ஆரம்பித்திருந்தது.முன்னும்,பின்னும் ஜிப்சிக்களின் ஹாரன், கைச்சைகைகளை சில நேரம் கவனித்தும் ,சில சமயம் உதாசீனம் செய்தும் முன்னேறினோம். இதர வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் போகமுடியாது என்பதால், அதன்பின் சற்றுக் கீழிறங்கிச் செல்லும் பாதைக்கு ,தலைக்கு 20 ரூபாய் வாங்கும் ஜிப்சியில் பத்து நிமிடம் பயணித்தோம். அதற்கப்புறம் நடைவண்டி சர்வீஸ்தான். இன்னும் இரண்டு, மூன்று கி.மீட்டர் இறங்கிச் சென்றால்தான் அருவியின் அடிப்பகுதியை அடையமுடியும். இறக்கப் பாதையின் பெரும்பாலான இடங்களில் சிதிலமான கற்படிக்கட்டுகள் இருந்தன. மழை வேறு எங்களை நனைத்துக் கொண்டிருந்தது, சூழலின் ரம்மியத்தை மேலும் கூட்டியது.  Image0367(அருவிக்கு இறங்கும் வழியில் நாங்கள் பார்த்த இறங்கிய மக்கள்)
     அருவியை வந்தடைவதற்குள்ளேயே மழையின் தயவால் செல்லக் குளியல் முடிந்திருந்தது.அருவி 100-150 அடி உயரத்திலிருந்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த உடனேயே சில நண்பர்களுக்கு குளியோஃபோபியா வந்துவிட்டது. நானும் இன்னும் மூன்று பேர்களும் களத்தில் இறங்கிவிட்டோம்.நீர் சொட்டிய இடத்தில் ஆரம்பித்த எங்கள் குளியல் ,உற்சாகம் கூடக்கூட நீர் கொட்டிய இடத்திற்கு நகர்ந்துவிட்டது. அருவி ஒரு பெரிய குழந்தை.அதனுடன் சேரும் அனைவரும் சிறிய குழந்தைகள்தான். கூச்சமாவது ஒன்றாவது...ஆரவாரக்கூச்சல்கள் எவ்வளவு எழும்பியும் அருவியின் ஓசையில் அவை சாதித்தது மௌனமே.உடல்வலிக்கக் குளித்தாலும் மனம் சலிக்கவில்லை.எனது அருகில் குளித்த ஐந்து வயது சிறுவனின்(அப்பா உதவியோடு) ஆட்டம் ஆனந்தத்தாலா இல்லை பயத்தாலா எனக் கணிக்க முடியவில்லை. ஒரு ஓரத்தில் தேநீர்,குளிர்பானங்கள் விற்பனையும் ஜோராக இருந்தது.

Image0375 

DSC01917

    ருவிக்குளியல் முடித்து விட்டு அப்சரா விஹார் என்னும் இடத்திற்குச் சென்றோம்.இதுவும் நான்கைந்து கி.மீட்டர்கள் நடைப் பயிற்சிதான்.சென்ற இடத்தில் ஒரு அழுக்கு ஓடைதான் இருந்தது. இங்கென்ன விசேஷம் எனக் கேட்டதற்கு,’அஷோகா’ படத்தில் கரீனாகபூர் ஆட்டம் போட்ட ஓடை எனப் பதில் வந்தது. ரொம்ப விசேஷமான இடம்போல என நினைத்துக் கொண்டே திரும்ப நடையைக் கட்டினோம்.திரும்புவதற்குள் ஒரு நண்பன் ஓடைக்குள் சற்றுக் கால்நனைத்து ஜென்மசாபல்யம் அடைந்திருந்தான்.வழியில் பருகிய உப்பிட்ட எலுமிச்சைச் சாறு சற்று தெம்பைக் கொடுத்தது.

    அதற்குள் இருட்டத் தொடங்கியிருந்தது. அடுத்த கட்டமாக ‘பாண்டவா கேவ்ஸ்’ சென்றது பாதிக்குழு.என்னையும் சேர்த்த மீதிக்குழு வாகனத்தில் கால்நீட்டி ஓய்வெடுத்தது.வனவாசம் சென்றிருந்த பாண்டவர்கள், யார் கண்ணிலும் படாமல் ஒரு வருடம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இங்கு வந்து ஓய்வெடுத்தனராம்.அந்தக் காலத்து கொடநாடு எஸ்டேட் போலும்.  அலைந்த அசதியில் கனவுகளில்லாமல் உறங்கினோம்.

     டுத்த நாள் பயணத் திட்டம் ‘தூப்கார்’ செல்வது மட்டுமேயாகும்.இதற்கும் நாங்கள் ஜிப்ஸியை நாடாமல் தவேராவிலேயே கிளம்பினோம்.வழியில் தென்பட்ட ஒரு வழிகாட்டியையும் உள்ளிழுத்துக் கொண்டு முன்னேறியது வாகனம்.தூப்கார் செல்லும் வழி நெடுகக் கொண்டை ஊசி வளைவுகள் தாராளமாக இருந்தன. ஒருபுறம் உயர் மரங்களும், மறுபுறம் பள்ளத்தாக்குகளுமான பாதை முழுவதும் ‘சாத்பூரா தேசியப் பூங்காவின்’ கட்டுப்பாட்டில் இருக்கிறது.உயரே செல்லச்செல்ல உற்சாகமடைந்த நண்பர்கள் சத்தமிட எத்தனிக்கையில், ’புலி பயம்’ காட்டி எச்சரித்து விட்டார் வழிகாட்டி.மரங்களின் பசுமையனைத்தும் வெண்மை தடவி இருந்தன.பனியா,மேகமா எனப் பிரித்தறியவியலாத அளவில் ஒரே புகை மண்டலம்தான்.பதினோரு மணி ஆகிறது என்றே தெரியாத ஒரு நிலை. முகப்பு விளக்குகளின் வழிகாட்டலில் வாகனம் கூட சற்றுக் கிறக்கமாகவே மலையேறியது. வண்டியின் சிறிய ஸ்பீக்கர் வாய்களில் வெளிப்பட்ட ‘இதழை வருடும் பனியின் காற்று’ வரிகளும் மேலும் மயக்கத்தைக் கூட்டின.வழியில் இறங்கி புகைப்படம் எடுக்கும் வைபவமும் நடந்தேறியது.வலியத் திணித்த புன்னகைகளில் இயற்கையோடு எங்களையும் பதிவிட்டுக் கொண்டோம் கேமராக்களில்.

Copy (2) of Image0398

Copy of Image0415

DSC02015

DSC02108

    ஒருமணி நேரத்திற்குள்ளான பயணத்தில் ‘தூப்கார்’ வந்தடைந்துவிட்டோம். பயணம் அதற்குள் முடிந்தது சிறிது வருத்தமே.இலக்கை விட முக்கியமானவை பயணங்கள்தானே.இருந்தும் எங்களை ஏமாற்றவில்லை தூப்கார். உச்சியை அடைந்துவிட்டோம். ஐந்தடி தூரத்திற்குள் இருந்தும் ஆள் தேடுமளவுக்கு கண்களை மறைத்துக் கொண்டிருந்தது வெண்மேகத் துகள்கள்.நடக்கிறோமா இல்லை மிதக்கிறோமா எனக்கூட ஒரு பிரமை ஏற்பட்டது எனக்கு.கொஞ்சம் கையை விரித்தால் ஏதேனும் தேவ மங்கைகள் தட்டுப்படுவார்கள் எனக்கூட முயற்சித்தேன்.கை கூடவில்லை.பிரிட்டிஷ் கால சர்ச் போல ஒரு கட்டிடம் தென்பட்டது.அது சாத்பூரா தேசியப் பூங்காவிற்குச் சொந்தமான அருங்காட்சியகம் என அருகில் சென்று கண்கள் விரித்துப் பார்த்தபோது தெரிந்தது. அன்று ஞாயிறு என்பதால் பூட்டியிருந்ததா எனத் தெரியவில்லை.ஒரு மணி நேரம் காலாற நடை பயின்றோம்.புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அனைத்திலும் மௌனசாட்சியாய் புகை படர்ந்திருந்தது.எனக்கு மட்டும் தேநீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது. கிடைக்கவில்லை.மனதிற்குப் பிடித்த பாடலை சற்றுச் சத்தமாக முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்.இயற்கையின் எழில் அனைவரையும் சாந்தப்படுத்தி விடும் போல. என்னைக் கடந்த ஒரு பதின்மப் பெண் ‘வெரி நைஸ்’ எனப் பாராட்டிவிட்டுப் போனாள்.தமிழ்ப்பாடல் வரிகளின் தரம் தெரிந்திருந்தால் இதே பெண் எதிர்மறையாகச் செய்திருப்பாள் என நினைத்துக் கொண்டு என் ஸ்பீக்கரை ம்யூட் செய்தேன்.

Image0421

DSC02067

(எழுவர் குழு ‘தூப்கார்’-இல் இயற்கையோடு இயையும் காட்சி)

Image0424

 

    சனையின் வீட்டுக்கான பாதைகள் சற்றுக் குழப்பமானவை. போகும் வழி சிலருக்கு எளிதிலும், சிலருக்கு அரிதாகவும் புலப்படும்.ஆனால் வெளியேறும் வழி காண்பதுதான் அனைவருக்குமே கடினம்.அப்படியானதொரு கடின சூழ்நிலை கொண்டு தூப்கார்-ஐ விட்டுக் கிளம்பினோம்.மலையேறுகையில் ததும்பிய உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தது.நேரமின்மையால் இன்னும் நிறைய இடங்களுக்குப் போக முடியாமற்போனது.

       மதியம் பச்மரியை விட்டு வெளியேறினோம்.எங்களோடு சேர்ந்து வந்த மழையானது பச்மரியின் எல்லையோடே தங்கிவிட்டது.இனிய நினைவுகளோடும், ஒட்டியிருந்த மழைத்துளிகளோடும் இந்தோரை நோக்கி வர ஆரம்பித்தோம்.

 

Saturday, September 5, 2009

லைலாவுக்கு என்னாச்சு…

Copy of scan0001

   இப்படத்திற்கு வசனம் தேவையில்லை….

பென்சில்,ரப்பர்,பேப்பர்,ஆனந்தவிகடன் அட்டைப்படம்…

Friday, September 4, 2009

சாயல்களின் சாயல்

சாயல்களின் சாயல்

மூக்கு என்னை மாதிரி

கண்ணும், முடியும் அவள் வீட்டு ஜாடை

சுட்டித்தனம் அப்படியே அப்பாதான்

நினைத்து ரசித்ததை

துள்ளிவந்து மடியமர்ந்து

“என்னை மாதிரியே இன்னொரு

பாப்பாப்பா…” என

கண்ணாடியைக் காட்டி

கலைக்கிறாள்…

மகளின் அற்புத விளக்கு…

என் மூக்குக்கண்ணாடியை

முகம்மறைக்கும் அளவில்

மாட்டியபடி

“நீங்க பூதம் மாதிரி

இருக்கீங்க அப்பா”

என்று வி(ப)யந்தவளின்

விழிகளில் தெரிந்தது

அற்புத விளக்கு…

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்

எழுதி முடிக்கும்முன்பே

நகர்ந்துவிட்டிருந்தது

நதியும் பெயரும்

விரல்களில் உன்

பெயரெச்சம்…

Thursday, September 3, 2009

ரசித்த கவிதை+எனது ஓவியம்

    Copy of scan0002

           ஆனந்தவிகடன் பவளவிழாக் கொண்டாட்ட நேரத்தில் வெளியாகிப் பரிசு பெற்ற கவிதை இது.கவிஞர் வித்யாஷங்கர் எழுதியது. அவர் வலைப்பூவும் வைத்திருக்கிறார். அதன் சுட்டி இங்கே.படித்ததும் பிடித்துப் போனது.கவிதையின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகமாக்கியது, அதற்கு வரைந்திருந்த ஓவியமாகும்(யார் வரைந்தது தெரியவில்லை). ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் ரத்தச்சிவப்பு குங்குமமும்,சற்றுக் கீழே பார்த்தால் முன்னதன் கோபத்தைக் குளிர்பனியாக்கும் கண்களுமாக பார்த்ததும் கைகளைப் பரபரக்க வைத்தது.கையில் இருந்தது கறுப்புப் பேனா மட்டும்தான். வரைந்து தள்ளிவிட்டேன்.மூலப் படத்தின் அம்சமான அழகான கண்கள், எனது ஓவியத்தில் சரியாக வரவில்லை. ஆனால் வந்தவரையில் எனக்குப் பிடித்திருந்தது. பதிவிடுவதற்காக ஸ்கேன் செய்த பின் கம்ப்யூட்டர் பெயிண்ட் ப்ரஷில் குங்குமத்திற்கு மட்டும் சிவப்பு வண்ணம் தீட்டினேன்.

Monday, August 31, 2009

எங்கு தொடங்கி…எங்கு முடிக்க….பாகம்-1

       சுதந்திர தினம் சனிக்கிழமை வந்ததில் ஆனந்தமே.தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை என்பது, வாரத்திற்கு ஆறு நாளும் ஆணி பிடுங்குபவர்களுக்கு அல்வா கிண்டி வாயிலூட்டாத குறையாகும்.எப்போதும் போல ஞாயிற்றுக்கிழமை குண்டுச்சட்டிக்குள் பிரியாணி பண்ணி,உண்டுறங்கிக் கழிப்பதை விட்டு, இம்முறை வெளியே செல்லலாமென இந்தோர் தமிழ்ச்சங்கம் முடிவெடுத்தது. தலைவர் என்னைக் கேட்காமலேயே தவேராவுக்கு முன்பணமும்,பச்மரி செல்ல பக்கா ப்ளானுமாக இருந்தனர் நண்பர்கள். எனது பங்கு என்பது வெள்ளிக்கிழமை இரவு ஒரு மணிக்கு அறைச்சுதந்திரத்துக்கு முழுக்குப் போட்டு, இரு நாள்கள் வெளியுலகச்சிறைவாசம் செய்யக் கிளம்பவேண்டியது மட்டுமேயாகும்.

     பச்மரி என்பது ஊட்டி,கொடைக்கானல் போலொரு கோடை வாசஸ்தலம்.அது இந்தோரிலிருந்து 400 கி.மீ தொலைவில் போபாலைத் தாண்டி இருக்கிறது. வெளியில் அவ்வளவாகச் சுற்றுவதை விரும்பாத நான் இம்முறை ஏனோ முடிவெடுத்தேன். பின்புலச்சிக்கல்களிடமிருந்து ஒரு தற்காலிகத் தப்புதல்தான்.  ஏழு பேர் வருவதாகச் சொன்ன பிளான், புதனிரவே ஐவராகிப் பின் வியாழனிரவு நால்வராக வலுவிழந்து இருந்தது. ஆட்கள் குறைந்தால், செலவுப் பணம் அதிகமாகிவிடும் என்ற ஏழாம் வகுப்பில் படித்த நேர்மாறு, எதிர்மாறு விகிதக் கணக்கு பயமுறுத்தினாலும், தாராளமான இடவசதியோடு பயணிக்கலாமெனத் தேற்றிக் கொண்டோம் மனதை. ஆனால் கடைசி நேரத்தில், மற்ற மூவர் திடீர்ப் பிரசன்னமாகி இடைஞ்சலையும், இதர செலவினங்களையும் பங்கிட்டுக் கொண்டனர்.

    ரு வழியாகப் பயணம் திட்டமிட்டபடி, வெள்ளி இரவு (14.08.09) ஒன்றரை மணிக்குத் தொடங்கியது. முன்னிருக்கையில் ஓட்டுநருடன் நான் நவீனக் கிளீனராக அவதாரமெடுத்தேன். இதர நண்பர்கள் கும்மாளத்துடன், ஸ்பீக்கரில் அலறிய ‘ஓ ஈசாவுடன்’ சேர்ந்திசை செய்து கொண்டிருந்தனர்.பத்துப் பதினைந்து நிமிடங்களில் இந்தோரைக் கடந்து, புறவழிச்சாலையில் புழுதியுடன் கலக்க ஆரம்பித்திருந்தது வாகனம்.ஆங்காங்கே ரோட்டாரத் தாபாக்கள், போலீஸ் சௌக்கிகள்,பள்ளிக் கட்டடங்கள் அனைத்தும் சுதந்திர நாளை வண்ணச் சீரியல் பல்புகளின் கண்சிமிட்டலில் வரவேற்றுக் கொண்டிருந்தன.ரோட்டோரம் மட்டும் பார்த்துக் கொண்டிராமல், ஓட்டுநர் தூங்கிவிடாமலிருக்க அவ்வப்போது என் பார்வையை வலப்பக்கமும் செலுத்திக் கொண்டிருந்தேன்.   

    ஒரு மணி நேரத்திற்கொரு முறை, ஓட்டுநரின் கைகள் ஸ்டியரிங்கிலிந்து முழுதும் விலகி பான் பராக் பாக்கெட்டின் தலையைத் திருகி, போதைத் தூள்களை வாய்க்குள் செலுத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது கறுத்த தார்ச்சாலையில் தனது எச்சிலால் சிவப்புப் பெயிண்ட் அடிக்கத் தவறவில்லை ஓட்டுநர். அதிகாலை நெருங்க நெருங்க பின்னாடியிருந்த கொண்டாட்ட ஒலியின் சுதி குறைந்து, போகப்போக குறட்டையொலியின் சுதி கூடிக் கொண்டிருந்தது.போபால் செல்லும் வழி நெடுக ‘ஸாவ்தான்’ எனத் தொடங்கும் ‘டேக் டைவர்ஸன்’ களின் ஆதிக்கம்தான். ஒரு கட்டத்தில் மறுபடியும் இந்தோர் வந்துவிடுமோ எனப் பயப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டேன்.இரவின் கறுமையின் மேல் வெள்ளை பூசியபின் வரும் ஒருவித சாம்பல் நிறத்தில் தெரிந்தது வானம். செல்பேசியின் முகத்தினோரம் 05:30 என மின்னிக் கொண்டிருந்தது.போபாலை நெருங்கி விட்டிருந்தோம். டெல்லியிலிருந்து, சென்னை செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸின் வேகத்தைத் தடுக்க வேண்டாமென முடிவு செய்து வாகனத்தை நிறுத்தியிருந்தோம்.அதற்குமுன் ரெயில்வே கிராஸ்ஸிங்க் கேட்டும் அடைக்கப் பட்டிருந்தது.ரெயில் கடந்து செல்கையில் உள்ளே எழும்பிய தமிழ்க் குரல்கள் என் காதுகளை வந்தடையவில்லை.ஊருக்குச் செல்லும் வாகனத்தைக் கண்டதும், அதற்கு முன் என் நினைவுகள் ஊருக்குச் சென்றிருந்தன. பிடித்திழுத்து வைப்பதற்குள் போதும்,போதுமென்றாகிவிட்டது.

Image0356(டீக்கடையின் பாய்லர் ‘டர்போ சார்ஜர்’ தத்துவமோ..?)

     ’ச்சாய்’ கடையில் ஆளுக்கொரு ச்சாய் வாங்கிக் கொண்டு, கண்ணாடி தம்ளரின் சூட்டில் குளிர் காய்ந்து கொண்டிருந்தோம்.எங்கு தேனீர் குடித்தாலும், தமிழகக் கிராமத்துத் தேனீரின் சுவையைக் காணமுடிவதில்லை.எல்லாமே பாக்கெட் பாலில் போட்ட ஒருவிதச் செயற்கைச் சுவையை மட்டுமே கொண்டிருக்கின்றன. என்ன செய்ய, சில சமயங்களில் வாய்க்கும் ஏதாவது தண்ணி காட்ட வேண்டியிருக்கிறதே…?!எங்கிருந்தோ வந்த ஒரு (ஆன்மீகச்)சுற்றுலாப் பேருந்திலிருந்து இறங்கிய ஒரு சிறுமி வாந்தியெடுக்க, சற்றுக் கூச்சத்தோடு அவளின் 25 வயது அம்மா அவளின் தலையைக் குனியவைத்து உதவிக் கொண்டிருந்தாள்.அப்பாவோ இதற்குமெனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பொட்டலத்திலிருந்து துகள்களைக் கைகளில் கொட்டி, பக்குவமாக ஊதிவிட்டு வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தான்.இதற்குள் ரெயில்வே கேட் திறந்து கொள்ள, புகைவண்டிப்பாதையைத் ‘தடதட’வெனக் கடந்தது எங்கள் வாகனம்.

      போபாலைக் கடக்கையில் நன்றாக விடிந்து விட்டிருந்தது.சாலை ஓரங்களில் நல்ல பசுமையைக் காணமுடிந்தது. ஆட்களையும், வண்ணங்களையும் தவிர்த்துப் பார்க்கையில்.எல்லாக் கிராமங்களுமே ஒரே விதமாகத்தான் இருக்கின்றன. தென்கோயில்களுக்கும், இங்கும் வித்தியாசம் என்பது முழுக்க அடிக்கப் பட்ட காவி வண்ணமும், உச்சியில் பறக்கும் காவிக் கொடியும்தான்.காலைகள் அழுக்கு ஜிப்பா ஆசாமிகளாலும், விதவிதமான கைவேலைப் பாடுகள் கொண்ட சேலைகள் அணிந்த எப்போதும் ஒருவித சோகத்தைத் தேக்கி வைத்த முகங்களுடைய பெண்களாலும் நிரம்பத் தொடங்கிக்கொண்டிருந்தன. சாலையோரச் செம்மண் முந்திய நாளின் மழையளவைத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருந்தது. யூனிஃபார்ம் அணிந்த சிறுசிறு மலர்கள், தேசியக் கொடியுடன் சுதந்திரம் வாங்கியதற்கு அடையாளமாகப் பள்ளிகளில் மிட்டாய் வாங்கச் சென்று கொண்டிருந்தனர்.

DSC01804 DSC01805

  வழியில் செம்மண் நிறத்தில் ஓடிய நதி நர்மதாவின் தங்கையாக இருக்கலாமென்பது எங்கள் எண்ணம். ஓட்டுநரின் கருத்தறிய எண்ணினால், என் முகம் அவரது பான்பராக் எச்சிலில் மேலும் சிவந்துவிடுமென்பதால் கேட்கவில்லை.பருவ காலங்களில் செழிப்பாக இருக்க வேண்டியவள், இன்னும் மெலிந்துதான் காணப் படுகிறாள் அகல,ஆழங்களில்.மழையில் கழுவப் பட்ட நிலங்கள் மற்றும் மலைகள் அடர் நிறங்களில் கண்ணைப் பறித்தன.

-தொடரும்…

குறைகள் கூறுங்கள். திருத்திக் கொள்ள முயல்கிறேன்…

Sunday, August 23, 2009

நினைத்தாலே இனிக்கும்….-என் பார்வையில்…

        னது விருப்ப இசை அமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். ’சுக்ரன்’,’டிஷ்யூம்’,’காதலில் விழுந்தேன்’ பாடல்களில் பெரும்பான்மை எனக்குப் பிடித்திருந்தது.இவரால் நல்ல மென்மெட்டுக்களைத் தரமுடியும்.’இருவர் மட்டும்’ என ஒரு (பப்)படம் வந்தது. அதில் கூட  இரண்டு அழகான மென்பாடல்கள்(‘ரோஜா மலரின்’,’அழகா அழகா’ ) தந்திருப்பார். ஆனாலும் இவர் ‘நாக்க மூக்கி’யோ, ஆத்திச்சூடியோதான் பிரபலமாகிறார்.

      மலையாளத்தில் ஓரளவுக்கு வல்லிய ஹிட்டடித்த ‘க்ளாஸ்மேட்ஸ்’ இன் தமிழ் வடிவமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் மென் மற்றும் குத்துப்பாடல்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார். மூலப்படத்தின் ஹிட் பாடலான ‘எண்ட கல்பிலே’ யின் தமிழ் வடிவம் எது எனப் பிடிபடவில்லை எனக்கு. இருப்பினும் தனித்தன்மையோடு பாடல்களில், வரிகள் சுதந்திரமாகச் சுவாசிக்கும் வகையில் இசையின் கதவுகளை அகலத் திறந்து வைத்திருக்கிறார்.

Ninaithale Inikkum

       ழைநேரத் தேனீராய் ருசிக்கிறது ’அழகாய்ப் பூக்குதே’ பாடல்.பியானோவில் மிதமாக ஆரம்பிக்கும்போதே புரிந்து விடுகிறது பாடலின் போக்கு. இதமான காதலிசை.ஜானகி ஐயர்,பிரசன்னா குரல்களின் குழைவும்,இடையிசைகளில் ததும்பாமல் அளவாய் நிரம்பிச்செல்லும் வாத்தியங்களும் சேர்ந்து அழகாய்ப் பூத்த பாடல்.முதல் கேட்பிலேயே பிடித்துப் போய்,எனது விருப்பப்பட்டியலில்(பிளே லிஸ்ட்டில்) எளிதாக இடம் பிடித்து விட்டது.பாடல் வரிகளும் இளமையை இதமாகச் சொல்லிப்போகின்றது. கலைக்குமாருக்கு வாழ்த்துக்கள்.ஆண்குரல் அள்ளிச்செல்கிறது.

”அழகாய் பூக்குதே…சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே”

  ‘நண்பனைப் பார்த்த தேதி மட்டும்’ நட்பைப்பற்றி (அண்ணாமலை-பாடல்) மேற்கத்திய சத்தங்களுக்கு இடையில் சொல்லும் பாடல்.(ஆரம்ப ஹம்மிங்கைக் கேட்டுவிட்டு எங்கே ‘கண்ணுக்கு மையழகு’ என வார்த்தைகள் வந்து விடுமோ எனப் பயந்துவிட்டேன். .)கேட்கப் பிடிக்கிறது. கச்சித இசைக்கோர்வை.பென்னி தயாளின் குரலும் இதம்.

’மழை தூங்கும் வெயில் நேரம் அதுபோலே மனது…

மனம் போலே தடுமாறும் வயது…’ பளிச் வரிகள்.

   ’அல்லா’,’பியா பியா’ இரண்டு பாடல்களும் அக்மார்க் விஜய் ஆண்டனி ரகக் குத்துக்கள். முன்னதில் பதமாகக்குத்தியவர், பின்னதில் காதைப் பதமாக்கக் குத்தியிருக்கிறார்.’ஆத்திச்சூடியை’ நினைவிற்குக் கொண்டு வரும் பாடலிது.இம்மாதிரிப் பாடல்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கும் வரிகள்.ஆராயாமல் அனுபவிக்கலாம்.பாடலை எழுதிய அண்ணாமலை இன்னொரு பேரரசாக உருவாகக்கூடிய அபாய அறிகுறிகள் தெரிகின்றன.குத்தியவர் மட்டுமல்ல கத்தியவரும் விஜய் ஆண்டனிதான்.

’செக்ஸி லேடி’ கேட்டவுடன் பிடிக்க வைக்கும் அடிப்பாடல்.(பீட் ஸாங்..?).’கைய்ஸ் வேக் அப்’ என்ற குரலோடு தொடங்கும் பாடல் உருமி ஓசைகளோடு சொக்க வைக்கிறது.பிரியனின் வரிகளில் போதையேறுகிறது.ரம்யா குழுவினரின் குரல்கள் மேலும் உடுக்கடிக்கின்றன.மெதுவாகவும் நகராமல், வேகமாகவும் ஓடாமல் நின்று அடித்து ஆடியிருக்கிறார் பாடல் முழுவதும்.ரசித்துக்கேட்கலாம்.

kavya2(மூலப்படமான ‘க்ளாஸ்மேட்ஸ்’ நாயகி. இவங்களுக்கும், இந்தப் பதிவு(வரு)க்கும் இதைத் தவிர வேறு எதுவும் சம்பந்தமில்லை)

     வை தவிர பட ஓட்டத்திற்குதவும் வகையில் இரு சிறு பாடல்கள் உள்ளன.

‘கல்லூரி’ பாடல் பார்க்கையில் பிடித்துப் போகலாம்.

’நாட்கள் நகர்ந்து’-   ஆர்ப்பாட்டமில்லாமல் ஆரம்பமாகும் இசைக்கோர்வையினூடே வந்தது தெரியாமல், இதமாக இசையோடு கலந்துவிடுகிறது கௌஷிக்கின் குரல்.நான்குவரிப்பாடல்தான். நீட்டியிருந்தால் பிடிக்காமல் போயிருக்குமோ என்னவோ…நகரா நகரப் பேருந்தில் வேர்வையால் நசநசத்துப்போயிருக்கையில், ஓட்டுநர் தயவால் ஓரிரு அடிகள் பேருந்து நகர்கையில் கொஞ்சிவிட்டுப் போகும் காற்றின் சுகம் தருகிற பாடலிது.

’நினைத்தாலே இனிக்கும்’-கேட்டு ரசிக்கலாம்.

Friday, July 17, 2009

பழைய சரக்கு…

   இன்னும் கொஞ்ச காலத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயலாது. சில,பல சுய காரணங்களின் அணிவகுப்பு இதற்குப் பின்புலம் உள்ளது.
மற்றபடி சரக்கும் தீர்ந்துவிட்டது போல் உணர்வு…
எப்பவோ ட்ராஃப்டல இருந்ததை மானிட்டர் தூசு தட்டி இப்போ பதிவிட்டிருக்கேன். இந்த கவிதை(..?)களெல்லாம் ஹைக்கூன்னு சொன்னா ரவி சார் அடிக்க வந்துடுவாரு… அதனால தலைப்பு எதுவும் கொடுக்கலை. படிங்க புரியும்.. புரியலைன்னா விட்டுருங்க… இன்னும் சுகம்….மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் உத்தரவு வாங்கிக்கிறேன்….
*****
காற்றில்லாப் பொழுது
இலையை அசைத்தது
நிழல்...
******
மின்தடை நேரம்
புத்தகம் வாசிக்கும்
இருள்...
******

பென்சில் துருவலில்
விரிந்தது ஓவியம்
மரத்தூள்...
******
யானை புலி சிங்கம்
ஒருசேர அழிந்தது
வெள்ளையடிக்கையில்...
******

Sunday, July 5, 2009

32 கேள்விகளும், அதற்கு மேற்பட்ட பதில்களும்…

    இந்தக் கேள்வி-பதில் தொடருக்கு அழைத்த நண்பர் இரா.வசந்தகுமாருக்கு நன்றி. அவரை அழைத்த ‘யோசிப்பவரு’க்கும் நன்றி.
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
   ’தமிழ்ப்பறவை’- வலைப்பூ உருவாக்க முயன்ற போதே ஒரு பிடிவாதம்.. பெயரில் கட்டாயம் ‘தமிழ்’ இருக்க வேண்டுமென. ஒரு நிமிடத்துக்கும் குறைவான யோசனையில் தமிழுடன் சிறகாய் ஒட்டிக்கொண்டது பறவை. முன்பே வலைப்பூவின் தலைப்பு ‘வானம் வசப்படும்’ எனத்தீர்மானித்துவிட்டபடியால், பறவை என்னும் பெயர் இலக்கை அடையச் சரியானதாக இருக்குமென வைத்துக்கொண்டேன்.
  பிடிக்காமல் வைத்துக்கொள்ளமுடியுமா? ஆனால் இது பலருக்கும் பிடித்திருக்கிறது எனப் பின்னால் அறிந்ததில் ஒரு பெருமிதம்.

பரணி ராஜன்’: இது இயற்பெயர். காரணம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தேன்.அப்பொழுது ‘பரணி தரன்’ என்ற பெயர்தான் பொதுவாக வைப்பார்கள். என் தாத்தா, இவன் ராஜா மாதிரி (மாதிரிதான்...ராஜா இல்லை) இருக்க வேண்டுமென நினைத்து ‘பரணிராஜன்’ எனச்சூட்டிவிட்ட பெயர், இங்கு இந்திக்காரர்களின் வாயில் படாதபாடு படுகிறது.
என் பெயரின் ஆங்கில வடிவம் இன்னும் சிக்கலானது. அதைப் பிறிதொரு பதிவில் விளக்குகிறேன்.

  இப்பெயரும் எனக்குப் பிடிக்கும்.இந்தப் பெயர் ‘சுரேஷ்’,ரமேஷ்,சங்கர் போல்  ,வேறுபடுத்திக்காட்ட ஒன்றிரண்டு இனிஷியல்கள் வைப்பதைத் தவிர்க்கவைத்த சிக்கனமான பெயர்.
எப்பொழுது பெயரைப் பற்றிச் சிந்தித்தாலும் ,ஆறாம் வகுப்பு துணைப்பாடநூலில் படித்த ‘பெயரில் என்ன இருக்கிறது’ கதை நினைவோரம் நின்று விட்டுப் போகிறது.


2) கடைசியா அழுதது எப்போது?
  ஏதோ ஒரு தமிழ்ப்படம் பார்க்கும்போது, ஞாபகமில்லை இப்போது.
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
  நான் 5ந்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து ,பிடிக்க வைக்க எவ்வளவு முயன்றும், என் கையெழுத்து எனக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நன்றாக எழுதும் பலரின் கையெழுத்தைப் போல எழுத முயன்று வெற்றி பெற்றாலும், அது தற்காலிகமே.பின் ‘பழைய குருடி கதவைத் திறடி’ கதைதான்.(இதுக்கு அர்த்தம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்...)
4) பிடித்த மதிய உணவு?
   பிரியாணி... இதில் பல வகை இருந்தாலும், மதுரைப் பக்கம் ‘முனியாண்டி விலாஸ்’களில் எண்ணெய் மிதக்கத் தயாராகும் பிரியாணி மற்றும் சால்னா வகை பிடிக்கும். இது தினசரி சாத்தியமில்லை என்பதால் முட்டையுடன் கூடிய ரசம் சாதம் மிகப் பிடிக்கும்.
5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
ஒரு வினாடி கூட யோசிக்காமல் வைத்துக்கொள்வேன்.பரணியை யாருக்காவது பிடிக்காமல் போகுமா என்ன? (மேனேஜர்களைத் தவிர)
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
  கடல்,அருவிக்குளியல் அதிகம் அனுபவப் பட்டதில்லை.வியர்வை சிந்திய தேகத்துடன் அறையில் குளிர்நீராடப் பிடிக்கும்.
கிராமத்து வயல்வெளியில் பம்ப்செட்டில் குளிக்க இன்னும் ஆசை.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
   நாம் பேசினால் கேட்பாரா என்று... இல்லை அவர் பேசினால் நம்மால் கேட்க முடியுமா என்று...
8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்த விஷயம்: எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம்: சோம்பல்...
9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
  கேள்வி கேட்ட புண்ணியவான் குடும்பஸ்தன் போல.. அதான் எங்கள மாதிரி பேச்சுலர்ஸ்க்கு ஆப்சன் வைக்கலை.,.
வருங்கால துணைவிகிட்டன்னு கேள்வியை மாத்திக்கிட்டு பதில் சொல்றேன்...
  பிடிக்கப் போகும் விஷயம்: புன்னகை
  பிடிக்கப் போகாத விஷயம்: நச்சரிப்பு
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
     என் குடும்பத்தார்...
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
   நீலம்+வெள்ளை (என்ன நிற ஆடைன்னு கேள்வி தெளிவா இருக்கப்போ ஏன் எல்லோரும், அவங்க போட்டிருக்கிற,போட நினைக்கிற உடையைப் பத்தில்லாம் கலர்,கலரா ரீல் விடுறாங்கன்னு தெரியலையே..?!. இருந்தும் எல்லைமீறல்களில் இருக்கும் சுகமே அலாதிதான்)
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
  பார்ப்பது: எல்.ஜி. மானிட்டர்..(யோவ் பதிவெழுதுறப்போ படம் பார்த்துட்டா போட முடியும். எல்லாரும் அவனவன் மானிட்டரைத்தான் பார்ப்பான்)
கேட்பது:
   ‘ஊரடங்கும் சாமத்தில்’ பாடலில் ஆரம்பித்து,’ராசாவே உன்னை விட மாட்டேன் நான்’ எனத் தொடர்ந்து கொண்டிருக்கிறது,அநேகமாக பதிவு முடிக்கும் வேளையில் ‘தென்றல் வந்து என்னைத் தொட’ ஆரம்பித்திருக்கலாம்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்பு
14) பிடித்த மணம்?
மல்லிகை
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?
மகேஷ்:  ‘ரசிகன்’ என்னும் வலைப்பூவில் சொல்ல வேண்டிய விஷயத்தைச் சுருக்கமாக ,அழகாகச் சொல்லி வருகிறார்.எனது கல்லூரி ஜூனியர்.தம்பி.மற்றபடி எனக்கும் ரசிகன்.
கபீரன்பன்: இவரின் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும். எனது ஓவியங்களைப் பதிவு செய்யத் தூண்டிய பதிவுகளில் இவருடையதும் ஒன்றெனலாம்.இவருக்கும் நான் ஏகலைவன் தான்.
தர்ஷினி: ஒரு நாளைக்கு இவருக்கு 48 மணி நேரம்ன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவ்வளவு பொறுமையான, நேரமெடுக்கும் கை வினைப் பொருள்களைச் செய்து வருகிறார். இவரின் வலைப்பூவில் இதுபோன்ற தொடர்கள் எழுதமாட்டார் எனத் தெரியும். இருந்து இன்விடேஷனை நீட்டிவிட்டேன்.எப்படியாவது நிறைவேற்றிவிடுவாரென எண்ணுகிறேன்.
கயல்விழிநடனம்: இவரின் வலைப்பதிவுகள் தரமாக இருக்குமென்பதற்கு ஒரே சாட்சி இவர் வலைப்பூவின் தலைப்புதான்.சிறுசிறு விஷயத்தையும் நகைச்சுவையோடு சுவையாகச் சொல்கிறார்.பொதுவாக மகளிர் பதிவுகளுக்குச் செல்கையில் எடுத்துச் செல்ல வேண்டிய கர்ச்சீஃபுக்கு இவர் பதிவில் வேலை இருக்காது.
16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
இரா.வசந்தகுமார்---காலப்பயணியின் கதை ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. இவரின் 95 சதவீதப் பதிவுகள் பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.ஒரு விஷயத்தை எப்படி அழகாகப் பதிவில் பண்ணவேண்டுமென்பதற்கு இவர் எனக்கு நிகழ்த்திய லைவ் டெமான்ஸ்ட்ரேஷன் இப்பதிவு. இது எனக்குக் கடந்த வாரத்தில் நேர்ந்த அனுபவம். அதை இவரிடம் கால் மணிநேரம் சொல்லி இருப்பேன். அதைக்கூட அழகான கிசுகிசு டைப் கிச்சுகிச்சு பதிவாக்கி இருக்கிறார்...

  
இன்னொரு பதிவு:இந்த மொக்கையான கேள்வி-பதில் தொடரைக் கூட எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் பாருங்கள்…

17) பிடித்த விளையாட்டு?
  சதுரங்கம்..
(பிடிக்காத விளையாட்டு: வாழ்க்கை)
18) கண்ணாடி அணிபவரா?
ஆம்..(ரெஃப்: ப்ரொஃபைல் ஃபோட்டோ)
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
எல்லா மாதிரியாகவும். அதிகம் விருப்பம் காதல்,காமெடி திரைப்படங்கள்(காதலே காமெடி என யாருப்பா சொல்றது..?!)
20) கடைசியாகப் பார்த்த படம்?
‘வினோத யாத்ரா’- இளையராஜாவுக்காகப் பார்த்தது. இன்னும் இளையராஜாவை உயிர்ப்போடு உபயோகப் படுத்தும் இயக்குனர்களில் ‘சத்யன் அந்திக்காடு’ம் ஒருவர்.
21) பிடித்த பருவ காலம் எது?
குழந்தைப் பருவ காலம்....
மழைக்காலம்...
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
பழைய விகடன்கள், கோபி கிருஷ்ணனின் ‘இடாகினிப்பேய்களும்’,எப்போது மனது சஞ்சலப் பட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துணையெழுத்து’...
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
   அடிக்கடி மாற்றுவது எனக்குப் பிடிக்காது.கொஞ்சம் செண்டிமெண்ட்டும் கூட... எனது டெஸ்க்டாப் படம் இப்பதிவிலிருக்கும் படம்தான்
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம்:
      இசை
பிடிக்காத சத்தம் : இரைச்சல்
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
1500 கி.மீ... கடந்ததில் வந்தது இப்போதிருக்கும் இந்தூர்..
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறதெனெவே நினைக்கிறேன் இருந்தும் சரியாக வெளிப்படுத்தியதில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், இந்திய அரசியல்.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
     உள்ளே மட்டும் என இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சாத்தான் Mr.சோம்பலார்தான்.
இந்தக் கேள்வி,பதில் தொடருக்கான அழைப்பு வந்து பத்து நாட்களாகியும், நேற்று வசந்த் அலைபேசியில் மிரட்டல் வைத்தபின் தான் முடிக்க முடிந்தது.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
சென்னை
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
ப்ரொஃபஷனல் ஆர்ட்டிஸ்டாக ஆசை
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
இப்போ நான் விரும்பிச் செய்யுற எல்லாக்  காரியங்களிலும் மனைவி இல்லை. சொல்லப் போனா மனைவியே இல்லை.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
zero shirt விளம்பரவாசகம் ஒண்ணு பார்த்தது எனக்குப் பிடித்திருந்தது. ஏன்னா அது வாழ்க்கைக்கு ஃப்ளெக்ஸிபிளா பல இடங்களில் பொருந்துகிறது.
”Take Life as it comes"

Monday, June 29, 2009

வா... காத்திருக்க நேரமில்லை....

 

        கிணுகிணுவென முணுமுணுத்த செல்ஃபோனின் சிவப்புப்பொத்தானை, அரைகுறைப்பார்வையிலேயே இனங்கண்டு அழுத்தி அலாரத்தின் வாயை அடக்கினான்.மறுபடிக் கண்களை மூடி, முடியாமல் போன கனவின் சுகத்தினைத்  தொடர முனைந்தான்.தோல்வியுடன் தூக்கத்தைத் தொடர்கையில் மறுபடி ஒரு இனிய இடைஞ்சல் வந்தது குறுந்தகவல் நுழைவொலியுடன். ஒரு நொடி யோசித்துப் பின் உள்ளுக்குள் குறுகுறுப்பு ஏற்படுவதை உணர்ந்து, போர்வையுடன் உறக்கத்தையும் உதறித்தள்ளினான்.செல்ஃபோனைக் கையிலெடுத்து மெஸேஜைப் படிப்பதற்குள் அது செல்லஃபோனாகியிருந்தது.
         ‘4 days over.3 more days left for dream. now get up and go to c ur 1st wife.good morning dear'
  நோக்கியாவின் மானிட்டரில் கல்வெட்டுக்களாய்த் தெரிந்த எழுத்துக்களைக் கோர்த்த விரல்களுக்குச் சொந்தக்காரி சுஹாசினி.இவனுக்கு சுஹா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு...இவன் பேரைச் சொல்லவே இல்லையே..?!
             வன் கார்த்திகேயன்.கால் செஞ்சுரி அடிக்க இன்னும் நாலு மாசம் காத்திருக்கணும்.சுஹா சொன்னமாதிரி இவனோட முதல் கல்யாணம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில ,ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட நடந்தது. சில ஆயிரங்கள்ல கிரெடிட்டான சம்பளம்,இவனோட ஸ்மார்ட்னெஸ்னால ஓரிரு வருஷங்களிலேயே பல ஆயிரங்களா மாறிடுச்சு.மாசத்துக்கு ஒரு பீரும்,வாரத்துக்கு 4 சிகரெட்டும் பிடிக்கிறவங்க, நல்ல பையனுங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இவனையும் தாராளமா நல்ல பையன்னு சொல்லிக்கலாம். வேலையில இருந்த சாதுர்யம், பெண்களுடன் பழகுவதில் இல்லாததால் பல பெண்கள் நல்ல நண்பனை இழந்துட்டாங்க.சராசரி உயரம்,நிறம்,மேலுதட்டில் மேல்பகுதியை மட்டும் மறைக்கும் மீசை(டேய்...மீசையைக் கொஞ்சம் டிரிம் பண்ணுடா..கூச்சமா இருக்கு’....கூடல் பொழுது கட்டளைகளைக்கூட சட்டை செய்ய வைத்தது மீசைமேல் இவன் கொண்டிருந்த ஆசை),அலுவலக நேரத்தில் மட்டும் இன் -ஷர்ட்,ஷூ சகிதத் தோற்றம்,மற்ற நேரங்களில் கேஷூவல்ஸ்,செமி ரிம்லெஸ் கண்ணாடி(ஸ்டைலுக்கு அல்ல).இது போதும் இவனுக்கு.

          ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு ,சுஹாசினி பி.காம்மோட (22ஐத் தொடும் வயது,இடையுரசும் கூந்தல்,பாலுமகேந்திரா பட ஹீரோயின்கள் போல திராவிட நிறம்,நல்ல களை,இவனளவு உயரம்,இவனை விட அதிக வாய்) திருமணம் ஆச்சு.தூரத்துச் சொந்தம்தான். மஞ்சள் கயிற்றின் மகிமையால் தொட்டுக்கொள்ளும் சொந்தமாயிற்று.முதலிரவில் இருவரும் அறிமுக உரை நிகழ்த்தியதிலேயே பொழுது விடிந்து விட்டிருந்தது.ஒன்றிரண்டு முத்தங்களில் முற்றுப்போனது உரை.நாளையும் இரவு வருமென உறுதியாகத் தெரிந்த காரணத்தால் உறங்கிவிட்டனர்.தொடர்ந்த ஓரிரு வாரங்கள் இரவில் பகலையும், பகலில் இரவையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.கொண்டாடினார்கள்.

        தற்குமேல் தொடர்ந்தால், தலைதீபாவளிக்கு விடுமுறை எடுக்க முடியாதென்பதால் இரு வாரம் கழித்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.முதல் நாள் நரகம், அடுத்த நாள் உபநரகம். பின் சாலரி ஸ்லிப்பை மனதுக்குள் நினைத்துக் கொண்டும், ரிஸஷன் நேர நெருக்கடியை உணர்ந்தும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.முன்பெல்லாம் 5 மணிக்கு ஆஃபீஸ் முடிந்தாலும், வேலையில் பெண்டிங் வைக்க விரும்பாமல் 8 மணி வரை இருந்து முடித்துவிட்டுப் போவான். இப்பொழுது 4.55க்கெல்லாம் செல்ஃபோனில் அலாரம் வைத்து, கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்கிறான்.

     காஃபி,முத்தம்,மல்லிகைப்பூ இட்லி,அப்பப்போ உப்பு கம்மியா சட்னி,இன்னும் கொஞ்சம் வேக வேண்டிய தோசைகள்,’அதுக்குள்ள கிளம்பணுமாசிணுங்கல்கள்,பைக் சாவி வாங்குகையில் உரசும் விரல்கள் எனக் காலைகள் கழிந்தன. சரவண பவன்,சத்யம்,பீச்,பானிபூரிக்கடை,வேறு வழியில்லாமல் கோயில்கள்,அவளின் சினேகிதிகள் வீடுகள் என மாலைகளும் கழிந்து கொண்டிருந்தன. பெற்றோர்கள் இவனுடன் இருந்தாலும் இவனின் வழிகளில் அவர்கள் வேகத்தடை எதுவும் விதிப்பதில்லை.நாட்கள் ஐஸ்கிரீமைப் போல இனிமையாகக் கரைந்துகொண்டிருந்தது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகளும் ஹைக்கூக்களாய் முளைத்தன.அதுவும் இல்லையென்றால் தாத்தா சொல்லிவிட்டுப்போன ஊடல் காமத்திற்கின்பம்குறளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே...?!

   பெருவிழாவாகச் சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு திருவிழா திடுக்கிடவைத்தது. அது சுஹாசினியின் ஊர்க்கோயில் திருவிழா.பங்காளிச் சண்டையில் பத்து வருடங்களாக நடைபெறாமல் இருந்த விழா, இவன் நேரத்துக்கு ஏதோ ஒரு வெற்றிலை மெல்லும்,சந்தனம் பூசிய நெஞ்சில் துண்டு போர்த்திய வேலையில்லாத நாட்டாமையால் சமாதானம் பேசப் பட்டு நடக்க ஆரம்பித்துவிட்டது.இவனுக்கு அழைப்பு இருந்தும், அலுவலக அப்ரெய்ஸல் நேர ஆப்புகளால் போகமுடியவில்லை.இதைவிட்டால் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஆறுமாதம் தேவுடு காக்க வேண்டுமென்பதால், சுஹாவை மட்டும் அனுப்பி வைக்க முடிவெடுத்து விட்டான்.அவளுக்கும் ஊருக்குச் செல்ல விருப்பமில்லைதான். ஆனால் தொண்ணூறைத் தாண்டிய அவளது ஆயா, திருவிழாவைப் பேத்தியுடன் பார்த்துவிட்டு வைகுண்டம் டைரக்ட் ஃப்ளைட் பிடித்துச் செல்லவிருப்பதாக ஆசைப்பட்டதால்(ஆசையில மண்ணள்ளிப் போட..’-சபிக்கத்தான் முடிந்தது) சுஹாசினி ஊருக்குச் செல்ல வேண்டியதாயிற்று.அழைத்துப்போக அவளது அப்பா, தம்பியுடன் வந்திருந்தார்.மாமனாரை மனதிற்குள் வைய நினைத்தாலும், அவளை பெற்று வளர்த்த ஒரே காரணத்துக்காகச் சகித்துக் கொண்டான்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழியனுப்பச் சென்ற இவனைப் பார்க்கையில் கசாப்புக்கடைக்குச் செல்லும் ஆடு போல் தோன்றியது அவளுக்கு.பேருந்து கிளம்பும்முன் அவள், அப்பாவை தோசை வாங்க அனுப்பி விட்டாள். தம்பியிடம் வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரை வாங்கி வாஎன்றாள்.இவன் பதறியடித்து வாங்கப் போகையில்,ஒரு முறை முறைத்துவிட்டு,’இல்லங்க அவன் வாங்கிட்டு வந்துருவான்என தம்பியை அனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிப்போய், அவன் தலை மறைந்த உடன் கார்த்தி, காதைக்கொடுஎன இரகசியம் பேசும்சாக்கில் இவன் கன்னத்தில் முத்தமொன்று வைத்துவிட்டாள்.சோகத்திலும், சுகமான அவளின் இதழ் ஒத்தடங்களில் திகைத்துப் போனவனுக்கு பதில் மரியாதை செய்யக்கூடத் தோன்றவில்லை.அதற்குள் இரு கரடிகளும் வந்து விட்டிருந்தனர்.
   ‘மாப்ளே, கன்னத்துல என்ன ஒட்டியிருக்குஎனக்கேட்க நினைத்தவர், பின் சூழலைப் புரிந்துவிட்டு,’மாப்ளை உடம்பைப் பாத்துக்குங்கஎன மாற்றிச் சொல்லிவிட்டுச் சென்றார்.

     சில சமயம் வாழ்க்கை கூட சினிமேடிக்கா இருக்கும். இல்லேன்னா, பஸ் கிளம்புறப்போ எஃப்.எம்மில் ஏதோ ஒரு கணேஷ், தன்னோட சேராமப் போன மூணாவது காதலிக்காக கஷ்டப்பட்டு டெடிகேட் செஞ்ச இதயம் போகுதேபாட்டு கேட்டிருக்குமா..?! ரொம்ப ஃபீலிங்கோட வீட்டை நோக்கிப் போனான்.

    ‘நல்வரவுசொன்ன கால்மிதியைக் கடுப்புடன் மிதித்தான்.இவன் முகம் பார்த்தே, அமைதியாக அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர் பெற்றோர்.அவர்களுக்குத் தெரியாததா என்ன?!
  காற்றில் பறந்த செய்தித்தாள்களின் படபடக்கும் சத்தம் கேட்டது.
‘கார்த்தி... காலையில் பேப்பர் வந்ததும் படிக்கிறேனோ இல்லையோ, எடுத்து ஆசைதீர மோந்து பார்த்துடுவேன். காலையின் ஃப்ரெஷ்னெஸ்ஸ அதுல ஈஸியாத் தெரிஞ்சுக்கலாம்.’
 இப்போது எடுத்து நுகர்ந்து பார்த்ததில் வாசம் போய்விட்டிருந்தது.

 தண்ணீர் குடிக்க ஃபிரிஜைத் திறந்தான்.
’கார்த்தி...அடிக்கிற வெயிலுக்கு பேசாம ஃப்ரீஸர்ல போய் உட்காந்துக்கலாம்ன்னு தோணுது’
‘சரி நானும் வந்துடுறேன்.சிம்லாவுக்கு போன எஃபெக்ட்ல ஹனிமூன் நடத்திடலாம்’
‘நீ வேணாம். வந்தா ஃப்ரீஸர்ல சூடு ஏறிடும்...’
குடித்த தண்ணீர் தாகம்தான் சேர்த்தது.

 டந்த சில வாரங்களாக வீட்டில் லேப்டாப்பை ஓப்பன் செய்ததே இல்லை. இன்று ஓப்பன் செய்தான்.யூசர் நேம்,பாஸ்வேர்டு இரண்டும் அவள்தான்.டெஸ்க்டாப் சுஹாசினியை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான்.ஐந்து நிமிடங்களில் ஸ்கிரீன்சேவராக வந்த இன்னொரு சுஹாசினி அதைக் கட்டம்கட்டமாகக் கலைத்துச் சென்றாள்.
   அவளில்லாத படுக்கை, இராணியில்லாப் பல்லாக்கானது.அவளுக்கு எல்லாமே நீட்டாக இருக்க வேண்டும்.ஏதோ விரிப்பானை, ஏனோதானோவென பெட்டில் விரித்து, உறை மாற்றாத தலையணைகளை அதன்மேல் கிடத்தித் தூங்கிக்கொண்டிருந்தவனை அவள்தான் மாற்றினாள்.இரசனையுடன் விரிப்பான் தேர்ந்தெடுத்து, அதற்கு மேட்ச்சாக தலையணை உறைகளை மாற்றி அழகூட்டினாள். பின் நின்றவாறு கேட்டாள். ‘நல்லா இருக்கா...?’
 ‘கொஞ்சம் நீயும் வந்து உட்காரேன்’
உட்கார்ந்தாள் சற்று ஒய்யாரமாக. ‘இப்போ அழகா, செக்ஸியா இருக்கு’ என்றான்.
அப்போது அவள் திருகிய காதினை இப்போது தடவிப்பார்த்துக் கொண்டான்.
காலைகளின் வளையல் சத்தம் இல்லை.கொலுசின் சிணுங்கல் இல்லை.அவள் மேனி சேர்ந்ததின் பின் வரும் லக்ஸ் வாசமில்லை.
   வனின் தனிமைப் பெருமூச்சுக்களில் வீட்டின் உஷ்ணம் கூடியிருந்தது.ஒரு வாரம்தானே சமாளித்து விடலாமென இருந்தவனுக்கு, வாரத்துக்கு ஏஏஏஎழு நாட்கள் எனும் உண்மை உறைக்க ஆரம்பித்தது.அதற்கு 168 மணி நேரங்கள் இருக்கின்றன என்ற உள் உண்மையும் இவனின் வேதனையை அதிகரித்து, இவனின் நாட்கள் நத்தையாக ஊற ஆரம்பித்த நான்காவது நாளின் முடிவில் வந்த எஸ்.எம்.எஸ்தான் முதல் பத்தியில் நாம் கண்டது. 
   பெரும்பகுதி நரகம் தாண்டிவிட்ட மகிழ்வில் அலுவலகம் சென்றான். உள்ளே செல்ஃபோன் எடுத்துச் செல்லக்கூடாது எனும் நிர்வாகத்தின் அறிவிப்புப் போர்டை வெறித்தவாறு உள் நுழைந்தான்.சற்று வேலைகளில் மூழ்கியபின் சுஹாவின் ஞாபகங்களின் அடர்த்தி குறையத்தான் செய்திருந்தது. எனினும் அவ்வப்போது அவளைப் பற்றிய நினைவுகள், இவன் தயாரிக்கும் எக்ஸெல் ஷீட் மற்றும் பவர்பாயிண்ட்டுகளில் பிழைகளாக மாறி மேனேஜரின் வசவுகளுக்கு இவனைத் தயார் செய்து விடும்.
   இன்னும் இரண்டு நாட்கள்தான். இன்று அலுவலகத்தில் ஒர் முக்கியக் கூட்டம். மேலாளர் இவனை நியமித்திருந்தார். ஒரு ஜாயிண்ட் வென்சர் பத்தின மீட்டிங். இவன் பேசினால் பழமாக்கிவிடுவான் என நிர்வாகத்திற்குத் தெரியும். இதனை முடித்தால் இவனின் பேஸிக் ஸ்கோர் கார்டில் பச்சைநிறங்கள் அதிகமாகி இவனின் பதவி உயர்வினைக் கையில் கோர்த்துவிட்டுப் போய்விடும். அதற்கான கோப்புகளில் மூழ்கி, தேவையான பாயிண்ட் முத்துக்களை எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு , அவுட்லுக்கில் மெயில் வந்ததாக கணினியின் ஓரத்தில் மெசஞ்சர் சொல்லிச் சென்றான். அனுப்பியது அவன் கல்லூரி நண்பன். ஃபார்வர்ட் மெயில்தான். எப்போதும் லேட்டாகப் படிப்பவன், இன்று ரிலாக்ஸூக்காக அதைத் திறந்தான்.
   பிசினஸ் பத்தியும், வாழ்க்கை பத்தியும் புத்தகம் எழுதுற சி.ஈ.ஓக்கள்ல் ஏதோ ஒரு ஆளு சொன்ன வாசகம் வந்திருந்தது.
    “உன் கையில் 5 பந்துகள் இருக்கு. குடும்பம்,படிப்பு,வேலை, நண்பர்கள்,சமுதாய நட்பு. இதுல ‘வேலை’ன்றது இரப்பர் பந்து மாதிரி. எப்படிப்போட்டாலும் மேலெழும்பி வரும். மற்ற பந்துகள் கண்ணாடிகளாலானது. போட்டா ஸ்கிராட்சோ,கீறலோ, ஏன் உடைந்து போகக் கூடச் சாத்தியங்கள் இருக்கு”
     மற்ற நாட்களில் பத்தோடு பதினொன்றாகப் போக வேண்டிய இது மாதிரி மெயில், இன்று ஏனோ அவனுக்குள் ஒரு அதிர்வையும், உள்ளொளியையும் கொடுத்தது.

      நேராக மேனேஜர் அறைக்குச் சென்றான்.ஏற்கெனவே எழுதி வைத்திருந்த லீவ் லெட்டரை அவரிடம் நீட்டியவாறு சொன்னான்,” உடம்பு சரியில்லை. ரெண்டு நாள் கழிச்சு வர்றேன்.”
    ‘என்னாச்சு உடம்புக்கு. .? ஏன் ரெண்டு நாள் லீவ்?’ -மேனேஜரின் கேள்விகளைஅவன் சாத்திவிட்டுப் போயிருந்த கதவுதான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.அதற்குள் அவனின் பைக் கோயம்பேடை நோக்கி விரைந்தது.
  மேனேஜர் லீவ் லெட்டரை எடுத்துப் படித்தார். காரணம் என்னும் இடத்திற்கு எதிராக ‘பசலை’ என்றிருந்தது. குழம்பியவாறே தலையைச் சொறிந்து கொண்டிருந்தார்.   


                                      *****************************************************************************************
பி.கு: நண்பர் இரா. வசந்தகுமார் மற்றும் கே.ரவிஷங்கர் சார் இருவரின் அன்புத் தொல்லையில் அவசரமாக எழுதிய கதை இது. போற்றலும், தூற்றலும் மேற்கண்டவர்களுக்கே...:-)