Monday, September 27, 2010

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்

        ன்றைக்கு என்னவோ தெரியவில்லை. எட்டு மணிக்கெல்லாம் பசி வந்துவிட்டது.வழக்கத்திற்கு மாறாக வெளியில் சாப்பிடக் கிளம்பினேன்.அறையிலிருந்து கிளம்புகையிலேயே கண்ணாடி சன்னல்கள் திடீர் திடீரென மங்கலான வெள்ளொளியைத் துப்பிக் கொண்டிருந்தன.சற்றுப் பொறுத்து மெல்லக் காதில் விழந்தது இடி சத்தம்.சாக்கிரதை உணர்வில்.ஒரு கம்பி மட்டும் உடைந்து மரபான  வடிவத்தைக் கட்டுடைத்த படி இருக்கும் பச்சைக் குடையை எடுத்துக் கொண்டேன்.கதவு தாண்டித் தெருவில் கால்வைத்தவரை சிற்றின்பத் தூறல்கள்தான் கொஞ்ச ஆரம்பித்திருந்தன.குடையை விரிப்பது அவசியமில்லை.ஆனால் குடை தேவையென இடி சொல்லிக் கொண்டிருந்தது அவ்வப்போது. பத்தடி தூரத்தில் உணவகம். வட இந்திய வாசம் விட்டுப் போகக் கூடாதென இரண்டு ஆலு பராத்தாக்களைக் கேட்டேன்.மேசைமீதிருந்த ஸ்பீக்கர்களில் ஹிந்திப் பாடல் தூறிக் கொண்டிருந்தது.இந்தோரில் இருந்த மூன்று வருடம் வெளியிடங்களில் தமிழ் கேட்க நான் பட்ட கஷ்டம் என் சகிப்புத்தன்மையைக் கூட்டியிருந்தது.என் வட இந்திய நண்பர்களின் மனைவிமார்கள் செய்த ஆலு பராத்தாவின் மிருதுவில் பாதிதான் இருந்தது இங்கு கிடைத்த பண்டம். .தயிரும், வெங்காயமும் தனியாக வைத்திருந்தனர், ஏதோ வாய்க்கால் தகராறு போலும்.சிறு சிறு மெது திண்மங்களாக உள்வைத்து அமுக்கப்பட்ட உருளைக்கிழங்குத் துண்டுகள் பராத்தாவின் கூட்டணியில் சிறிது ருசியுடன் பசியைத் தணித்துக் கொண்டிருந்தன.இதற்குள் திடீரெனச் சுருதி குறைந்த பாடலும், உணவகத்தினுள்ளே தெறித்த துளிகளும் மழையின் வேகம் வலுத்ததைக் காட்டின.குழந்தையின் ஆர்வத்தோடு வேகமாகச் சாப்பிட்டு முடித்தேன்.கை கழுவ வெளியேதான் செல்லவேண்டும்.குடையின்றிச் சென்றதால் நிகழ்ந்த முன்னோட்ட நனைதலில் உடைகளில் எடை கூட ஆரம்பித்தது.இருபத்தி ஐந்து ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளிப்புகுந்தேன் மழைக்குள், கொஞ்சமாய்க் குடைக்குள்ளும்.

          யோத்தி தீர்ப்பு நாளை வந்துவிட்டால், கலவரம் வந்துவிட்டால்,ஊரடங்கு போட்டுவிட்டால்,கடைகள் அடைத்துவிட்டால்.....பல ட்டால்கள் மனதிற்குள் புதிதாகக் கிளைவிட்டுப் பெருக ஆரம்பித்திருந்தன.காய்கறிகள் வாங்க வேண்டும்.பப்பிள் டாப்பில் தண்ணீரின் அளவு திருகும் குழாய்க்குக் கீழே மண்டியிட்டிருந்ததும் நினைவுக்கு வந்தது.நீருக்குச் சொல்லவேண்டும்.இன்னும் எதை எதை மறந்தேனோ, எதை நினைத்தேனோ தெரியவில்லை.சிறு கவலைகள் மழைக்குள் உருத்தெரியாமல் போய்க் கொண்டிருந்தன.தெருவிற்குள் இறங்குவதற்குள் திடீரென இருள் கவ்விக் கொண்டது.மின்சாரம் என்னவோ மழையின் சம்சாரம் போலும். மழை வந்தவுடன் இது முகத்தைத் திருப்பிக் கொள்கிறது..எப்பொழுது திரும்ப வருமெனத் தெரியாது.ஆங்காரமோ, ஆர்ப்பரிப்போ தெரியவில்லை, மழை காட்டுக் கத்தலாய்ப் பெய்ய ஆரம்பித்திருந்தது.சாலையோர மணல் இப்போது செம்புலப் பெயல் நீராகி இருக்கும். இருட்டில் பார்க்கமுடியவில்லை.செருப்புகளினூடாகக் குறுகுறுத்த பாதங்கள் அதன் அடர்த்தியை உணர வைத்தது.ஒழுங்கற்ற எல்லைகொண்ட சாலைகளில் பாதியும், மழைச்சேற்றில் பாதியுமாக நடக்க ஆரம்பித்தேன்.வாகனங்கள் வருகையில் சற்று நின்றுதானாக வேண்டும்.ஒன்று அதன் எல்லை எனக்குப் பிடிபட வேண்டும். இல்லை நான் நிற்பதாவது வாகன ஓட்டிக்குத் தெரியவேண்டும்.எதிரெதிர் வாகனங்கள் பீய்ச்சிச் செல்லும் ஒளிக்கற்றைகளில் மழைக்கைகளின் ஒழுங்கற்ற நடனம் தெளிவாய்த் தெரிந்தது.பெரிய, சிறிய கோட்டுத் துண்டுகள் ஒன்றையொன்று இடைவெட்டியும்,நேர் சென்றும் கோணங்கித்தனமானதொரு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. சாலையில் கிடந்த குழிகளிலெல்லாம் குழந்தைகளைப் போல் குதித்துக் கொண்டிருந்தது மழை.இந்நேரத்திற்கெல்லாம் சிறிது குளிரும் உள்ளேறி, ஈர உடைகளினால் மேலும் வலுவானது.வாகனங்கள் கடந்தபின் இருளின் ஆதிக்கம் எதையுமே பார்க்கவிடவில்லை. எதிரிலிருந்து ஒரே ஒரு வெளிச்சப்புள்ளி எனது உயரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. யூகிக்க முடியவில்லை. என்னைக் கடந்த சில நொடிகளில் புரிந்தது. சைக்கிளில் வந்த ஒருவன் வாயில் செல்போனை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. செல்போனின் தலையிலிருந்து வந்ததுதான் அவ்வொளி. என்னை நொந்து கொண்டேன். நோக்கியா 1100 வைத்திருந்தால் வசதியாக இருக்குமே என்று. விலையுயர் செல்போன்களில் டார்ச்சும் இல்லை. மழை பட்டால் அதற்கு வாழ்வும் இல்லை. இன்னொன்றும் நினைவுக்கு வந்து தொலைத்தது.பேட்டரி சார்ஜ் நிலை காட்டும் இடம் ஒற்றைப் பல்லுடன் இருந்தது. அது பொக்கைவாயாவதற்குள் மின்சாரம் வந்துவிட வேண்டும்.

                டக்க நடக்க எனது செருப்பு பின்புறம் பாதி நீரை வாரியடித்து பேண்டினைத் துவைத்துக் கொண்டிருந்தது. நாளைக் காலையில் பார்க்கையில் பான்பராக் எச்சில் துப்பியது போல் செம்மண் பொட்டுகள் ஒழுங்கின்றி ஒட்டியிருக்கும்.மறுபடியும் இடித்த இடி மழையைப் பற்றியே நினைக்கச் சொன்னது.கலைத்துவிட்ட தேன்கூட்டினை மீண்டும் சுற்றிச் சுற்றி ஒட்டும் தேனீக்களாய், குடை இருந்தும் என் முகத்தை நனைத்துக் கொண்டிருந்தது மழை.ஏற்கெனவே ஒரு கம்பி போன நிலையில் , சற்று வேகமாக நடந்தால் என்னிடமிருந்து மழையைக் காப்பாற்றுவது போல் மேலாகத் திரும்பிக் கொள்கிறது குடை. மழை பற்றி மனதில் எழுதிய வாசகங்களை மழையே அழித்து வேறொன்றை எழுதிச் சென்றது.இப்போது சாலையில் சிறிது ஒளி பின்னிலிருந்து வந்தது. வெகு தூரத்தில் வரும் நான்கு சக்கர வாகனமாயிருக்கலாம்.ஒளி கூடக் கூட எனக்கு முன்னால் ஒரு உருவம் தயங்கித் தயங்கிச் சென்று கொண்டிருந்தது தென்பட்டது.வலது தோளில் தொங்கவிடப்பட்ட கைப்பையினை இறுக்கிக் கொண்டிருந்தது அவளது கை.மழையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது சுடிதார்.ஏற்கெனவே கால்களை இறுக்கும் கீழ் ஆடை மழையால் இன்னும் நெருங்கி, கோயில் சிலைகளின் கால்கள் போல் காட்டியது.’அக்கினிப் பிரவேசம்’ கங்காவைப் பற்றிய ஜெயகாந்தன் வர்ணனை நினைவில் வந்து போனது.ஆனால் இவளுக்கு இருபது வயதிருக்கலாம்.சடாலெனக் குனிந்து இடது கையில் தனது ஹை-ஹீல்ஸ்களைக் கையில் எடுத்துக் கொண்டு நடை போட்டாள். அதற்குள் வாகனம் கடந்து விட அவளும் பார்வையில் இருந்து விடைபெற்று விட்டாள்.எப்படி இருக்கும் முகம் கற்பனை செய்தேன். பாழாய்ப் போன சினிமாப் புத்தி ,பழைய நடிகைகள் மழையிலும் கரையாத மேக்கப் போட்டுக் கொண்டு கண்முன் வந்து போனார்கள். எதுவும் வாங்காமலேயே வீட்டிற்குள் நுழைந்தேன்.ஒற்றை மெழுகுவர்த்தியின் தரிசனத்தில் பொன்னாய் சொலித்துக் கொண்டிருந்தது அறை.நிசப்தம் கூட அதன் ஜோதியைக் கூட்டுவது போல் தோன்றியது.குடையை விரித்த வாக்கிலேயே வைத்துவிட்டு உடை மாற்றினேன். சன்னல் வழியே வெளிப்பார்க்கையில்தான் மழை குறைந்திருந்ததும், மேகத்தோடு விளையாடும் நிலவும் தெரிந்தது. இன்றைய நிலா இன்னும் சுத்தமாகக் காட்சியளிப்பது போல் தோன்றியது.வெளியில் இருந்த வயலில் வெட்டியிருந்த வாய்க்கால்களில் நிலவின் நீள்வட்ட நகல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
வாய் பாடலொன்றை முணுமுணுக்க ஆரம்பித்தது.’பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’.
இரண்டடி பாடுவதற்குள் ,கண்ணைக் கசக்க வைத்த வெளிச்சம் பாடலை நிறுத்தியது. அறை மூலையிலிருந்து ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ கதற ஆரம்பித்து விட்டான். வாழ்க சன் டிவி...!வளர்க மின் துறை....!!

15 comments:

  1. ,கண்ணைக் கசக்க வைத்த வெளிச்சம் பாடலை நிறுத்தியது. அறை மூலையிலிருந்து ‘எந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்திரன்’ கதற ஆரம்பித்து விட்டான். வாழ்க சன் டிவி...!வளர்க மின் துறை....!!


    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. லேபிளில் - மொக்கை- தூக்கி கிடாசிடவும் - அவ்ளோதான்! :)

    ReplyDelete
  3. ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு.நல்லா இருக்கு. சுருக்கலாமோ?

    ReplyDelete
  4. அண்ணா ரொம்பநாள் சேர்த்து வச்ச அனுபவமோ.அடிக்கடி பதிவு போட்டா இப்பிடி நிறைய எழுத தேவையில்லைத்தானே.நடுவில ஒரு விஷேசமும் இல்லையா !

    ஜெகா கிட்ட சுகம் கேட்டேன்ன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  5. \\கே.ரவிஷங்கர் கூறியது...
    ரொம்ப நாளைக்கு பிறகு பதிவு.நல்லா இருக்கு. சுருக்கலாமோ?\\

    ரீப்பிட்டிக்கிறேன் ;)))

    ReplyDelete
  6. நல்ல பதிவுங்ணா. நிறைய வரிகள் ரசிக்க வெச்சுது. :)

    ReplyDelete
  7. @ஹாய் அரும்பாவூர்...
    என்னங்க பேர் இது. விட்டாக் கடிதம் எழுதிடுவேன் போல...:-)
    நன்றி...

    @ஆயில்யன்...
    நன்றி ஆயில்யன்... அந்த லேபிள் உங்களுக்கும், எனக்கும் இல்லை.. பதிவைப் படிக்க ஆரம்பித்து, பாதியில் முடியாமல், கருத்தும் இடமுடியாமல் சென்றவர்களுக்காக மட்டுமே...

    ReplyDelete
  8. @ஆதிமூலகிருஷ்ணன்...
    நன்றி ஆதி... நீங்கள் கருத்திட்ட பின்னர் தெளிந்தேன் நல்ல ‘முயற்சி’ என்று. வாழ்த்துப் பெற விரைவில் முயல்கிறேன்.

    @கே.ரவிஷங்கர்...
    நன்றி சார்...எழுதாமல் விட்டதே இன்னும் இருக்கிறதே என வருந்துகிறேன் இப்போது.மழையாய்ப் பொழிந்து விடவே முனைந்தேன். இயலவில்லை...நேரக் குறைவால் நிறுத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  9. @சே.குமார்...
    நன்றி நண்பரே... வருகைக்கும், வாழ்த்துக்கும்...

    @ஹேமா...
    நன்றி ஹேமா... விஷேசம் இப்போது ஒன்றுமில்லை. நான் பதிவிட்டதே இப்போதைக்கு விசேசம்தான். மற்றபடி ரவிஷங்கர் சாருக்குச் சொன்ன பதிலைப் பார்க்கவும்...
    ஜெகாவை நான் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது.விரைவில் மீண்டும் பார்த்து விசாரித்து விடுகிறேன்...:-)

    ReplyDelete
  10. @கோபிநாத்....
    வாய்யா... மாப்பி.. மெட்ராஸ்காரன் உனக்காக அளவில்லாம மழையைப் பத்தி எழுதினா... ரசிப்பியா... அளவு பார்த்துட்டு இருக்க... :-) ஏதோ தோணினதையெல்லாம் கொட்டிட்டேன்பா...நன்றி கருத்திற்கு...

    @கார்த்தி...

    தல. எப்படி இருக்கீங்க...நிறைய வரிகள் ரசித்ததற்கு நன்றி....

    ReplyDelete
  11. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘தமிழிஷ்’ ல் ஓட்டுப் போட்ட இருவருக்கு நன்றிகள்...

    ReplyDelete
  12. பந்தாவா இருக்கு... ரொம்ப நாளைக்கு அப்புறம்.

    ReplyDelete
  13. @மகேஷ்...
    நன்றி மகேஷ்...

    ReplyDelete