‘4 days over.3 more days left for dream. now get up and go to c ur 1st wife.good morning dear'
நோக்கியாவின் மானிட்டரில் கல்வெட்டுக்களாய்த் தெரிந்த எழுத்துக்களைக் கோர்த்த விரல்களுக்குச் சொந்தக்காரி சுஹாசினி.இவனுக்கு சுஹா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு...இவன் பேரைச் சொல்லவே இல்லையே..?!
இவன் கார்த்திகேயன்.கால் செஞ்சுரி அடிக்க இன்னும் நாலு மாசம் காத்திருக்கணும்.சுஹா சொன்னமாதிரி இவனோட முதல் கல்யாணம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில ,ஒரு பன்னாட்டு நிறுவனத்தோட நடந்தது. சில ஆயிரங்கள்ல கிரெடிட்டான சம்பளம்,இவனோட ஸ்மார்ட்னெஸ்னால ஓரிரு வருஷங்களிலேயே பல ஆயிரங்களா மாறிடுச்சு.மாசத்துக்கு ஒரு பீரும்,வாரத்துக்கு 4 சிகரெட்டும் பிடிக்கிறவங்க, நல்ல பையனுங்கன்னு நீங்க நினைச்சீங்கன்னா, இவனையும் தாராளமா நல்ல பையன்னு சொல்லிக்கலாம். வேலையில இருந்த சாதுர்யம், பெண்களுடன் பழகுவதில் இல்லாததால் பல பெண்கள் நல்ல நண்பனை இழந்துட்டாங்க.சராசரி உயரம்,நிறம்,மேலுதட்டில் மேல்பகுதியை மட்டும் மறைக்கும் மீசை(’டேய்...மீசையைக் கொஞ்சம் டிரிம் பண்ணுடா..கூச்சமா இருக்கு’....கூடல் பொழுது கட்டளைகளைக்கூட சட்டை செய்ய வைத்தது மீசைமேல் இவன் கொண்டிருந்த ஆசை),அலுவலக நேரத்தில் மட்டும் இன் -ஷர்ட்,ஷூ சகிதத் தோற்றம்,மற்ற நேரங்களில் கேஷூவல்ஸ்,செமி ரிம்லெஸ் கண்ணாடி(ஸ்டைலுக்கு அல்ல).இது போதும் இவனுக்கு.
ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இவனுக்கு ,சுஹாசினி பி.காம்மோட (22ஐத் தொடும் வயது,இடையுரசும் கூந்தல்,பாலுமகேந்திரா பட ஹீரோயின்கள் போல திராவிட நிறம்,நல்ல களை,இவனளவு உயரம்,இவனை விட அதிக வாய்) திருமணம் ஆச்சு.தூரத்துச் சொந்தம்தான். மஞ்சள் கயிற்றின் மகிமையால் தொட்டுக்கொள்ளும் சொந்தமாயிற்று.முதலிரவில் இருவரும் அறிமுக உரை நிகழ்த்தியதிலேயே பொழுது விடிந்து விட்டிருந்தது.ஒன்றிரண்டு முத்தங்களில் முற்றுப்போனது உரை.நாளையும் இரவு வருமென உறுதியாகத் தெரிந்த காரணத்தால் உறங்கிவிட்டனர்.தொடர்ந்த ஓரிரு வாரங்கள் இரவில் பகலையும், பகலில் இரவையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள்.கொண்டாடினார்கள்.
இதற்குமேல் தொடர்ந்தால், தலைதீபாவளிக்கு விடுமுறை எடுக்க முடியாதென்பதால் இரு வாரம் கழித்து அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.முதல் நாள் நரகம், அடுத்த நாள் உபநரகம். பின் சாலரி ஸ்லிப்பை மனதுக்குள் நினைத்துக் கொண்டும், ரிஸஷன் நேர நெருக்கடியை உணர்ந்தும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.முன்பெல்லாம் 5 மணிக்கு ஆஃபீஸ் முடிந்தாலும், வேலையில் பெண்டிங் வைக்க விரும்பாமல் 8 மணி வரை இருந்து முடித்துவிட்டுப் போவான். இப்பொழுது 4.55க்கெல்லாம் செல்ஃபோனில் அலாரம் வைத்து, கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்கிறான்.
காஃபி,முத்தம்,மல்லிகைப்பூ இட்லி,அப்பப்போ உப்பு கம்மியா சட்னி,இன்னும் கொஞ்சம் வேக வேண்டிய தோசைகள்,’அதுக்குள்ள கிளம்பணுமா’ சிணுங்கல்கள்,பைக் சாவி வாங்குகையில் உரசும் விரல்கள் எனக் காலைகள் கழிந்தன. சரவண பவன்,சத்யம்,பீச்,பானிபூரிக்கடை,வேறு வழியில்லாமல் கோயில்கள்,அவளின் சினேகிதிகள் வீடுகள் என மாலைகளும் கழிந்து கொண்டிருந்தன. பெற்றோர்கள் இவனுடன் இருந்தாலும் இவனின் வழிகளில் அவர்கள் வேகத்தடை எதுவும் விதிப்பதில்லை.நாட்கள் ஐஸ்கிரீமைப் போல இனிமையாகக் கரைந்துகொண்டிருந்தது. அவ்வப்போது சின்னச்சின்ன சண்டைகளும் ஹைக்கூக்களாய் முளைத்தன.அதுவும் இல்லையென்றால் தாத்தா சொல்லிவிட்டுப்போன ‘ஊடல் காமத்திற்கின்பம்’ குறளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே...?!
பெருவிழாவாகச் சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு திருவிழா திடுக்கிடவைத்தது. அது சுஹாசினியின் ஊர்க்கோயில் திருவிழா.பங்காளிச் சண்டையில் பத்து வருடங்களாக நடைபெறாமல் இருந்த விழா, இவன் நேரத்துக்கு ஏதோ ஒரு வெற்றிலை மெல்லும்,சந்தனம் பூசிய நெஞ்சில் துண்டு போர்த்திய வேலையில்லாத நாட்டாமையால் சமாதானம் பேசப் பட்டு நடக்க ஆரம்பித்துவிட்டது.இவனுக்கு அழைப்பு இருந்தும், அலுவலக அப்ரெய்ஸல் நேர ஆப்புகளால் போகமுடியவில்லை.இதைவிட்டால் ப்ரொமோஷனுக்கு இன்னும் ஆறுமாதம் தேவுடு காக்க வேண்டுமென்பதால், சுஹாவை மட்டும் அனுப்பி வைக்க முடிவெடுத்து விட்டான்.அவளுக்கும் ஊருக்குச் செல்ல விருப்பமில்லைதான். ஆனால் தொண்ணூறைத் தாண்டிய அவளது ஆயா, திருவிழாவைப் பேத்தியுடன் பார்த்துவிட்டு வைகுண்டம் டைரக்ட் ஃப்ளைட் பிடித்துச் செல்லவிருப்பதாக ஆசைப்பட்டதால்(’ஆசையில மண்ணள்ளிப் போட..’-சபிக்கத்தான் முடிந்தது) சுஹாசினி ஊருக்குச் செல்ல வேண்டியதாயிற்று.அழைத்துப்போக அவளது அப்பா, தம்பியுடன் வந்திருந்தார்.மாமனாரை மனதிற்குள் வைய நினைத்தாலும், அவளை பெற்று வளர்த்த ஒரே காரணத்துக்காகச் சகித்துக் கொண்டான்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழியனுப்பச் சென்ற இவனைப் பார்க்கையில் கசாப்புக்கடைக்குச் செல்லும் ஆடு போல் தோன்றியது அவளுக்கு.பேருந்து கிளம்பும்முன் அவள், அப்பாவை தோசை வாங்க அனுப்பி விட்டாள். தம்பியிடம் ’வாந்தி வர மாதிரி இருக்கு. மாத்திரை வாங்கி வா’ என்றாள்.இவன் பதறியடித்து வாங்கப் போகையில்,ஒரு முறை முறைத்துவிட்டு,’இல்லங்க அவன் வாங்கிட்டு வந்துருவான்’ என தம்பியை அனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிப்போய், அவன் தலை மறைந்த உடன் ‘கார்த்தி, காதைக்கொடு’ என இரகசியம் பேசும்சாக்கில் இவன் கன்னத்தில் முத்தமொன்று வைத்துவிட்டாள்.சோகத்திலும், சுகமான அவளின் இதழ் ஒத்தடங்களில் திகைத்துப் போனவனுக்கு பதில் மரியாதை செய்யக்கூடத் தோன்றவில்லை.அதற்குள் இரு கரடிகளும் வந்து விட்டிருந்தனர்.
‘மாப்ளே, கன்னத்துல என்ன ஒட்டியிருக்கு’ எனக்கேட்க நினைத்தவர், பின் சூழலைப் புரிந்துவிட்டு,’மாப்ளை உடம்பைப் பாத்துக்குங்க’ என மாற்றிச் சொல்லிவிட்டுச் சென்றார்.
சில சமயம் வாழ்க்கை கூட சினிமேடிக்கா இருக்கும். இல்லேன்னா, பஸ் கிளம்புறப்போ எஃப்.எம்மில் ஏதோ ஒரு கணேஷ், தன்னோட சேராமப் போன மூணாவது காதலிக்காக கஷ்டப்பட்டு டெடிகேட் செஞ்ச ‘இதயம் போகுதே’ பாட்டு கேட்டிருக்குமா..?! ரொம்ப ஃபீலிங்கோட வீட்டை நோக்கிப் போனான்.
‘நல்வரவு’ சொன்ன கால்மிதியைக் கடுப்புடன் மிதித்தான்.இவன் முகம் பார்த்தே, அமைதியாக அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர் பெற்றோர்.அவர்களுக்குத் தெரியாததா என்ன?!