1.அ) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
இரண்டு வயதிலேயே பார்க்க ஆரம்பித்ததாக எனது வீட்டில் சொன்னார்கள்.
ஆ)நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
பள்ளிக்குப் போகும் முன்பே 'மை டியர் குட்டிச்சாத்தான்' படம் பார்த்ததாக நினைவு.
இ)என்ன உணர்ந்தீர்கள்?
மதுரை மதி திரையரங்கில் பார்த்ததாகக் கேள்விப்பட்டேன்.அரங்கினுள் படம் பார்க்கையில் 'முப்பரிமாணக் கண்ணாடி' அணிந்து பார்த்தோம். எனக்கு அதில் அவ்வளவாகப் புரிபடவில்லையாதலால் வெறும் கண்ணோடு,தெளிவில்லாமல் படம் பார்த்த ஞாபகம். எப்படி அப்பா,அம்மா மட்டும் அந்தக் கண்ணாடி அணிந்து படம் பார்க்கிறார்கள் என ஆச்சரியப் பட்டேன்.அந்நாள் நினைவுகளை மீட்டெடுக்க மறுபடியும் ஒரு முப்பரிமாணப்படம் பார்க்க வேண்டுமென்பது ஆவல்.
2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? 'சுப்பிரமணியபுரம்'.காதலியின் துரோகம் மிகவும் பாதித்தது.எங்கள் ஊர்ப் பக்கம்(மதுரை அருகில்) இதெல்லாம் யதார்த்தம் என்ற உண்மைநிலை எனது கையாலாகாத்தனத்தைப் பார்த்து கைகொட்டிச்சிரித்தது.
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? 'அஞ்சாதே'
எனது அறையில்; கணிணியில்
மருத்துவமனையில் ஒருவனைப் போட்டுத் தள்ள வரும் கும்பல்,வெகு சாதாரணமாக அனைவரையும் அப்புறப்படுத்துவது (காவலர் உட்பட) கண்டவுடன் அதில் தெரியும் வாழ்வின் நிகழ்நிலை கண்டு அதிர்ச்சியுற்றேன். வெகு சாதாரணமாக நடைபெறும் கடத்தல், கற்பழிப்புகள் ஒரு நேரடி ஒலிபரப்பு காண்பது போல் அதிர்ச்சியின் அதிர்வெண்ணைக் கூட்டியது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ஒரு படத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மூன்றாம்பிறை,சேது,நந்தா,பருத்திவீரன்,வண்ணவண்ணப் பூக்கள்,மகாநதி,சிப்பிக்குள் முத்து,பாசவலை,உதிரிப்பூக்கள்,ஜானி,முள்ளும் மலரும்,பாரதி,தென்றல்,அஞ்சாதே,சுப்பிரமணியபுரம்.....
5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தங்கர் பச்சான் காலில் விழுந்த விவகாரம்
ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம் கிராஃபிக்ஸ்.இது என்னை ரொம்பத் தாக்குது. அதனால நொந்து போய் இருக்கேன்.எது எதுக்குத்தான் கிராஃபிக்ஸ் தேவைன்னு தெரியாமப் பயன்படுத்துறது எனக்குப் பிடிக்கலை. என்னைப் பொறுத்தவரை கிராஃபிக்ஸ் என்பது செய்தால், பார்வையாளனுக்குத் தெரியக் கூடாது. 'காதலர்தினம்' பாடல் ல வர்ற தங்கப் பறவைகள்.அத கிராஃபிக்ஸ் ல பறக்க விட்டதுக்கு பத்து புறாவைப் பறக்க விட்டிருந்தா இன்னும் உணர்வுப்பூர்வமா இருந்திருக்கும் என்பது என் எண்ணம். ஷங்கர் படங்கள் பார்க்கிறதுக்கு விட்டலாச்சார்யா படங்கள் எவ்வளவோ தேவலை.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கடந்த ஆண்டு வரை விகடனின் எந்தத் தமிழ்ச்சினிமா விமர்சனத்தையும் விட்டதில்லை.அவர்களின் அளவீடு தெரியுமென்பதால் ,நான் பார்க்க வேண்டிய படங்களை வரிசைப் படுத்திக் கொள்வேன். செழியனின் 'உலக சினிமா' தொடர் ஆவலுடன் படித்தேன். பாலாவின் சுயசரிதைக் கட்டுரைகளை விரும்பிப் படித்தேன். பொதுவாக சினிமா பற்றி வாசிப்பதில் அதிக ஆர்வம்.
7.தமிழ்ச்சினிமா இசை?
இளையராஜா மட்டுமே.
ஏனெனில் தமிழ்ச்சினிமா இசை என்பது பாடல்கள் மட்டுமல்ல. பின்னணி இசை,படத்தின் வெற்றிக்கு அதன் பங்கு,இசையின் வடிவங்களான செவ்வியல்,நாட்டுப்புற,மேலைப் பாணி ஆகியவற்றைப் பொருத்தமாகக் கலந்து ஜனரஞ்சகமாக்கல் ஆகிய காரணிகளைக் கொண்டதால் இப்படியொரு எண்ணம்.
8) தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மொழியின் முழு அர்த்தம் தெரியாமல் படம் பார்ப்பதில் விருப்பமில்லை. இருந்தும் தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். ஹிந்தியில் 'தாரே ஜமீன் பார்' கலங்க வைத்த படம். ஆங்கிலத்தில் 'காட்ஃபாதர்' பன்ச் டயலாக்குகளின் ஃபாதர் எனலாம். தெலுங்கில் 'கோதாவரி' நதி போன்ற தெளிவான,அழகான படம். 'ஆனந்த்' படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா இல்லை.(அப்பாடா 4 கேள்விக்கு பதில் சொல்றதுல இருந்து எஸ்கேப்பு)
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்ச்சினிமாக்கள் தொழில்நுட்பங்களில் காட்டும் அக்கறையை கதையில்,திரைக்கதையில் காட்டாதவரை விளங்காது.கதையை யோசிக்கிறதுக்கு முன்னாடியே கோடியில பட்ஜெட் போடுறானுங்க.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு முதலில் கஷ்டமாகத்தானிருக்கும். பின் புத்தகங்கள் படிக்க அதிக நேரம் கிடைத்ததே என மகிழ்வேன்.
தமிழர்களுக்கு (அப்போ நான் தமிழன் கிடையாதா?) என்ன ஆகும்...? யப்பாஆஆஆ இதுக்கு யோசிச்சா தலையே வெடிச்சுடும் போல இருக்கு.
நான் அழைக்க இருப்பவர்கள் இத்துறையில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் என நினைக்கிறேன். எனினும் அவர்கள் கருத்துக்களும் தேவை அல்லவா... 1.இரா.வசந்தகுமார் 2.ஹேமா