Tuesday, June 28, 2011

வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் பட்ட பாடு

       முதல் படத்தில் இருப்பவர் கணேஷ்...போன வார நாட்களில் ஒரு நாள் மாலை அவனுக்கு ஃபோன் செய்து ‘கணேஷ்...! கால்கிலோ கறி எடுத்துருக்கேன். தனியா சாப்பிட மனசு கேக்கலை. வர்றியா’ன்னு கேட்டேன். அவனும் நம்பி வந்துட்டான். அவன் பேசிக்கா கன்னடமொழி பேசுபவன். தமிழும் தெரியும்(எழுத்துக்கூட்டி வாசிக்கவும் செய்வான்). வெங்காயம், பூண்டினை அவனருகில் தள்ளி, டிவிடியை ஆன் செய்தேன். என்னிடம் இருப்பது எல்லாம் 80ஸ் ஹிட்ஸ் மூவிதான். கொஞ்சமே கொஞ்சம் புதிய படங்களும் இருந்தன. இருவரும் ரசனையும் இங்கு ஒத்துப் போகலாமென்றெண்ணி, ‘ராமன் தேடிய சீதை’யைத் திரையிட்டேன்.அவன் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஆயுதத்தை மெதுவாக எடுத்து வைத்தேன்.கொஞ்சம் அலட்சியமாகப் பார்த்துவிட்டுப் படம் பார்க்க ஆரம்பித்தான். நான் எனது வேலையை ஆரம்பித்தேன். 8B Steadler பென்சிலில் கேர்ட்ரிட்ஜ் பேப்பரில் சும்மா கிறுக்குவது கூடச் சுகம்தான். இப்போது சப்ஜெக்ட் வேறு கிடைத்துவிட்டது. பத்து நிமிடங்களுக்குள்ளாக ஓரளவு முடித்துவிட்டேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் அடர்த்தியான ஏரியாக்களையும் பூர்த்தி செய்திட, இப்படம் உருவாகிவிட்டது.சமீப காலமாக நான் செய்த போர்ட்ரெய்ட்களில் எனக்குப் பிடித்தது இது. கேரக்டரோடு, உருவ அமைப்பும் 90 சதம் பொருந்திப் போனதில் மகிழ்ச்சி...


     
   இதோ இந்தப் படத்துல இருக்கிறவரு மாரிமுத்து. நான் இந்தோரில் வேலை செய்கையில் பழக்கம். இவர் சென்னையில் வேலையிலிருக்கிறார். ஆறு மாத கால டெபுடேஷனுக்காக பெங்களூர் ஸ்டேஷன் வந்திறங்கினார். வெகு நாட்களாகக் கூப்பிட்டும் வராதவர், கடந்த சனியன்று என் ஸ்டூடியோவுக்கு (வேறொண்ணுமில்ல, என் வீடுதான் :)  ) வந்தார். வழக்கம்போல் விருந்து, அப்புறம் டிவிடி படம்(வீடியோ பாடல்கள்-ராஜா-ஜானகி ஹிட்ஸ்)...வழக்கம்போல் ஸ்கெட்ச்சிங்...
முதல் இரண்டு அட்டெம்டுகள் மோசம். இது பரவாயில்லை. ஆனாலும் அவர் போல் இல்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்திருக்கிறது...அடுத்தவாரம் வருவதாகச் சொல்லி இருக்கிறார். பார்க்கலாம். பெட்டராக வரவைக்கலாம்....

Monday, June 27, 2011

லீலா பேலஸ் கார்டன் வியூ

 லீலா பேலஸ் கார்டன் வியூ-260611

     கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் பதிவர் காலப்பயணி வசந்துடன் சென்று வந்தேன். பின் அந்த வழியாக அடிக்கடிக் கடந்தாலும் அதற்குள் நுழையவில்லை. நேற்று பென்சில் ஜாம்மர்ஸ் சங்கம இடம் அங்குதான். வழக்கம் போல தாமதமாகவே சென்றேன். உள்ளே பாரிஷ்டா காபி ஷாப்தான் மீட்டிங் பாயின்ட். ஒரு காபி 86  ரூபாய். ஹ்ம். காபி ஷாப்பின் நாற்காலி, மீசைகள் உட்புறமும், வெளியில் தோட்டத்திலும் போடப் பட்டிருந்தன. தோட்டத்தைப் பார்த்தவாறு பட்டறையைப் போட்டாச்சு...:)

         பெயர் தெரியாத தாவரங்களும், தென்னை மரங்களும் மறைத்தது போக தெரிந்த உள் கட்டிடத்தின் மேல் பகுதிக் குறையை வரைந்தேன். பால் பாயின்ட் பென் இன் A5  சைஸ் ஸ்கெட்ச் புக்.

Thursday, June 23, 2011

வண்ணமயமான தனிமை

       வெகுநாட்களுக்கு முன்பு வரையநினைத்தது. அப்போது பென்சிலில் மட்டும் வரைந்து விட்டேன். (இங்கே இருக்கிறது). K.B. Kulkarni என்ற ஓவியரின் படைப்பைப் பிரதியெடுத்தது. இது.அதன் பின் அந்தப் புத்தகத்தை சக ஜாம்மர்(பென்சில் ஜாம்மர்) வாங்கிச் சென்றுவிட்டார்.நானும் அப்படியே விட்டுவிட்டேன். இந்தவாரம்தான் என் கைக்குக் கிடைத்தது. இதுவரை ‘லூஸ் பெயிண்டிங்காகப்’ பண்ணிக் கொண்டிருந்தேன். இதில் வாட்டர்கலரில் கொஞ்சம் ‘டைட்டாக’ ட்ரை செய்தேன். பென்சிலில் மூன்று அல்லது நான்கு மணி நேரங்களில் செய்த வேலை வாட்டர்கலரில் முக்கால் மணி நேரத்தில் முடிந்துவிட்டது. ரொம்ப கண்ட்ரோல்டாக பெயிண்டிங் செய்தேன்.அளவு: A5 size (என் ஸ்கெட்ச் புக்கில்தான்)....

     உங்கள் பார்வைக்கு எனது இப்புதிய முயற்சி... எனக்குப் பிடித்திருக்கிறது. இதுபோல் இன்னும் தொடரவேண்டுமென்பது என் எண்ணம்...
  Work in Process....

 

Tuesday, June 21, 2011

மனசுக்குப் பிடிச்சது மட்டும்-100வது பதிவு...

    
       மூன்று வருடங்களுக்கு முன் கிறுக்க ஆரம்பித்தேன் வலைப்பூவில். அந்தா இந்தாவென இப்போது 100வது பதிவு வந்துவிட்டது.பதிவெழுதுறேன் பேர்வழின்னு முன்னெல்லாம் யோசிக்காமக் கிறுக்குவேன். இப்ப கொஞ்சம் யோசிச்சுக் கிறுக்குறேன். எண்ணிக்கை முக்கியமில்லையெனினும், இவ்வலைப்பதிவு எனது பயிற்சிகளை,முயற்சிகளைப் பதிந்துவைக்க ஒரு நல்ல இடமாக இருப்பதால் எண்ணுவது கொஞ்சம் அவசியமாக இருக்கிறது.

      உங்க மனசுக்குப் பிடிக்குதோ, இல்லையோ, ஃபேசுபுக், டுவிட்டர், பஸ்களின் அணிவகுப்புகளில் பதிவுலகம் சோரம் போச்சோ இல்லையோ, இன்னமும் என் மனசுக்குப் பிடிச்சதா இருக்கு பதிவு போடுறது:)
   
    ஒரு சின்ன மகிழ்ச்சியோட, இதுவரைக்கும், வாழ்த்தியும்,ரசித்தும் வந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...



      டந்த ஞாயிற்றுக்கிழமை பென்சில் ஜாம்மர்ஸின் இலக்கு, பெங்களூர் MG சாலையை அடுத்துள்ள கமர்ஷியல் ஸ்ட்ரீட். பத்துமணிக்குமேல் பரபரப்பாக இருக்குமென்பதால், வெள்ளனவே அங்க போய்ட்டோம். இந்தவாரம் நான் தான் ஃபர்ஸ்ட்.8.30க்கெல்லாம் அங்க இருந்தேன். முதலில் ஒரு கட்டிடம், மாருதி ஸாரி உத்யோக் லிமிட்டெட். நான் வரைய ஆரம்பிக்கிறப்போ பூட்டியிருந்தது. ஷட்டர்கிட்ட நான் வர்றப்போ, கடையைத் தொறந்திட்டாங்க. கட்டிட்ங்கள் வரைவதில் இருக்கும் பெர்ஸ்பெக்டிவ் சவால் வேறெதிலும் கிடையாது. பால்பாயிண்ட் பென்னில் வரைந்து பழகுவதால் கொஞ்சம் கவனத்தோடுதான் ஆரம்பித்தேன். மூன்று இடங்களில் படிக்கட்டுகள்.ஓவரா இம்சையைக் கூட்டிருச்சு.ஒருவழியா பத்தரைக்கிட்ட முடிச்சிட்டேன்.(90 சதவீதம்). மீதி வீட்டில் வந்து ஃபைனல் டச்சப் கொடுத்தேன்.
  கன்னட எழுத்துக்களை அங்கேயே எழுதியிருக்கலாம், விட்டுவிட்டேன். அதான் ஜிலேபியாப் பிச்சுப் போட்டிருப்பேன்....


                டுத்து இன்னும் கொஞ்சம் முன்னேறி, வீதிக்குள்ளாக நுழைந்துவிட்டோம். எல்லோருக்கும், பழைய , சற்று இடிபாடுள்ள கட்டிடங்கள்தான் இலக்கு. நான் மட்டுமா அதில் விதிவிலக்கு? அப்படிக் கிடைத்ததுதான் இந்த ஹேண்ட்லூம் செண்டர்.இந்நேரத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கடைகளும் திறந்துவிட்டிருந்தன.அகலம் குறைந்த கடைகளின் முன்னே, வாயிலையும் முழுதும் அடைக்காமல், அவர்கள் வியாபாரமும் பாதிக்கப்படாமல் எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். அமர்ந்தும், நின்றும் வரைந்ததில் ‘பெர்ஸ்பெக்டிவ்’ கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓகே ரகம்தான்.கொஞ்சம் ஹோம் ஒர்க் தேவை...


    நூறாவது பதிவுக்கு, புது டெம்ப்ளேட் போடலாம்னு இருந்தேன். ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கு. மெதுவாப் பார்த்துக்கலாம்.(எல்லோரும் பஸ்ஸிலதான் வந்து ஏறுறாங்க...:)  )


   டிஸ்கி 1: எப்பவும் அரைகுறையா மொபைல்லதான் படம் எடுத்துப் போடுவேன். ஸ்பெஷல் பதிவுன்றதால, மெனக்கெட்டு ஸ்கேன் பண்ணிப் போட்டேன். ஒரு நல்ல , சீப்பான ஸ்கேன்னர் தேடிட்ட்ட்ட்ட்ட்டேஏ இருக்கேன். ஆப்புட மாட்டேங்க்யுது. எப்சன்ல ஒண்ணு சொல்றான். ஆத்தி நாலாயிர்ரூவா ஆகுது.பாப்போம்.

டிஸ்கி 2: புது அறைக்கு தனிக்குடித்தனம் வந்துவிட்டேன்.(பேச்சிலர் தனியா வீடு எடுத்துப் போறதுதான உண்மையிலேயே தனிக்குடித்தனம். ம்ஹ்ம். இது தெரியாம தப்பாப் பேசிட்டு திரியுறாய்ங்க.) வீடு ஓரளவு வசதியாக உள்ளது. இனிமேல்  வாட்டர் கலர் முயற்சிகள் அடிக்கடி வருமென நம்புகிறேன். எல்லோர்கிட்டயும் ஓப்பனா சொல்லிட்டா, அதுக்காகவாவது பண்ணுவேன்னு ஒரு ஆசைதான்....

Saturday, June 18, 2011

திகிலான செங்கல்பட்டு பயணம் 120611

    கடந்த 12ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக செங்கல்பட்டு சென்றிருந்தேன்.( என்னைக்குத்தான் என் திருமணத்திற்காகப் போகப் போறேனோ? :) )  சனி இரவு கிளம்பி ஞாயிறு காலை காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு சென்றடைந்தேன். 8 முதல் 8.30 மணி நேரம்தான். திருப்பூட்டு முடிந்து இட்லி, செட் தோசை, பூரி, பொங்கல், பஞ்சாமிர்தம் மட்டும் சாப்பிட்டுவிட்டு உடனே பெங்களூர் திரும்பிவிட்டேன்...

    அந்தப் பயணத்திற்கான நினைவுக் கோடுகள் இதோ...
முதல் ஸ்கெட்ச் செங்கல்பட்டு அவுட்டோரில் ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது வரைந்தது.

 இது வெல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்தபோது சுற்றும் முற்றும் பார்த்து வரைந்தவை. அந்தக் குண்டு மனிதர் இண்டெரெஸ்டிங் சப்ஜெக்டாகத் தெரிந்தார். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்த, வெள்ளைச் சேலை மூதாட்டி ஒருவர் ‘சித்திரம் பேசுதடி’ பாட்டியை நினைவூட்டினார்....வரைந்து முடிப்பதற்குள் பேருந்த் கிளம்பிவிட்டது (வேலூரில் சாப்பிட்ட முட்டைப் ப்ரியாணி அருமை. கத்தரிக்காய் தாளிச்சா பிரமாதம்)





இங்கு உள்ள படத்தின் மேற்பகுதி, எனது இருக்கையில் இருந்து பேருந்தின் மேற்புறம் பார்த்து வரைந்தது. பேருந்தில் கண்டக்டர் அமரும் ஒற்றை இருக்கைக்குப் பின்புறம் உள்ள இருக்கையில் சன்னலோரம் அமர்ந்திருந்தேன். வெல்லூரில் ஏறியவுடன் தூங்கிவிட்டேன். இரு மணி நேரங்களுக்குப் பிறகு முழித்தேன். பக்கத்தில் இருந்தவர், தோளில் அவர் கைகளால் இடித்துச் சைகை காட்டினார். அவர் காட்டிய இடம் ஓட்டுநரின் இருக்கை. அங்கு பார்த்தால் , வண்டியை ஓட்டியவாறு சற்றுக் கண்ணயர்ந்திருந்தார் ஓட்டுநர். எனது தூக்கமெல்லாம் பக் கென்று பறந்தோடிவிட்டது. எஞ்சினின் மேல் அமர்ந்திருந்த ஒரு பயணியிடம் , அவரைக் கவனிக்கச் சொல்லி கண்ணாட்டினேன். அவர் திரும்பிப் பார்க்கையில் , சற்றுச் சுதாரித்த ஓட்டுநர், ‘என்ன்?’ என்பதுபோல் தலையாட்டினார். போதும்டா சாமி என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்...பிறகு எனக்கெப்படித் தூக்கம் வரும். எனது ஸ்கெட்ச் புக்கைக் கையிலெடுத்தேன். எனக்கு முன் மேற்புறம் ஓடாத டிவி பெட்டி இருந்தது. வரைய ஆரம்பித்தேன். அதனருகில் சிடி ப்ளேயர் வைக்கும் பெட்டியினுள்ளிருந்தது வாட்டர் பாட்டில்கள்தான்....:)
இப்படத்தின் கீழே உள்ள படத்தில் எனக்கு நேராக முன்புறம் உள்ள இடத்தை வரைந்துள்ளேன். இப்படத்திலுள்ள வரையும் கை என்னுடையதுதான்....:)))

Wednesday, June 1, 2011

இசையென்னும் தவம்-இளையராஜா-டாப் டென் -வாழ்த்து-பென்சில்

   ஜூன் இரண்டாம் நாள் பிறந்தநாள் காணும் இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் நிறைய நிறைய எதிர்பார்க்கிறேன். இந்த ஒரு விஷயத்தில்  மட்டும் என் பேராசையைக் கட்டுப் படுத்த முடியாது....:)

அவர் பாடல்களை வரிசைப் படுத்துவது இயலாது.சட்டெனத் தோன்றியதில் எனக்குப் பிடித்த டாப் டென்...
1.மாலையில் யாரோ மனதோடு பேச...(சத்ரியன்)
2.முத்துமணி முத்துமணி (அதர்மம்)
3.தென்றல் வந்து தீண்டும்போது என்ன(அவதாரம்)
4.எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்(பட்டாக்கத்தி பைரவன்)
5.கண்ணன் ஒரு கைக்குழந்தை(பத்ரகாளி)
6.ஆகாசம் ஏனாதிதோ அனுராகம் ஆனாதிதே(தெலுங்கு-Nireekshana)-சங்கத்தில் பாடாத கவிதையின் சுந்தரத் தெலுங்கு வடிவம்.
7.ஆராரோ பாட்டுப் பாட நீயும் தாயில்லை(பொண்டாட்டி தேவை-(இது எனக்குத் தேவைதான் இப்போ :)   ))
8.கண்மணி நீ வரக் காத்திருந்தேன்(தென்றலே என்னைத் தொடு)
9.முத்தம்மா முத்து முத்து முத்தாளம்மா(தந்துவிட்டேன் என்னை)
10.விழியிலே மணி விழியிலே(நூறாவது நாள்)-ஜோதியல்லி(கீதா-கன்னடம்)....

   ஹ்ம்.... பட்டியல் தொடர்ந்துகிட்டே இருக்கு....
இந்த எல்லாப் பாடல்களையும் கேட்டுக்கிட்டே பண்ண படம் இந்த ஓவியம். பென்சிலில் வரைந்தது. ஆனாலும் ரப்பர் உபயோகிக்கவில்லை.கார்ட்ரிட்ஜ் பேப்பர்....