Monday, October 25, 2010

சென்னையில் ஒரு நட்பு மழைக்காலம்...

        னிக்கிழமை காலையில் நான் இறங்கிய இடம் கீழ்ப்பாக்கம். போக வேண்டியது டி.நகர். அங்குதான் அருணா ஹோட்டலில் ரூம் சொல்லி இருப்பதாகச் சொல்லி இருந்தான் நண்பனும், ஞாயிறன்று நடக்கவிருந்த திருமண வரவேற்பின் நாயகனுமான அவன். ‘டி. நகர்ல போய் அருணா ஹோட்டல் எங்க இருக்கும்னு கேட்டா, குழந்தைகூட வழி சொல்லும்’ எனச் சொல்லியிருந்தான். வந்திறங்கிய நேரத்தில் குழந்தைகள் எதுவும் சிக்காததால், ஆட்டோக் காரர்களை நாடினேன்.70 ரூபாய்க்குப் பேரம் படிந்ததில் அருணா ஹோட்டல் வந்து சேர்ந்து, ரிஷப்சனில் இருப்பவரிடம், ‘கதிரவன் சொன்னாராமே, ரூம் சொல்லியிருக்குன்னு’. ‘இல்லை’ என்ற பதிலில் அதிகம் ஏமாற்றமடையாமல் அருகிலேயே ‘ஊர்வசி இண்டர்நேஷனில்’ ஒரு அறை எடுத்தேன்.பாண்டிபஜாரில் ராஜா பகதூர் ஸ்ட்ரீட்டில் இருந்தது ஹோட்டல்.அப்படியொன்றும் இண்டர்நேஷனல் லுக் தெரியவில்லை. பழைய ஏசியானது, அதன் முன்புற ப்ளேடுகள் இருந்த பகுதி முழுவதும் உடைக்கப்பட்டு சதுரக் குகைதான் தெரிந்தது.தேவைப்பட்டா உள்ள தண்ணி வச்சுட்டு ‘ஐஸ்வாட்டரா’ எடுத்துக்கலாம் போல.வெளியில் தெரிந்த வெக்கைக்கு இது தேவலாம். ஒரு தூக்கத்தில் முற்பகலைக் கழித்திருந்த வேளையில் மகேஷிடமிருந்து அழைப்பு. ஒரு மணிக்கு நுங்கம்பாக்கம் ஹைரோடில் பிட்சா கார்னரில் சந்திப்பு. பதிவுலகத் தளபதி கார்க்கியும் தனது காலண்டரில் கோடு கிறுக்கியிருந்த சனிக்கிழமையின் இறுக்கத்தை எனக்காகத் தளர்த்தி விட்டு வருவதாகச் சொல்லி இருந்தார்.


     டல் முழுவதும் ஒரு வித உப்புத்தனமான வியர்வை கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்க, நசநசப்போடு ’பிட்சா கார்னரில்’ படியிறங்கினேன்.(பேஸ்மெண்ட்லதான் இருக்கு. அதான்). சனிக்கிழமை முற்பகலில் அதிகம் காதலர்கள் கூட்டம் இருக்கும் என்ற நியதியைத் தொலைத்துவிட்டிருந்தது பிட்சா கார்னர். மொத்தம் 6 பேர்தான். முன்று சோடி. மூன்றில் ஒரு சோடி கார்க்கி-மகேஷ். தொப்பியில்லாமல் இருந்த கார்க்கி பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம் போல இருந்தார். என் முகமாற்ற்த்தைக் கண்டு தொப்பி சூடிக் கொண்டார்.பின்னணியில் வெகு சோபையாக ஹிந்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.என் வாழ்க்கையில் முதல்தடவையாக பிட்சா கார்னர் சென்றதால் குச்சுக்குள் இருக்கும் குமரிப் பெண்ணாய் உட்கார்ந்திருந்தேன். இருவரும் ஏதேதோ என் காதுக்குள் நுழையாத பெய்ர்களாக ஆர்டர் பண்ணினர்.
நம்மூர் வர்க்கி ரொட்டி போல் ஏதோவொரு வஸ்து வந்திருந்தது. டீயில் முக்கித் தின்றால் நன்றாக இருக்குமென எண்ணி அவ்வெண்ணத்தை மனதிற்குள்ளேயே அடக்கினேன். மகேஷ் அவனது கேமராவை எடுத்து வந்திருந்தான். அதனால் பேச்சு ஃபோட்டோ எடுப்பதில் ஆரம்பித்து, பதிவு, ட்விட்டர், மொக்கை, தோழி அப்டேட்ஸ் எனப் பல்வேறு திசைகளில் பயணித்தது. மகேஷ் ‘கூல் கேட்’ போல அதிகம் பேசாமல் இருந்தான். மகேஷைக் கூட முன்பிரு முறை பார்த்திருக்கிறேன். கார்க்கிதான் சிக்க்வேயில்லை. ஃபோனில் பேசுவதோடு சரி. சென்ற வாரம் பெங்களூர் வந்த போதுகூட அவரது கால்ஷீட் ஃபுல். பார்க்க முடியவில்லை.நேரில் கார்க்கி வழக்கம்போல சரவெடிதான். ட்விட்டரில் பேசுவதுமாதிரியேதான் பேசிக்கொண்டிருந்தோம்.புதிதாகப் பழகிய உணர்வே இல்லை. திடீரென பத்து பெண்கள் கறுப்பு அங்கிக்குள் பிட்சா கார்னருக்குள் வந்தனர். கலகல பேச்சும், பாட்டுமாய்க் களித்தனர். ஓரமாக அவர்களையும் ரசித்துக் கொண்டோம்.விதவிதமான பீட்சாக்கள் வந்திருந்தன. உண்டதில் அவை அனைத்துமே எனக்கு ப்ரெட் ஆம்லேட் போல்த்தான் தோன்றியது.ஒன்றரை மணி நேரங்கள் இனிப்பாகக் கழிந்திருந்தன. வெளியே வந்து மகேஷின் கேமராவுக்குத் தீனி போட ஆரம்பித்தோம். இயல்பாக இருங்கள் எனச் சொல்லிச் சொல்லி எங்களின் இயல்பைத் தொலைத்த கணங்களைப் படமாக்கிப் பத்திரப் படுத்திக் கொண்டான். அடுத்த நாள் காலை யோக நிலையில் சந்திக்கத் திட்டம். இன்றே வருவதாகச் சொல்லியிருந்து கடைசி நேரத்தில் கல்லூரியில் கடலை போடச் சென்ற வானவில்வீதியாரையும் அடுத்த சந்திப்பில் சந்திப்பதாக முடிவெடுத்துப் பிரிந்தோம்.

     ட்டோவில் ஏறி ‘அருணா ஹோட்டல்’(ஊர்வசி இண்டர்நேஷனல் கண்டிப்பாக இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது என் திட எண்ணம்) விடப்பா என்றேன். டி நகர் சரவணா ஸ்டோர்ஸ் முன்பு தீபாவளி ஷாப்பிங்கில் இருந்த மக்கள் நெரிசலைக் கடந்து, ச்வுத் உஸ்மான் ரோட்டிலிருக்கும் ‘அருணா ஹோட்டல்’ முன்பு வந்து நின்றபோது ‘ஙே’ வென விழித்தேன். இது வேறு அருணா என்பதும், எனது நண்பன் அறைக்குச் சொல்லியிருந்ததும் இதுவேயென ‘ஒன்றும் ஒன்றும் இரண்டுமாக’க் கணக்குப் போட்டுப் புரிந்து கொண்டேன். முன்னரே ரவிஷங்கர் சாரிடமும், கோபிநாத்திடமும் பேசி இருந்தேன். அருணா ஹோட்டலில் சனி மாலை ஏகபோக இசைச் சந்திப்பு நடத்தலாமென. தவறாக வந்ததில் ஒரு நன்மை. சந்திப்பு நடக்கவிருந்த இடமாவது அறிந்துகொண்டோம் என்ற திருப்தியில் எனது ஹோட்டல் சென்றேன்.உண்ட மயக்கம் உசுப்பேற்ற, கையெட்டாத தூரத்தில் மொபைலுக்குச் சிறிது மின்சாரச் சோறளித்தவாறே தூங்கினேன்.


    ப்போது கண்விழித்தேன் எனத் தெரியவில்லை. நேரம் 5.30. அடடா... 5 மணிக்கு அவர்களைச சந்திப்பதாக ஏற்பாடானதே. எனப் பதற்றத்தோடு மொபைலை அணுகினால், அது 17 மிஸ்டு கால்களைத் தரிசனம் காட்டி என் படபடப்பை அதிகப் படுத்தியது. ரவிஷங்கர், கோபி இருவருக்கும் ஃபோன் செய்தேன். இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்ததில்லை. அருணா ஹோட்டல் அருகில் இருப்பதாகக் கூறினர். அவசர மன்னிப்புக்களை அள்ளிவிட்டுக் கொண்டே கிளம்பினேன். இருபது நிமிடங்களில் டி நகர் ட்ராஃபிக்கைக் கடந்து அருணா ஹோட்டல் வந்தால் , ரவி ஷங்கர் சார் வந்து விட்டிருந்தார். சரி கோபியை அழைக்கலாம் என அழைத்தால் ‘பச்சை டி ஷர்ட்டில்’ அருணா ஹோட்டலின் முன்பு இருப்பதாகச் சொன்னார். நாங்களும் அருணா ஹோட்டல் முன்புதான் இருக்கிறோம். எனது மரமண்டைக்குச் சற்றுத் தாமதமாக உரைத்தது. பின் தெளிவாகக் கேட்டேன் எந்த அருணா என்று. கூலாகச் சொன்னார் கோபி பாண்டிபஜார் அருணா என. அடப்பாவி அங்க இருந்து இப்பத்தான் இங்க வந்தேன். மறுபடியும் முதல்லேருந்தா எனப்புலம்பியவாறே. கோபியை இங்கு அழைத்தேன். நல்ல வேளை கோபி மனதிற்குள் என்னைத் திட்டியது என் மொபைலில் கேட்கவில்லை. டெக்னாலஜி வாழ்க.

   
       ந்தா இந்தாவெனப் போக்குக்காட்டிய சந்திப்பு ஆறேகால் மணிக்கு டி நகர் அருணா ஹோட்டலில் இடது புற பாரில் துவங்கியது. ‘என்ன சார் இவ்ளோ நாய்ஸ்?’ என்றேன் ரவிசாரிடம். இது ஒரு ஹை ப்ரொஃபைல் டாஸ்மாக்தான் என்றார். இங்கு சிறப்பே சைட் டிஷ்தான் எனக் கொசுறையும் உதிர்த்தார். ரவி சாரை இதற்கு முன் பார்த்தது இரு வருடங்களுக்கு முன்பு. அப்போது கோடம்பாக்கத்திலுள்ள துளசி பார்க்கில் உரையாடினோம்.சற்று மெலிந்திருந்தாற் போல் தோன்றியது. முன் கோபி போல் அவரது எழுத்தில் தான் சிறிது கடினம் இருக்கும். நேரில் தோளில் கை போட்டுப் பேசும் தோழனின் அருகாமைதான் வரும். இளையராஜாவைப் பற்றிச் சுற்றியே சுழலும் பேச்சுக்கள். நான் முதலில் சாரைச் சந்தித்தபோதே அவர் என்னை முதன்முதலில் அழைத்துச் சென்ற இடம் இளையராஜா வீடுதான்.(உள்ளே எல்லாம் போகவில்லை). கோபி இதுவரை பார்த்ததில்லை.ச்சாட்டிலும், ஃபோனிலும்தான் பேச்சு. சற்றுத் துறுதுறுவென அக்மார்க் சென்னைக்காரனாய் வந்திருந்தார். பேச்சிலும் சென்னை அப்படியே.


       வரவர் விருப்ப பானங்களை ஆர்டர் செய்துவிட்டுப் பேச்சை ஆரம்பித்திருந்தோம். முதலில் பேச்சு ரவிசாரின் முந்தைய நாள் பதிவைப் பற்றித்தான் இருந்தது. ராஜா பாடல்களின் ஆரம்பகட்ட ‘ஒலிப்பதிவுத் தரம்’ பற்றிக் குறைப்பட்டுக் கொண்டோம். பின் ஒவ்வொரு பாடலின், இடைஇசையைப் பற்றியும், ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பற்றியும் தொடர்ந்தோம். இடையில் கோபி ‘ரசவடை’ வராதது பற்றி சர்வரிடம் குறைபட்டுக் கொண்டார்.எனக்கும் ஏமாற்றமே. முழுக்க முழுக்கப் பேச்சு இளையராஜா பற்றியே இருந்தது. ஆனால் ஒரு தெளிவில்லாமல் போய்விட்டது. அங்குமிங்குமாக அலைபாய்ந்து கொண்டிரு்ந்தது. அடுத்த சந்திப்பில் திட்டவட்டமான அஜண்டாவோடுதான் ரவி சாரைப் பார்க்க முடிவெடுத்துக் கொண்டேன். மூன்றரை மணி நேரங்கள் ஓடியதே தெரியவில்லை.விடைபெற்றுக் கொள்ளும் நேரம் வந்திரு்ந்தது. ரவி சார் நான் படிப்பதற்காக ஒரு பை நிறையப் புத்தகங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
வீடு வந்துதான் பார்த்தேன்.சுநதர ராமசாமி,ஆதவன்,மாலன்,கனிமொழி இன்னும் சில புத்தகங்களாக நிரம்பியிருந்தன. அடுத்த வார தீபாவளி லீவில் படித்துவிட வேண்டும். சுந்தரராமசாமி படிக்க நினைத்திருந்தேன்.கேட்காமலேயே கையில் கொடுத்த ரவிஷங்கருக்கு நன்றிகள்.


    ஞாயிறன்று காலை மறுபடியும் மகேஷ், கார்க்கியை, கார்த்தியுடன் சந்திப்பதாக இருந்தது.ஆனால் மறுபடியும் கார்த்தி வரமுடியவில்லை. பதினொரு மணிக்குத் திட்டமிட்டிரு்ந்த சந்திப்பு ஒரு மணிக்குத்தான் அரங்கேறியது. சந்தித்த களம் கோடம்பாக்கம் துளசி பார்க். பேருதான் பார்க். ஆனா நாங்க போன இடத்துக்கு, ஹோட்டல் பேர்ல கடைசி எழுத்து தேவையில்லாத ஒன்று :-) கார்க்கி அவரின் நண்பர் வினோத்துடன் வந்திருந்தார்.ஆள் பார்க்க கொஞ்சம் ஹீரோ போலவும், கொஞ்சம் வில்லன் போலவும் தெரிந்தார்.கார்க்கி பாருக்குக் கூட்டி வருவதால் ஒருவேளை இவர்தான் ஏழுவோ எனவும் நினைத்துத் தொலைத்திருந்தேன்.ஆனால் அவர் அப்படியில்லை எனப் பின் உணர்ந்தேன். நான் கேட்ட சரக்குகள் சென்னையில் இல்லை. :-( தமிழக அரசு ‘குடி’ மக்களின் நலம் பேணாத அரசு எனக் கேள்விப்பட்டதை அன்றுதான் உணர்ந்தேன்.மருந்துக் கடைகளில் போனால் நாம் கேட்ட மருந்து இல்லாமல் போனால் ‘இல்லைங்க அதே மருந்து இன்னொரு கம்பெனி பேர்ல இருக்கு. வாங்கிக்குங்க’ன்னு சொல்வார்களே. அது போல நான் கேட்டதற்கு ஈக்வலண்டான ஒரு சரக்கு வாங்கிக் கொண்டேன்.இன்றைய பேச்சு முழுவதும் சினிமா, கிரிக்கெட் எனச் சுற்றியது. பத்து நிமிடம் மகேஷ் பேசவே இல்லை. என்னடாவென்று பார்த்தால் ‘சன் மியூசிக்கில்’ வந்த எமி ஜாக்சனுடன் கனவு டூயட் பாடிக் கொண்டிருந்தான்.மூன்று மணிக்கெல்லாம் கலைந்து விட்டோம்.

    வானவில்வீதி கார்த்திக்கிடம் தனியாக மாலை டி நகரில் சந்திக்கலாம் எனச் சொல்லியிருந்தேன். 6 மணிக்கு மொபைலில் கூப்பிட்டான். தூக்கத்தில் எடுக்க வில்லை. அதற்குள் நான் செல்ல வேண்டிய திருமண வரவேற்புக்குச் சென்றுவிட்டேன். மறுபடி அவனை அழைத்தால் ‘மொபைல்’ ஆஃப் ஆகியுள்ளது. கார்த்திக்கிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்காகவெல்லாம் கார்த்தி கோபித்துக் கொண்டு பதிவுலக நாட்டாமைகளிடம் ப்ராது கொடுக்க் மாட்டான் என நம்புகிறேன்.


டிஸ்கி: சென்னை வெயிலும் வெக்கையும்தான் தாங்கமுடியவில்லை. மற்றபடி வெகுவாக ஆனந்தித்திருந்தேன். :) சந்திப்பை வெற்றிகரமாக நடத்த உதவிய நண்பர்களுக்கு நன்றிகள். திட்டங்களில் என்னால் ஏற்பட்ட குழறுபடிகளைப் பொறுத்தருளியத்ற்கும் நன்றிகள்...

11 comments:

  1. அடப்பாவி மாப்பி...எங்க கூட தான் கூட்டமுன்னு சொன்னாய்...பார்த்த இம்புட்டு பேரை பார்த்துட்டு போயிருக்க...கலக்கல் மாப்பி ;))

    ReplyDelete
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    ReplyDelete
  3. ஆமா.. சந்திப்பு நிறைவு ஏற்படத்தவில்லை.

    வெகு தூரத்திலிருந்து நானும்,கோபியும் வருவதால் திரும்பி போகும் கவலைகள் வாட்டுது.

    பதிவுலக விஷயங்கள் நிறைய பேச வேண்டும் என்று வந்தேன். மறந்துவிட்டேன்.

    மொத்ததில் சந்தோஷம்தான்.

    ReplyDelete
  4. >>என் வாழ்க்கையில் முதல்தடவையாக பிட்சா கார்னர் சென்றதால் குச்சுக்குள் இருக்கும் குமரிப் பெண்ணாய் உட்கார்ந்திருந்தேன்
    >>இதற்காகவெல்லாம் கார்த்தி கோபித்துக் கொண்டு பதிவுலக நாட்டாமைகளிடம் ப்ராது கொடுக்க் மாட்டான் என நம்புகிறேன்.

    ROFL

    ReplyDelete
  5. // என் வாழ்க்கையில் முதல்தடவையாக பிட்சா கார்னர் சென்றதால் குச்சுக்குள் இருக்கும் குமரிப் பெண்ணாய் உட்கார்ந்திருந்தேன் //

    சத்தியமா முடியல....

    ஆமா நீங்க அடிச்ச அந்த ரக ஜோக்லாம் அப்டேட் பண்ணலியா?

    ReplyDelete
  6. @கோபிநாத்...
    மாப்பி... ப்ளான் பண்ணாம எதுவுமே பண்ணக்கூடாது... :-)

    @ரவிஷங்கர்...
    நன்றி சார்.அடுத்த சந்திப்பில் ஜமாய்த்திடலாம்.

    ReplyDelete
  7. @கோசி...
    ஹி...ஹி... நன்றி கோசி...

    @மகேஷ்...

    நன்றி மகேஷ்... அடப்பாவி நானா அந்த ஜோக் சொன்னேன்... :) (எங்கப்பன் குதிருக்குள் இல்லை)

    ReplyDelete
  8. There is no way i am going to accept this. Hope the comrades will stand by me in my struggle to stamp out the arrogance from tamil blogosphere. ;-)

    ReplyDelete
  9. Hehe jokes apart, there's no need for you to be sorry about. The things me and magesh planned didn't work out and its a shame that i couldn't meet you. Blame my semester exams. Lets meet sometime soon. :-)

    ReplyDelete
  10. ஆகா இன்று தான் மழையில் நனைந்தேன் ;) சூப்பர்

    ReplyDelete
  11. @கார்த்திக்...
    பதிவுக்காவது வந்ததுக்கு நன்றி...

    @கானாப்ரபா...
    தலைவரே... நீங்க இல்லாதது மட்டும்தான் குறை... :)

    ReplyDelete