
அண்ணே... வணக்கம் நான் ஒரு ராஜா ரசிகன். யாருடைய பிளாக்குக்கு போனாலும் புரொஃபைல் ல நான் முதல்ல பார்க்குற விஷயம் ஃபேவரைட் மியூசிக் தான். அங்க ராஜாவோட பேரைப் பார்த்தா, உடனே மனசுக்குள்ள ஒரு விசில் சத்தம் கேட்கும். அட இவரு நம்மாளு அப்டின்னு... அது நட்பு,காதல் எல்லாத்துக்கும் மேல ஒரு புனிதமான உறவு. அந்த உறவின் இழையூட்டம்தான் இளையராஜா என்கிற இசை.அ(தை)வரைப் பற்றிப் பேசத் தெரியாட்டியும் உணரத் தெரியும்.
ஆனா கடந்த இரு வாரங்கள்ல நம்ம தமிழ்மணத்துல அவரை விமர்சிக்கும் முறையில் இரு பதிவுகள் வந்தது.அதைப் படிக்க ஆரம்பிச்ச உடனே கோபம் வந்தது.ஆனா பின்னூட்டங்களைப் படிச்சவுடனே மனசு லேசாயிடுச்சு.உதாரணம்... நம்ம பரிசல்காரரோட பின்னூட்டம்.(புகழனோட பதிவுல)
பரிசல்காரன் said... அன்பு நண்பரே...
அவர் இசையால் அடைந்த இன்பங்களுக்காக என்ன செய்து நம்மால் அவருக்கு நன்றிக்கடன் செலுத்தமுடியும்?
குறைந்தபட்சம் இதுபோன்று ச்சின்னத்தனமாய் அவர் பெயரை இழுக்காமலிருந்தாலே போதுமே?
கொஞ்சம் கோபமாகத்தான் இந்தப் பதிவைத் திறந்தேன். ஆனால், பின்னூட்டங்களைப் பார்த்து நெகிழ்ந்தேன்!
ராஜா ராஜாதான்!
அப்புறம் சர்வேசனோட பதிவு ஒண்ணு. அதைப் படிச்சவுடனே பின்னூட்டம் போடலாம்ன்னு நினைச்சேன். ஆனா தாறுமாறா சில பின்னூட்டம் வரவும், சரி இங்க வேணாம்ன்னு விட்டுட்டேன். அதில ராஜநடராஜன் சொல்லிருக்காரு..
"1.ராஜா கொஞ்சம் உபகரணங்களை அடக்கி வாசிச்சு வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு கொஞ்சம் உயிர்கொடுத்திருந்தார்ன்னா நம்க்கெல்லாம் இன்னும் அழகான பாடல்கள் கிடைத்திருக்கும்."
எந்தப் பாட்டில ராஜா ,வைரமுத்து வரியை அமுக்கி இருக்காரு?ராஜா,எம்.எஸ்.வி யைத் தவிர எல்லா இசைஅமைப்பாளர்களும்கவிஞர்களின் வரிகளை மூச்சுத் திணறச் செய்வதில் வல்லவர்கள்.(ரகுமான்,யுவன்,இமான்...)வித்யாசாகர் சற்று விதிவிலக்கு. ராஜாவின் பாடல்கள் ஹிட் ஆனதற்கு மற்றொரு முக்கிய காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் பாடல் வரிகள்,அதனை அனைவரின் வாயிலும் எளிதாக நுழையும்படி போட்ட மெட்டு.(நினைவெல்லாம் நித்யா,காதல் ஓவியம்,முதல் மரியாதை இன்னும் பலப்பல).அவரே ஒரு நல்ல பாடல் ஆசிரியர் என்பது வேறு விஷயம்.
அதில் தேவையே இல்லாத, துளிக்கூட சம்பந்தமே இல்லாத (புருனோ கூறியது) போன்ற பின்னூட்டங்களை தெளிவாக ஒதுக்கித் தள்ளி விடலாம். மற்ற பின்னூட்டங்களில் ஒன்றிரண்டிற்கு ஏற்ப எனது கருத்து அல்லது எனது பதிலை இங்கு பதிவிட விழைகிறேன்.
"அவர் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் ஒரு காரணம். இந்த நாட்களில் நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்."
பரிசல்காரனின் இந்தக் கருத்து ஒத்துக்கொள்ளும்படி உள்ளது. இதே ராஜா, இன்றைக்கு ஒரு சராசரி மனிதர்கள் போல் இருந்தால் இன்னும் இளமையான இசையைக் கொடுப்பார் என்பது 100% உறுதி. ஆனால் அவரது இசையில் இளமைத்துள்ளலை விட ஒரு இசைஞான முதிர்ச்சி (அயர்ச்சி அல்ல) வெளிப்படுகிறது.
"வைரமுத்துவோடு மீண்டும் கைகோர்க்கலாம், வைரமுத்துவுக்கு ராஜா தேவையில்லை, ராஜாவுக்கும் வைரமுத்து தேவை இல்லை, ஆனால் இந்த சிறப்பான கூட்டணி ஆட்சி ரசிக மகாஜனங்களுக்கு தேவை."
கானா பிரபா கூறிய வரவேற்கத்தக்க கருத்து. இப்போ 'தனம்' படத்துல கூட ஒரு பாட்டு வரும் 'தனம்,தனம்'ன்னு. வாலி சும்மா ஏனோதானோன்னு கிறுக்கி இருப்பார்.ஆனால் ராஜாவின் தனிப்பட்ட உரிமைகளில் நாம் தலையிட முடியாது.
"படங்களில் எது மிஸ்ஸிங்? நல்ல படம்? அவரது ஈகோவிற்கு தீனி போடும் டைரக்டர்?"_சர்வேசன் கூற்று. மிக முக்கியமான கருத்து இதுதான். நல்ல படம் அமையலை.(நான் கடவுள் அப்படி இருக்காது என நம்பலாம்.) ஆனா சமீப காலங்களில் ராஜா நல்ல பாடல்களைக் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார். மலையாளத்தில் சத்தியன் அந்திக்காடு படங்களில் நல்ல,நல்ல மெலோடிகள் புதிதாகக் கொடுத்து வருகிறார். சமீபத்தில்தான் ராஜாவின் மலையாளப் பாடல்கள் கேட்டேன். தெலுங்கில் கூட கடந்த வாரம் 'மல்லிப்புவு' படப்பாடல்கள் வெளியிடப்பட்டது.(இன்னும் கேட்கவில்லை).
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி 'கண்களும் கவி பாடுதே'ன்னு ஒரு படத்துக்கு ராஜாதான் இசை. படம் வந்துதா,வரலையா இல்ல வருமான்னு தெரியலை. ஆனா அந்தப் படத்துல வரும் இந்தப் பாட்டு ராஜாவும்,மஞ்சரியும் பாடுனது. கேட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க...'கண்களும் கவி பாடுதே'_மாலைநிலா...
இறுதியாக...
இளையராஜாவை எங்கும் தேட வேண்டாம். நல்ல இசையைத் தேடிக் கேட்டால் அங்கு கட்டாயம் ராஜா இருப்பார்...